You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது; உயிரிழப்பு 103ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா விளங்குகிறது. அங்கு இதுவரை சுமார் 16 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.

    நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. கொரோனா வைரஸ் - இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்

    • கொரோனா பெருந்தொற்று காரணமாக, உலகில் 8 கோடி பச்சிளம் குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் தடுப்பூசி கிடைப்பதில் சிரமம் ஏற்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    • வரும் ஜூலை மாதம் முதல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஸ்பெயினுக்கு வர அனுமதி வழங்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.
    • சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை. கடந்த டிசம்பர் மாதம் இங்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, இப்போதுதான் முதல் முறையாக புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை.
    • கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா நகரமான வுஹானில் நேற்று ஒரே நாளில் 14,70,950 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நகரத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • பிரான்சில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக, இன்று (மே 23) முதல் மத வழிபாட்டுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • இந்தியாவில் மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட உள்ள நிலையில், ஆகஸ்டு மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம் என இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தெரிவித்துள்ளார்
    • தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512ஆக உயர்ந்துள்ளது.
    • சென்னை தவிர தமிழகத்தின் மற்ற பகுதிகளில் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை நாளை (மே 24) முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
  3. இலங்கையில் நிலவரம் என்ன?

    இலங்கையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1085ஆக அதிகரித்துள்ளது.

    சுகாதார அமைச்சின் தரவுகளின் பிரகாரம், இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களை விடவும், குணமடைவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாக அதிகரித்துள்ளது.

    இதன்படி, குணமடைந்தோரின் எண்ணிக்கை 660ஆக அதிகரித்துள்ளது.

    மருத்துவமனைகளில் தற்போது 416 பேர் மாத்திரமே தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் 101 பேர் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை 26ஆம் தேதி தொடங்கி தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

    கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் 26ஆம் தேதி முதல் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கையில் இன்றிரவு 8 மணி முதல் எதிர்வரும் 26ஆம் தேதி அதிகாலை வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

  4. வுஹான் நகரத்தில் ஒரே நாளில் 14.7 லட்சம் பேருக்கு கோவிட்-19 பரிசோதனை

    கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனா நகரமான வுஹானில் நேற்று ஒரே நாளில் 14,70,950 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த நகரத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    தங்களது நகரத்தில் உள்ள 1.1 கோடி மக்களுக்கும் இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்தில் கோவிட்-19 நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக இந்த மாதத்தின் தொடக்கத்தில் வுஹான் நகர அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

    இதுபோன்ற பெரும் பரிசோதனைகளின் மூலமாகவே தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களை முழுமையாக செயல்பட வைக்க முடியுமென்றும், நோய் அறிகுறியற்றவர்களை கண்டறிய முடியுமென்றும் அவர்கள் நம்புகின்றனர்.

  5. கொரோனா வைரஸ்: உலக தலைவர்கள் தங்களை எவ்வாறு மாற்றிக் கொண்டனர்?

    பெருந்தொற்று உலகம் முழுவதும் பலரின் அன்றாட வாழ்க்கையிலும் பணியிலும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கட்டுப்பாடுகள், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பல விஷயங்களை உலக நாடுகள் அனைத்தும் கடைப்பிடித்து வருகின்றன.

    இந்த புதிய நடைமுறைகளுக்கு உலகத் தலைவர்களும் விதிவிலக்கல்ல. அவ்வாறு உலகத் தலைவர்கள் தங்களது அன்றாட பணியில் இந்த கொரோனா சூழலில் என்னென்ன மாற்றங்களை மேற்கொண்டனர்?

    இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  6. சிங்கப்பூரில் ஒரே நாளில் 642 பேருக்கு நோய்த்தொற்று உறுதி

    சிங்கப்பூரில் இன்று நண்பகல் வரையிலான நிலவரப்படி, கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 31,068ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 642 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இன்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 6 பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் என்றும், பெரும்பாலானவர்கள் அந்நியத் தொழிலாளர்கள் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூரில் நேற்று ஒரே நாளில் 838 பேர் கோவிட்-19 நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து அங்கு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,946ஆக அதிகரித்துள்ளது. இது மொத்த நோயாளிகளில் 43 விழுக்காடு ஆகும்.

    அங்கு கடந்த 10 தினங்களாக புதிய நோய்த்தொற்றுகளை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    தங்கு விடுதிகளில் தங்கியிருக்கும் 3.23 லட்சம் அந்நியத் தொழிலாளர்களில் 28,161 பேருக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    சிங்கப்பூரில் கோவிட்-19 காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 23ஆக உள்ளது.

  7. கொரோனா வைரஸ்: தமிழகத்தில் பலி எண்ணிக்கை 100ஐ கடந்தது

    தமிழகத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 103ஆக உயர்ந்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று ஒரே நாளில் சென்னையில் சிகிச்சை எடுத்துவந்த ஐந்து நபர்கள் இறந்துள்ளனர்.

    புதிதாக கொரோனா தாக்கத்திற்கு ஆளானதாகக் கண்டறியப்பட்ட 759 நபர்களுடன் சேர்த்து, தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,152ஆக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  8. ஜூலை முதல் ஸ்பெயினில் வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி

    வரும் ஜூலை மாதம் முதல் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் ஸ்பெயினுக்கு வர அனுமதி வழங்கப்படும் என்று அந்த நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.

    எனினும், குறிப்பிட்ட தேதியோ அல்லது கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகளையோ அவர் வெளியிடவில்லை.

    உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில், கடந்த மே 4ஆம் தேதி முதல் படிப்படியாக முடக்க நிலை தளர்த்தப்பட்டு வருகிறது.

    கடந்த சில வாரங்களாக ஸ்பெயினில் கோவிட்-19 இறப்புகள் குறைந்த வண்ணம் இருந்து வந்தாலும், முடக்க நிலையை ஜூன் 6ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

    ஸ்பெயினில் முடக்க நிலை நீட்டிக்கப்படுத்து இது ஐந்தாவது முறையாகும்.

  9. மலேசியாவில் 82% கோவிட்-19 நோயாளிகள் குணமடைந்தனர்

    மலேசியாவில் இன்று புதிதாக 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இவர்களில் 25 பேர் வெளிநாட்டினர்.

    இதையடுத்து பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,185ஆக அதிகரித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 53 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு இன்று மதியம் தெரிவித்தது.

    புதிய உயிரிழப்புகள் இல்லாததால் பலி எண்ணிக்கை 115ஆக நீடிக்கிறது. கோவிட்-19 நோய்த்தொற்றால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 82.3 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளனர்.

    இதற்கிடையே நாடு முழுவதும் உள்ள கல்வி நிலைய விடுதிகளில் இன்னும் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிக்கித் தவிக்கின்றனர். இவர்கள் அனைவரும் விரைவில் சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என மூத்த அமைச்சர் இஸ்மாயில் சப்ரி தெரிவித்துள்ளார்.

    முன்னதாககடந்தசிலதினங்களில்கல்விமைய விடுதிகளில் தங்கியிருந்த 50 ஆயிரத்துக்கும்மேற்பட்ட மாணவர்கள் வீடு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    கடந்தஏப்ரல் 3ஆம்தேதியில்இருந்துஇன்று வரை சுமார் 40 ஆயிரம் மலேசிய குடிமக்கள் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர் என்றும், இவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டனர் என்றும் மூத்த அமைச்சர் தெரிவித்தார்.

    தற்போது நாடு முழுவதும் 271 தனிமைப்படுத்தும் மையங்களில் 19,262 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

  10. பிரபலமாகும் புதுவித முகக்கவசங்கள்

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலை தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.

    எனினும், நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு சமூக விலகல் மட்டுமின்றி முகக்கவசங்களையும் கட்டாயம் அணிய வேண்டுமென்று அரசு தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில், சென்னையில் ஒருவரது முகத்தை புகைப்படமெடுத்து, அதன் மூலம் பிரத்யேக முகக்கவசங்களை தயாரித்து அணிந்து கொள்ளும் முறை பிரபலமாகி வருகிறது.

  11. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 15 ஆயிரத்தை தாண்டியது

    தமிழகத்தில் இன்று மேலும் 759 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,512ஆக உயர்ந்துள்ளது.

    இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டவர்களில் 624 பேர் சென்னையை சேர்ந்தவர்கள்.

    தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸால் 5 பேர் உயிரிழந்ததையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 103ஆக அதிகரித்துள்ளது.

  12. வென்டிலேட்டர் பயன்படுத்துவதால் நோயாளிகளின் ரத்தக்குழாய்கள் சிதைகிறதா?

    கொரோனா வைரஸ் தொற்றால் குஜராத் மாநிலத்தில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை மற்ற சில மாநிலங்களை ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது.

    கோவிட்-19 பரவலை அந்த மாநிலம் கையாள்வது குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துவந்த நிலையில், தமன் 1 வென்டிலேட்டர் விவகாரம் அங்கு மிகப்பெரிய சர்ச்சையாக எழுந்துள்ளது.

    இந்த செய்தியை முழுமையாக படிக்க இங்கே சொடுக்கவும்.

  13. “மத வழிபாட்டுத்தலங்கள் மிகவும் அத்தியாவசியமானவை” - டிரம்ப்

    தேவாலயங்கள் மற்றும் பிற மத வழிபாட்டுத்தலங்கள் மிகவும் அத்தியாவசியமானவை என்றும், கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக மூடப்பட்டுள்ள அவற்றை வார இறுதி நாட்களில் திறக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளதாக என ஏ.பி. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    டிரம்ப் இவ்வாறு தெரிவித்தபின், மத வழிபாட்டுத்தலங்களை திறந்தால் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ளது.

  14. கொரோனா குறித்து இலங்கை அதிபருடன் மோதி உரையாடல்

    கொரோனா பெருந்தொற்று பிரச்சனை குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உடன் போனில் உரையாடியுள்ளார்.

    கொரோனாவை எதிர்த்து போரிட இலங்கைக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என பிரதமர் மோதி உறுதியளித்துள்ளார்.

  15. ஜூன் 1 முதல் 200 ரயில்கள் இயக்கப்படும்

    இந்திய ரயில்வே துறை சார்பில் டெல்லியில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடந்து வருகிறது.

    அப்போது பேசிய ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவ், ‘’புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க இந்திய ரயில்வே துறை சார்பில் விடப்பட்ட ரயில்களில் 80% ரயில்கள் பீகார் மற்றும் உத்தரபிரதேசத்திற்கு விடப்பட்டுள்ளது'' என தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியது

    ஜூன் 1-ம் தேதி முதல் 200 ரயில்கள் விடப்படும்.

    அடுத்த 10 நாட்களில் 2600 ரயில்கள் இயக்கப்படும்.

  16. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 7 முக்கிய வழிகள்

    இந்தியாவில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் ட்விட்டரில் India Fights Corona என்ற பக்கத்தைத் தொடங்கி கொரோனா குறித்த விவரங்கள் மற்றும் விழிப்புணர்வு செய்திகளை பதிவிட்டு வருகிறது.

    இதில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க உலக சுகாதார நிறுவனம் கூறிய 7 முக்கிய வழிகளை பதிவிடப்பட்டுள்ளது.

    • கைகளை அடிக்கடி நன்கு கழுவ வேண்டும்.

    • கண், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    • இருமும்போது முழங்கையின் உள்புறம் அல்லது டிஷ்யூ பேப்பரை வைத்து வாயை மூடிக்கொள்ள வேண்டும்.

    • கூட்டமான இடங்களுக்கு செல்வதையும் கூட்டமான இடங்களில் இருப்பதையும் தவிர்க்க வேண்டும்.

    • உடல் நலம் சரியில்லாமல் இருந்தால், அதாவது லேசான இருமல் மற்றும் காய்ச்சல் வந்தால் கூட வீட்டிலேயே இருக்க வேண்டும்

    • காய்ச்சல், இருமல் மற்றும் மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால் முதலில் உதவி எண்களுக்கு அழைத்து சொல்ல வேண்டும்.

    • கோவிட்-19 தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் கொடுக்கும் சமீபத்திய தகவல்களை அறிந்து வைத்திருக்க வேண்டும்.

    இந்த 7 வழிமுறைகளில் முன்பே கூறப்பட்டிருந்தாலும் இது முக்கிய விழிப்புணர்வு செய்தியாக மீண்டும் பதிவிடப்பட்டிருந்தது.

  17. முதல் முறையாக சீனாவில் புதிய தொற்று இல்லாத நாள்

    சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய கொரோனா தொற்று எதுவும் பதிவாகவில்லை.

    கடந்த டிசம்பர் மாதம் இங்கு கொரோனா தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து, இப்போதுதான் முதல் முறையாக புதிய தொற்றுகள் எதுவும் ஏற்படவில்லை.

    மேலும் கடந்த 24 மணி நேரத்தில் எந்த கொரோனா மரணங்களும் ஏற்படவில்லை என சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் கூறியுள்ளது.

    சீனாவில் இதுவரை 84,000 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 4600 பேர் இறந்துள்ளனர்.

  18. பிரான்ஸில் இன்று முதல் மத வழிபாட்டு கூட்டங்களுக்கு அனுமதி

    பிரான்ஸில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதில் இருந்து முதல் முறையாக, இன்று (மே 23) முதல் மத வழிபாட்டுக் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வழிபாட்டுக் கூட்டங்களில் கலந்துக்கொள்பவர்கள், கைகளை கழுவிட்டு நுழைய வேண்டும் என்றும், மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும், இரண்டு மீட்டர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  19. ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு சர்வதேச விமானங்கள் இயக்கப்படும்

    இந்தியாவில் மே 25-ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை துவங்கப்பட உள்ள நிலையில், இந்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி ஃபேஸ்புக் நேரலை மூலம் பேசி வருகிறார்.

    அப்போது அவர்,'’ உள்நாட்டு விமான சேவையில் கூடுதல் விமானங்களை இயக்க முயற்சித்து வருகிறோம். ஆகஸ்ட் மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட அளவில் சர்வதேச விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம்’’ என கூறியுள்ளார்.

  20. கொரோனா: மாநிலவாரியான பட்டியல்

    கொரோனா பாதிப்பு குறித்த மாநிலவாரியான பட்டியலை இந்திய அரசு வெளியிட்டுள்ளது. அதை இங்கே தெரிந்துக்கொள்ளலாம்.