இந்தோனேசீயாவில் தடுத்து வைக்கபட்டுள்ள 6 தமிழர்களை மீட்டு உடனடியாக தாயகம் அழைத்து வர வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அடுத்த அக்ரமேசி கிராமத்தை சேர்ந்தவர் கவின் (32). இவருக்கு ரேவதி என்ற மனைவியும், ஒரு ஆண் குழந்தையும், நான்கு மாத பெண் குழந்தையும் உள்ளது.
கவின் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் மூலம் DEE4BRICH என்ற கப்பலில் கடந்த 10 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார்.
கடந்த 8-ஆம் தேதி சொந்த ஊர் திரும்புவதற்காக கப்பலில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்த கவின் உட்பட 6 பேர் இந்தோனேசீயாவில் இறங்கியுள்ளனர்.பின்னர் அங்கிருந்து சொந்த ஊருக்கு வருவதற்காக இந்தோனேசீயா விமான நிலையம் சென்ற போது 6 பேரும் கடவுச்சீட்டு சரிபார்க்கும் மையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பின்னர் இந்தோனேசீயாவில் உள்ள பாட்டாம் என்ற இடத்தில் உள்ள சிறப்பு முகாமில் அவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.
இந்த நிலையில், இந்தோனேசீயா அரசால் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 6 தமிழர்களையும் உடனடியாக தாயகம் அழைத்து வர தமிழக முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து கவின் உறவினர் நாகராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், கடந்த 8ம் தேதி பணிகளை முடித்துக் கொண்டு இந்தோனேசியாவில் இருந்து புறப்பட இருப்பதாக கவின் தனது மனைவி ரேவதியிடம்; கூறியுள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து புறப்பட்ட தனது கணவர் சொந்த ஊருக்கு வந்து சேரவில்லை என கவின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது தொடர்ந்து செல்போன் இணைப்பு துண்டிக்கபட்டிருந்துள்ளது.
உடனடியாக கவின் வேலை செய்த நிறுவனத்தை ரேவதிதொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதற்கு நிர்வாகம் தரப்பில் கொரோனா காரணமாக கவின்; தனிமைப்படுத்தப்பட்டு இந்தோனேசீயாவில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் கவின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை கவின் செல்போனில் இருந்து வீடியோ கால் மூலமாக மனைவி ரேவதியை தொடர்பு கொண்டு 'என்னை காப்பாற்றுங்கள், முகாமில் உணவு அளிக்காமல் சித்ரவதை செய்கிறார்கள்' என பேசிக் கொண்டிருந்த போது சிறை அதிகாரி ஒருவர் கவினிடம் இருந்த செல்போனை பறித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சம் அடைந்த கவினின் உறவினர்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலாவிடம் கவினை மீட்டுத் தரும்படி மனு அளித்துள்ளனர்.
மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை ஆகியோருக்கு ட்விட்டர் மூலமாக தகவல் தெரிவித்துள்ளனர். இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை என்கிறார் கவினின் உறவினர் நாகராஜன்.