You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை 43 ஆயிரமாக சரிந்தது

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தணிந்து வரும் நிலையில் தொடர்ந்து சில நாள்களாக இந்தியாவின் தினசரி தொற்று எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகிவருகிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. உத்தராகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்பு

    டேராடூன் ஆளுநர் மாளிகையில் உத்தராகண்டின் புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி பதவியேற்றுக் கொண்டார்.

    அவரோடு பிஷன் சிங் சுபல், சுபோத் உனியல், அர்விந்த் பாண்டே கணேஷ் ஜோஷி ஆகியோரும் மாநில அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

    கொரோனா வைரஸ் மூன்றாம் அலை இந்தியாவை அடுத்த சில மாதங்களில் தாக்கலாம் என கூறப்பட்டு வருகிறது.

    இதற்கு மத்தியில், சார் தாம் யாத்ரா என்றழைக்கப்படும் புனித ஸ்தலங்கள் திறக்க இருப்பதாக புதிய முதல்வர் கூறியுள்ளார்.

  2. ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகள், சேலத்தில் அமைச்சர் நாசர் அதிர்ச்சி குற்றச்சாட்டு

    `அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகள் இலவசமாக அனுப்பப்பட்டுள்ளதற்கு ஆதாரம் உள்ளது' என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நாசர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சேலம் மாநகரில் செயல்பட்டு வரும் பால் விற்பனை மையங்களைப் பார்வையிட்டார். பின்னர், பால் பண்ணை வளாகத்தில் உள்ள பால் பொருள் உற்பத்திப் பிரிவு, கிடங்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.

    இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், `` கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஆவின் நிறுவனத்துக்கு 234 ஊழியர்கள் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பணிநீக்கம் செய்வது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இதுதவிர, 636 முதுநிலை மற்றும்இளநிலை ஆலை பணியாளர்களை நியமிப்பதற்காக முறைகேடாகப் பணம் பெற்றுள்ளதாகத் தகவல் வந்துள்ளது. இதையடுத்து அந்த நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு புதிதாக ஊழியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

    தொடர்ந்து பேசிய அமைச்சர் நாசர், `` தமிழ்நாட்டில் பால் உற்பத்தி மற்றும் விற்பனை அதிகரித்துள்ளது. பால்விலை குறைப்பால் அரசுக்கு 270 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசின் விலை குறைப்புக்குப் பிறகும் பழைய விலைக்கே பாலை விற்பனைசெய்து வந்த 22 நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 25 பால் கூட்டுறவு ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது தெரியவந்தது. அதிலும், சேலம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆவின் பால் பண்ணையில் பெரும் அளவில் ஊழல் நடந்துள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    மேலும், "முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன் அளவுக்கு ஆவின் இனிப்புகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரம் உள்ளது. இதன்பேரில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் நாசர்.

  3. அகிலேஷ் யாதவ் ஆம் ஆத்மி எம்பியுடன் சந்திப்பு

    சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் சிங்கை இன்று சந்தித்தார்.

    அடுத்த ஆண்டு உத்தரப் பிரதேசம் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கவுள்ள நிலையில் கூட்டணி குறித்து பேசினார்களா என்ற யூகங்களுக்கு இது வழிவகுத்துள்ளது.

    எனினும் பாஜகவின் அடக்குமுறை கொள்கைகள் மற்றும் அக்கட்சி சமீபத்தில் பெரிய அளவில் வென்ற உத்தரப்பிரதேச மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் ஆகியவை குறித்தே பேசினோம் என்று சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

  4. இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசி தொடர்பாக பிரேசிலில் போராட்டம் ஏன்?, நெருக்கடியில் சயீர் பொல்சனாரூ, மறுக்கும் பாரத் பயோடெக்

    பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ கொரோனா வைரஸ் பெருந்தொற்றைக் கையாண்ட விதத்தை எதிர்த்து அந்நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    பிரேசில் நாட்டு சுகாதார அமைச்சகம் கொரோனா வைரஸ் தடுப்பூசியை வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாக சமீபத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசியை அதிக விலை கொடுத்து வாங்க பிரேசில் அதிகாரிகள் லஞ்சம் பெற்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்த சில நாட்களிலேயே, தங்களிடம் ஒரு டோஸ் தடுப்பூசி வாங்க ஒரு அமெரிக்க டாலர் லஞ்சமாகக் கேட்கப்பட்டது என்று ஆஸ்ட்ராசெனீகா நிறுவனம் தெரிவித்தது.

    இதைத் தொடர்ந்து பிரேசிலில் பல இடங்களில் போராட்டங்கள் தொடங்கின.

  5. உத்தராகண்ட் புதிய முதல்வர்

    உத்தராகண்ட் மாநிலத்தின் முதல்வராகத் தேர்வாகியுள்ள புஷ்கர் சிங் தாமி முன்னாள் முதல்வர்கள் த்ரிவேந்திர சிங் ராவத் மற்றும் திராத் சிங் ராவத் ஆகியோரை இன்று நேரில் சந்தித்தார்.

    இன்று அவர் முதல்வராக பதவியேற்கிறார். ஒரே சட்டமன்றக் காலத்தில் அந்த மாநிலத்துக்கு இவர் மூன்றாம் முதல்வர் ஆவார்.

    அடுத்து ஆண்டு தொடக்கத்தில் உத்தராகண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவுள்ளது.

    முதல்வரான ஆறு மாதத்துக்குள் சட்டமன்ற உறுப்பினராக முடியாது என்பதால் பதவியேற்ற நான்கே மாதங்களில் திராத் சிங் ராவத் வெள்ளியன்று பதவி விலகினார்.

  6. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

    ஜார்க்கண்ட் மாநிலத்தின் குந்தி மாவட்டத்தில் மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்டதாக பி.டி.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது.

  7. இந்தியாவில் தினசரி தொற்று எண்ணிக்கை 43 ஆயிரமாக சரிந்தது

    இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை முந்தைய 24 மணி நேரத்தில் 43 ஆயிரமாக சரிந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தொடர்ந்து தணிந்து வரும் நிலையில் கடந்த சில நாள்களாக தினசரி தொற்று எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் குறைவாகப் பதிவாகிவருகிறது. இன்று காலை இந்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தரவுகளின்படி முந்தைய 24 மணி நேரத்தில் பதிவான தொற்றுகளின் விவரம் இது. அதற்கு முந்திய நாளைக் காட்டிலும் லேசான சரிவு இது. இந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 955 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.