`அ.தி.மு.க ஆட்சியில் அப்போதைய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஆவின் இனிப்புகள் இலவசமாக அனுப்பப்பட்டுள்ளதற்கு
ஆதாரம் உள்ளது' என தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர்
தெரிவித்துள்ளார்.
சேலம்
மாவட்டத்தில் உள்ள ஆவின் பால் பண்ணையில் நாசர்
ஆய்வு மேற்கொண்டார். அப்போது, சேலம் மாநகரில் செயல்பட்டு வரும் பால் விற்பனை மையங்களைப்
பார்வையிட்டார். பின்னர், பால் பண்ணை வளாகத்தில் உள்ள பால் பொருள்
உற்பத்திப் பிரிவு, கிடங்கு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
இதன்பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நாசர், `` கடந்த அ.தி.மு.க
ஆட்சியில் ஆவின் நிறுவனத்துக்கு 234 ஊழியர்கள் முறைகேடாக
நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களைப் பணிநீக்கம் செய்வது தொடர்பாக
விசாரணை நடந்து வருகிறது. இதுதவிர, 636 முதுநிலை மற்றும்இளநிலை ஆலை பணியாளர்களை நியமிப்பதற்காக முறைகேடாகப் பணம் பெற்றுள்ளதாகத் தகவல்
வந்துள்ளது. இதையடுத்து அந்த நியமனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்தப்
பணியிடங்களுக்கு புதிதாக ஊழியர்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய
அமைச்சர் நாசர், `` தமிழ்நாட்டில் பால் உற்பத்தி மற்றும்
விற்பனை அதிகரித்துள்ளது. பால்விலை குறைப்பால்
அரசுக்கு 270 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அரசின் விலை குறைப்புக்குப் பிறகும் பழைய விலைக்கே பாலை விற்பனைசெய்து வந்த 22 நிலையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 25 பால் கூட்டுறவு ஒன்றியங்களிலும் முறைகேடு நடந்துள்ளது
தெரியவந்தது. அதிலும், சேலம், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஆவின் பால் பண்ணையில் பெரும் அளவில் ஊழல்
நடந்துள்ளது. இதற்குக் காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை
எடுக்கப்படும்" என்றார்.
மேலும், "முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு தீபாவளி நேரத்தில் ஒன்றரை டன்
அளவுக்கு ஆவின் இனிப்புகள் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான ஆதாரம்
உள்ளது. இதன்பேரில் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார் நாசர்.