You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் இன்று மேலும் 805 பேருக்கு பாதிப்பு; 118ஆக உயிரிழப்பு அதிகரிப்பு

உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா பத்தாவது இடத்தை பிடித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. டெல்லியில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது - கேஜ்ரிவால்

    முடக்கநிலையில் சில தளர்வுகள் வழங்கப்பட்டதால் டெல்லியில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்ததாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

    அதேவேளையில், கொரோனா இறப்பு சதவீதம் அல்லது தொற்று பாதிப்புகள் பெரும் அளவில் அதிகரிக்காத நிலையில், கவலை கொள்ளத்தேவையில்லை என்றும் அரவிந்த் கேஜ்ரிவால் மேலும் தெரிவித்தார்.

    கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டாலும், இந்த நோய்தொற்றிலிருந்து பாதிக்கபட்டவர்கள் குணமடையும் சூழலில் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கொரோனா பாதிப்பு மெதுவாகஅதிகரித்து கொண்டே இருந்தபோதிலும் டெல்லியில் தற்போது நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

  2. சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாதா?

    கொரோனா வைரஸ் பரவத் தொடங்கி ஐந்து மாதங்கள் நிறைவடைய உள்ள நிலையிலும், அது ஏற்படுத்தி வரும் அச்சுறுத்தல் சிறிதும் குறைந்தபாடில்லை.

    குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவலுக்கு ஈடாக அதுகுறித்த போலிச் செய்திகளும் அதிவேகமாக பரவி வருகின்றன.

  3. புதுவையில் மதுக்கடைகள் திறப்பு

    புதுச்சேரியில் 60 நாட்களுக்கு பிறகு இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது.

    புதுச்சேரியில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது மதுபான கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு திறக்க இருந்த மதுபான கடைகள் பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாகத் திறப்பதில் தாமதமானது. இதனிடையே, கொரோனா சிறப்பு வரியுடன் மதுபான கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள அனைத்து வகையான மதுபான கடைகளும் 60 நாட்களுக்குப் பிறகு இன்று காலை 10 மணிக்குத் திறக்கப்பட்டது .

    நகர மற்றும் கிராமப் பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளில், மது வாங்கக் காலை முதலே ஒவ்வொரு கடைகளிலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.

    மதுபான கடைகளில் முன்பு சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்கும் வகையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு, மது வாங்க வருவோருக்கு உடல் வெப்பம் பரிசோதனை செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பின்னரே கடைக்குள் அனுமதிக்கின்றனர். நபர் ஒருவருக்கு நான்கரை லிட்டர் அளவில் மது பானங்கள் வாங்கிச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட வரியானது தமிழகத்திற்கு இணையான வரியை அமல் படுத்தியுள்ளது புதுச்சேரி அரசு. புதுச்சேரியில் மட்டும் 920 வகையான மதுபான வகைகள் உள்ளது, இதில் தமிழகத்திற்கும், புதுச்சேரிக்கும் ஒப்பிடும் போது 154 ஒரே மாதிரியான மதுபான வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 154 மது பானங்களுக்கும் தமிழகத்தில் விற்கப்படும் அதே விலையைப் புதுச்சேரியிலும் நிர்ணயித்துள்ளனர். இதைத் தவிர்த்து மற்ற மதுபானங்களுக்குக் கொள்முதல் விலையிலிருந்து 25 சதவீதம் வரியானது உயர்த்தப்பட்டுள்ளது. சாராயக் கடைகளுக்கு 20 சதவீதம் வரி உயர்த்தப்பட்டுள்ளது.

    "இவை அனைத்தும் தமிழகத்தை விடப் புதுச்சேரியில் விலை குறைவாக இருக்கிறது என்று வெளிமாநிலத்தவர் வந்து விடக்கூடாது என்பதற்காகவும், அதன்மூலம் கொரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பிருக்கின்ற காரணத்தினால் மதுபானத்தின் வரிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக," கலால் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

    "மதுபானக் கடைகளை 60 நாட்களுக்குப் பிறகு திறந்தது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், மது பானங்களுக்குத் தமிழகத்திற்கு இணையான விலையை அதிகப்படுத்தியது வருத்தம் அளிக்கிறது. இருந்த போதிலும், இந்த வரியை கொரோனா தடுப்பு பணிகளுக்குப் பயன்படுத்த இருக்கின்றனர் என்று கேள்விப்படும் போது ஆறுதல் அளிப்பதாக," தெரிவிக்கிறார் மதுபானம் வாங்க வந்த தாமஸ்.

  4. பிரேசிலில் இருந்து வரும் பயணிகளுக்கு அமெரிக்காவில் தடை

    பிரேசிலில் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ நிலைமையை தீவிரமாக கருத்தில் கொள்வதற்கான அறிகுறிகள் தெரியவில்லை.

    சமீபத்தில் தனது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களை முக கவசம் அணியாமல் சயீர் பொல்சனாரூ சந்தித்து கலந்துரையாடினார்.

    தற்போது பிரேசிலில் இருந்து அமெரிக்கா வரும் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிக்க அதிபர் டிரம்ப் தடை விதித்துள்ளார். பிரேசிலில் இருந்து வரும் பயணிகளை அமெரிக்காவிற்குள் அனுமதித்தால், அங்கு மேலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சம் நிலவுகிறது.

    அதிபர் சயீர் பொல்சனாரூவை எப்போதும் வெளிப்படையாக பாராட்டும் அதிபர் டிரம்ப் இவ்வாறான அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  5. கொரோனா வைரஸ்: வீட்டுக்குள் இருந்தால் நோய் எதிர்ப்பாற்றல் எப்படி பாதிக்கப்படும்?

    கடந்த 2 மாதங்களாக உலக மக்களில் பெரும்பான்மையானவர்கள் வீடுகளில் முடங்கிக் உள்ளார்கள்.

    அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் வெளியில் செல்கிறார்கள். கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகும் ஆபத்தை இது குறைத்திருக்கலாம் என்றாலும், வேறு நோய்த் தொற்றுகளுக்கு அதிகளவில் ஆட்படக் கூடிய அளவுக்கு நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தின் மீது இது தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.

  6. ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகளை இழப்போம் : மெக்சிகோ அதிபர்

    அத்தியாவசிய தேவைகள் பட்டியலில் இடம்பெறாத வர்த்தகங்கள் அனைத்தும் முடங்கியுள்ளதால், நாட்டில் மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகளை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என மெக்சிகோஅதிபர் அண்ட்ரெஸ் மானுவேல் லோப்ஸ் ஓப்ரடார் தெரிவித்துள்ளார்.

    மேலும் ''என் கணிப்பை பொறுத்தவரை மில்லியன் கணக்கான வேலை வாய்ப்புகள் முடங்கினாலும், புதிதாக இரண்டு மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்'' என்றும் மெக்சிகோ அதிபர் தெரிவித்தார்.

    ஜான்ஸ் ஹாப்கிங்ஸ் பல்கலைக்கழக தரவுகளின்படி இதுவரை மெக்சிக்கோவில் 68,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,394 பேர் உயிரிழந்துள்ளனர்.

  7. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குகிறது

    அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 638பேர் உயிரிழந்துள்ளனர். ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தகவல்படி கொரோனா தொற்றால் இதுவரை அமெரிக்காவில் 98,000 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா தொற்றால் அமெரிக்காவில் ஒரு லட்சம்பேர் உயிரிழக்கலாம் என தெரிவித்திருந்தார்.

  8. அண்மைய நிலவரம்

    கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6977 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல்முறையாக ஒரே நாளில் இத்தனை பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

    மேலும் தற்போது 77103 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுவரை 4021 பேர்கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  9. டெல்லியிலிருந்து சென்னை வந்த முதல் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.

  10. விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகள்

    உள்நாட்டு விமானப் போக்குவரத்துகள் இன்றுமுதல் தொடங்கப்பட்ட நிலையில் சென்னை விமான நிலையத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வரிசையில் நிற்கின்றனர் பயணிகள்.

  11. தொடங்கப்பட்ட விமான சேவை

    இந்தியாவில் சுமார் இரண்டு மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து இன்று மீண்டும் தொடங்கியது.

    தமிழகத்தில் நாளொன்றுக்கு 25 விமானங்கள் வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் பயணிகள் தமிழக அரசு இணையதளத்தில் தங்கள் விவரங்களை பதிந்து இ - பாஸ் பெற வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

  12. கொரோனா வைரஸ் - நேற்று நடந்த முக்கிய நிகழ்வுகள்

    • கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் கொரோனா மரண எண்ணிக்கை 100க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.
    • கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா நகரமான வுஹானில் நேற்று ஒரே நாளில் 11 லட்சம் பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அந்த நகரத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • சிங்கப்பூரில் நேற்று புதிதாக 548 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டது. அங்கு வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 31,616 ஆக அதிகரித்துள்ளது.
    • மலேசியாவில் நேற்று ஒரே நாளில் 60 பேருக்கு கோவிட்-19 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இதையடுத்து கொரோனா வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கை 7,245 ஆக அதிகரித்துள்ளது.
    • கொரோனா வைரஸ் தடுப்பூசியை எலிக்கு செலுத்தியதில் நல்ல முடிவுகள் வந்ததால், தற்போது அதை குரங்கின் மீது சோதனை செய்யும் பணியினை தாய்லாந்து துவங்கியுள்ளது.
    • இந்தியாவில் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு விமானம், ரயில் மற்றும் பேருந்தில் பயணிக்கும் பயணங்களுக்கான வழிகாட்டுதல்களை இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
    • தமிழகத்தில் நேற்று மேலும் 765 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,277ஆக உயர்ந்துள்ளது.
  13. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லியில் இருந்து சிவக்குமார் உலகநாதன் மற்றும் விஷ்ணுப்ரியா ராஜசேகர் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.

    கோவிட்-19 பெருந்தொற்று தொடர்பான அனைத்து செய்திகளையும் இங்கு உடனுக்குடன் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.