"இந்தியாவில் கொரோனா எண்டமிக் நிலையை நெருங்குகிறது" - WHO
எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். அதே போல மலேரியா காய்ச்சலையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இன்றைய நேரலை நிறைவடைகிறது
வணக்கம் நேயர்களே, இத்துடன் ஆகஸ்ட் 24ஆம் தேதி நேரலையை நிறைவு செய்கிறோம். எங்களுடன் இந்த பக்கத்தில் இணைந்திருந்ததற்கு நன்றி.
பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்புபக்கம் செல்லவும்.
விழுப்புரத்தில் திமுக கட்சி கொடி நடும்போது மின்சாரம் தாக்கி மாணவன் பலியான வழக்கில் ஒருவர் கைது, நடராஜன் சுந்தர்
படக்குறிப்பு, அமைச்சர் பொன்முடி வருகைக்காக சாலையின் இரு புறத்திலும் கட்டப்பட்டிருந்த விளம்பர பதாகை, கட்சிக்கொடிகள்
தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை அவரது சொந்த மாவட்டத்தில் வரவேற்பதற்காக சாலையோரத்தில் திமுகவினர் கட்சி கொடி நடும்போது, இரும்பு கொடி கம்பம் மின் கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கியதில் கொடி கட்டும் பணியில் ஈடுபட்ட சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் அவரை வேலைக்கு அழைத்து சென்ற ஒப்பந்ததாரரை விழுப்புரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் ரஹீம் லே அவுட் பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம், லட்சுமி தம்பதியரின் மூன்றாவது மகன் தினேஷ் (வயது 13) 8ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தந்தை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதால், சிறுவனின் தாயார் கூலி வேலைக்கு சென்று குடும்பத்தைக் கவனித்து வருகிறார்.
தினந்தோறும் வேலைக்குச் சென்றால் மட்டுமே குடும்பத்தை நடத்தும் சூழ்நிலையில் தான் உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் வாழ்க்கை உள்ளது. சம்பவம் நடைபெற்ற கடந்த 20ஆம் தேதி அன்று அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்ற ஒப்பந்ததாரர் சிறுவனை அவருடன் வேலைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
விழுப்புரம் நன்னாடு கிராமத்தை சேர்ந்த பொன்குமார் என்பவரது இல்ல திருமண விழா கடந்த 20ஆம் தேதி மாலை மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
அந்த திருமண விழாவிற்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அழைப்பு விடப்பட்டிருந்த நிலையில், அமைச்சர் அவரது வரவேற்பிற்காக திருமண மண்டபத்திற்குச் செல்லும் சாலையில் திமுக கொடி கட்டப்பட்ட இரும்புக் கம்பம் நடும் பணி நடைபெற்றது.
அப்போது கொடி கம்பம் நடும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் தினேஷ் நடவு செய்த கொடி கம்பம் மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால் சிறுவனை மின்சாரம் தாக்கியது.
படுகாயம் அடைந்த சிறுவனை உடன் பணி புரிந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
படக்குறிப்பு, சிறுவன் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு சாலையோரத்தில் இருந்து கட்சிக்கொடிகள் மற்றும் விளம்ப பதாகைகளை வாகன உதவியுடன் அகற்றும் திமுகவினர்.
இந்தியாவில் கொரோனா 'எண்டமிக்' நிலையை நெருங்குகிறது - செளமியா சுவாமிநாதன்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, செளமியா சுவாமிநாதன், தலைமை விஞ்ஞானி, உலக சுகாதார அமைப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ், பெருந்தொற்று நிலையில் இருந்து தொற்று நிலையை நெருங்கி வருவதாக உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
தி வயர் ஆங்கில செய்தி இணையதளத்துக்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், இந்தியாவின் மக்கள்தொகை எண்ணிக்கை அளவைப் பொறுத்து, நாட்டின் பல பகுதிகளிலும் மக்களுக்கு வைரஸ் எதிர்ப்பாற்றல் வந்துள்ளதாக தெரிவித்தார்.
தற்போதுள்ள வைரஸ் பரவல் நிலவரப்படி, இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நிலை மிதமாக குறைந்து வருகிறது. ஒரு கட்டத்தில் இந்தியா எண்டமிக் நிலையை எட்டி விடும் என்றார் செளமியா சுவாமிநாதன்.
வைரஸ் தொற்று பரவுதலை மூன்றாக பிரிக்கலாம். எண்டமிக், எபிடமிக் மற்றும் பாண்டமிக்.
எண்டமிக் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியில் எந்த நேரம் வேண்டுமானாலும் பரவக்கூடிய வைரஸாகும். உதாரணமாக அம்மை போன்ற விஷயங்களை சொல்லலாம். அதே போல மலேரியா காய்ச்சலையும் இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
எபிடமிக் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகமாக பரவக்கூடிய நோயாக இருக்கும். உதாரணமாக மழைக்காலத்தில் பலருக்கும் காய்ச்சல் வரும். அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அந்த வைரஸ் பரவுவது குறைந்துவிடும்.
பாண்டமிக் வகையை சேர்ந்த வைரஸ்கள் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் பரவக்கூடியதாகும். ஒரு நாட்டில் இருந்து மற்ற நாட்டுக்கு இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட மக்கள் பயணிக்கும்போது, அந்த குறிப்பிட்ட நாட்டில் வைரஸ் பரவக்கூடிய சூழல் இருந்தால், அது அங்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆப்கனை விட்டு வெளியேற காலக்கெடு நீட்டிக்கப்படாது: தாலிபன் செய்தித்தொடர்பாளர்
ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டினர் வெளியேற விதிக்கப்பட்ட காலக்கெடு ஆகஸ்ட் 31க்கு பிறகு நீட்டிக்கப்படாது என்று தாலிபன் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் செய்தித்தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "ஆகஸ்ட் 31ஆம் தேதிக்கு பிறகு காலக்கெடு நீட்டிக்கப்படும் என நான் கருதவில்லை," என்று கூறினார்.
"எங்களுடைய தாயகத்தை விட்டு வெளிநாட்டினர் வெளியே செல்ல போதுமான அளவுக்கு அவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது," என்று அவர் தெரிவித்தார்.
தாலிபன் ஆளுகையின் கீழ் ஆப்கானிஸ்தான் வந்த பிறகு அந்த நாட்டின் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் மீட்கப்படாமல் உள்ளனர். அவர்களை வெளியேற்ற ஒவ்வொரு நாடும் முயற்சி செய்து வருகின்றன.
ஆனாலும், ஆகஸ்ட் 31க்குள் வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவார்களா என்பது கேள்விக்குரியதாகியிருக்கிறது.
இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய தாலிபன் செய்தித்தொடர்பாளர், "ஆப்கானிஸ்தானை விட்டு எந்தவொரு ஆப்கானியரும் வெளியே செல்வதை நாங்கள் விரும்பவில்லை.
அதே சமயம், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டுப் படைகளுக்கு உதவியவர்கள் வெளியேற எந்த கட்டுப்பாடும் கிடையாது," என்று தெரிவித்தார்.
சிஐஏ இயக்குநரும் தாலிபன் தலைவரும் இன்று ரகசிய சந்திப்பு நடத்தினார்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அது பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று ஜபியுல்லா முஜாஹித் கூறினார்.
தாலிபன் தலைவருடன் சிஐஏ இயக்குநர் ரகசிய சந்திப்பு
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வில்லியம் ஜே. பர்ன்ஸ், சிஐஏ இயக்குநர்
அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ இயக்குநர் வில்லியம் ஜே. பர்ன்ஸ் தாலிபன் தலைவர் அப்துல் கனி பராதரை காபூலில் ரகசிய இடத்தில் சந்தித்துப் பேசியுள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
அந்த செய்தியின்படி, ஆப்கானிஸ்தானை தாலிபன் கைப்பற்றிய பிறகு இரு தரப்பு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்துப் பேசியதாக கூறப்பட்டுள்ளது.
பெயர் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரியை மேற்கோள்காட்டி இந்த செய்தியை வெளியிட்டுள்ள வாஷிங்டன் போஸ்ட், காபூல் சர்வதேச விமான நிலையத்தில் ஏராளமானோர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேற காத்திருக்கும் வேளையில் தமது உளவு அமைப்பின் தலைவரை தாலிபன் தலைவரிடம் பேச அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அனுப்பியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பு பற்றி தாலிபன் தரப்பு இன்னும் அலுவல்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. ஆனால், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளிநாட்டுப்படைகள் மற்றும் வெளிநாட்டினர் வெளியேற நிர்ணயிக்கப்பட்ட ஆகஸ்ட் 31 காலக்கெடு தொடர்பாக இரு தரப்பும் விவாதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
மத்திய அமைச்சர் நாராயண் ரானே கைது - மகாராஷ்டிரா காவல்துறை நடவடிக்கை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நாராயண் ரானே, மத்திய அமைச்சர்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவை அறைந்திருப்பேன் என்று கூறிய மத்திய அமைச்சர் நாராயண் ரானேவை, முதல்வரை அவதூறாக பேசியதாகக் கூறி அம்மாநில காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக ரானே மீது புனேவில் ஒரு புகாரும், மஹாட் பகுதியில் ஒரு வழக்கும் பதிவாகியுள்ளன.
நாசிக் நகர சிவசேனை தலைவர் சுதாகர் பத்குஜரும் உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில், முதல்வரை அவதூறாக பேசிய நாராயண் ரானேவை கைது செய்ய வேண்டும் என்று கோரி அம்மாநிலத்தில் ஆளும் சிவசேனை கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மும்பை நகரின் பல இடங்களில் ரானேவை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் பதாகைகளை வைத்தனர்.
இதனால் பதற்றமான சூழல் நிலவிய நிலையில், இந்த நிலையில், மத்திய அமைச்சரவை கைது செய்ய நாசிக் காவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவின்படி நாராயண் ரானேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பிணை நிராகரிப்பு
அரசியலமைப்பு பொறுப்பில் உள்ள ஒருவர் அதேபோன்ற பொறுப்பில் உள்ள மற்றவர் மீது புகார் அளித்துள்ளார். இந்த பிரச்னையின் தீவிரம ்கருதி சட்டப்படி காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று நாசிக் நகர காவல் ஆணையர் தெரிவித்தார்.
நாராயண் ரானேவை கைது செய்ய தங்களுக்கு எவ்வித அழுத்தமும் கிடையாது என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையே, தன்னை காவல்துறையினர் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமீன் வழங்கக் கோரி நாராயண் ரானே சார்பில் ரத்னகிரி செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதில் சில குறைபாடுகள் இருப்பதாகக் கூறி அந்த மனு ஏற்கப்படவில்லை.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் ரானே சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அதை அவசரகால மனுவாக ஏற்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பாஜகவினர் போராட்டம்
இதற்கிடையே, நாராயண் ரானேவை காவல்துறையினர் விடுவிக்கும்வரை மும்பை - கோவா நெடுஞ்சாலையை முடக்குவோம் என்று பாஜகவினர் எச்சரித்துள்ளனர். அந்த நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான பாஜகவினர் திரண்டுள்ளதால் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது.
என்ன பேசினார் ரானே?
கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற பாஜகவின் மக்கள் ஆசிர்வாத யாத்திரை நிகழ்ச்சியொன்றில் பேசிய ரானே, இந்த அரசு சரியான ஓட்டுநரின்றி இயங்குகிறது. தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் ஆட்சி அதிகாரத்தை அனுபவிக்கின்றனர். அரசை யாரும் தட்டிக்கேட்பதில்லை," என்று பேசினார்.
மேலும், "இந்த மாநிலத்தில் ஆளும் முதல்வருக்கு இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பது கூட தெரியவில்லை. உதவியாளரிடம் அதை கேட்கிறார். தாய்நாட்டின் சுதந்திர தினத்தை தெரியாமல் ஒரு முதல்வர் இருப்பது அவமானமாகும். நான் மட்டும் அந்த இடத்தில் இருந்திருந்தால் ஒரு அறை விட்டிருப்பேன்," என்று நாராயண் ரானே பேசினார்.
இந்த நிலையில், நாராயண் ரானேவின் பேச்சுக்கு ஆளும் சிவசேனை தொண்டர்கள் கடும் கண்டனம் தெரிவித்து கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். சிலர் நாராயண் ரானேவை கிண்டல் செய்யும் வகையில் அவரை கோழி திருடன் என கூறி சுவரொட்டிகளை ஆங்காங்கே ஒட்டினர். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவசேனை கட்சியில் இருந்தபோது நாராயண் ரானே செம்பூர் பகுதியில் கோழிக்கடை நடத்தி வந்ததை சித்தரிக்கும் விதமாக அந்த சுவரொட்டி காட்சி இருந்தது.
இந்த நிலையில், மாநில முதல்வரை பொது நிகழ்ச்சியில் அவதூறாக பேசிய நாராயண் ரானேவை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும் என்று சிவசேனை எம்.பி விநாயக் ரெளட் குரல் கொடுத்தார்.
சிவசேனை கட்சியின் தலைவராக பால் தாக்கரே இருந்தபோது அரசியலுக்குள் நுழைந்தவர் நாராயண் ரானே. 1990இல் சிவசேனை கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தார்.
1999இல் ரானேவை முதல்வராக்க பால் தாக்கரே முயன்றபோது அந்த முடிவுக்கு உத்தவ் தாக்கரே எதிர்ப்பாக இருந்தார். அப்போது முதலே சிவசேனை கட்சியில் எதிரும் புதிருமாக அவர் இருந்தார்.
இருப்பினும் பால் தாக்கரே தமது முடிவில் உறுதியாக இருந்ததால் 1999இல் ரானே முதல்வரானார். அப்போது ரானே ராஜ் தாக்கரேவுக்கு நெருக்கமாக இருந்தார். உத்தவ் தாக்கரே மனோகர் ஜோஷிக்கு நெருக்கமாக இருந்தார்.
1999ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின்போது கட்சி அடைந்த தோல்விக்கு உத்தவ் தாக்கரேவே காரணம் என்று ரானே குற்றம்சாட்டினார். 2002இல் காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் தலைமையிலான அரசை கவிழ்க்க அவர் முயன்றபோது அதை உத்தவ் தாக்கரே ஆதரிக்கவில்லை. 2003இல் ரானேவின் வீட்டை தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் எரித்தனர். அந்த சம்பவத்தின்போது ரானேவை சந்திக்க ஒரு சிவசேனை கட்சி தலைவர் கூட செல்லவில்லை. இது உத்தவ் தாக்கரே, ரானே இடையிலான மோதலை மேலும் கடுமையாக்கியது.
2005இல் பால் தாக்கரேவுக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டபோது சிவசேனை கட்சியில் இருந்து விலகிய ரானே, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அப்போது மாநிலத்தில் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2017இல் தன்னை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் தவறி விட்டதாகக் கூறி அந்த கட்சியில் இருந்து விலகிய ரானே, தமது மகன்களுடன் சேர்ந்து தனி கட்சி கண்டார். பிறகு அந்த கட்சியை பாஜகவுடன் அவர் இணைத்தார்.
கலாம் நினைவிடத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்: 525 நாட்களுக்கு பிறகு திறப்பு, பிரபுராவ் ஆனந்தன்
படக்குறிப்பு, கலாம் நினைவிடத்தில் பார்வையிடும் பொதுமக்கள்
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் தேசிய நினைவகம் 525 நாட்களுக்கு பின் இன்று காலை பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது.
அப்துல் கலாம் நினைவாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு டி.ஆர்.டி.ஓ) சார்பில் ராமேஸ்வரத்தில் உள்ள பேக் கரும்பில் அமைக்கப்பட்ட 'அப்துல் கலாம் தேசிய நினைவகம்' 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்பட்டது.
அந்த நினைவிடத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தவாறு அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப் புகைப்படங்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்குள்ள 4 காட்சிக் கூடங்களில் கலாமின் மாணவப் பருவம், விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நினைவிடம் திறக்கப்பட்டது முதல் 2019ஆம் ஆண்டு வரை சுமார் 82 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் இங்கு வருகை தந்துள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் தேதி கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கலாமின் தேசிய நினைவிடம் மூடப்பட்டது.
பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டதுடன், கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது.
இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் அக்னிக் தீர்த்தக் கடற்கரை மற்றும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கலாம் நினைவிடத்தை பார்வையிட மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து தடை நீடித்து வந்தது.
இதனால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள், இளைஞர்கள் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த முடியாமலும், வாசலில் நின்றபடி மணி மண்டப கட்டிடத்தை மட்டும் பார்த்து விட்டு செல்பி எடுத்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சுற்றுலா பயணிகளின் தொடர் கோரிக்கையால் 525 நாட்களுக்கு பின் இன்று காலை 9 மணியில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்தது.
இதையடுத்து இன்று காலை கலாம் பேரன் சலீம் நினைவகத்தை பார்வையிட வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்றார். நினைவகத்தை காண வந்தவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நினைவகத்தை பார்வையிட்டு வருவதுடன் கலாம் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனால் சுமார் 17 மாதங்களுக்கு மேலாக வெறிச்சோடி காணப்பட்ட கலாம் நினைவக வளாகம் இன்று சுற்றுலா பயணிகள் நிறைந்து காணப்பட்டது.
படக்குறிப்பு, கலாம் நினைவிடத்தை பார்வையிட வந்த பொதுமக்கள்
இலங்கை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர காலமானார்
பட மூலாதாரம், MANGALA SAMARAWEERA'S FACEBOOK
படக்குறிப்பு, மங்கள சமரவீர, இலங்கை முன்னாள் அமைச்சர்
இலங்கையின் மூத்த அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (65) இன்று காலமானார்.
கோவிட் தொற்று காரணமாக கடந்த 13ம் தேதி கொழும்பிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, தீவிர சிகிச்சை பிரிவில் பின்னர் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானதாக மருத்துவமனை தகவல்கள் உறுதிப்படுத்தின.
இலங்கையின் தென் பகுதியான மாத்தறை மாவட்டத்தில் 1956ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி மங்கள சமரவீர பிறந்தார்.
1983ம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடாக, தனது அரசியல் வாழ்க்கையை மங்கள சமரவீர ஆரம்பித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து,
1989ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு, நாடாளுமன்ற பிரவேசத்தை பெற்றார்.
1994ம் ஆண்டு சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் தலைமையில் ஆட்சி அமைத்த அரசாங்கத்தில் தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக மங்கள சமரவீர நியமிக்கப்பட்டிருந்தார்.
2004ம் ஆண்டு துறைமுகம், விமான சேவைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் அவர் கடமையாற்றியிருந்தார்.
2005ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும், 2015ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான காலப் பகுதியிலும் மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக கடமையாற்றியிருந்தார்.
2017ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை இலங்கையின் நிதி அமைச்சராக, மங்கள சமரவீர செயற்பட்டிருந்தார்.
சுமார் 35 வருடங்களுக்கு மேல் அரசியல் அனுபவத்தை கொண்ட மங்கள சமரவீர, 2019ம் ஆண்டு அரசியலிலிருந்து ஓய்வு பெற்ற நிலையிலும், சில அரசியல் செயற்பாடுகளை இறுதித் தருணங்களில் முன்னெடுத்து வந்திருந்தார்.
இவ்வாறான நிலையிலேயே, கோவிட் தொற்றுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மங்கள சமரவீர, இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.
வந்துகொண்டிருக்கும் செய்தி, சென்னையின் பல்வேறு இடங்களில் நில அதிர்வு
சென்னையில் பல்வேறு இடங்களில் சில நிமிடங்களுக்கு முன்பு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆந்திர மாநிலம் காகிநாடாவை ஒட்டிய கடல்பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று பிற்பகல் 12.35 மணியளவில் சென்னை நகரின் அடையாறு, அண்ணா நகர், போரூர், நுங்கம்பாக்கம், பூந்தமல்லி, மைலாப்பூர் ஆகிய இடங்களில் கட்டடங்கள் லேசாக அதிர்ந்தன.
இது தொடர்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், ஆந்திர மாநிலத்தின் காகிநாடாவிலிருந்து தெற்கு - தென்கிழக்கு திசையில் 296 கி.மீ. தூரத்தில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 5.1 ஆக பதிவானது.
பட மூலாதாரம், seismo.gov.in
படக்குறிப்பு, நில அதிர்வு காணப்பட்ட திசையை விளக்கும் வரைபடம்
வந்துகொண்டிருக்கும் செய்தி, பாலியல் காணொளி சர்ச்சை; மாநில பாஜக பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் பதவி விலகினார்
பட மூலாதாரம், K.T. Raghavan
தாம் இருப்பது போன்ற பாலியல் செயல்பாடு காணொளி சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தமிழ்நாடு
பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து கே.டி. ராகவன் விலகியிருக்கிறார். தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி சந்திக்கப்போதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
525 நாட்களுக்கு பின் திறக்கபட்ட அப்துல் கலாம் நினைவிடம்: சுற்றலா பயணிகள் குவிந்தனர், பிரபுராவ் ஆனந்தன், பிபிசி தமிழுக்காக
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டிருந்த முன்னாள் குடியரசு தலைவர் தேசிய நினைவிடம் 525 நாட்களுக்கு பின் இன்று காலை முதல் பார்வையாளர்களுக்குத் திறக்கப்பட்டது.
அப்துல்கலாம் நினைவாக மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு அதாவது (டி.ஆர்.டி.ஓ) சார்பில் ராமேஸ்வரத்தில் உள்ள பேக் கரும்பில் 'அப்துல் கலாம் தேசிய நினைவகம்' அமைக்கப்பட்டு கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது.
கலாம் நினைவிடத்தின் நுழைவுப் பகுதியில் கலாம் வீணை வாசித்தவாறு அமர்ந்திருக்கும் வெண்கலச் சிலை, கலாம் பயன்படுத்திய பொருட்கள், நூல்கள், உடைகள், கலாமின் வாழ்க்கை வரலாற்றைச் சித்திரிக்கும் ஓவியங்கள், கலாமின் பல்வேறு காலகட்டப் புகைப்படங்களும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இங்குள்ள 4 காட்சிக் கூடங்களில் கலாமின் மாணவப் பருவம், விஞ்ஞானியாகப் பணியாற்றிய காலம், குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய காலம், உலகத் தலைவர்களுடன் கலாமின் அரிய புகைப்பட ஓவியங்கள் மற்றும் உருவச் சிலைகள், கண்டுபிடிப்பின் மாதிரி வடிவங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நினைவிடத்தை திறந்ததிலிருந்து 2019 ஆண்டு வரை சுமார் 82 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள், மாணவ, மாணவியர், பொதுமக்கள் பார்வையிட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு மார்ச் மாதம் 17 தேதி கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக கலாமின் தேசிய நினைவிடம் மூடப்பட்டது.
பின்னர் தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா இடங்கள் திறக்கப்பட்டதுடன், கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து ராமேஸ்வரம் அக்னிக் தீர்த்தக் கடற்கரை மற்றும் தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் கடந்த சில நாட்களாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கலாம் நினைவிடத்தை பார்வையிட மட்டும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படாமல் தொடர்ந்து தடை நீடித்து வந்தது.
இதனால் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள், இளைஞர்கள் அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்த முடியாமலும், வாசலில் நின்றபடி மணி மண்டபக் கட்டடத்தை மட்டும் பார்த்து விட்டு செல்பி எடுத்து கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
சுற்றுலா பயணிகளின் தொடர் கோரிக்கையால் 525 நாட்களுக்கு பின் இன்று காலை 9 மணியில் இருந்து சுற்றுலா பயணிகள் பார்வையிட மத்தியப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் அனுமதி அளித்தது.
இதனையடுத்து இன்று காலை கலாம் பேரன் சலீம் நினைவகத்தை பார்வையிட வந்தவர்களுக்கு மரக்கன்றுகள் கொடுத்து வரவேற்றார். நினைவகத்தை காண வந்தவர்கள் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி நினைவகத்தை பார்வையிட்டு வருவதுடன் கலாம் சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
காபூலில் இருந்து 25 இந்தியர்கள் உள்பட 78 பேரை மீட்டு வந்தது இந்தியா
பட மூலாதாரம், ANI/MEA
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து 25 இந்தியர்கள் உள்பட 78 பேர் ஏர் இந்தியா விமானம் மூலம் மீட்கப்பட்டுள்ளனர்.
முதலில் காபூலில் இருந்து தஜிகிஸ்தான் தலைநகர் துஷான்பேக்கு இந்திய விமானப் படையின் விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டதாக வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி கூறியுள்ளார்.
அங்கிருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் அவர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று காலை இந்த விமானம் இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது
X பதிவின் முடிவு
நேரலைக்கு வரவேற்கிறோம்!
பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் எம். மணிகண்டன்.