கொரோனா வைரஸ்: தமிழகம் - 536, சென்னை- 364; அண்மைய செய்திகள் என்ன?

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் இதுவரை 47 லட்சத்து 13ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது. கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. நன்றி நேயர்களே!

    இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.

    மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.

  2. இன்று நடந்த முக்கிய நிகழ்வுகள்

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

    • கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47 லட்சத்து, 48 ஆயிரத்தை கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவு தெரிவிக்கிறது.
    • கோவிட்-19 நோய்த்தொற்றால் 3 லட்சத்து, 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உலகில் இறந்துள்ள நிலையில், 17 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
    • உலக சுகாதார அமைப்பின் 73வது உலக சுகாதார கூட்டத்தில் காணொளி வாயிலாக உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், கோவிட் 19 நோய்த்தொற்று தொடர்பாக சீனா எடுத்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். ‘’ஆரம்பம் முதலே நாங்கள் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன், பொறுப்புடன் பணியாற்றி வருகிறோம்’’ என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.
    • பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை என கத்தார் அறிவித்துள்ள நிலையில், அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என குவைத் அறிவித்துள்ளது.
    • மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று புதிதாக 47 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.
    • சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 28,343ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 305 பேருக்கு கோவிட்-19 நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • மஹாராஷ்டிராவில் ஒரேநாளில் புதிதாக 2033 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    • சென்னையில் கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 7,117ஆக உயர்ந்துள்ளது.
    • தமிழகத்தில் கடந்த மார்ச் 24 முதல் மூடப்பட்டிருந்த முடிதிருத்தும் நிலையங்கள் மீண்டும் ஊரக பகுதிகளில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
  3. இந்தியாவில் புலம் பெயர் தொழிலாளர்களின் அவலநிலை

    இந்தியாவில் புலம் பெயர் தொழிலாளர்களின் அவலநிலை - 450 கி.மீ நடந்து செல்லும் குழந்தை

  4. மஹாராஷ்டிராவில் ஒரேநாளில் 2000க்கும் மேற்பட்ட தொற்றுகள்

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

    மஹாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2033 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதேபோல் 51 பேர் இறந்துள்ளனர் என மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    மஹாராஷ்டிராவில் இதுவரை கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை கடந்துள்ளது.

    இதில் மும்பையில் மட்டும் புதிதாக 1185 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து மும்பை நகரில் இதுவரை இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21, 152-ஆக உயர்ந்துள்ளது. 757 பேர் உயிரிழந்துள்ளனர்.

  5. கொரோனா வைரஸ்: இந்தியா மற்றும் தமிழகத்தில் அண்மைய நிலவரம் என்ன?

    தமிழ்நாட்டில் 11 ஆயிரத்தை தாண்டியது கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை. இந்திய அளவில் ஒரு லட்சத்தை நெருங்குகிறது. இது குறித்த விளக்க காணொளி.

  6. இலங்கையிலுள்ள இந்தியர்களை மீட்கும் பணி 29-ஆம் தேதி தொடக்கம்

    இலங்கையில் நிர்கதிக்குள்ளாகியுள்ள இந்தியர்களை, தாயகத்திற்கு அனுப்பும் நடவடிக்கைகளை இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் முன்னெடுத்துள்ளது.

    இதன் முதற்கட்டமாக மே மாதம் 29ஆம் தேதி கொழும்பிலிருந்து மும்பை நகருக்கு விசேட விமானமொன்றை ஈடுபடுத்தவுள்ளதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் தளத்தில் ஊடாக அறிவித்துள்ளது.

    ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விசேட விமானம் இந்த சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

    இவ்வாறு நாட்டிற்கு அழைத்து செல்லப்படுவோர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

    அவசர தேவைகளுக்காக 0094771222405 என்ற தொலைபேசியூடாக தொடர்புக் கொள்ள முடியும் என இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கின்றது.

    அத்துடன், hcicolombo.controlroom@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாகவும் தொடர்புக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    கோவிட்19 தொற்று காரணமாக பெருமளவிலான இந்திய பிரஜைகள் இலங்கையில் நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.

    இவ்வாறு நிர்கதிக்குள்ளான இந்தியர்களை முதற்கட்டமாக அழைத்து செல்லும் நடவடிக்கை எதிர்வரும் 29ஆம் தேதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.

    இந்த நடவடிக்கை தொடர்பிலான மேலதிக தகவல்கள் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. குஜராத், ராஜஸ்தானில் கட்டுப்பாடுகள் என்ன? தளர்வுகள் என்ன?

    வரும் மே 31-ஆம் தேதி வரை, நான்காவது முறையாக சமூக முடக்கத்தை இந்திய அரசு நீடித்துள்ள நிலையில், வெவ்வேறு மாநில அரசுகள் தங்கள் மாநிலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் புதிதாக அனுமதிக்கப்பட்ட தளர்வுகள் குறித்து அறிவித்து வருகின்றன.

    தமிழகம், டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் புதிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்து முன்னரே அறிவித்துள்ள நிலையில், தற்போது குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

    • குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபாணி இது குறித்து அறிவிக்கையில், குஜராத்தில் உணவகங்கள் திறந்திருக்கலாம், ஆனால் அவற்றில் இருந்து வாடிக்கையாளர்கள் உணவை வாங்கி மட்டுமே செல்ல முடியும் என்று அறிவித்துள்ளார். நெடுஞ்சாலைகளில் உணவகங்கள் திறந்திருந்தாலும், அங்கு சமூக கட்டுப்பாடு கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
    • பள்ளிகள், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை குஜராத்தில் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
    • ராஜஸ்தானில் கட்டுப்பாடு மண்டலங்கள் அல்லாத பகுதிகளில், அழகு நிலையங்கள் மற்றும் சலூன்கள் உள்ளிட்டவை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
    • ராஜஸ்தானில் உள்ள ஆரஞ்சு மற்றும் பச்சை நிற மண்டலங்களில் இரண்டு பயணிகளுடன் செல்ல டாக்சி மற்றும் கேப் சேவைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
    கோப்புப்படம்

    பட மூலாதாரம், PTI

  8. மலேசியாவில் கல்லூரி மாணவர்கள், குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

    மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்தை நெருங்குகிறது. இன்று புதிதாக 47 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதியானது.

    கடந்த 24 மணிநேரத்தில் 44 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 6,941ஆக அதிகரித்துள்ள நிலையில், மொத்த நோயாளிகளில் 80 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியிருந்த மாணவர்களில் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.

    சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்துடன் இணைந்த அம்மாணவர்கள் 14 நாட்கள் தம்மைத் தாமே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற விதிமுறையை பின்பற்றவில்லை என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

    "இந்நிலையில் அந்த மாணவர்களில் சிலருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதனால் குழந்தைகள், முதியோர்களுக்கு நோய்த்தொற்று பரவும் ஆபத்து உள்ளது. இதில் இருந்து மலேசிய மக்கள் அனைவரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்" என நூர் ஹிஷாம் மேலும் கூறியுள்ளார்.

    விடுதிகளில் தங்கியிருந்த 49 ஆயிரம் மாணவர்களை சொந்த ஊர் திரும்ப கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி உயர்கல்வி அமைச்சு அனுமதி அளித்தது.

    இதற்கிடையே, மலேசியாவில் 12 வயதுக்கு உட்பட்ட 317 குழந்தைகள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் பாதிக்கப்பட்ட குழந்தைகளில் 112 பேர் நான்கு வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும், 22 குழந்தைகள் இன்னும் ஒரு வயதைக் கடக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

    மலேசியாவில் இதுவரை கோவிட்-19 நோய்க்கு குழந்தைகள் யாரும் பலியாகவில்லை.

  9. சிங்கப்பூரில் அண்மைய நிலவரம் என்ன?

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை 28,343ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 305 பேருக்கு கோவிட்-19 நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    பாதிக்கப்பட்டவர்களில் இருவர் மட்டுமே சிங்கப்பூரர்கள் ஆவர். அங்கு அந்நியத் தொழிலாளர்கள் மத்தியில் தான் நோய்த்தொற்று தொடர்ந்து அதிக அளவில் காணப்படுகிறது.

    இதற்கிடையே சிங்கப்பூரில் குழந்தைகளிடம் புதுவகை அழற்சி காணப்படுவதாக அந்நாட்டு சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

    கோவிட்-19 கிருமியுடன் தொடர்புபடுத்திக் கூறப்படும் கடுமையான நோய் எதிர்ப்பு குறைபாட்டிற்கான அறிகுறிகளுடன் குழந்தைகள் எவரேனும் சிகிச்சைக்கு வந்தால் அவர்களை உடனே அரசு குறிப்பிட்டுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப வேண்டும் என மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சிங்கப்பூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

    குழந்தைகளிடம் நோய் எதிர்ப்புகுறைபாடு காணப்படுவதாக மேற்கத்திய நாடுகளின் சுகாதார அமைப்புகள் அண்மையில் தகவல் வெளியிட்டன. இந்நிலையில் இந்த குறைபாட்டுக்கும் கொரோனா வைரசுக்கும் இடையே தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதாக அந்த அமைப்புகள் எச்சரித்துள்ளன.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  10. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்வது குறைந்துவிட்டதா?

    தமிழகத்தில் புதிதாக 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,760 ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    சென்னையில் கொரோனா தாக்கத்திற்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 7,117ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று நோய் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்ட 536 நபர்களில், 364 நபர்கள் சென்னையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்ட நபர்களில் 46 நபர்கள் மகாராஷ்டிராவிலிருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், TWITTER

  11. பிரேசிலில் உச்சத்தை தொடும் கொரோனா பாதிப்பு; - என்ன நடக்கிறது அங்கே?

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

    "கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட ஒரு சாதாரண காய்ச்சல் போன்றதுதான்" என்று கூறும் பிரதமர், பதவியேற்ற ஒரே மாதத்தில் ராஜிநாமா செய்த சுகாதாரத்துறை அமைச்சர், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பில் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டனுக்கு அடுத்து உலகளவில் நான்காமிடம் என அடுத்தடுத்து அதிர்வலைகளை எழுப்பி வரும் பிரேசிலிலிருந்து இன்று மற்றொரு செய்தி வெளிவந்துள்ளது.

    கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட பிரேசிலின் மிகப் பெரிய நகரமான சாவ் பாலோவில் இதே நிலை நீடித்தால் அடுத்த இரண்டு வாரங்களில் நகரின் சுகாதார அமைப்பு தகர்ந்துபோகும் என்று அதன் மேயர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழகத்தில் இன்று 536 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று மேலும் 536 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதிகபட்சமாக சென்னையில் 364 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

  13. டெல்லியில் தனியார் நிறுவனங்கள் முழு அளவில் பணியாற்ற அனுமதி

    வரும் மே 31-ஆம் தேதி வரை, இந்திய அரசு நான்காவது முறையாக சமூக முடக்கத்தை நீடித்துள்ள நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் டெல்லியில் .கடைப்பிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘’தனியார் நிறுவனங்கள் அனைத்து பணியாளர்களுடன் பணியாற்றலாம். அதே வேளையில் அவர்கள் தங்களின் பெரும்பாலான பணியாளர்கள் தொடர்ந்து வீட்டில் இருந்து பணியாற்றுவதையே முயற்சிக்க வேண்டும்’’ என்று கூறினார்.

    விளையாட்டு அரங்குகள் மற்றும் மைதானங்கள் திறந்திருக்கலாம் என்ற போதிலும், வாடிக்கையாளர்கள் இல்லாமல் மட்டுமே அது அனுமதிக்கப்படும் என்றார்.

    பேருந்துகள் இயங்க அனுமதிக்கப்படும், ஆனால் ஒரு சமயத்தில் 20 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். பேருந்தில் ஏறும் முன்பு பயணிகள் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவர். பேருந்து நிலையங்கள் மற்றும் பேருந்தின் உள்ளே சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதை போக்குவரத்துத்துறை உறுதி செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் மேலும் குறிப்பிட்டார்.

    அழகு நிலையங்கள் மற்றும் சலூன்கள் போன்றவை தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.

    அவசர தேவைகளை தவிர, இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வெளியில் நடமாடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    கார் மற்றும் கேப் ஆகியவை இரண்டு பயணிகளுடன் மட்டும் (ஓட்டுநரை தவிர) அனுமதிக்கப்படும்.

    கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால், டெல்லியில் உள்ள பணியாளர்களை கொண்டே அந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஆட்டோ ரிக்க்ஷா, இ-ரிக்க்ஷா மற்றும் சைக்கிள் ரிக்க்ஷா போன்றவை ஒரு பயணியுடன் மட்டும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து செல்ல அனுமதி கிடையாது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், ANI

  14. உலக சுகாதார அமைப்பு கூட்டம் - மெர்கல், மக்ரோங் பேசியது என்ன?

    WHO

    பட மூலாதாரம், WHO

    தற்போது நடைபெற்று வரும் உலக சுகாதார அமைப்பின் 73வது உலக சுகாதார கூட்டத்தில், உலக தலைவர்கள் பலரும் உரையாற்றி வருகிறார்கள்.

    இந்த கூட்டத்தில் பேசிய ஜெர்மனியின் சான்சலர் மெர்கல், ‘’உலக சுகாதார நிறுவனம் சட்டப்பூர்வமான உலக அளாவிய அமைப்பு. அவர்களின் பணிக்கு நாம் ஆதரவு அளிக்க வேண்டும். அதேவேளையில், அவர்கள் தங்கள் பணியை மேம்படுத்த வேண்டும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    கோவிட்19 நோய்த்தொற்றை கட்டுப்படுத்த உலக அளவில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

    சீன அதிபர் ஜி ஷின்பிங் இந்த கூட்டத்தில் உரையாற்றிய பின்னர், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோங் பேசினார்.

    இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக அளவில் ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் தேவை என்று அவர் தெரிவித்தார்.

    ‘’கொரோனா வைரஸ் தடுப்புக்கு எந்த நாடு தடுப்பு மருந்து கண்டுபிடித்தாலும், அது உலக நாடுகள் அனைத்துக்கும் கிடைக்கும் விதமாக இருக்க வேண்டும்’’ என்று அவர் தெரிவித்தார்.

  15. தொடரும் சமூக முடக்கம்: எதற்கெல்லாம் கட்டுப்பாடு? எதற்கெல்லாம் தளர்வு?

    இந்திய அரசு நான்காவது முறையாக சமூக முடக்கத்தை நீடித்துள்ளது. இந்த சமூக முடக்கமானது மே 31 வரை தொடரும். அதே நேரம் இந்த சமூக முடக்கத்தில் சில தளர்வுகளையும் அளித்துள்ளது இந்திய அரசு.

    சரி. எதற்கெல்லாம் கட்டுப்பாடுகள் தொடர்கின்றன ? எதற்கெல்லாம் தளர்வு? என்பதை இந்தக் கட்டுரையில் காண்போம்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  16. கொரோனா வைரஸ்: ‘சீனா வெளிப்படைதன்மையுடன் பணியாற்றியது - ஷி ஜின்பிங்

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Reuters

    படக்குறிப்பு, கோப்புப்படம்

    உலக சுகாதார அமைப்பின் 73வது உலக சுகாதார கூட்டத்தில் காணொளி வாயிலாக உரையாற்றிய சீன அதிபர் ஷி ஜின்பிங், கோவிட் 19 நோய்த்தொற்று தொடர்பாக சீனா எடுத்த நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.

    ‘’ஆரம்பம் முதலே நாங்கள் தொடர்ந்து வெளிப்படைத்தன்மையுடன், பொறுப்புடன் பணியாற்றி வருகிறோம்’’ என்று ஷி ஜின்பிங் குறிப்பிட்டார்.

    கோவிட்-19 நோய்த்தொற்று ஆரம்பம் மற்றும் பரவல் தொடர்பாக சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என சில நாடுகள் கோரிக்கை விடுத்த நிலையில், சீன அதிபரின் உரை மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

    கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதும், எவ்வாறு இது கையாளப்பட்டது என உலக அளவில் முழுமையான ஆய்வு நடத்தவேண்டும் என்று சீன அதிபர் ஜி ஷின்பிங் வலியுறுத்தினார்.

    மேலும் இந்த விசாரணை ஆய்வு, ‘’குறிக்கோளுடன், பாரபட்சமில்லாமல், நடுநிலைமையுடன் நடத்தப்பட வேண்டும்’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  17. மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைய தகவல் என்ன?

    மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைய தகவல் என்ன?

    பட மூலாதாரம், Getty Images

    • பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு கடுமையான தண்டனைகளை கத்தார் மற்றும் குவைத் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை என கத்தார் அறிவித்துள்ள நிலையில், அதிகபட்சமாக 3 மாதங்கள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என குவைத் அறிவித்துள்ளது.
    • லெபனானில் அரசு அறிவித்த 4 நாட்கள் ஊரடங்கு முடிவடைந்த போதிலும், இரவுநேர கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
    • புனித ரமலான் விடுமுறை விரைவில் வரவிருக்கும் நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிப்பை வெளியிட செளதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இதே போன்ற மற்ற வளைகுடா நாடுகளும் புனித ரமலான் விடுமுறை தினத்தில் எடுக்க வேண்டிய கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்து வருகின்றன.
  18. மத்திய கிழக்கு நாடுகளில் அண்மைய தகவல் என்ன?

  19. வந்துகொண்டிருக்கும் செய்தி, WHO-வின் முக்கிய கூட்டம் சற்று நேரத்தில் துவங்கவுள்ளது

    உலக சுகாதார அமைப்பின் 73வது உலக சுகாதார கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது.

    காணொளி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசுகிறார்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவல் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய ஆணையம் ஆகியவை கோரியுள்ளன.

  20. தமிழகத்தில் ஊரக பகுதிகளில் சலூன் திறக்க அனுமதி

    தமிழகத்தில் கடந்த மார்ச் 24 முதல் மூடப்பட்டிருந்த முடிதிருத்தும் நிலையங்கள் மீண்டும் ஊரக பகுதிகளில் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

    தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், முடிதிருத்தும் தொழிலாளர்களின் கோரிக்கைக்கு இணங்க முடிதிருத்தும் நிலையங்கள் ஊரக பகுதிகளில் நாளை முதல் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

    சென்னை மாநகர காவல் எல்லை, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் முடிதிருத்தும் நிலையங்கள் திறக்க அனுமதியில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த முடிதிருத்தும் நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அணுகு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டுமென்றும், கையுறை மற்றும் முகக்கவசம் ஆகியவை கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முடி திருத்தும் நிலையங்களில் ஒரு நாளைக்கு ஐந்து முறை கிருமி நாசினியை தெளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல பணியாளர்கள் அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுவதை உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.