புதுச்சேரியில் 9 வயது சிறுவன் உட்பட நேற்று ஒரு நாளில் 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்நோய்த் தொற்றால் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனாவால்
பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரி சேர்ந்த 16 பேர், காரைக்கால் பிராந்தியத்தைச் சேர்ந்த ஒருவரும், மாஹே பிராந்தியத்தைச் சேர்ந்த இருவர் என 19 பேரும், கூடுதலாக ஜிப்மரில் தமிழகத்தைச் சேர்ந்த 2 பேரும் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தனர்.
இதற்கிடையே, சென்னையிலிருந்து திரும்பிய இரண்டு பெண்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக நேற்று காலை சுகாதாரத்துறை அறிவித்தது.
இதனால், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்
இந்நிலையில், புதுச்சேரியில் 9 வயது சிறுவன் உட்பட 4 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றிரவு உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, 4 பேரும் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து, இன்று முதல் மீண்டும் எல்லைகள் முடக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள், வேலை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டுவரும் வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டது.
ஆனால், தற்போது புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிகரித்ததை தொடர்ந்து இ-பாஸ் இன்றி வெளிமாநிலத்தில் இருந்தது புதுச்சேரிக்குள் அனுமதிக்கத் தடை செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.