மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என்று கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை, முதல்வரை அவதூறாக பேசியதாகக் கூறி அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ரானே மீது புனேவில் ஒரு புகாரும், மஹாட் பகுதியில் ஒரு வழக்கும் பதிவாகியுள்ளன.
நாசிக் நகர சிவசேனை தலைவர் சுதாகர் பத்குஜரும் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வரை அவதூறாக பேசிய நாராயண் ரானேவை கைது செய்ய வேண்டும் என்று கோரி அம்மாநிலத்தில் ஆளும் சிவசேனை கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை நகரின் பல இடங்களில் ரானேவை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் பதாகைகளை வைத்தனர்.
இதனால் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கைது செய்ய நாசிக் காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின்படி நாராயண் ரானேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரசியலமைப்பு பொறுப்பில் உள்ள ஒருவர் அதேபோன்ற பொறுப்பில் உள்ள மற்றவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த பிரச்னையின் தீவிரம ்கருதி சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று நாசிக் நகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
நாராயண் ரானேவை கைது செய்ய தங்களுக்கு எவ்வித அழுத்தமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி நாராயண் ரானே சார்பில் ரத்னகிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அந்த மனு ஏற்கப்படவில்லை.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ரானே சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை அவசரகால மனுவாக ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
இதற்கிடையே, நாராயண் ரானேவை காவல்துறையினர் விடுவிக்கும்வரை மும்பை - கோவா நெடுஞ்சாலையை முடக்குவோம் என்று பாஜகவினர் எச்சரித்துள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் திரண்டுள்ளதால் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பாஜகவின் மக்கள் ஆசிர்வாத யாத்திரை நிகழ்ச்சியொன்றில் பேசிய ரானே, இந்த அரசு சரியான ஓட்டுநரின்றி இயங்குகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கின்றனர். அரசை யாரும் தட்டிக்கேட்பதில்லை," என்று பேசினார்.
மேலும், "இந்த மாநிலத்தில் ஆளும் முதல்வருக்கு இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பது கூட தெரியவில்லை. உதவியாளரிடம் அதை கேட்கிறார். தாய்நாட்டின் சுதந்திர தினத்தை தெரியாமல் ஒரு முதல்வர் இருப்பது அவமானமாகும். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஒரு அறை விட்டிருப்பேன்," என்று நாராயண் ரானே பேசினார்.
இந்த நிலையில், நாராயண் ரானேவின் பேச்சுக்கு ஆளும் சிவசேனை தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் நாராயண் ரானேவை கிண்டல் செய்யும் வகையில் அவரை கோழி திருடன் என கூறி சுவரொட்டிகளை ஆங்காங்கே ஒட்டினர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனை கட்சியில் இருந்தபோது நாராயண் ரானே செம்பூர் பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்ததை சித்தரிக்கும் விதமாக அந்த சுவரொட்டி காட்சி இருந்தது.
இந்த நிலையில், மாநில முதல்வரை பொது நிகழ்ச்சியில் அவதூறாக பேசிய நாராயண் ரானேவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவசேனை எம்.பி விநாயக் ரெளட் குரல் கொடுத்தார்.
பாஜக மேலிட தலைவர்களை ஈர்ப்பதற்காக சிவசேனை தலைமையை ரானே இலக்கு வைப்பதாக அக்கட்சியினர் குற்றம்சாட்டினர்.
சிவசேனை கட்சியின் தலைவராக பால் தாக்கரே இருந்தபோது அரசியலுக்குள் நுழைந்தவர் நாராயண் ரானே. 1990இல் சிவசேனை கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.
1999இல் ரானேவை முதல்வராக்க பால் தாக்கரே முயன்றபோது அந்த முடிவுக்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பாக இருந்தார். அப்போது முதலே சிவசேனை கட்சியில் எதிரும் புதிருமாக அவர் இருந்தார்.
இருப்பினும் பால் தாக்கரே தமது முடிவில் உறுதியாக இருந்ததால் 1999இல் ரானே முதல்வரானார். அப்போது ரானே ராஜ் தாக்கரேவுக்கு நெருக்கமாக இருந்தார். உத்தவ் தாக்கரே மனோகர் ஜோஷிக்கு நெருக்கமாக இருந்தார்.
1999ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது கட்சி அடைந்த தோல்விக்கு உத்தவ் தாக்கரேவே காரணம் என்று ரானே குற்றம்சாட்டினார். 2002இல் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான அரசை கவிழ்க்க அவர் முயன்றபோது அதை உத்தவ் தாக்கரே ஆதரிக்கவில்லை. 2003இல் ரானேவின் வீட்டை தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் எரித்தனர். அந்த சம்பவத்தின்போது ரானேவை சந்திக்க ஒரு சிவசேனை கட்சி தலைவர் கூட செல்லவில்லை. இது உத்தவ் தாக்கரே, ரானே இடையிலான மோதலை மேலும் கடுமையாக்கியது.
2005இல் பால் தாக்கரேவுக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது சிவசேனை கட்சியில் இருந்து விலகிய ரானே, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது மாநிலத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2017இல் தன்னை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் தவறி விட்டதாகக் கூறி அந்த கட்சியில் இருந்து விலகிய ரானே, தமது மகன்களுடன் சேர்ந்து தனி கட்சி கண்டார். பிறகு அந்த கட்சியை பாஜகவுடன் அவர் இணைத்தார்.