You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் 12 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை - சென்னையில் நிலவரம் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை 48 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. இந்தியாவில் சுமார் ஒருலட்சம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய மீனவர்கள் விடுதலை

    இலங்கையில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவிற்கு அனுப்ப தீர்மானம்

  2. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா வைரஸ் : முக்கிய தகவல்களின் தொகுப்பு

    கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்து, 19 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.

    கோவிட்-19 நோய்த்தொற்றால் 3 லட்சத்து, 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உலகில் இறந்துள்ள நிலையில், 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ளது.இந்திய அரசு இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 1 லட்சத்து 1,539 பேர் இந்தியா முழுவதும் கோவிட்- 19 தோற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று கொரோனா தாக்கத்திற்கு ஆளான 688 நபர்களில், 87 நபர்கள், துபாய், குவைத், மாலத்தீவு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 688 நபர்களில் 552 நபர்கள் சென்னையில் சிகிச்சை எடுத்துவருகிறார்கள். இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று ஆயிரத்தை தாண்டியது. சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் புதிதாக 28 கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1020ஆக பதிவாகியுள்ளது. இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 442 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 569 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

    மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 114 ஆக அதிகரித்துள்ளது.இன்று புதிதாக 37 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,978 ஆக அதிகரித்துள்ளது. 31 பேர்குணமடைந்துவீடுதிரும்பியுள்ளனர்.

    சிங்கப்பூரில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,794 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை 9,826 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், இது மொத்த எண்ணிக்கையில் 35 விழுக்காடு என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று ஆயிரத்தை தாண்டியது.சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் புதிதாக 28 கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1020ஆக பதிவாகியுள்ளது. இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 442 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 569 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

    உலக சுகாதார நிறுவனத்தின் செயல்பாடுகளில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வராவிட்டால் அந்த அமைப்புக்கு அமெரிக்கா வழங்கும் நிதி உதவியை நிரந்தரமாக நிறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரித்துள்ளார்.அந்த அமைப்பு சீனாவைத் தொடர்ந்து பாராட்டி வருவதாகவும், சீனத் தலையீடு எதுவும் இல்லாமல் சுதந்திரமாக செயல்படுவதாக காட்டினால் மட்டுமே அந்த நிறுவனத்துடன் தொடர்ந்து இயங்க முடியும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்தநிலையில், கொரோனா பிரச்சனையை டிரம்ப் அரசு சரியாக கையாளவில்லை என்றும், இதை திசைதிருப்பவே உலக சுகாதார அமைப்பு மீது குற்றச்சாட்டுகளை வைப்பதாகவும் சீன வெளியுறவுத்துறை விமர்சித்துள்ளது.

    ஆஸ்திரேலியா தனது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியான சீனாவிடமிருந்து மற்றொரு பெரும் அடியை இன்று எதிர்கொண்டது. தங்கள் நாட்டுக்கு ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்யும் பார்லிக்கு 80% வரியை சீனா விதித்துள்ளது.சீனாவின் விருப்பத்திற்கு எதிராக, கொரோனா வைரஸின் தோற்றம் மற்றும் பரவல் குறித்து உலகளாவிய விசாரணைக்கு ஆஸ்திரேலியா அழுத்தம் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    கொரோனா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு, மக்களின் நோயெதிர்ப்பு மண்டலத்தைப் பயிற்றுவிக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளதாக அமெரிக்கவை சேர்ந்த பயோடெக்னாலஜி நிறுவனமான மார்டெர்னா கூறியுள்ளது.தங்களது பரிசோதனையில் பங்கேற்ற 8 பேரின் உடலிலும் கொரோனா வைரஸை எதிர்த்து போரிடும் ஆன்டிபாடிகள் காணப்படுவதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது

    கொரோனா வைரஸால் ஐரோப்பிய ஒன்றியத்தில் கார் விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 2 லட்சத்து 71 ஆயிரம் கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு இதே மாதம் பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கையை விட இது 76% குறைவு.

    இந்தியாவில் பீகார்,உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் சென்ற வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் 16 தொழிலாளர்கள் உயிர் இழந்துள்ளனர்.

    கொரோனா காரணமாக உலகில் பல நாடுகளின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நியூசிலாந்தில் உள்ளூர் சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக மக்களுக்கு கூடுதல் விடுமுறைகளை அளிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது.நியூசிலாந்து பொருளாதாரம் அதிகளவில் சுற்றுலாவை சார்ந்தே உள்ளது. ஆனால், இப்போது வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை இல்லாததால், இத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில், உலகளவில் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்த இடத்தில் பிரேசில் உள்ளது.இங்கு 2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 16,853 பேர் உயிரிழந்துள்ளனர்.

    கொரோனாவை கையாளும் விதத்தில் பிரேசிலில் மாற்றுக்கருத்துகள் நிலவுகிறது. மாநில அரசுகள், பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ள நிலையில், வைரஸை விட பொது முடக்கம் ஆபத்தானது என அதிபர் சயீர் பொல்சனாரூ கூறியிருந்தார்.

  4. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொழும்பு - தூத்துக்குடி கப்பல்

    இலங்கையில் உள்ள இந்திய மக்களை அழைத்து வர ஐ.என்.எஸ். ஜலஸ்வா கப்பல் ஜூன் 1 ஆம் தேதி இயக்கப்படுகிறது.

  5. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஜுன் 1ஆம் தேதி முதல் பயணிகள் ரயில் இயக்கம்

    ஷார்மிக் ரயில்களுடன் கூடுதலாக ஜூன் 1 முதல் 200 கூடுதல் ரயில்களை இயக்க ரயில்வே துறை முடிவு செய்துள்ளது. இதற்கான முன் பதிவு இன்னும் சில தினங்களில் தொடங்கும். இவை அனைத்தும் நான் ஏ.சி ரயில்கள். ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்ய முடியும்

  6. கொரோனா வைரஸ்: தமிழக கள நிலவரம்

  7. வந்துகொண்டிருக்கும் செய்தி, கொரோனா வைரஸ்: இலங்கை நிலவரம் இதுதான்

    இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை இன்று ஆயிரத்தை தாண்டியது.

    சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவு இன்று மாலை 6 மணிக்கு வெளியிட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய தினம் புதிதாக 28 கொரோனா தொற்றுக்குள்ளானோர் அடையாளம் காணப்பட்ட நிலையில், இலங்கையில் மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 1020ஆக பதிவாகியுள்ளது. இலங்கையில் 9 பேர் உயிரிழந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    அத்துடன், 442 பேர் மருத்துவமனைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், 569 பேர் சிகிச்சைகளின் பின்னர் வெளியேறியுள்ளனர்.

  8. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 11,760ஆக உயர்வு

    தமிழகத்தில் புதிதாக 688 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    இன்று கொரோனா தாக்கத்திற்கு ஆளான 688 நபர்களில், 87 நபர்கள், துபாய், குவைத், மாலத்தீவு, கேரளா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, 688 நபர்களில் 552 நபர்கள் சென்னையில் சிகிச்சை எடுத்துவருகிறார்கள்.

    சென்னை, கடலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்களுக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    தமிழகத்தில் செயல்படும் 61 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 3,32,352 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 10,333 மாதிரிகள் சோதனைகள் செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 489 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4895ஆக உயர்ந்துள்ளது என்றார்.தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுவதால், 4775 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று ஒரே நாளில் மூன்று நபர்கள் இறந்துள்ளார் என்றும் அதனால் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 84ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை கொரோனா பாதிப்பால் இறந்தவர்களின் விகிதம் இறப்பு விகிதம்குறித்து தொடர்ந்து பேசிவரும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது என்று குறிப்பிட்டு, மத்திய அரசின் குழு பாராட்டியதாக அமைச்சர் தெரிவித்திருந்தார். தமிழகத்தில் இறப்பு விகிதம் 0.68சதவீதமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  9. கொரோனா வைரஸ்: பறிபோன கோயில்களின் வருமானம் - பல நூறு கோடி இழப்பு

    கொரோனா வைரஸ் பரவல் தொழிற்சாலைகளையும், வியாபாரங்களையும் மட்டுமல்ல, இந்தியாவின் பணக்கார கோயில்களில் ஒன்றான கேரளாவில் உள்ள ஸ்ரீ பத்மநாபசாமி கோயிலையும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது. இக்கோயிலுக்கு பெரும்பாலும் வட இந்தியாவை சேர்ந்த பக்தர்கள் வரும் நிலையில், இப்போது கோயிலின் நிதி நிலைமை மோசமாக உள்ளது என கூறப்படுகிறது.

    வழக்கமாக இக்கோயிலுக்கு ஒரு நாளைக்கு இரண்டு லட்ச ரூபாய் வருமானம் கிடைக்கும். அத்துடன் ஒரு லட்ச ரூபாய் உண்டியல் மூலம் கிடைக்கும். ஆனால், இப்போது ஒவ்வொரு நாளும் ஆன்லைன் மூலம் 10 ரூபாய் முதல் இருபதாயிரம் ரூபாய் வரை மட்டுமே கிடைக்கிறது.

    '' கோயிலில் பணியாற்றும் 307 ஊழியர்களுக்கு சம்பளம் அளிக்க வங்கி வைப்பு நிதியையும், அதன் மூலம் கிடைக்கும் வட்டியை மட்டுமே நம்பியுள்ளோம். கோயிலின் தினசரி செலவுகளை சமாளிக்க எனக்கு கூட 30% சம்பளம் குறைக்கப்பட்டுள்ளது'' என்கிறார் பத்மநாபசாமி கோயிலின் நிர்வாக அதிகாரி ரத்தீசன்.

  10. கொரோனா வைரஸ்: சர்வதேச அளவில் நடப்பது என்ன?

  11. கட்டுப்பாட்டு முகாமில் நாட்டிய நிகழ்ச்சி

    பிகாரில்கொரோனாவைரஸ் நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள சமஸ்தீப்பூர் மாவட்ட கட்டுப்பாட்டு முகாமில் நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அம்மாவட்டத்தின் கூடுதல் ஆட்சியர், “இது குறித்து விசாரித்து வருகிறோம். நிச்சயம் நடவடிக்கை எடுப்போம்,” என்றார்.

  12. என்ன நடக்கிறது பிரேசிலில்?

  13. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா பாதிப்பு

    தமிழகத்தில் இன்று மேலும் 688 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் 552 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.

  14. கொரோனா வைரஸ் - சுய இன்பம் : என்ன தொடர்பு?

  15. சிங்கப்பூரில் அண்மைய நிலவரம் என்ன?

    சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 28,794ஆக அதிகரித்துள்ளது.

    இதுவரை 9,826 பேர் குணமடைந்துள்ளனர் என்றும், இது மொத்த எண்ணிக்கையில் 35 விழுக்காடு என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    சிங்கப்பூரில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அமலில் இருக்கும் நிலையில், வைரஸ் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    கடந்த ஆறு தினங்களாக அங்கு கோவிட்-19 பிடியில் இருந்து விடுபடுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக புதிதாக பாதிக்கப்படுபவர்களை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    சிங்கப்பூரில் கொரோனா கிருமித் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது அந்நியத் தொழிலாளர்கள் தான். அங்கு தங்குவிடுதிகளில் தங்கியுள்ள 3 லட்சத்து 23 ஆயிரம் தொழிலாளர்களில் 26,090 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

    விடுதிக்கு வெளியில் தங்கியுள்ள சுமார் 6.64 லட்சம் வெளிநாட்டுப் பணியாளர்களில் 363 பேருக்கு பாதிப்புள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே வீட்டிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று பணிக்கப்பட்ட 85 ஆயிரம் கட்டுமான ஊழியர்களுக்கான கட்டுப்பாட்டு உத்தரவு நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.

    இதையடுத்து அந்த ஊழியர்கள் மற்றவர்களைப் போல் அத்தியவாசியத் தேவைகளுக்காக விதிமுறைகளைப் பின்பற்றி வெளியே செல்லலாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளதாக சிங்கப்பூர் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  16. மலேசியாவில் கோவிட்-19 நோயாளிகளில் 50% தப்லிக் மாநாட்டில் பங்கேற்றவர்கள்

    மலேசியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பலி எண்ணிக்கை 114ஆக அதிகரித்துள்ளது.

    இன்று புதிதாக 37 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,978ஆக அதிகரித்துள்ளது.

    இந்நிலையில் அடையாளம் காணப்பட்ட மொத்த நோயாளிகளில் 48 விழுக்காட்டினர் கோலாலம்பூரில் நடைபெற்ற தப்லிக் மாநாட்டு நிகழ்வுடன் தொடர்புடையவர்கள் என்று மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    "அம்மாநாட்டில் பங்கேற்றவர்களில் 3,347 பேருக்கு கிருமித்தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இவர்கள் மூலம் ஐந்து தலைமுறைக்கு நோய்த்தொற்று பரவியுள்ளது. எனவே தான் மாநாட்டில் பங்கேற்ற அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது," என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே நாடு முழுவதும் கோழி, காய்கறிகளின் விலை வெகுவாக அதிகரித்துள்ளது என பயனீட்டாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சில காய்கறிகளின் விலை இருமடங்காகி உள்ளது என அவர்கள் சுட்டிக்காட்டியதாக மலேசிய தமிழ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    மிளகாய், தக்காளி, பீன்ஸ் மற்றும் சூப் இலைகள் போன்ற காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்நிலையில் பண்டிகை காலத்தில் தேவை அதிகரித்தும் போது அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என செமாம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சீன் சுங் கூறியதாக ஊடகச் செய்தி ஒன்று தெரிவிக்கிறது

  17. வங்கி கணக்கில் பணத்தை திருடும் புதிய வைரஸ்: சிபிஐ எச்சரிக்கை

    கோவிட் 19 வைரஸ் பெருந்தொற்று காலத்தில், வங்கி கணக்குகளில் உள்ள பணத்தை திருடும் புதிய வைரஸ் இன்டர்நெட் வழியாக பரவி வருவதாக இந்திய புலனாய்வுத்துறையான சிபிஐ எச்சரித்துள்ளது.

    சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், சிபிஐ ஆகியவை இது தொடர்பாக மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச அரசுகளுக்கும் எச்சரிக்கை குறிப்பை அனுப்பியுள்ளன. அதில், செர்பரெஸ் எனப்படும் தகவல் திருடும் ட்ரோஜானை, கோவிட்-19 வைரஸ் தொடர்பான செயலியை பதிவிறக்கும் செய்யும் போர்வையில் ஓர் அனாமதேய லிங்கை குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் வழியாக விஷமிகள் அனுப்புவதாக கூறப்பட்டுள்ளது.

    அவ்வாறு அந்த லிங்கை கிளிக் செய்த உடனேயே, அந்த கணிப்பொறியில் உள்ள மின்னஞ்சல் முகவரி உதவியுடன் அது இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு, வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு விவரங்களையும் பணத்தை எடுக்கும் ரகசிய குறியீடுகளையும் திருடி அதை அனுப்பும் விஷமிக்கு தெரியப்படுத்தும் என்று சிபிஐயின் எச்சரிக்கை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வைரஸ் பெருந்தொற்று காலத்தில் ஏற்கெனவே, ஆரோக்கியசேது செயலியை இந்திய அரசு அறிமுகப்படுத்தி, அதை பதிவிறக்கம் செய்யாமல் யாரும் அலுவலகம் வரவோ, பொது இடங்களுக்கு செல்லவோ அனுமதியில்லை என்று கூறியுள்ளது.

    இந்த நிலையில், கோவிட்-19 பெருந்தொற்று தகவல் சேகரிப்பு போர்வையில், திறன்பேசி வைத்திருப்பவரின் தனிப்பட்ட தகவல்களை திருட புதிய வகை கணினி வகை வைரஸ் இணைய உலகில் நடமாடுவது புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

  18. ஆந்திராவை உலுக்கிய மருத்துவர் சுதாகர் கதை

  19. கொரோனா வைரஸ்: பிரேசில் நிலவரம் இதுதான்

    "கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான்" என்று கூறும் அதிபர், பதவியேற்ற ஒரே மாதத்தில் ராஜிநாமா செய்த சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பில் உலகளவில் நான்காமிடம் என அடுத்தடுத்து பிரேசிலில் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளன.

    கொரோனா வைரஸால் உலகமே முடங்கி போயிருக்கிறது. தினம் தினம் கொத்து கொத்தாக மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். கொரோனாவை முதலில் பெரிதும் பொருட்படுத்தாத பல நாடுகள் பின்னர் அதன் வீரியத்தை உணர்ந்து அதற்கான தற்காப்பு பணிகளை மேற்கொண்டனர்.

    ஆனால், இந்த சூழலிலும் கொரோனாவை துச்சமாக மதித்து நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் ஒருவர்.

    அவர் பிரேசில் அதிபர் சயீர் பொல்சனாரூ.

    கொரோனா ஒரு 'சாதாரண காய்ச்சல்'

    அமேசான் காட்டுக்கு தீ வைக்க ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டி காப்ரியோதான் பணம் கொடுத்தார், அமேசான் காடு உலகின் நுரையீரல் இல்லை, ஆணுக்குத் தரும் அதே சம்பளம் கொடுத்து ஒரு பெண்ணை வேலைக்கு எடுக்கமாட்டேன். ஏனெனில் பெண் கருத்தரிப்பாள் உள்ளிட்ட கருத்துகளை பல்வேறு காலகட்டங்களில் கூறி வந்த சயீர் பொல்சனாரூ, கொரோனா பரவ தொடங்கியதிலிருந்தே அதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.

    இது ஒரு சாதாரண காய்ச்சல், அனைவரும் பணிக்கு திரும்புங்கள் என்று தொடக்கத்திலிருந்தே கூறி வருகிறார்.

    பிரேசில் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தான் உள்பட பெரும்பாலானவர்களுக்கு கொரோனா வைரஸால் எவ்வித பாதிப்பும் இல்லை என்று அவர் கூறி வருகிறார்.

    உலகத்தின் பல்வேறு பகுதிகளிலும் லாக்டவுன் அதாவது சமூக முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தொடக்கத்திலிருந்தே சமூக முடக்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறார் பொல்சனாரூ.

    சமூக முடக்கம் நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்துவிடும் என்று வாதிடுகிறார்.

    இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் நடந்த மாகாண ஆளுநர்களுடனான கூட்டத்தில் பேசிய அவர், "நமது வாழ்க்கை தொடர்ந்து நடக்க வேண்டும். வேலைகளை பாதுகாக்க வேண்டும். நாம் கண்டிப்பாக இயல்புநிலைக்குச் சென்றே தீர வேண்டும்" என்று கூறினார்.

    இப்போது வரை அவர் நிலைப்பாடு இதுவாகதான் இருக்கிறது

    பதவி விலகிய இரு சுகாதார அமைச்சர்கள்

    கொரோனா பரவ தொடங்கியதிலிருந்து பிரேசிலில் இதுவரை இரண்டு சுகாதார அமைச்சர்கள் மாறிவிட்டனர்.

    பொல்சனாரூவுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து கடந்த மாதம் சுகாதார அமைச்சர் லூயிஸ் ஹென்ரிகே பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து சுகாதார அமைச்சராக பொறுப்பேற்ற நெல்சன் சில தினங்களுக்கு முன் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

    வெளிப்படையாக அவர் பொல்சனாரூ மீது குற்றஞ்சாட்டாமல் இருந்தாலும், உடற்பயிற்சி மற்றும் அழகு நிலையங்களை மீண்டும் திறக்க அதிபர் பொல்சனாரூ அளித்த ஆணையை அவர் விமர்சித்து இருந்தார்.

    கொரோனா தொடர்பாக நடவடிக்கைகளில் ஏற்பட்ட மனகசப்புகளால்தான் அவர் பதவி விலகினார் என்கின்றனர் உள்விவரம் அறிந்தவர்கள்.

    சரி பிரேசிலின் நிலவரம் என்ன?

    கொரோனா பாதித்த நாடுகள் பட்டியலில் சர்வதேச அளவில் நான்காவது இடத்தில் இருக்கிறது பிரேசில். அதாவது அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டனுக்கு அடுத்து பிரேசில் உள்ளது.

    இப்போது வரை பிரேசிலில் கொரோனாவால் ஏறத்தாழ இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர்.

    நாடு முழுவதும் போதிய அளவுக்குப் பரிசோதனைகளை மேற்கொள்ளாததால், நோய்த்தொற்று எண்ணிக்கை அதிகாரபூர்வ தரவை விட அதிகமாகவே இருக்குமென்று சுகாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    பிரேசிலின் ஒட்டுமொத்த நிலையை விளக்க அந்நாட்டின் சாவ் பாலோ நகரத்தின் நிலையை உங்களுக்கு கூறினால் போதும்.

    சாவ் பாலோ நகரிலுள்ள அரசு மருத்துவமனைகளில் 90 சதவீத இடம் நிரம்பிவிட்டதாக கூறுகிறார் அந்நகர மேயர் புருனோ கோவாஸ் எச்சரிக்கிறார்.

    இதே நிலை தொடர்ந்தால், அந்த நகரத்தின் சுகாதார கட்டமைப்பு இன்னும் இரண்டே வாரங்களில் முழுவதுமாக அழிந்துவிடும் என்கிறார் அவர்.

    உலகின் பெரும்பாலான நகரங்களை போன்று சாவ் பாலோவிலும் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே முடக்க நிலை அமலுக்கு வந்துவிட்டது. அங்கு அலுவலகங்கள், தொழிற்சாலைகள், பள்ளி - கல்லூரிகள் என அனைத்தும் மூடப்பட்டு விட்டன.

    ஆனால், அந்நகரத்தில் யாரும் பெரிதாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவில்லை.

    நிலையை எடுத்து கூறி மக்களை சரியான திசையில் அழைத்து செல்ல வேண்டிய அரசோ மெத்தனமாக இருந்தது என்கிறார்கள் உள்ளூர் விமர்சகர்கள்.

    அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது போல மக்களும் முதலில் கொரோனாவை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

    இப்போது உலகத்தில் பல நாடுகள் ஊரடங்கை தளர்த்தி கொண்டிருக்கும் இந்த வேளையில் சுமார் 1.2 கோடி மக்கள் தொகை கொண்ட சாவ் பாலோ நகரில் முடக்க நிலையை தீவிரப்படுத்துவது குறித்து தான் மாகாண ஆளுநருடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக மேயர் கூறுகிறார்.

    சாவ் பாலோ மட்டும் மோசமாக பாதிக்கப்படவில்லை.

    அமேசான் காடுகள் உள்ளா பகுதியான அமேசானாஸ் மாகணாமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

    அமேசோனாஸ் தலைநகரில் கொரோனாவால் இறந்த மக்களை பெரும் சவக்குழிகள் தோண்டி புதைத்துள்ளனர்.

    சுகாதார வசதிகள் இல்லாத, மருத்துவ வசதிகள் கிடைக்கபெறாத அமேசான் பழங்குடிகளிடமும் கொரோனா பரவி உள்ளது.

    ஒரு பக்கம் காட்டழிப்பால் பாதிக்கப்பட அமேசான் பழங்குடிகளுக்கு அடுத்த பேரபாயமாக மாறி உள்ளது கொரோனா.

    இந்த சூழலில் உலகமே சமூக விலகலின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கொண்டிருக்க , அதனையெல்லாம் கிடப்பில் போட்டுவிட்டு, தனது ஆதரவாளர்களுடன் தலைநகர் பிரேசிலியாவில் பொல்சினாரூ மக்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

  20. கொரோனா வைரஸ்: கேரளாவில் 12 பேர் பாதிப்பு

    கொரோனா வைரஸ் தொற்றால் கேரளாவில் புதிதாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 4 பேர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள், 8 பேர் வெளிமாநிலங்களிலிருந்து வந்தவர்கள். இதுவரை கேரளாவில் கொரோனாவால் 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 142 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன என்று கேரள முதல்வர் பினராயி கூறியதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.