சைகோவ் டி கொரோனா தடுப்பூசிக்கும் அவசர பயன்பாடு அனுமதி

உலகிலேயே சைகோவ் டி தான் டி.என்.ஏ மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நேயர்களுக்கு வணக்கம்,

    பிபிசி தமிழ் சேவையின் இன்றைய நேரலை தகவல்களை இத்துடன் நிறைவு செய்கிறோம். மீண்டும் நாளை சந்திப்போம். உலகம் மற்றும் தேசிய செய்திகளுக்கு பிபிசி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள். நன்றி.பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்கு முகப்பு பக்கம் செல்லவும்.பிபிசி தமிழின் பேஃஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப் பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  2. இந்தியாவின் சைகோவ் டி - உலகின் முதல் டி.என்.ஏ கொரோனா தடுப்பூசி

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    இந்தியாவின் சைடஸ் கெடிலா என்கிற மருந்து நிறுவனம், டி.என்.ஏ அடிப்படையாகக் கொண்டு தயாரித்த கொரோனா தடுப்பூசிக்கு, இன்று, இந்தியாவின் பொது மருந்து கட்டுப்பாட்டு இயக்குநரகம் (டி.சி.ஜி.ஐ) அவசர பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளது.

    உலகிலேயே சைகோவ் டி தான் டி.என்.ஏ மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த கொரோனா தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு செலுத்தலாம் என இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஏ.என்.ஐ முகமையிடம் கூறியுள்ளது.

  3. ஜெர்மனி ஊடகவியலாளரின் உறவினரைக் கொன்ற தாலிபன்கள்

    டாய்ச்ச வில்லே என்ற ஜெர்மனி அரசுக்கு சொந்தமான ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு பத்திரிகையாளரின் நெருங்கிய உறவினர் ஒருவரை தாலிபன்கள் சுட்டுக் கொன்றுள்ளனர்.

    அப்பத்திரிகையாளர் தற்போது ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார். அப்பத்திரிகையாளருக்காக நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளார்.

    இவரைப் போலவே இன்னும் மூன்று டாய்ச்ச வில்லே ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை தாலிபன்கள் வீடுவீடாக தேடி வருகின்றனர். தாலிபன்களின் கொலை நடவடிக்கையை டாய்ச்ச வில்லேவின் இயக்குநர் பீட்டர் லிம்பார்க் கண்டித்துள்ளார்.

    மேலும் “ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர ஆபத்தில் இருக்கிறார்கள்” எனவும் கூறியுள்ளார்.

    “காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் தாலிபன்கள் முறையாக பத்திரிகையாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. நமக்கு நேரம் குறைவாகத் தான் இருக்கிறது” என கூறியுள்ளார்.

  4. தாலிபன்களால் பத்திரிகையாளரின் உறவினர் சுட்டுக் கொலை

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், Getty Images

    டாயிஷ் வில்லே என்கிற ஜெர்மனியைச் சேர்ந்த ஊடகத்தில் பணியாற்றி வந்த ஒரு பத்திரிகையாளரின் நெருங்கிய உறவினர் ஒருவரை தாலிபன்கள் சுட்டுக் கொன்றுள்ளனர். அப்பத்திரிகையாளர் தற்போது ஜெர்மனியில் பணியாற்றி வருகிறார்.

    அப்பத்திரிகையாளருக்காக நடத்தப்பட்ட சோதனையில் அவரது உறவினர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார், மற்றொரு உறவினர் படுகாயமடைந்துள்ளார். இவரைப் போலவே இன்னும் மூன்று டாயிஷ் வில்லே ஊடகத்தைச் சேர்ந்த பத்திரிகையாளர்களை தாலிபன்கள் வீடுவீடாக தேடி வருகின்றனர்.

    தாலிபன்களின் கொலை நடவடிக்கையை டாயிஷ் வில்லேவின் இயக்குநர் பீட்டர் லிம்பார்க் கண்டித்துள்ளார். மேலும் “ஆப்கானிஸ்தானில் பணியாற்றும் தங்கள் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் பயங்கர ஆபத்தில் இருக்கிறார்கள்” எனவும் கூறியுள்ளார்.

    “காபூல் மற்றும் ஆப்கானிஸ்தானின் மாகாணங்களில் தாலிபன்கள் முறையாக பத்திரிகையாளர்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. நமக்கு நேரம் குறைவாகத் தான் இருக்கிறது” என கூறியுள்ளார்.

  5. இலங்கையில் மீண்டும் ஊரடங்கு அமல், ரஞ்சன் அருண் பிரசாத், இலங்கையில் இருந்து

    இலங்கை முழுவதும் இன்று இரவு முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.

    கோவிட்-19 தடுப்புக்கான தேசிய செற்பாட்டு மையத்தின் தலைவரும், ராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

    இதன்படி, ஆகஸ்டு 20ஆம் தேதி இரவு 10 மணி முதல் 30ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை இந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமலில் இருக்கும் என அவர் கூறுகின்றார். குறித்த காலப் பகுதியில் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோருக்கு, தமது தொழிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

    அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுவோரை தவிர்ந்த ஏனையோர், தமது வீடுகளை விட்டு வெளியில் நடமாடக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் நாளுக்கு நாள் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை மற்றும் கோவிட் தொற்றினால் உயிரிழப்போரின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளமை ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

    இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பின்னடைவுகளை சந்தித்துள்ளமையினால், தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்க ஜனாதிபதி கடந்த காலங்களில் மறுப்பு தெரிவித்து வந்தார்.

    இவ்வாறான நிலையில், தொழிற்சங்கங்கள், எதிர்க் கட்சிகள் என பலரும், நாட்டை முடக்கி, கோவிட் நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு கோரியிருந்தனர்.

    அதனைத் தொடர்ந்து, மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்கள், நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்பியிருந்தனர்.

    நாட்டை ஒரு வார காலத்திற்கேனும் மூடி, கொரோனா நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருமாறு மகாநாயக்க தேரர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்த நிலையில், மகா நாயக்க தேரர்களின் கோரிக்கைக்கு செவி சாய்த்து, ஜனாதிபதி தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்த தீர்மானித்ததாக ராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்திருந்தார்.

    இதையடுத்தே, இன்றிரவு முதல் தனிமைப்படுததல் ஊரடங்கு சட்டத்தை அமல்படுத்துவதற்கான தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

    sri lanka lockdown

    பட மூலாதாரம், ISHARA S. KODIKARA / getty images

  6. சீனாவின் மூன்று குழந்தை திட்டம் – சட்டமாக இயற்றப்பட்டது

    china

    பட மூலாதாரம், Getty images

    சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையில், தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்வதை அனுமதிக்கும் சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மே மாதம், தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்று கொள்வதை அனுமதிக்கவிருப்பதாக தெரிவித்திருந்தது சீனா.

    அந்த முடிவு தற்போது அதிகாரப்பூர்வமாக சட்டமாக மாறியுள்ளது. மேலும் குழந்தை பெற்று கொள்வதை ஊக்குவிக்கும் பல்வேறு திட்டங்களையும் சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.

    இதன்மூலம் உள்ளூர் அரசாங்க விதிமுறைகள்படி எத்தனை குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியை தாண்டி குழந்தைகளை பெற்று கொள்ளும் பெற்றோர் அபராதம் வழங்க தேவையில்லை.

    மேலும் குழந்தைகளை கவனித்து கொள்வதற்கென விடுமுறை, மேம்படுத்தப்பட்ட குழந்தை நல கட்டமைப்பு ஆகியவற்றிலும் சீனா கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றில் அங்கு பிறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

    2016ஆம் ஆண்டு சீனா தனது ஒரு குழந்தை திட்டத்தை ரத்து செய்த்து இருப்பினும் பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை.

    நகரங்களில் குழந்தைகளை வளர்ப்பது பெற்றோர்களுக்கு பெரும் சுமையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  7. ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் டெல்டா திரிபு

    australia

    பட மூலாதாரம், EPA

    ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நகரமான சிட்னியில் செப்டம்பர் மாதம் இறுதிவரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    அங்கு கொரோனா வைரஸின் டெல்டா திரிபு தொடர்ந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    50 லட்சம் பேர் அந்த நகரில் வசிக்கின்றனர். கடந்த ஜூன் மாதத்திலிருந்து அந்த நகரில் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கடந்த வாரத்தில் தொற்று எண்ணிக்கை இரட்டிப்பானது. நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.

    வியாழனன்று 642ஆக இருந்த தொற்று எண்ணிக்கை வெள்ளிக்கிழமையன்று 681ஆக உயர்ந்தது.

    தற்போது கிட்டதட்ட ஆஸ்திரேலியாவின் 25 மில்லியன் மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் பொதுமுடக்க சூழலில் வாழ்கின்றனர். அந்நாட்டில் கொரோனாவின் டெல்டா திரிபு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

    மெல்பர்ன் மற்றும் கேன்பரா நகரிலும் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருந்தாலும், சிட்னி நகரில்தான் பலி எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அங்கு இதுவரை 65 பேர் உயிரிழந்துள்ளனர்.

  8. 750 கோடி ரூபாய் கிரிப்டோ கரன்சி திருட்டு

    computer

    பட மூலாதாரம், Getty Images

    ஜப்பானை சேர்ந்த 'லிக்விட்' (Liquid) எனும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை நிறுவனம், சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கிரிப்டோ கரன்சிகள் திருடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன் இந்திய மதிப்பு சுமார் 750 கோடி ரூபாய் ஆகும்.

    தங்களிடம் திருப்பட்ட கிரிப்டோ கரன்சியின் பரிவர்த்தனைகளைக் கண்காணித்து, முடக்க முயற்சி செய்வதாக லிக்விட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சமீப நாட்களில் நடந்த இரண்டாவது பெரிய கிரிப்டோ கரன்சி திருட்டாகும்.

    டிஜிட்டல் டோக்கன் பரிமாற்ற தளமான பாலி நெட்வொர்க் சமீபத்தில் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான கிரிப்டோ கரன்சி திருடப்பட்டதாகத் தெரிவித்தது.

    பாலி நெட்வொர்க் தளத்தின் மென்பொருள் கோளாறை சுற்றிக்காட்டவே திருடியதாகக் கூறிய ஹேக்கர் பாதி பணத்தைத் திருப்பி அளித்தார். மீதி பணம் முடக்கப்பட்டது.

    அந்த ஹேக்கருக்கு சுமார் 3.5 கோடி ரூபாய் பணம் வெகுமதியாக வழங்கப்பட்டது.

    அது மட்டுமல்லாமல் அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யாமல் இருக்கும் வகையிலான உத்தரவாதமும் அளிக்கப்பட்டது.

  9. டோக்யோ பாராலிம்பிக் வளாகத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று

    ஒலிம்பிக்

    பட மூலாதாரம், ISTOCK

    டோக்யோவில் பாராலிம்பிக் போட்டிகள் தொடங்க விருக்கும் நிலையில் ஒலிம்பிக் நடைபெறும் இடத்தில் உள்ள ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் ஒலிம்பிக் போட்டியில் பங்குபெறும் போட்டியாளர் இல்லை. அவர் ஜப்பான்வாசியும் இல்லை என ஒலிம்பிக் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    பாராலிம்பிக் போட்டிகள் ஆகஸ்டு 24ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.

    கிட்டதட்ட160 குழுக்களில் 4,400 வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.

    கோவிட் கட்டுப்பாடு காரணமாக பாராலிம்பிக் போட்டிகளுக்கும் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.

  10. வீடு வீடாக சென்று தேடுதல் வீட்டை நடத்தும் தாலிபன்கள்

    ஆப்கானிஸ்தான்

    பட மூலாதாரம், EPA

    நேட்டோ மற்றும் முன்னாள் ஆப்கான் அரசிற்காக பணியாற்றியவர்களை தேடும் பணியில் தாலிபன் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

    வீடு வீடாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் தாலிபன்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர் என ஐ.நா தெரிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான தாலிபன், தாங்கள் பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்திருந்தது.

    இருப்பினும் தாலிபன்கள் தங்களின் நிலையிலிருந்து மாறியிருக்க வாய்ப்பில்லை என்றே அச்சமே நிலவுகிறது.

    இந்த தேடுதல் வேட்டை குறித்து, நார்வேயை சேர்ந்த உலகளாவிய பகுப்பாய்வு மையமான RHIPTO மையம் வெளியிட்டுள்ள ரகசிய அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    இந்த மையம் ஐநாவிற்கு உளவு செய்திகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    “தாலிபன்களால் பலர் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். அச்சுறுத்தல்கள் தெளிவாக தெரிவிகின்றன.” என இந்த அறிக்கையை தயாரித்த குழுவின் தலைவர் கிறிஸ்டியன் நீல்மன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

  11. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தை தொகுத்து வழங்குபவர் செய்தியாளர் விஷ்ணுப்ரியா ராஜசேகர்.