You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: தமிழகத்தில் இன்று புதிதாக 786 பேருக்கு தொற்று - அண்மைய தகவல்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை சுமார் 51 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை என்றால் 1000 பவுண்ட் அபராதம்

    வெளிநாடுகளில் இருந்து பிரிட்டனுக்கு வருபவர்கள், 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளவில்லை என்றால் 1,000 பவுண்ட் அபராதம் விதிக்க பிரிட்டன் அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

    விமானம் அல்லது ரயிலில் வரும் பயணிகள், எங்கே தனிமையில் இருக்கப்போகிறார்கள் என்ற தகவல்களை எல்லை பாதுகாப்பு படையினரிடம் வழங்க வேண்டும். இல்லையென்றால் அரசு ஒதுக்கும் இடத்தில் தங்க வேண்டும்.

  2. இன்று இதுவரை நடந்தது என்ன?

    • பிரேசிலில் கொரோனா மரண எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது. இதுவரை அந்நாட்டில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • கொரோனாவால் நாடு நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறித்து எவ்வித இலக்குகளை நிர்ணயிக்கப்படாது என சீனா முடிவு செய்துள்ளது.
    • கடந்த வாரம் மட்டும் 20 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்கர்கள் வேலையின்மை சலுகைகளை கோரியுள்ளனர். இதுவரை கிட்டதட்ட 3 கோடிக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவுக்கு முன்பு வேலை செய்தவர்களின் கால்வாசி பேருக்கு இப்போது வேலையில்லை.
    • கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டிசீவர் (Remdesivir) மருந்தின் காப்புரிமை பெறப்படாத வகையை (Generic version) உலகில் முதன் முதலில் உருவாக்கியுள்ளதாக வங்கதேசத்தை சேர்ந்த பெக்சிம்கோ மருந்து நிறுவனம் கூறியுள்ளது.
    • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 148 பேர் இறந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3,583 பேர் இறந்துள்ளனர் என இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • மே 31-ம் தேதி வரை விமான சேவையை துவங்க வேண்டாம் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியுள்ளது.
    • தமிழ்நாட்டில் நாளை முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு நேரத்தில் ஒரு பயணி மட்டுமே பயணிக்க அனுமதிக்கபடும்.
  3. கோவிட்-19 சிகிச்சைக்கான மருந்தை உருவாக்கியுள்ள வங்கதேசம்

    கோவிட்-19 சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ரெம்டிசீவர் (Remdesivir) மருந்தின் காப்புரிமை பெறப்படாத வகையை (generic version) உலகில் முதன் முதலில் உருவாக்கியுள்ளதாக வங்கதேசத்தை சேர்ந்த பெக்சிம்கோ மருந்து நிறுவனம் கூறியுள்ளது.

    அமெரிக்காவின் கைலீட் மருந்து தயாரிப்பு நிறுவனமே ரெம்டிசீவர் மருந்தை உருவாக்கியது.

    எபோலோ நோய் சிகிச்சைக்காக இந்த மருந்து உருவாக்கப்பட்டது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாகக் குணமாக இந்த மருந்து உதவுவது அமெரிக்காவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் தெரியவந்தது.

    கொரோனாவுக்கு எவ்வித சிகிச்சை முறையும் இல்லாத நிலையில், பல நாடுகள் ரெம்டிசீவர் மருந்தைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

    பெக்சிம்கோ உருவாக்கியுள்ள ரெம்டிசீவர் மருந்தால், தெற்காசிய நாடுகளுக்கு இந்த மருந்து விரைவாக கிடைக்கும் என நம்பப்படுகிறது.

  4. கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் ஒருபுறம் பட்டினி மறுபுறம் உணவு பொருட்கள் அழிப்பு

    உலகின் வலிமை மிக்க நாடாகக் கருதப்படும் அமெரிக்காவில், கொரோனா வைரஸ் பட்டினி பிரச்சனையை தீவிரப்படுத்தியுள்ளது. இதில் தெற்காசியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  5. மேற்கு வங்கத்தில் இருந்து ராமநாதபுரம் திரும்பியவர்களுக்கு கொரோனா

    மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் இருந்து சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் திரும்பிய 76 பேரில் ஒரு வயது குழந்தை உட்பட ஆறு பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

    இந்த ஆறு பேரும் பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். முன்னதாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது

  6. தென் அமெரிக்கா கொரோனா மையமாக மாறுமா?

    தென் அமெரிக்க நாடான பிரேசில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    மேலும் மெக்சிகோ, சிலி, பெரு போன்ற நாடுகளில் கொரோனா வேகமாக பரவிவருகிறது.

    அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் புதிய தொற்றுகள் குறைந்துவரும் நிலையில், கொரோனாவின் அடுத்த மைப்பகுதியாக தென் அமெரிக்கா மாறுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

    பிப்ரவரி 26-ம் தேதி பிரேசிலில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அப்போது முதல் நாட்டின் அனைத்துப்பகுதிக்கு தொற்று பரவியுள்ளது.

    இந்த பிராந்தியத்தில் மக்கள் தொகை அதிகம் உள்ள பிரேசில் மற்றும் மெக்சிகோவில் அதிக மரணம் பதிவாகியுள்ளது.

  7. சென்னை தவிர பிற பகுதிகளில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி

    தமிழ்நாட்டில் நாளை முதல் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை ஆட்டோக்கள் மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஒரு நேரத்தில் ஒரு பயணி மட்டுமே பயணிக்க அனுமதிக்கபடும்.

    சென்னை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் ஆட்டோக்கள் இயங்க அனுமதி இல்லை.

  8. மே 31 வரை விமான சேவை வேண்டாம்: தமிழக அரசு

    இந்தியாவில் வரும் திங்கட்கிழமை( மே 25) முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்படும் என விமான போக்குவரத்துறை அறிவித்திருந்தது.

    இந்தநிலையில், மே 31-ம் தேதி வரை விமான சேவையை துவங்க வேண்டாம் என தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியுள்ளது.

    சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் முதல் கட்டமாக விமான சேவையை துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    தமிழகத்திலே சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    பொது முடக்கம் காரணமாக சென்னையில் பொது போக்குவத்து சேவைகள் இயங்கவில்லை எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

  9. ஒரே வாரத்தில் 20 லட்ச அமெரிக்கர்கள் வேலையிழப்பு

    கடந்த வாரம் மட்டும் 20 லட்சத்து 40 ஆயிரம் அமெரிக்கர்கள் வேலையின்மை சலுகைகளை கோரியுள்ளனர்.

    இதுவரை கிட்டதட்ட 3 கோடிக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் வேலை இழந்துள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவுக்கு முன்பு வேலை செய்தவர்களின் கால்வாசி பேருக்கு இப்போது வேலையில்லை.

    பொது முடக்கத்தை தளர்த்துவதன் மூலம், அமெரிக்க பொருளாதாரத்தை மிட்டெடுக்க முடியும் என நம்பப்படுகிறது.

  10. கொழும்பில் கூட்ட நெரிசலில் சிக்கி 3 பெண்கள் உயிரிழப்பு

    கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் நேற்று ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.

    இஸ்லாமியர்களின் புனித நோன்பு தினத்தை முன்னிட்டு, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த நிதியுதவியை பெற்றுக்கொள்வதற்காக பெருமளவிலானோர் ஒரே தருணத்தில் வருகைத் தந்துள்ளதாக போலீஸார் கூறுகின்றனர்.

    சம்பவ இடத்தில் அதிகளவிலானோர் ஒன்று திரண்டமையே இந்த கூட்ட நெரிசல் ஏற்பட காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

    இந்த சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  11. இந்த ஆண்டு எவ்வித பொருளாதார இலக்குகளும் இல்லை: சீனா

    கொரோனா காரணமாக இரண்டு மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த சீனாவின் நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த வருடாந்திர கூட்டத்தில் 3000 உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

    கொரோனாவால் நாடு நெருக்கடியில் உள்ள நிலையில், இந்த ஆண்டு பொருளாதார வளர்ச்சி குறித்து எவ்வித இலக்குகளை நிர்ணயிக்கப்படவில்லை என கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

  12. பிரேசிலில் 20 ஆயிரத்தை தாண்டிய மரண எண்ணிக்கை

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகளின் படி பிரேசிலில் கொரோனா மரண எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இதுவரை அந்நாட்டில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக பிரேசிலில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்

  13. ரயில் முன்பதிவு கவுண்டர்கள் இன்று முதல் துவக்கம்

    ஜூன் 1-ம் தேதி முதல் இந்தியாவில் 200 ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

    இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு கவுண்டர்கள் இன்று முதல் திறக்கப்பட உள்ளது. இணையத்தில் முன்பதிவு ஏற்கனவே துவங்கப்பட்டுள்ளது.

  14. இந்தியாவில் ஒரே நாளில் 6088 பேருக்கு கொரோனா

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6088 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 148 பேர் இறந்துள்ளனர்.

    இதுவரை இந்தியாவில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 3583 பேர் இறந்துள்ளனர் என இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  15. ரயிலில் இனி பயணம் செய்ய இதெல்லாம் தேவை

    இந்தியாவில் ரயில் மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட உள்ள நிலையில், அவை குறித்து முக்கிய விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

  16. அமெரிக்கா 36,000 உயிர்களைக் காப்பாற்றி இருக்க முடியுமா?

    உலக சுகாதார நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலைப் பெருந்தொற்றாக அறிவித்தபின், பயணங்களைக் கட்டுப்படுத்திக்கொள்ளுமாறு, மார்ச் 16 அன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.

    மார்ச் 19 தொடங்கி ஏப்ரல் 3 வரை வெவ்வேறு தேதிகளில் வெவ்வேறு அமெரிக்க மாகாணங்கள் ஊரடங்கை அறிவித்தன.

    ஒரு வார காலத்துக்கு முன்னதாக ஊரடங்கை அறிவித்திருந்தால் 36,000 பேர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்திருப்பதை தடுத்திருக்க முடியும் என்று கொலம்பியா பல்கலைக்கழ ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

    இதுவே இரண்டு வார காலத்துக்கு முன் ஊரடங்கை அமலாக்கியிருந்தால், 50% கொரோனா மரணங்களைத் தடுத்திருக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மே 3ஆம் தேதி வரையிலான தரவுகள் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 15.8 லட்சம் பேர் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 95,000 பேர் இறந்துள்ளனர்.

  17. நேற்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள்

    • உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்தது.
    • இந்தியாவில் ரயில் மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. அவை குறித்து மத்திய அரசு விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
    • தென் ஆப்பிரிக்காவில் பிறந்து இரண்டு நாட்களே ஆன கைக்குழந்தை ஒன்று கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளது.
    • கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மாநில அரசின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், அரசின் செலவினங்களைக் கடுமையாகக் குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • கொரோனா வைரஸ் தொற்று ஏழை நாடுகளின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் அதனை பணக்கார நாடுகள் கவனிக்க வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனத்தின் சிறப்பு தூதர் டேவிட் நபரோ பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
    • தற்போதைக்கு கொரோனா வைரசுக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வாய்ப்பில்லை என்பதால், அரசாங்கங்கள் அதை நம்பி இருக்க வேண்டாம் என முக்கிய அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார்.
  18. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து விக்னேஷ் மற்றும் புதுவையிலிருந்து நந்த குமார் ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.