கொரோனா வைரஸ்: தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு பாதிப்பு; 118ஆக உயிரிழப்பு அதிகரிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் படிக்கலாம்.

  2. கொரோனா வைரஸ் - இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்

    • இந்தியாவில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இன்று இயக்கப்பட்ட 532 விமானங்களில் 39,231 பயணிகள் பயணித்துள்ளனர்.
    • சிங்கப்பூரில் இன்று புதிதாக 344 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,960ஆக அதிகரித்துள்ளது.
    • தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது.
    • ஜப்பானில் அமலில் இருந்த தேசிய அவசர நிலையை இன்று முதல் தளர்த்துவதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.
    • பிரேசிலில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார்.
    • மலேசியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.
    • கோவிட் 19 வைரஸ் பரவலை தடுக்க இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த பிரபல ஷியா முஸ்லீம் மசூதிகளை இரான் மீண்டும் திறந்துள்ளது.
  3. ஜூலை 1 முதல் வெளிநாட்டு பயணிகள் ஸ்பெயின் வரலாம்

    சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தரும் உலகின் இரண்டாம் நாடான ஸ்பெயின், ஜூலை 1-ம் தேதி முதல் தங்கள் நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டு பயணிகள் இரண்டு வாரம் தனிமையில் இருக்க வேண்டியது அவசியம் இல்லை என கூறியுள்ளது.

    ஸ்பெயின் வெளியுறவுத்துறை அமைச்சர் அரஞ்ச கோன்சலஸ் லயா,’’ மோசமான காலத்தை கடந்துவிட்டோம்’’ என கூறியுள்ளார்.

    ‘’ஜூலை முதல் சர்வதேச பயணிகள் ஸ்பெயின் வருவதற்கு அனுமதி அளித்துள்ளோம். தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது’’என அவர் கூறியுள்ளார்.

  4. கட்டுப்பாடுகளை மீறி கடற்கரைகளில் கூட்டமாக கூடிய அமெரிக்கர்கள்

    அமெரிக்கா

    பட மூலாதாரம், Reuters

    அமெரிக்காவில் நினைவு நாளை முன்னிட்டு மக்கள் கடற்கரைகளிலும், ஏரிகளிலும் கூட்டம் கூட்டமாகக் கூடியுள்ளனர்.

    கொரோனா காரணமாக அமெரிக்காவில் உள்ள கட்டுப்பாடுகளை மீறி நூற்றுக்கணக்கான மக்கள் கூடியுள்ளது அதிகாரிகளை அச்சமடைய வைத்துள்ளது.

    மே மாதத்தில் வரும் வருடாந்திர விடுமுறை நாளான நினைவு நாள், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி இறந்தவர்களுக்காக அனுசரிக்கப்படுகிறது.

    கோடைக் காலத்தின் தொடக்கமாகவும் இது பார்க்கப்படுகிறது. கலிஃபோர்னியா, புளோரிடா உள்ளிட்ட நகரங்களில் உள்ள பொது இடங்களில் கூடிய மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் வழக்கமான நாட்களைப் போல இருந்தனர்.

    அமெரிக்க கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்குழுத் தலைவர் டாக்டர் டெபோரா பிர்க்ஸ், மக்கள் கூடிய காட்சிகளைப் பார்த்தபின் தான் மிகவும் கவலைப்படுவதாகக் கூறியுள்ளார்.

    உலகிலே அதிகளவிலான கொரோன தொற்று அமெரிக்காவில் உள்ளது. இங்கு இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது.

    இரண்டு மாத பொது முடக்கத்திற்குப் பிறகு அமெரிக்காவின் 50 மாகாணங்களும் முடக்கத்தைச் சற்று தளர்த்தியுள்ளன. ஆனால், கட்டுப்பாடுகள் இன்னும் நீடிக்கின்றது.

    அமெரிக்கா

    பட மூலாதாரம், EPA

    அமெரிக்கா

    பட மூலாதாரம், Getty Images

  5. இமாச்சலில் ஜுன் 30 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்படவில்லை

    இந்தியாவின் இமாச்சல் பிரதேச மாநிலத்தில் ஜூன் 30 வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வதந்தி பரவியது.

    இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அம்மாநில கல்வி அமைச்சர் சுரேஷ் பரத்வாஜ்,’’ மாவட்டத்தில் உள்ள சூழ்நிலைகளை பொறுத்து, பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் முடிவு எடுக்கலாம் என அரசு கூறியிருந்தது. அவர்கள் பொது முடக்கத்தை நீட்டிப்பார்கள் என இதற்கு அர்த்தம் அல்ல’’ என கூறியுள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  6. இலங்கையில் 10ஆவது கொரோனா உயிரிழப்பு பதிவானது

    இலங்கை

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மற்றுமொருவர் உயிரிழந்துள்ளார்.

    இந்த உயிரிழப்பு இன்று பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகம் தெரிவிக்கின்றது.

    திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 51 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

    குவைத் நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்ட சிலர் திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

    இந்த நிலையிலேயே, தனிமைப்படுத்தப்பட்டவர்களில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    உயிரிழப்பின் பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனைகளின் ஊடாக, குறித்த பெண்ணிற்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

    இலங்கையில் இதற்கு முன்னர் 9 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்தனர்.

    இவ்வாறு உயிரிழந்தவர்களில் 7 ஆண்களும், 2 பெண்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில், இன்றைய தினம் மற்றுமொரு பெண் உயிரிழந்த நிலையில், கொரோனா தொற்றினால் இலங்கையில் உயிரிழந்த மூன்றாவது பெண்ணாக இவர் பதிவாகியுள்ளார்.

    இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

  7. 532 விமானங்களில் 39,231 பயணிகள்

    இந்தியாவில் இன்று முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று இயக்கப்பட்ட 532 விமானங்களில் 39,231 பயணிகள் பயணித்துள்ளதாக இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ட்வீட் செய்துள்ளார்.

    ஆந்திராவில் நாளை முதலும், மேற்கு வங்கத்தில் மே 28-ம் தேதி முதலும் விமான சேவை துவங்கப்பட உள்ள நிலையில், பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  8. சிங்கப்பூரில் நிலவரம் என்ன?

    சிங்கப்பூரில் இன்று புதிதாக 344 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதியானதையடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 31,960ஆக அதிகரித்துள்ளது.

    இவர்களில் நால்வர் மட்டுமே சிங்கப்பூர் குடிமக்கள் ஆவர். மற்றவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் தங்கியுள்ள அந்நியத் தொழிலாளர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூரில் வைரஸ் தொற்றியவர்களில் சுமார் 47 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர். கடந்த மூன்று வாரங்களாகவே குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 23ஆக நீடிக்கிறது.

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

  9. கொரோனா வைரஸ் நோயாளிகள் குறித்து தமிழகத்தில் ஆய்வு

    கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்த 118 நபர்கள் குறித்து தமிழக அரசு ஆய்வு செய்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

    ''தமிழகத்தில் கொரோனாவினால் இறந்த நபர்களில் 84 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி மற்றும் உயர் ரத்தஅழுத்தம் ஆகியவற்றோடு, கொரோனா தாக்கமும் இருந்தது. வெறும் 16 சதவீத நபர்களுக்கு மட்டுமே நாள்பட்ட நோய்கள் ஏதுமின்றி, கொரோனா தாக்கத்திற்கு பிறகு இறப்பு நிகழ்ந்துள்ளது" என்று அவர் கூறினார்.

    இதுகுறித்து முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  10. “வரும் நாட்களில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிக்கலாம்”: மலேசிய அரசு

    மலேசியாவில் அடுத்த சில தினங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

    மூன்று இடங்களில் செயல்படும் குடிநுழைவு தடுப்புமையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்போர் மத்தியில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்தே கடந்த சில தினங்களாக புதிதாக அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது.

    எனினும் நோய்த்தொற்று உள்ளவர்கள் உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும், நோயில் இருந்து குணமடைந்ததும் பாதுகாப்பான சூழலில் தங்கவைக்கப்படுவார்கள் என்றும் நூர்ஹிஷாம் தெரிவித்தார்.

    நாடு முழுவதும் உள்ள இத்தகைய தடுப்பு மையங்களில் மூன்றில் மட்டுமே கிருமித்தொற்று பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இம்மையங்களில் பணியாற்றும் ஊழியர்கள், தடுத்து வைக்கப்பட்டவர்களுக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் மூலம் இதுவரை 227 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்களில் 41 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

    மேலும் இலங்கை, வங்கதேசம், நேபாளம், இந்தோனீஷியா, மியான்மர், பாகிஸ்தான், சீனா, கம்போடியா உள்ளிட்டநாடுகளைச்சேர்ந்தவர்களும் உள்ளனர்.

    இன்றைய நிலவரம்:

    மலேசியாவில் இன்று புதிதாக 172 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

    கடந்த மூன்று வாரங்களாக புதிதாக நோய்த் தொற்றியோர் எண்ணிக்கை இரட்டை இலக்கங்களிலேயே இருந்து வந்த நிலையில், மீண்டும் கோவிட்-19 நோய்க்கு ஆளாகியவர்களின் எண்ணிக்கை மூன்று இலக்கங்களை தொட்டுள்ளது.

    இதன் மூலம் மலேசியாவில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,417ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் நோயில் இருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

  11. "விமான இருக்கைகளில் இடைவெளி இல்லாமல் இயக்க அனுமதி"

    ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் சர்வதேச அளவில் அடுத்த 10 நாட்களுக்கு விமானங்களை இயக்கவும், விமானத்தின் ஒரு வரிசையில் உள்ள மூன்று இருக்கைகளையும் பயணிகள் முன்பதிவு செய்து பயன்படுத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க விமான பயணங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக விமானத்தின் ஒரு வரிசையில் உள்ள மூன்று இருக்கைகளில் நடுவில் உள்ள இருக்கையில் பயணிகள் அமரக்கூடாது என மருத்துவர்கள் வலியுறுத்தினர்.

    திட்டமிட்டு இயக்கப்படாத சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை காலியாக வைக்கவேண்டும் என்ற மும்பை உயர் நீதிமன்ற ஆணைக்கு எதிராக எதிராக மத்திய அரசும் ஏர் இந்தியாவும் மேல் முறையீடு செய்திருந்தன. இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று விசாரித்த உச்சநீதி மன்றம் அடுத்த பத்து நாட்களுக்கும் இயக்கப்படும் திட்டமிடப்படாத விமானங்களில் ஏர் இந்தியா சமூக இடைவெளி கடைபிடிக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளது.

    வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் இந்தியா திரும்ப முடிவு செய்துள்ளதால் இதுவரை டிக்கெட் பதிவு செய்த பயணிகளுக்கு அடுத்த 10 நாட்களுக்கு சமூக இடைவெளி இன்றி அனைத்து இருக்கைகளிலும் பயணிகள் அமர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஜூன் 6ம் தேதிக்கு பிறகு எந்த விதமான சர்வதேச விமான பயணமாக இருந்தாலும் கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிக்கவேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியது

    தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17,082ஆக உயர்ந்துள்ளது.

    இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டவர்களில் 549 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதன் மூலம், சென்னையில் மட்டும் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பதினோரு ஆயிரத்தை கடந்துள்ளது.

    தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் 7 பேர் உயிரிழந்ததையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது.

    கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8,731ஆக அதிகரித்துள்ளது.

  13. பிரபல மசூதிகளை மீண்டும் திறந்தது இரான்

    ஈரான்

    பட மூலாதாரம், AFP

    கோவிட் 19 வைரஸ் பரவலை தடுக்க இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த பிரபல ஷியா முஸ்லீம் மசூதிகளை இரான் மீண்டும் திறந்துள்ளது.

    சமூக இடைவெளியையும், வழிகாட்டுதல்களையும் பின்பற்றி மக்கள் வழிபாடுகளைச் செய்யலாம். காலை சூரியன் உதித்த பிறகு ஒரு மணி நேரம் கழித்து திறக்கப்படும் இந்த மசூதிகள், மாலை சூரியன் மறைவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் மூடப்படும்.

    தெஹ்ரானில் உள்ள ஷா அப்துல் அஸிம் மசூதியில், மக்களுக்கு வெப்ப சோதனை செய்யப்பட்டதாகவும், அனைவரும் மாஸ்க் அணிந்திருந்ததாகவும் ஏ.ஃஎப்.பி செய்தி முகமை கூறியுள்ளது.

  14. இன்று முதல் மேலும் பல கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஐரேப்பிய நாடுகள்

    இத்தாலி

    பட மூலாதாரம், EPA

    இத்தாலியில் நீச்சல் குளங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டுள்ளன. உலகளவில் கொரோனா வைரசுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கையில் இத்தாலி மூன்றாம் இடத்தில் உள்ளது.

    ஸ்பெயின் பொது முடக்கத்தை மூன்று கட்டங்களாகத் தளர்த்த உள்ளனர். அந்நாட்டின் மிகப்பெரிய நகரங்களான மாட்ரிட் மற்றும் பார்சிலோனாவும் முதலாம் கட்டத்தில் உள்ளது. இங்கு சிறிய குழுக்களாக மக்கள் கூடலாம். உணவகங்கள் மற்றும் மதுபானக்கூடங்களுக்கு வெளியே வாடிக்கையாளர்களுக்கு உணவுகளை வழங்கலாம்.

    ஸ்பெயினின் மற்ற பகுதிகள் இரண்டாம் கட்டத்தில் உள்ளன. இங்கு கடற்கரைகள் மற்றும் மற்ற பொது இடங்களில் மக்கள் கூட அனுமதி உள்ளது.

    உள்நாட்டுச் சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு கப்பல் போக்குவரத்து சேவையை கிரிஸ் துவங்கியுள்ளது. உணவகங்களும் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது.

    உலகில் அதிகளவு தனிநபர் பீர் நுகர்வு கொண்ட நாடான செக் குடியரசில் மதுபான கூடங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. பொது முடக்கத்தைத் தளர்த்துவதற்கான கடைசி கட்டத்தில் அந்நாடு உள்ளது. இங்கு ஆரம்ப பள்ளிக்கூடங்களும், உயிரியல் பூங்காக்களும் திறக்கப்பட்டுள்ளது.

  15. ஜப்பானில் அவரச நிலை நீக்கப்படுகிறது: பிரதமர்

    ஜப்பான்

    பட மூலாதாரம், Japan Prime Minister's Office

    ஜப்பானில் அமலில் உள்ள தேசிய அவசர நிலையை தளர்த்துவதாக அந்நாட்டின் பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார்.

    ''நாட்டில் இருந்த அவசர நிலையை நீக்குவதற்கு மிகக்கடுமையான அளவுகோலை நாங்கள் கொண்டிருந்தோம். இப்போது அந்த அளவுகோளை எட்டியுள்ளோம் என நம்புகிறோம்’’ என நாட்டிற்கு தொலைக்காட்சியில் உரையாடிய ஷின்சோ அபே கூறியுள்ளார்.

    ஏப்ரல் 7-ம் முதல் நாட்டின் சில பகுதிகளிலும் பின்னர் நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்ததன் மூலம், கோவிட் 19 வைரஸ் பரவலை குறைத்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    மே மாத மத்தியில் இருந்து ஜப்பானில் சில இடங்களில் அவரச நிலை தளர்த்தப்பட்டாலும் தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து நீடித்து வந்தது.

    பல வளர்ந்த நாடுகளை விட, குறைவான கொரோனா தொற்றுகளையும், மரணங்களையும் ஜப்பான் சந்தித்தது. அங்கு 16,550 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 820 பேர் இறந்துள்ளனர்.

  16. ஆசியாவின் சமீபத்திய நிலவரங்கள்

    • பாகிஸ்தானில் ரம்ஜான் கொண்டாடப்படும் நிலையில், மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பல நகங்களில் உள்ள மசூதிகளிலும், பொது இடங்களிலும் ரம்ஜானால் கூட்ட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளது. 1,167 பேர் இறந்துள்ளனர்.
    • வங்கதேசத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக நேற்று மட்டும் 28 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
    • இலங்கையில் நாளை முதல் பொது முடக்கம் தளர்த்தப்பட உள்ளது.
    • நேபாளில் நேற்று மட்டும் 19 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது.
  17. அவசர நிலையை முடிவுக்கு கொண்டு வரும் ஜப்பான்

    ஜப்பான்

    பட மூலாதாரம், Getty Images

    ஜப்பானில் அமலில் இருந்த தேசிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவரும் அறிவிப்பை அந்நாட்டு பிரதமர் இன்று அறிவிப்பார் என நம்பப்படுகிறது.

    ’’ நாட்டில் இனி அவசர நிலையை நீட்டிக்கும் தேவை இல்லை’’ என ஜப்பன் பொருளாதாரத்துறை அமைச்சர் யாஷுடோஷி நிஷிமுரா கூறியுள்ளார்.

  18. தமிழகத்திற்கு விமானத்தில் செல்ல என்னென்ன விதிமுறைகள்; இ பாஸ் பெறுவது எப்படி

    விமானம்

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ்நாட்டிற்கு விமானம் மூலம் பயணம் செய்ய வேண்டும் என்றால் epass பெறுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

    எனவே இ பாஸ் பெறுவது எப்படி?

  19. கொரோனாவை தாண்டிய பேராபத்து - ”அடுத்த தலைமுறையை காக்க இதனை செய்யுங்கள்”

    உணவு

    பட மூலாதாரம், Getty Images

    நம் தினசரி வாழ்க்கையில் சில மாற்றங்களை ஏற்றுக்கொள்ள தயாராக இருந்தால் மட்டுமே, காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்து சமாளிக்க முடியும் என ஆய்வு ஒன்று கூறுகிறது.

    காற்றில் கலந்துள்ள கரியமில வாயுவை குறைக்க பல சிறந்த வழிகள் உள்ளன. அவை அனைத்தையும் ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர்.

    கொரோனா வைரஸ் பாதிப்பால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் எவ்விதமான தீவிர மாற்றத்தையும் ஏற்றுக்கொள்ள தயாராகிவிட்டனர் எனக் கூறப்படுகிறது.

    எனவே தற்போது அரசாங்கங்கள் தான் நல்ல திட்டங்களையும் முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டிய இடத்தில் உள்ளனர். உடனடியாக பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் முதல் கடமையாக மாற வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் தங்கள் வாதத்தை முன்வைக்கின்றனர்.

  20. உலகளவில் இன்றைய இன்றைய நிலவரம்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு