You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழ்நாட்டில் புதிதாக 817 பேருக்கு கொரோனா தொற்று; மேலும் 6 பேர் பலி

தமிழ்நாட்டில் இதுவரை 9,909 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் 8,500 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தென் கொரியாவில் திடீரென ஒரே நாளில் அதிக தொற்றுகள், எவ்வளவு தெரியுமா?

    கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய வெகு சில உலக நாடுகளில் ஒன்று தென் கொரியா.

    அங்கு கடந்த 49 நாள்களில் இல்லாத அளவுக்கு அதிக எண்ணிக்கையில் ஒரே நாளில் தொற்று பரவியுள்ளது. அதிகம் என்பதெல்லாம் சரி. எண்ணிக்கை எவ்வளவு என்று கேட்கிறீர்களா?

    அதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு ஒரு சின்ன முன் கதை சுருக்கம்:சீனாவுக்கு அடுத்தபடியாக, கொரோனா தொற்று பரவத் தொடங்கிய நாடுகளில் தென் கொரியா முக்கியமானது. ஆனால், விரிவான பரிசோதனைகள் செய்து, உறுதியான நடவடிக்கைகள் எடுத்து கொரோனா தொற்று எண்ணிக்கையை வெகுவாக கட்டுப்படுத்திவிட்டது. இதுவரை வெறும் 11,265 பேருக்கு மட்டுமே அந்நாட்டில் தொற்று பரவியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 269. இந்தியாவில் கொரோனா தொற்றுவதற்கு பல வாரங்கள் முன்பே கொரியாவில் தொற்று பெரிய பிரச்சனையாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா தொற்றுக்கு மத்தியில் பொதுத் தேர்தலை நடத்தி முடித்த ஒரே உலக நாடும் தென் கொரியாதான். அரசாங்கம் செய்த அட்டகாசமான நடவடிக்கையை அங்கீகரிக்கும் விதமாக ஆளுங்கட்சி அபார வெற்றி பெற்றது.

    சரி மீண்டும் இப்போதைய கதைக்கு வருவோம்.

    வெற்றிகரமாக கொரோனா தொற்றினை கட்டுப்படுத்திவிட்ட நிலையில் பள்ளிகள் திறக்கப்பட்டு 20 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு சென்றுள்ள நிலையில், கடந்த 49 நாள்களில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில்.... 40 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்கிறார் தென் கொரியாவில் உள்ள பிபிசி செய்தியாளர் லாரா பிக்கர்.

    இதில் பெரும்பாலான தொற்றுகள் இரவு விடுதிக்கு சென்றவர்கள் மூலம் வந்துள்ளதாம்.

    வெறும் 40 பேர்தானே என்று அந்நாட்டு அரசு சும்மா இருக்கவில்லை. இன்று 447 பள்ளிகள் திறப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாம். இப்படி திறப்பது ஒத்திவைக்கப்பட்ட பள்ளிகளில் 111 பள்ளிகள் தலைநகர் சோலில் உள்ளன.

  2. 9/11க்குப் பின் உலகம் ஒரு புதிய அத்தியாயம், கொரோனாவுக்கு பிறகு புதிய புத்தகம், ராகுல் காந்தி கருத்து

    கொரோனாவுக்குப் பிறகு உலகில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி. 9/11 நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரத்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு உலகில் புதிய அத்தியாயம் தொடங்கியதாக குறிப்பிட்ட அவர், கொரோனாவுக்குப் பிறகு ஏற்படப் போகும் மாற்றம் புதிய புத்தகமாக இருக்கப் போகிறது என்றார்.

    கோவிட்-19 உலகத் தொற்றின் பாதிப்பு குறித்து பொது சுகாதார வல்லுநர்கள் ஆஷிஷ் ஜா, ஜான் ஜிசெக் ஆகியோருடன் உரையாடினார் ராகுல்காந்தி. அந்த உரையாடலை தமது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.கடுமையான ஊரடங்கை இந்தியா அமல்படுத்தினால் அதன் பொருளாதாரம் நாசமாகும் என்று அப்போது ஜிசெக் குறிப்பிட்டார்.

  3. புகை பிடிப்பவர்களுக்கு கொரோனா வராதா? | Reality Check

    கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை. குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன.

    இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொடர்பான சில போலிச் செய்திகள் குறித்த பின்னணியை பார்ப்போம்.

  4. விமானத்தில் கோவை சென்ற நபருக்கு கொரோனா

    விமானத்தில் டெல்லியில் இருந்து கோவை சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

    இரண்டு மாதங்களுக்கு பிறகு கடந்த திங்கட்கிழமை அன்று இந்தியாவில் விமான சேவை தொடங்கப்பட்டது.

    இந்நிலையில்தான் இண்டிகோ விமானத்தில் கோவை பயணித்த பயணிக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

    தற்போது அந்த விமானக்குழுவினர் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதோடு, அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

  5. கர்நாடகாவில் மே31 முதல் கோயில்கள் திறப்பு

    கர்நாடகாவில் மே 31ஆம் தேதி முதல் கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

  6. லத்தின் அமெரிக்கா - மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் எவை?

    தற்போது கொரோனா தொற்றின் மையமாகி இருக்கும் லத்தின் அமெரிக்காவில் குறிப்பாக 7 நாடுகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அப்பிராந்தியத்தில் பணக்கார நாடாக கருதப்படும் பனாமாவில் இறப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளது.

    • பனாமா (10 லட்சம் பேரில் 73 இறப்புகள்)
    • ஹோண்டூரஸ் (19)
    • எல் சேல்வடார் (6)
    • பெலிஸ் (5)
    • நிகாரகுவா (5)
    • குவாடாமாலா (4)
    • கோஸ்டா ரிகா (2)

    பல்வேறு நாடுகளில் இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், கொரோனாவின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கிறது.

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவின் அண்மைய நிலவரம்

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 6387 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்றும், 170 உயிரிழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,51,767ஆக உள்ளது. 83004 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

  8. பிரேசிலுக்கு பயணம் மேற்கொண்ட வெளிநாட்டினவருக்கு தடை விதிக்கும் அமெரிக்கா, கேட்டி வாட்சன், தென் அமெரிக்க செய்தியாளர்

    கடந்த 14 நாட்களில் பிரேசிலுக்கு பயணம் மேற்கொண்ட வெளிநாட்டினர்களுக்கு பயணத்தடைவிதித்துள்ளது அமெரிக்கா.

    உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக பிரேசில் உள்ளது. தற்போதுவரை அந்நாட்டில் 3 லட்சத்து 90,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 24000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அரசியலில் டிரம்பை தனது லட்சிய மனிதராக கருதுகிறார் பிரேசில் அதிபர் பொல்சினாரூ. மேலும் அமெரிக்காவும், பிரேசிலும் கூட்டணி நாடுகளாக உள்ளன.

    டிரம்ப் மற்றும் பொல்சினாரூ இருவருமே இந்த பெருந்தொற்றை ஒரேமாதிரியான முறையில்தான் கையாண்டனர்.

    இது பெரிதொரு நெருக்கடி இல்லை என்றனர் மேலும் உயிரிழப்புகள் அதிகரித்த நிலையில் நாடு பழைய நிலைக்கு செல்ல வேண்டும் என்றனர்.

    இந்த பெருந்தொற்றின் மையப்பகுதியாக லத்தின் அமெரிக்கா உருவாகியுள்ளது என செவ்வாயன்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்திருந்தது. மேலும் அந்த பகுதியில் பிரேசில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடாக உள்ளது.

    பிரேசிலில் குறைவான பரிசோதனைகளே செய்யப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  9. நேற்றைய சில முக்கிய நிகழ்வுகள்

    • இந்தியாவில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் நிலை குறித்து தானாக முன்வந்து வழக்கு விசாரணை செய்த உச்சநீதிமன்றம், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மத்திய அரசும் மாநில அரசுகளும் தவறிவிட்டன என தெரிவித்துள்ளது.
    • கொரோனா காரணமாக கடந்த மார்ச் 23-ம் தேதி முதல் மூடப்பட்டிருந்த நியூயார்க் பங்குசந்தை நேற்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
    • தமிழ்நாட்டில் புதிதாக 646 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டது, இதனால் தமிழகத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,728ஆக உயர்ந்துள்ளது.
    • இரண்டு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் மாஸ்க் அணிவிக்க வேண்டாம் என்றும், மாஸ்க் அணிவதால் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்றும் ஜப்பான் குழந்தைகள் நல மருத்துவர்கள் சங்கம் தெரிவித்தது.
    • நாடுகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விரைவாக தளர்த்தப்பட்டால், தொற்று பரவலின் முதல் கட்டத்தில் ’இரண்டாவது உச்சநிலையை’ நாடுகள் சந்திக்க நேரிடும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.
  10. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லியில் இருந்து தொகுத்து வழங்குவது விஷ்ணுப்ரியா ராஜசேகர்.

    கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.