இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செற்பாட்டு மையத்தின் தலைவரும், ராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஆகஸ்டு 20ஆம் தேதி இரவு 10 மணி முதல் 30ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் கூறுகின்றார்.
குறித்த காலப் பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு, தமது தொழிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர்ந்த ஏனையோர், தமது வீடுகளை விட்டு வெளியில் நடமாடக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் நாளுக்கு நாள் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை மற்றும் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளமை ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளமையினால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க ஜனாதிபதி கடந்த காலங்களில் மறுப்பு தெரிவித்து வந்தார்.
இவ்வாறான நிலையில், தொழிற்சங்கங்கள், எதிர்க் கட்சிகள் என பலரும், நாட்டை முடக்கி, கோவிட் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு கோரியிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.
நாட்டை ஒரு வார காலத்திற்கேனும் மூடி, கொரோனா நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த நிலையில், மகா நாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, ஜனாதிபதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்த தீர்மானித்ததாக ராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.
இதையடுத்தே, இன்றிரவு முதல் தனிமைப்படுததல் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.