You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: தமிழகம் - 743, சென்னை - 553; இதுவரை செய்யப்பட்ட பரிசோதனைகள் எவ்வளவு?

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை, நேற்று, செவ்வாய்க்கிழமை ஒரு லட்சத்தைக் கடந்தது. நேற்று உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 3,000-ஐ கடந்தது. தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியாவில் 25 லட்சத்தைக் கடந்த பரிசோதனைகள் எண்ணிக்கை

    கோவிட்-19 தொற்றை கண்டறிவதற்கான மருத்துவப் பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் 25 லட்சத்தைக் கடந்துள்ளது.

    இதுவரை இந்தியாவில் 25,12,388 முறை கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.

    இன்று காலை 9 மணி நிலவரப்படி, அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் 1,08,121 பரிசோதனைகள் நடந்துள்ளன.

    சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பரிசோதனை நடந்திருக்கும் என்பதால் பரிசோதனைகளின் எண்ணிக்கையைவிட பரிசோதனைக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும்.

  2. கொரோனா நிவாரண முகாம்களில் 'கேம்பஸ் இன்டர்வியூ'

    நேற்று தெருவில் வாழ்க்கை... இன்று மரியாதையான வேலை...

  3. கொரோனா - கை கழுவுதல் குறித்த புதிய ஆய்வு

    கொரோனா வைரஸ் தொற்றிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக நாளொன்றுக்கு குறைந்தது ஆறு முறை கைகளை கழுவுவது பலனளிக்கும் என்று பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றை ஒத்த வேறு வைரஸ் தொற்றுகளின், 2006 முதல் 2009ஆம் ஆண்டு வரையிலான தரவுகளை வைத்து செய்யப்பட்ட ஆய்வில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    இந்த ஆய்வில் 1,663 பேர் பங்கேற்றனர். எனினும் நாளொன்றுக்கு பத்து முறைக்கும் மேல் கைகளை கழுவுவது, கொரோனா வைரஸ் தொற்றுக்கான அபாயத்தை மேற்கொண்டு குறைப்பதாக தெரியவில்லை

  4. சென்னையில் கொரோனா தொற்று; ராயபுரம் தொடர்ந்து முதலிடம்

    சென்னையில் தொடர்ந்து ராயபுரம் மண்டலத்தில் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுவருகின்றனர்.

    தற்போதுவரை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 1423 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 15 பேர் வரை இங்கு உயிரிழந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 1137 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    இவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். அண்ணா நகர் பகுதியில் 610 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் 8 பேர் அங்கு உயிரிழந்துள்ளனர். சென்னையிலேயே குறைந்த அளவாக ஆலந்தூர் மண்டலத்தில் 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இன்று காலை 8 மணி நிலவரப்படி சென்னையில் 7672 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 57 பேர் உயிரிழந்துள்ளனர்.

  5. புதுச்சேரியில் பேருந்து சேவை தொடங்கியது

    புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்தில் மே 31ஆம் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளன.

    அதில், மதுக்கடைகள் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளும் காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    இதனிடையே, புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு மட்டும் பேருந்துகள் இயக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், முதற்கட்டமாகப் புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு மிகக்குறைந்த அளவில் அரசு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டுள்ளன.

    இதில், தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஊரடங்கு முழுமையாக தளர்வு செய்யப்படாத காரணத்தினால், பேருந்துகளில் ஐந்திற்கும் குறைவான நபர்களே பயணம் செய்தனர். மேலும், பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு முகக் கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    பயணிகள் இருக்கையில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் புறப்படுவதற்கு முன்பும், பேருந்து பணிமனை வந்த பின்பும் கிருமிநாசினிகள் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் இருந்து காரைக்காலுக்குச் செல்லும் வழியில் தமிழகப் பகுதியான கடலூர் மற்றும் நாகை மாவட்டத்தை கடந்து செல்ல வேண்டி இருப்பதால் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர், கடலூர் மற்றும் நாகை மாவட்ட ஆட்சியர்களிடம் பேச்சு வார்த்தை ஈடுபட்டார்.

    பேருந்துகள் தமிழகப் பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றாமல் நேரடியாகக் காரைக்காலுக்கு இயக்க வேண்டும் என்று நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் காரைக்காலுக்குப் பேருந்து சேவை தொடங்கவுள்ளது.

  6. கீழடியில் மீண்டும் அகழ்வாராய்ச்சி துவங்கியது

    மதுரைக்கு அருகில் உள்ள கீழடி அகழ்வாராய்ச்சி தலத்தில் கொரோனா காரணமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த அகழ்வாராய்ச்சிப் பணிகள் இன்று மீண்டும் துவங்கியுள்ளன.

    மதுரை நகருக்கு அருகில் சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள கீழடியில் ஆறாம் கட்ட தொல்லியல் ஆய்வுகள் நடந்துவருகின்றன. பிப்ரவரி 19ஆம் தேதியன்று துவங்கப்பட்ட இந்த ஆய்வில் மார்ச் மாதம் 20ஆம் தேதிவரை கொந்தகை பகுதியில் மூன்று குழிகள் தோண்டப்பட்டிருந்தன.

    இந்த நிலையில், மார்ச் 24ஆம் தேதி முதல் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், கீழடியிலும் அகழாய்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

    இப்போது ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டுவருவதால், இன்று முதல் மீண்டும் அகழாய்வுப் பணிகள் துவங்கப்பட்டிருப்பதாக மாநில தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் பிபிசியிடம் தெரிவித்தார்.

    இன்று முதல் துவங்கப்பட்டிருக்கும் அகழாய்வில் முதற்கட்டமாக கீழடி, அகரம் ஆகிய பகுதிகளில் 40 பணியாளர்களுடன் இந்தப் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

    இந்த ஆறாம்கட்ட அகழாய்வில் ஏற்கனவே முதுமக்கள் தாழிகள், ஈமச் சடங்குகளுக்குப் பயன்படுத்தப்படும் மண்ணாலான பாத்திரங்கள், மணிகள் ஆகியவை கிடைத்து வந்தன. கொந்தகை கிராமத்தில் மனித எலும்புக்கூடு ஒன்றும் கிடைத்தது.

    கீழடி கிராமத்தில் ஏற்கனவே நடந்த ஐந்து கட்ட அகழாய்வுகளில் பழங்கால கட்டடத் தொகுதிகளும் தொல்பொருட்களும் கிடைத்திருக்கும் நிலையில், ஆறாவது கட்ட அகழாய்வை மாநில தொல்லியல் துறை தற்போது நடத்திவருகிறது.

    இந்த ஆறாம் கட்ட அகழாய்வை கீழடியிலும் அதற்கு அருகில் உள்ள கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களிலும் நடத்துவதற்கு மாநில தொல்லியல் துறை முடிவுசெய்தது.

    இந்த இடங்களில் தரையை ஊடுருவிப் பார்க்கும் ரேடார், ஆளில்லா விமானம் ஆகியவற்றைப் பயன்படுத்தி சரியான இடங்கள் அடையாளம் காணப்பட்டன.

    இவற்றில் கொந்தகை ஒரு புதைமேடு என்றும் கீழடி பகுதியில் வாழ்ந்தவர்களின் ஈமக்காடாக இந்த இடம் இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மீதமுள்ள, மணலூர், அகரம் ஆகியவை மக்கள் வாழ்ந்த இடங்களாகக் கருதப்படுகின்றன.

  7. கடன் தவணைகளுக்கான 3 மாத ஒத்திவைப்பு இனி என்னவாகும்?, அ.தா பாலசுப்ரமணியன், பிபிசி தமிழ்

    கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ம் தேதி நாடு தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்பட்டதை அடுத்து வங்கிகள் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் அளித்த கடன்களுக்கான தவணைகளை மூன்று மாதம் நிறுத்திவைக்கும்படி இந்திய ரிசர்வ் வங்கி மார்ச் 27-ம் தேதி ஒரு சுற்றறிக்கையில் தெரிவித்தது.

    இந்த மூன்று மாத நிறுத்திவைப்பு என்பது மார்ச் மாதம் 1ம் தேதி முதல் மே மாதம் 31ம் தேதி வரையிலான காலத்தில் செலுத்தவேண்டிய தவணைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

  8. நான்கு நாட்கள் வேலை திட்டம்

    கொரோனா தடுப்பு ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வரும் சூழலில், வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யக்கூடிய முறையை அமலாக்கலாம் என்ற திட்டத்துக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதை பணியாளர்களும், பணியமர்த்துபவர்களும் முடிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

    சுமார் 50 லட்சம் மக்கள்தொகை கொண்ட நியூசிலாந்தில் கொரோனா வைரஸால் 21 பேர் மட்டுமே இறந்தனர். ஜெசிந்தா அரசின் தடுப்பு நடவடிக்கைகள் உலக அளவில் பாராட்டப்பட்டன.

  9. இந்தியாவில் ஈ-பாஸ்: சில முக்கியத் தகவல்கள்

    • இந்தியாவில் ஊரடங்கின்போது பயணிக்க https://serviceonline.gov.in/epass/ என்ற இணையதளத்தில் ஈ-பாஸ் விண்ணப்பிக்கலாம்.
    • ஒரு தனிநபரோ, குழுவோ ஈ-பாஸ் விண்ணப்பிக்கலாம்.
    • இணையத்தில் விண்ணப்பிக்கும் முன் தேவையான ஆவணங்கள் ஸ்கேன் செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
    • பயன்பாட்டில் இருக்கும் செல்பேசி எண்ணுக்கு ஓ.டி.பி அனுப்பப்படும்.
    • ஈ-பாஸில் பெயர், முகவரி, எப்போது வரை செல்லுபடியாகும் போன்ற விவரங்கள் இருக்கும்.
    • பயணத்தின்போது செல்பேசியில் சாஃப்ட்காப்பி மட்டுமல்லாது, அதை நகலாக எடுத்து வைத்துக்கொள்வதும் அவசியம்.
  10. ஊரடங்குக்கு நடுவே வரும் 'உம்பான்' புயல்

    கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்குக்கு நடுவில், கடந்த பல ஆண்டுகளில் பார்க்காத அளவுக்கு தீவிரமான புயலை எதிர்கொள்ள இந்தியாவின் கிழக்கு கடலோரப் பகுதிகளில் ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    உம்பான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் இன்று பிற்பகல் கரையைக் கடக்கவுள்ளது.

    புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 185 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    மேற்கு வங்கம் மற்றும் மாநில கடற்கரைப் பகுதிகளில் இருந்து பல லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

  11. பிரேசில் - ஒரே நாளில் அதிகபட்ச மரணங்கள்

    பிரேசிலில் நேற்று மட்டும் 1179 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

    கோவிட்-19 காரணமாக அந்த நாட்டில் ஒரே நாளில் ஏற்பட்ட ஏற்பட்ட அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இது.

    இறப்பு எண்ணிக்கை அங்கு 18,000-ஐ கடந்துள்ளது.

    அமெரிக்கா, பிரிட்டனுக்கு அடுத்தபடியாக உலகளவில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான பிரேசிலில் இதுவரை சுமார் 2,72,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  12. பிச்சையெடுத்த பணம் - கொரோனா நிவாரண நிதி

    பிச்சையெடுத்த பணத்தை மதுரை ஆட்சியரிடம் நேரில் சென்று கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியிருக்கிறார் ஒரு யாசகர்.

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்தியாவில் இதுவரை இல்லாத அளவு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு

    இந்திய அரசு இன்று, புதன்கிழமை, காலை வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 1,06,750 பேர் இந்தியா முழுவதும் கோவிட்- 19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நேற்றைய எண்ணிக்கையைவிட இன்று கூடுதலாக 5,611 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர்.

    ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது இதுதான் அதிகம்.

    கடந்த 24 மணி நேரத்தில் 140 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் இந்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,303 ஆக உள்ளது.

    இந்தியா முழுவதும் 61,149 பேர் கோவிட்-19 தொற்றுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர் .

  14. 'ஆறு கோடி மக்களை கொரோனா தீவிர வறுமைக்கு உள்ளாக்கும்'

    கடந்த மூன்று ஆண்டுகளாக வறுமை ஒழிப்பில் பெறப்பட்ட நற்பலன்கள் அனைத்தையும் கொரோனா வைரஸ் உண்டாக்கியுள்ள பொருளாதார நெருக்கடியால் இழந்து, உலகெங்கும் சுமார் ஆறு கோடி மக்கள் தீவிர வறுமை நிலைக்குத் தள்ளப்படலாம் என்று உலக வங்கி தெரிவித்துள்ளது.

    உலக வங்கி மூலம் தற்போது சுமார் 100 நாடுகளில் உதவித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த நாடுகளில் அடுத்த 15 மாதங்களுக்கு 16,000 கோடி அமெரிக்க டாலர் (160 பில்லியன்) செலவிடப்படும் என்று உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

  15. கொரோனா வைரஸ்: எந்த நாடு என்ன செய்தது என விசாரணை - 194 நாடுகள் ஒப்புதல்

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கை குறித்து சுதந்திரமாக விசாரணை செய்ய உலக சுகாதார நிறுவனத்தின் 194 உறுப்பு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன.

    100 நாடுகள் சார்பில் இதற்கான தீர்மானத்தை ஐரோப்பிய ஒன்றியம் முன்மொழிந்தது.

    உலக நாடுகள் எடுத்த நடவடிக்கை மட்டுமல்லாமல் உலக சுகாதார நிறுவனம் எடுத்த நடவடிக்கைகளும் விசாரணைக்கு உட்படுத்தப்படும்.

    கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலை உலக சுகாதார நிறுவனம் சரியாக கையாளவில்லை என்று அமெரிக்கா கடுமையாக விமர்சித்து வந்தது.

    இந்த நிறுவனத்துக்கு உலகிலேயே அதிகமான நிதியுதவி வழங்கும் நாடான அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப் உலக சுகாதார நிறுவனம் சீனாவின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்நிலையில், கோவிட்- 19 தொடர்பாக உலக நாடுகள் எடுத்த நடவடிக்கைகள், "பாகுபாடற்ற வகையில், சுதந்திரமாக மற்றும் முழுமையாக மதிப்பீடு செய்யப்படும்" என்று இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்ற ஆண்டு இறுதியில் சீனாவின் வுஹான் நகரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகிய முதல் நபர் அடையாளம் காணப்பட்டார்.

    கோவிட்-19 தொற்று பரவத் தொடங்கிய முதல் சில வாரங்களில் இதை மூடிமறைக்க சீன அரசு முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

  16. நேற்று நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

    முதலில் நேற்று நடந்த சில முக்கிய நிகழ்வுகளை பார்க்கலாம்

    • உலக சுகாதார நிறுவனத்தின்செயல்பாடுகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வராவிட்டால் அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியை நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.
    • கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு, மக்களின்நோயெதிர்ப்புமண்டலத்தைப் பயிற்றுவிக்கும்தடுப்பூசியைஉருவாக்கியுள்ளதாக அமெரிக்கவை சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மார்டெர்னா கூறியுள்ளது
    • கொரோனா வைரஸால்ஐரோப்பிய ஒன்றியத்தில்கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 71 ஆயிரம் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இதே மாதம் பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையை விட இது 76% குறைவு.
    • கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், உலகளவில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது
    • இந்தியாவில்கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
    • தமிழகத்தில்புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது
  17. வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே!

    கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து செய்திகளையும் உங்களுக்காக எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் பிபிசி டெல்லி அலுவலகத்திலிருந்து செய்தியாளர்கள் விக்னேஷ் மற்றும் அபர்ணா ராமமூர்த்தி ஆகியோர் தொகுத்து வழங்குகிறோம்.