You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

டோக்யோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: அர்ஜென்டினாவுடனான அரை இறுதியில் இந்தியா தோல்வி

அரை இறுதியில் தோற்ற நிலையில், பிரிட்டன் அணிக்கு எதிராக வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இனி இந்திய மகளிர் ஹாக்கி அணி மோதவுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. பஞ்சாப் முதல்வரின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர்

    அமரிந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார் பிரசாந்த் கிஷோர் பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்கின் ஆலோசகர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார், அரசியல் உத்திகள் வகுப்பாளராக பரவலாக அறியப்படும் ஐபோக் ஆலோசனை நிறுவன உரிமையாளர் பிரசாந்த் கிஷோர்.

    இது தொடர்பான தமது நிலையை முதல்வர் அமரிந்தர் சிங்கிடம் தெரிவித்த அவர், "இந்த பொறுப்பை தற்போது கையாளும் நிலையில் நான் இல்லை," என்று கூறியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

    அவரது பதவி விலகல் முடிவு தொடர்பாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியில், "பொதுவாழ்வில் இருந்து தான் தற்காலிகமாக ஓட்வு எடுக்க விரும்புவதாகவும், முதல்வரின் முதன்மை ஆலோசகர் பொறுப்பில் முழு நேரமும் ஈடுபட தன்னால் இயலாது என்றும் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பஞ்சாப் மாநிலத்தில் 2017ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின்போது அம்மாநில முதல்வர் அமரிந்தர் சிங்கின் வெற்றிக்காக தமது ஐபேக் நிறுவனம் மூலம் உத்திகள் வகுத்துக் கொடுத்தார் பிரசாந்த் கிஷோர்.

    அதைத்தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின்போதும் அவர் அமரிந்தர் சிங்குக்காக உழைத்தார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் கூடிய முதல்வரின் முதன்மை ஆலோசகர் பதவியை வழங்கினார் அமரிந்தர் சிங். இதன் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காக பிரசாந்த் கிஷோரின் உத்திகள் வழங்கும் உறுதிப்படுத்தியிருந்தார் அமரிந்தர் சிங்.

    இதற்கிடையே, அரசியல் உத்திகள் வகுப்பு பணியில் இருந்து தாம் விலகிக் கொள்ளப் போவதாகவும், அந்த பணியை இனி தமது ஐபேக் நிறுவனத்தின் சிறந்த நிர்வாகிகளே கவனிப்பார்கள் என்றும் பிரசாந்த் கிஷோக் அறிவித்தார்.

    ஆனால், கடந்த மாதம் அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி ஆகியோரை சந்தித்த நிலையில், கடந்த இரு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.

    ஒருபுறம் எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வலுவான அணியை கட்டியெழுப்ப பிரசாந்த் கிஷோர் உத்திகளை வகுப்பதாக பேசப்பட்டாலும், அவர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களை சந்தித்திருப்பதன் மூலம் அந்த கட்சியிலேயே அவர் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளலாம் என்றும் பேச்சு அடிபட்டது.

    இது குறித்து எந்த கருத்தையும் பிரசாந்த் கிஷோர் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், அமரிந்தர் சிங்கின் முதன்மை ஆலோசகர் பணியில் இருந்து விலகும் அறிவிப்பை பிரசாந்த் கிஷோர் வெளியிட்டிருப்பது முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.

  2. நன்றி நேயர்களே

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

  3. 'பூஸ்டர் டோஸ் இப்போது வேண்டாம்' - உலக சுகாதார அமைப்பு

    டெல்டா திரிபுக்காக கொரோனா வைரஸ் தடுப்பூசிகளுக்கு ஊக்குவிப்பு (பூஸ்டர்) டோஸ் போடுவதை குறைந்தபட்சம் செப்டம்பர் நிறுத்தி வைக்க வழிவகை செய்யும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

    உலகின் எல்லா நாடுகளும் தங்கள் மக்கள்தொகையில் குறைந்தபட்சம் 10% பேருக்கு கொரோனா தடுப்பூசியை முழுவதுமாக வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில் இதை வலியுறுத்துவதாக அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் கூறியுள்ளார்.

    பெரும்பாலான தடுப்பூசிகள் இரண்டு டோஸ்களும், சில தடுப்பூசிகள் ஒரு டோஸும் வழங்கப்படும் சூழலில், அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கையைவிட கூடுதலாக ஒரு வழங்குவது பூஸ்டர் டோஸ் ஆகும்.

  4. ராகுல் காந்தி ட்விட்டர் பதிவை நீக்க அறிவுறுத்தல்

    டெல்லியில் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சிறுமியின் குடும்பத்தினரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி ட்விட்டரில் பதிவிட்ட படத்தை நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்துக்கு தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    அந்தப் படத்தை பதிவிட்டது ஏன் என்று ராகுல் காந்திக்கு நோட்டிஸ் அனுப்புமாறும் அந்த நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டத்தின்கீழ் (போக்சோ) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெற்றோரின் அடையாளங்களை வெளிப்படுத்தும் விதத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருந்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  5. கடன் சுமையில் வோடாஃபோன் ஐடியா -பதவி விலகிய குமாரமங்கலம் பிர்லா

    வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தின் நான்-எக்சிக்யூடிவ் இயக்குநர் மற்றும் நான்-எக்சிக்யூடிவ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகும் குமாரமங்கலம் பிர்லாவின் முடிவுக்கு அந்த நிறுவனத்தின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

    அவருக்கு பதிலாக தொலைத்தொடர்புத் துறையில் பல்லாண்டு அனுபவம் உள்ள ஹிமான்ஷு கபாணியா நான்-எக்சிக்யூடிவ் தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

    கடன் சுமையில் மூழ்கியுள்ள வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தில் தாம் வைத்துள்ள பங்குகளை இந்திய அரசுக்கு அல்லது வோடாஃபோன் ஐடியா நிறுவனத்தை தொடர்ந்து இயங்க வைக்க உகந்த நிறுவனம் என்று இந்திய அரசு நினைக்கும் நிறுவனத்துக்கு தாம் வழங்கத் தயாராக இருப்பதாக அமைச்சரவைச் செயலருக்கு அவர் எழுதிய கடிதம் திங்களன்று ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கியிருந்தது.

    சென்ற நிதியாண்டில் இறுதியில் வோடாஃபோன் ஐடியாநிறுவனத்துக்கு அரசுக்கு வழங்க வேண்டிய பணம் உள்பட ரூபாய் 1,80,310 அளவுக்கு மொத்தக் கடன் இருந்தது என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

  6. தமிழக முதல்வரை சந்தித்தார் ஒலிம்பிக் வாள் வீச்சு வீராங்கனை பவானி தேவி

    டோக்யோ ஒலிம்பிக்கில் வாள் வீச்சு போட்டியில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை பவானி தேவி, தாயகம் திரும்பிய நிலையில் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    அப்போது ஒலிம்பிக் போட்டியில் அவர் பயன்படு்ததிய வாளை முதல்வர் ஸ்டாலினுக்கு பரிசாக கொடுத்தார் பவானி தேவி.

    ஆனால், இந்த வாளை நீங்களே வைத்துக் கொண்டு அடுத்த முறை ஒலிம்பிக் செல்லும்போது வெற்றி வாகை சூடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறியதாக செய்தியாளர்களிடம தெரிவித்தார் பவானி தேவி.

  7. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குகளை கவனிக்க கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள் நியமனம்

    உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர்களாக வி. கிருஷ்ணமூர்த்தி, அமித் ஆனந்த் திவாரி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தமிழக ஆளுநரின் உத்தரவின்படி இதற்கான அறிவிக்கையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

  8. இந்திய மகளிர் ஹாக்கி: பிரதமர் நரேந்திர மோதி பெருமிதம்

    இந்திய மகளிர் ஹாக்கி டோக்யோ ஒலிம்பிக் ஹாக்கி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்தபோதும், அந்த அணியை நினைத்துப் பெருமிதப்படுவதாகக் கூறியிருக்கிறார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. "டோக்யோ 2020 என்றவுடன் நாம் நினைவில் கொள்ளும் விஷயங்களில் ஒன்றாக, நமது ஹாக்கி அணிகளின் அற்புதமான ஆட்டங்கள் இருக்கும். இன்று மட்டுமின்றி எப்போதும் நமது மகளிர் ஹாக்கி அணி மன உறுதியுடன் ஆடி தங்களுடைய திறமையை வெளிப்படுத்தியது. இந்த அணியை நினைத்து பெருமைப்படுகிறேன். எதிர்வரும் போட்டியிலும் எதிர்காலத்திலும் சிறந்து பரிணமிக்க வாழ்த்துகள்," என்று கூறியுள்ளார் நரேந்திர மோதி.

  9. டோக்யோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி: அர்ஜென்டினாவுடனான அரை இறுதியில் இந்தியா தோல்வி

    அர்ஜென்டினாவுக்கு எதிரான ஒலிம்பிக் அரையிறுதிப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி அடைந்துள்ளது.

    இதனால் தங்கம் மற்றும் வெள்ளி வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

    பிரிட்டன் அணிக்கு எதிராக வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இனி இந்திய மகளிர் ஹாக்கி அணி மோதவுள்ளது.

  10. தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளிலும் 7.5% ஒதுக்கீடு

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் முதலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 % ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

    இது தொடர்பான முக்கிய அம்சங்களை தமது ட்விட்டர் பக்கத்தில் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

  11. ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் ரவி குமார்

    ஒலிம்பிக் மல்யுத்தப் போட்டியின் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருக்கிறார் இந்தியாவின் ரவி குமார்.

    இதன் மூலம் இந்தியாவுக்கு மற்றொரு பதக்கம் உறுதியானது.

    ஒலிம்பிக் மல்யுத்தத்தின் 57 கிலோ எடைப் பிரிவில் கஜகஸ்தான் நாட்டின் நூரிஸ்லாம் சயனேவுடன் ரவிகுமார் மோதினார்

    தொடக்கத்தில் தடுமாறிய ரவிகுமார் கடைசி இரு நிமிடங்கள் வரை பின்தங்கியே இருந்தார். அதன் பிறகு ரவிகுமாரின் கிடிக்கிப் பிடியில் நூரிஸ்லாம் சிக்கினார். இறுதியில் ரவிகுமார் வெற்றி பெற்றார்

    முன்னதாக 57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ரவிகுமார் பல்கேரியாவின் ஜார்ஜி வாங்கெலோவை 14-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்.

    அதற்கு முன் கொலம்பியாவின் ஆஸ்கர் உர்பனாவை 13-2 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்திருந்தார்.

    தங்கப் பதக்கத்துககான போட்டி நாளை நடக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறும் ஐந்தாவது இந்திய வீரர் ரவிகுமார்.

    86 கிலோ எடைப் பிரிவின் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா அமெரிக்காவின் டேவிட் டெய்லரிடம் தோல்வியடைந்தார். எனினும் அவருக்கு வெண்கலப் பதக்கம் வெல்லும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது.

  12. நாடாளுமன்ற அலுவல் இடையூறுக்கு மத்திய அரசே காரணம்: எதிர்கட்சிகள் கூட்டறிக்கை

    இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாசஸ், மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவாதிக்க குரல் எழுப்பி வரும் எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் அலட்சியமாக செயல்படும் மத்திய அரசுதான் நாடாளுமன்ற அலுவல்கள் இடையூறுக்கு காரணம் என்று குற்றம்சாட்டியிருக்கின்றன இந்திய எதிர்கட்சிகள்.

    இது தொடர்பாக எதிர்கட்சிகளைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே ஆனந்த் சர்மா (காங்கிரஸ்), சரத் பவார், (தேசியவாத காங்கிரஸ்), ராம்கோபால் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), டெரெக் ஓ ப்ரெய்ன், கல்யாண் பானர்ஜி (திரிணமூல் காங்கிரஸ்), வினாயக் ரெளட் (சிவசேனை), டி.ஆர். பாலு, திருச்சி சிவா, (திமுக), மனோஜ் ஜா (ராஷ்ட்ரிய ஜனதா தளம்), இளமாறன் கரீம் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சுஷில் குப்தா (ஆம் ஆத்மி), மொஹம்மத் பஷீர் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்), பினோய் விஸ்வம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), ஹஸ்னெய்ன் மசூடி (தேசிய மாநாடு கட்சி), என்.கே. பிரேமச்சந்திரன் (புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி), எம்.வி. ஷ்ரேயம்ஸ் குமார் (லோக்தந்த்ரிக் ஜனதா தளம்) ஆகியோர் கையெழுத்திட்டு கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

    அந்த அறிக்கையில், பெகாசஸ் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதிக்கப்பட வேண்டும் என்பதில் எதிர்கட்சிகள் உறுதியாக உள்ளன. இது தேசிய பாதுகாப்பு கோணத்தில் உள்ள பிரச்னை என்பதால் இந்திய உள்துறை அமைச்சர் பதிலளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்கள் மற்றும் அதையொட்டி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டங்கள் தொடர்பாகவும் பெகாசஸ் விவகாரம் குறித்தும் விவாதிக்க வேண்டும். ஆனால், துரதிருஷ்டவசமாக நாடாளுமன்றத்தில் பிரச்னை செய்து எதிர்கட்சிகள்தான் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிப்பதாக உள்நோக்கத்துடன் கூடிய பிரசாரத்தை மத்திய அரசு செய்து வருகிறது.

    இந்த விவகாரத்தில் முட்டுக்கட்டை போடுவது மத்திய அரசுதான். அதுதான் எதிர்கட்சிகளின் கோரிக்கையை ஏற்காமல் அடாவடியாக நடந்து கொள்கிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை மதித்து விவாதங்களுக்கு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசை எதிர்கட்சிகள் மீண்டும் வலியுறுத்துகின்றன என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  13. நாடாளுமன்றத்தில் அமளி: மாநிலங்களவையில் திரிணமூல் காங்கிரஸின் 6 உறுப்பினர்கள் இடைநீக்கம்

    பெகாசஸ் வேவு பார்க்கும் மென்பொருள் பயன்பாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வலியுறுத்தி எதிர்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் வேளையில், மாநிலங்களவையில் விதிகளை மீறி அவையின் மையப்பகுதிக்கு வந்து ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகக் கூறி 6 உறுப்பினர்களை இன்று நாள் முழுவதுமாக இடைநீக்கம் செய்திருக்கிறார் மாநிலங்களவை தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு.

    டோலா சென், நடிமுல் ஹக், அபிர் ரஞ்சன் பிஸ்வாஸ், ஷாந்தா சேத்ரி, அர்பிதா கோஷ், மெளசம் நூர் ஆகிய இந்த ஆறு உறுப்பினர்களும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.

  14. தமிழக மீனவர் மீது தாக்குதல்: இந்திய வெளியுறவு அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் சர்வதேச சட்ட விதிகளைப் பின்பற்றாமல் மேற்கொள்ளும் தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரி இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    ஆகஸ்ட் 1ஆம் தேதி தினங்களுக்கு முன்பு கோடியக்கரை கடல் பகுதியில் பதிவு செய்யப்பட்ட படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தினர்.

    அதில் ஒரு மீனவர் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஒன்பது மீனவர்கள் உயிர் தப்பினர். இந்த நிலையில், அத்தகைய தாக்குதல் சம்பவம் நடக்காமல் இருக்க இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு கடிதத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

  15. வெண்கலப் பதக்கம் பெற்றது குறித்து லவ்லினா ஏமாற்றம், ஜானவி மோலே

    ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது குறித்து தனது ஏமாற்றத்தைத் தெரிவித்திருக்கிறார் இந்திய வீராங்கனை லவ்லினா.

    போட்டிக்குப் பிறகு பிபிசி செய்தியாளர் ஜானவி மோலேயிடம் பேசிய லவ்லினா, "பெரிய போட்டிகளில் வெண்கலப் பதக்கமே வெல்ல முடிந்திருக்கிறது. தங்கம் வெல்ல வேண்டும் என நினைத்தேன்" என்று கூறினார்.

    விளையாட்டில் ஈடுபட விரும்பும் பெண்களுக்கு தனது முயற்சிகள் ஊக்கமளிக்கும் என்றும் அவர் கூறினார். தனது பயிற்சியாளர் சந்தியா குருங்-க்கு துரோணோச்சார்யா விருது வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

  16. மருத்துவர் சுப்பைய்யா கொலை வழக்கு: குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள், முரளிதரன் காசி விஸ்வநாதன்

    2013ஆம் ஆண்டு சென்னை ஆர்.ஏ. புரத்தில் மருத்துவர் சுப்பைய்யா கொலைசெய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என சென்னை நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

    2013ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி நரம்பியல் மருத்துவரான சுப்பைய்யா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இது தொடர்பான வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

    அதில் ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனார். இந்த வழக்கு சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் இன்று நீதிபதி அல்லி தீர்ப்பு அளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட பொன்னுச்சாமி, மேரி புஷ்பம், வில்லியம்ஸ், ஏசு ராஜன், போரிஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், செல்வ பிரகாஷ், முருகன், பேசில் ஆகிய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி அறிவித்தார்.

    கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் பத்து கோடி ரூபாய் மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான தகராறில் இந்தக் கொலை நடந்ததாகத் தெரிய வந்தது.

    இந்த கொலை வழக்கின் முழு பின்னணியை அறிய இங்கே சொடுக்கவும்.

  17. மலேசியாவில் யாசின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை - அம்னோ கட்சி அறிவிப்பால் அரசியல் பரபரப்பு, சதீஷ் பார்த்திபன், மலேசியா

    மலேசிய பிரதமர் மொஹிதின் யாசின் தலைமையிலான 'பெரிக்கத்தான் நேசனல்' அரசு பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளதாக முக்கிய கூட்டணிக் கட்சியும் மலாய்க்காரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியான ஐக்கிய மலாய் தேசிய அமைப்பு (யுஎம்என்ஓ) கூறியுள்ளது. நேற்று இரவு இந்த அறிவிப்பு வெளியானதை அடுத்து, இன்று காலை பிரதமர் மொஹிதின் யாசின், மாமன்னர் அல் சுல்தான் அப்துல்லா ரியாதுதினை சந்தித்துப் பேசியிருக்கிறார்.

    ஆனால், சந்திப்பின்போது என்ன நடந்தது என்பது அலுவல்பூர்வமாக தெரியவரவில்லை.

    இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தமது அரசாங்கம் நம்பிக்கை கோரும் தீர்மானம் ஒன்றை தாக்கல் செய்யும் என பிரதமர் மொஹிதின் யாசின் சற்று முன்னர் தெரிவித்துள்ளார்.

    அரண்மனை வட்டாரங்களில் இருந்து இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

    நாட்டில் நிலவும் அசாதாரண அரசியல் சூழலைத் தொடர்ந்து தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் மொஹிதின், "எனக்கு பெரும்பான்மை பலம் இருப்பதற்கான ஆதரவுக் கடிதங்களை வழங்கும் எம்.பி.க்களின் கடிதம் தொடர்பாக மாமன்னரிடம் தெரிவித்துள்ளேன்," என்று கூறினார்.

    முன்னதாக, கடந்த செவ்வாய்க்கிழமை இரவு யுஎம்என்ஓ கட்சித் தலைவர் சாஹித் ஹமிதி காணொளி வாயிலாக நடத்திய செய்தியாளர் சந்திப்பின்போது, மொஹிதினின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறும் கடிதத்தை போதுமான எம்.பி.க்களிடம் இருந்து சேகரித்துள்ளதாகவும் அவை மாமன்னரிடம் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

    அந்த அடிப்படையில் ஆளும் பெரும்பான்மையை மொஹிதின் அரசு இழந்து விட்டது என்றும் சாஹித் ஹமிதி கூறியிருந்தார்.

    மலேசியாவில் ஆளும் அரசின் தோல்விகளுக்கு மொஹிதின் யாசின் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சாஹித் ஹமிதி தெரிவித்தார்.

  18. ஒலிம்பிக் குத்துச்சண்டை அரையிறுதியில் லவ்லினா தோல்வி: வெண்கலப் பதக்கம் பெறுகிறார்

    ஒலிம்பிக் குத்துச் சண்டை அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் லவ்லினா போர்ஹோகெய்ன் தோல்வியடைந்தார்.அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    முதல்நிலை வீராங்கனையான துருக்கி நாட்டின் சுர்மெனெலியுடன் அரையிறுதிப் போட்டியில் லவ்லினா மோதினார்.

    முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர்.

    இரண்டாவது சுற்றிலும் அவரது செல்வாக்குத் தொடர்ந்தது. காலிறுதிப் போட்டியில்,

    லவ்லினா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சீன தைபேயின் நியான் சின் சேன்னைத் தோற்கடித்தார். இதன் மூலம் அவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைக்க இருக்கிறது.

  19. டோக்யோ ஒலிம்பிக் மல்யுத்தம்: அரையிறுதியில் இந்திய வீரர்கள்

    டோக்யோ ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர்களான ரவிகுமார் மற்றும் தீபக் புனியா ஆகியோர் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளனர்.

    57 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட ரவிகுமார் பல்கேரியாவின் ஜார்ஜி வாங்கெலோவை 14-4 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தினார்..

    முந்தைய சுற்றில் கொலம்பியாவின் ஆஸ்கர் உர்பனாவை 13-2 என்ற புள்ளிகள் கணக்கில் தோற்கடித்திருந்தார்.

    இதேபோல் தீபக் புனியா சீனாவின் சூசென் லின்னை 6-3 என்ற புள்ளிகளில் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். முந்தைய சுற்றில் அவர் நைஜீரிய வீரரை 12-1 என்ற புள்ளிகளில் தோற்கடித்திருந்தார்.

    இன்று பிற்பகலில் நடக்க இருக்கும் போட்டியில் ரவிகுமார் கஜகஸ்தான் வீரருடன் மோதுகிறார். தீபக் புனியா அமெரிக்க வீரருடன் மோதுகிறார்.

  20. மாவோவின் படத்தை சீன வீராங்கனைகள் வைத்திருந்தது ஏன்? ஒலிம்பிக் கமிட்டி விசாரணை

    டோக்யோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற இரு சீன வீராங்கனைகள் தங்கள் ஆடையில் மாவோ சே துங்கின் படத்தை பொருத்தியிருந்தது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது.

    இது தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி விசாரணை நடத்தி வருகிறது. சீன ஒலிம்பிக் கமிட்டியிடம் இது தொடர்பாக விளக்கம் கோரியிருப்பதாக சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார்.

    பாவோ சான்ஜு, ஷோங் தியான்ஷி இணை திங்கள்கிழமை நடந்த சைக்கிள் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது.

    ஒலிம்பிக் விதிகளின்படி போட்டி நடக்கும் இடங்களில், பதக்க மேடையில் அரசியல் ரீதியிலான கருத்துகளை வெளிப்படுத்துவது, போராட்டம் நடத்துவது, முழக்கங்களை எழுப்புவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருக்கின்றன.

    "எந்தவிதமான போராட்டம், அரசியல், மத, இன பரப்புரைகளுக்கு அனுமதியில்லை" என்று ஒலிம்பிக் சாசனத்தின் 50-ஆவது பிரிவு கூறுகிறது.

    எனினும் கடந்த மாதம் இதில் சிறிய தளர்வு அளிக்கப்பட்டது. அதன் படி இனப் பாகுபாட்டைக் குறிக்கும் வகையில் ஒருகால் முட்டிபோட்டு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

    போட்டிக்கு முன்னும் பின்னும் வீரர்கள் இதைச் செய்யலாம். ஆனால் வேறு எந்தக் குறியீட்டுக்கும், அறிக்கைக்கும் அனுமதி கிடையாது.

    ஏற்கெனவே அமெரிக்காவின் குண்டு எறிதல் வீராங்கனை ரேவன் சாண்டர்ஸ் எக்ஸ் வடிவத்தில் கைகளை உயர்த்திக் காட்டியது தொடர்பாக ஒலிம்பிக் கமிட்டி விசாரித்து வருகிறது.

    இப்போது சீன வீராங்கனைகள் மாவோவின் படத்தை சட்டையில் பொருத்தியது சர்ச்சையாகி இருக்கிறது.

    1949 முதல் 1976 வரை சீனாவை ஆட்சி செய்த மாவோ, அந்த நாட்டின் முக்கியமான அடையாளம். 1960-களில் அவரது படம் பொறிக்கப்பட்ட பேட்ஜ்கள் கோடிக்கணக்கில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு வழங்கப்பட்டன. தற்போதைய அதிபர் ஸீ ஜின்பிங்கும் மாவோவின் பெயரை முன்னிலைப்படுத்தி வருகிறார்.