உச்ச நீதிமன்றத்தில் காலியாகவுள்ள இடங்களில் நியமிப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட 9 புதிய நீதிபதிகளின் நியமனத்துக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
வழக்கமாக உச்ச நீதிமன்றத்துக்கு நியமிக்கப்படும் நீதிபதிகளை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கோலேஜ்ஜியம் எனப்படும் நீதிபதிகள் தேர்வுக்குழுவே இறுதி செய்யும்.
ஆனால், சம்பிரதாய வழக்கத்தின்படி அந்த தேர்வுக்குழு இறுதி செய்யும் பெயர்கள் சட்டத்துறை மூலம் பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
அந்த பட்டியலில் இடம்பெறும் நீதிபதிகள் அல்லது மூத்த வழக்கறிஞர்கள் தொடர்பாக உளவுத்துறை விசாரணை, நன்னடத்தை சரிபார்ப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டதும் அந்த பட்டியல் சில நேரங்களில் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தலைமை நீதிபதிக்கு தெரிவிக்கப்படும்.
பிரச்னை உள்ளதாக கருதப்படும் பெயர்கள், மீண்டும் பரிசீலிக்கப்படலாம் என்ற குறிப்புடன் மீண்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கே அனுப்பி வைக்கப்படும்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தேர்வுக்குழு பரிந்துரைத்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒன்பது பேரையும் ஏற்றுக் கொண்டுள்ளதாக மத்திய அரசு தலைமை நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த நீதிபதிகளின் விவரம்:
1) ஹிமா கோஹ்லி, தெலங்கானா உயர் நீதி்மன்ற தலைமை நீதிபதி
2) பி.வி. நாகரத்னா, கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி
3) பீலா திரிவேதி, குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி.
வழக்கறிஞர் பணியில் இருந்து தேர்வானவர்
4) பி.எஸ். நரசிம்மா, மூத்த வழக்கறிஞர்
பிற மாநில உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் தலைமை நீதிபதிகள்
5) ஏ.எஸ். ஓகா, கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
6) விக்ரம் நாத், குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
7) ஜே.கே. மகேஸ்வரி, சிக்கிம் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி
8) சி.டி. ரவிகுமார், கேரள உயர் நீதிமன்ற நீதிபதி
9) எம்எம். சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
இந்த பட்டியலில் உள்ள நீதிபதிகளின் வயது, பணி மூப்பு அடிப்படையில் பார்த்தால், நீதிபதிகள் விக்ரம் நாத், பி.வி. நாகரத்னா, மூத்த வழக்கறிஞர் பி.எஸ். நரசிம்மராவ் ஆகியோர் எதிர்காலத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக வாய்ப்பிருக்கிறது.
இதில் நீதிபதி நாகரத்னாவுக்கு 2027இல் தலைமை நீதிபதியாகவும் இந்தியாவின் முதல் உச்ச நீதிமன்ற பெண் தலைமை நீதிபதியாகவும் வாய்ப்பு இருக்கிறது.
தற்போது இறுதி செய்யப்பட்டுள்ள ஒன்பது நீதிபதிகளின் நியமன ஆணையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டதும் இவர்களுக்கான பணி ஆணை வெளியிடப்படும்.
அதன் மூலம், தற்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை, 24இல் இருந்து 33 ஆக உயரும்.
உச்ச நீதிமன்றத்தில் மொத்த நீதிபதிகளின் பணியிடங்கள் 34.
இன்றைய நிலவரப்படி 10 நீதிபதி பணியிடங்கள் காலியாகவுள்ளன. இப்போது ஒன்பது நீதிபதிகளின் நியமன ஆணை வெளியான பிறகும் ஒரு நீதிபதி பணியிடம் காலியாக இருக்கும்.