வண்டலூர் சிங்கங்களைத் தாக்கிய டெல்டா வைரஸ்! - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல், விஜயானந்த், பிபிசி தமிழுக்காக
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களை தாக்கிய வைரஸ் தொடர்பான ஆராய்ச்சியில் புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா மூடப்பட்டது. விலங்குகள் மற்றும் பறவைகளின் பராமரிப்புக்காக ஊழியர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில், பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் நீலா என்ற பெண் சிங்கம் உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சிடைந்த பூங்கா நிர்வாகம், இதர சிங்கங்களை தனிமைப்படுத்தி தீவிரமாகக் கண்காணித்து வந்தது.கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிங்கங்களின் மாதிரிகளை இதர சிங்கங்களின் மாதிரிகளை உத்தரபிரதேசத்தில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (IVRI) அனுப்பியது. பெண் சிங்கம் உயிரிழந்த தகவலைக் கேள்விப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் பூங்காவில் ஆய்வை மேற்கொண்டார்.
மேலும், இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட பரிசோதனை முடிவில், சிங்கங்களை கேனைன் டிஸ்டம்பர் வைரஸ் (CDV) தொற்றும் பாதித்துள்ளது தெரியவந்தது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2 தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக ஆண் சிங்கம் ஒன்று உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.இந்நிலையில், விலங்குகளின் உடலில் உருவாகும் புதிய நோய்க் கிருமிகளைப் பற்றி ஆராயும் போபாலில் உள்ள நிசாத் நிறுவனத்துக்கு பூங்கா நிர்வாகம் மாதிரிகளை அனுப்பியுள்ளது.
இதுதொடர்பாக கிடைத்த தகவல்களை அறிஞர் அண்ணா உயிரியில் பூங்கா துணை இயக்குநர் நாக சதீஷ் கிடிஜாலா அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
அதில், `சென்னை வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கடந்த 24.5.2021 அன்று 4 சிங்கங்களும் 29.5.2021 அன்று 7 சிங்கங்கள் என மொத்தம் 11 சிங்கங்களின் மாதிரிகள் சார்ஸ் கோவிட் 2 (SARS COV-2) சோதனைக்காக தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் பகுப்பாய்வு நிறுவனத்துக்கு (ICAR) அனுப்பப்பட்டது.போபாலில் உள்ள NISHAD நிறுவனம், நம் நாட்டில் விலங்குகளில் புதிதாக உருவாக்கும் நோய்க் கிருமிகளைப் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் சார்ஸ் கோவிட் தொற்றுக்காக பூங்காவில் உள்ள விலங்குகளின் மாதிரிகளை பரிசோதிக்க நம் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 4 நிறுவனங்களில் இதுவும் ஒன்று.கடந்த 3.6.2021 அன்று நிசாத் நிறுவனம் தெரிவித்த அறிக்கையின்படி, 9 சிங்கங்களின் மாதிரிகளில் சார்ஸ் கோவிட் தொற்று உறுதியானதையடுத்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றன.இதனைத் தொடர்ந்து அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கங்களுக்கு தொற்று ஏற்படுத்திய சார்ஸ் கோவிட் வைரஸின் மரபணு வரிசைப்படுத்துதலின் முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு உயிரியல் பூங்கா அதிகாரிகள் அந்நிறுவனத்திடம் கோரியிருந்தனர். இந்தநிலையில் ICAR-NISHAD நிறுவனத்தின் இயக்குநர் தற்போது முடிவை தெரிவித்துள்ளார்.அதில், `4 சிங்க மாதிரிகளின் மரபணு வரிசைப்படுத்தல் ஆய்வு போபாலில் உள்ள நிசாட் நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்டது. மரபணு வரிசைப்படுத்துதல் பகுப்பாய்வில் 4 சிங்கங்களின் மாதிரிகள் பாங்கோலின் பரம்பரை B.1.617.2 வகையைச் சேர்ந்தவை என்பதையும் அவை உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்திய டெல்டா வகையைச் சேர்ந்தது' எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 11.05.2021 அன்று உலக சுகாதார அமைப்பானது, B.1.617.2 மரபணு பரம்பரை வரிசைப்படுத்துதலில் இது மாறுபட்ட வகை எனக் கூறி வகைப்படுத்தியுள்ளது. இது வேகமாகப் பரவும் தன்மை கொண்டதோடு நடுநிலைத்தன்மைக்கு குறைவானது எனவும் தெரிவித்துள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.