You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழகத்தில் 10 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு

சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலவாரியாகப் பார்க்கும்போது, ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்த மண்டலத்தில் தற்போது 971 பேர் உள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. '20 நாட்கள் பயணம்; எங்கு உறங்குவோம் என தெரியாது'- தமிழகத்திலிருந்து கிளம்பும் வெளிமாநில தொழிலாளர்கள்

  2. இலங்கை : கோவிட் -19 தாக்கத்தால் புகை மற்றும் மதுப்பழக்கம் குறைந்துள்ளது

    பொது முடக்க நிலை உள்ளிட்ட கோவிட்-19 தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக இலங்கையில் மது அருந்தும் பழக்கம் 80 % விழுக்காடும், புகை பிடிக்கும் பழக்கம் 68 % விழுக்காடும் குறைந்துள்ளதாக அந்நாட்டின் மதுசாரம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையம் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவித்துள்ளது.

    ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 54 % விழுக்காட்டினர் மதுக்கடைகள் மூடப்பட்டதால் மது அருந்தவில்லை என்றும், 14 % விழுக்காட்டினர் காவல்துறையினரின் சோதனை காரணமாக மது அருந்தவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். ஆனால் 17 % விழுக்காட்டினர், ஊடரங்கு காலகட்டத்தில் தங்களுக்கு மது அருந்தும் எண்ணமே வரவில்லை என தெரிவித்துள்ளனர்.

    புகைப்பழக்கத்தை பொறுத்தவரை, 48 % விழுக்காட்டினர் புகைப்பதை குறைத்துள்ளதாகவும், 20 % விழுக்காட்டினர் புகைப்பழக்கத்தை நிறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் இலங்கையில் மீண்டும் மதுபான கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து, மதுபானங்கள் வாங்க அங்கு பெருந்திரளானோர் கூடியுள்ளனர். மேலும் அவர்கள் தனிநபர் இடைவெளி உள்ளிட்ட எந்த கட்டுப்பாடுகளையும் கடைபிடிக்கவில்லை.

  3. கோவிட்-19 : ஐரோப்பிய நாடுகளின் நிலவரம் என்ன?

    • பெல்ஜியத்தில் இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ஏப்ரல் மாதத்தில் அதிக உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளது இந்த ஆண்டுதான் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கோவிட்-19 தொற்றால் தலைநகர் பிரஸ்ஸல்ஸ் மற்றும் மோன்ஸ் ஆகிய நகரங்கள்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
    • பால்டிக் பிராந்திய நாடுகளாக லிதுவேனியா, லாட்வியா மற்றும் எஸ்டோனியா ஆகியவை இணைந்து பால்டிக் குமிழி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளன. இதன் மூலம் இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த மக்கள் சாலை, கடல் மற்றும் வான் மார்க்கமாக இந்த பால்டிக் குமிழியில் உள்ள மூன்று நாடுகளுக்குள் எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி சென்று வரலாம்.
    • ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 10,598 பேருக்கு கோவிட்-19 தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 113 பேர் பலியாகியுள்ளனர். தற்போது வரை இரண்டரை லட்சத்துக்கும் அதிகமானோருக்கு அங்கு கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதன் மூலம் உலகளவில் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, அதிக கோவிட்-19 தொற்றாளர்கள் கொண்ட நாடாக ரஷ்யா மாறியுள்ளது.
    • ஆஸ்திரியாவில் உணவகங்கள் மற்றும் காஃபி ஷாப்புகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் ஒவ்வொரு மேஜைகளுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் மற்றும் ஒரு மேஜையில் அதிகபட்சம் நான்கு பெரியவர்கள் மற்றும் ஒரு குழந்தை மட்டுமே இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
  4. ’கொரோனாவை ஒழித்துவிட்டோம்’ - அதிகாரப்பூர்வமாக அறிவித்த ஸ்லோவேனியா

    உலகிலேயே முதன்முறையாக தங்கள் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று முடிவு வந்துவிட்டதாக ஸ்லோவேனியா அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள இந்த நாட்டின் மக்கள் தொகை 20 லட்சம் மட்டுமே. அந்த நாட்டில் தற்போது வரை 1464 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. 103 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. ஸ்லோவேனியாவின் இந்த அறிவிப்பு காரணமாக ஐரோப்பிய யூனியன் நாடுகளிலிருந்து அந்த நாட்டுக்கு செல்லும் யாரும் தனிப்படுத்தப்பட மாட்டார்கள்.

  5. இன்று நண்பகல் வரை நடந்த சில முக்கிய நிகழ்வுகள்

    • உலக அளவில் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. அதே நேரம் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை நெருங்கி வருகிறது.
    • கொரோனா வைரஸ் முதன்முதலில் பரவத் தொடங்கிய இடமாக கருதப்படும் சீனாவின் வூஹான் நகரில் உள்ள 1.10 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்ததையடுத்து சில வாரங்கள் முன்னர் அங்கு பொது முடக்க நிலை தளர்த்தப்பட்டது. ஆனால் கடந்த சில நாட்களாக அந்த நகரில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியுள்ளதால் சீன அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
    • நியூசிலாந்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக புதிதாக ஒரு கொரோனா தொற்றுகூட கண்டறியப்படாத நிலையில், இன்று ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரம் மற்றும் நியூ செளத்வேல்ஸ் மாகாணத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உணவு விடுதிகள் மற்றும் காஃபி ஷாப்கள் ஆகியவை திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மதுபான விடுதிகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
    • இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3967 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 81,970-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 27,920-ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரானா தொற்றால் 2649 பேர் உயிரிழந்துள்ளனர்.
    • சென்னையில் அதிக கொரோனா தொற்றுகளை கொண்ட மண்டலமாக ராயபுரம் பகுதி உள்ளது. அந்த பகுதியில் மட்டும் 971 கொரோனா தொற்றாளர்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தபடியாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 895 தொற்றாளர்கள் உள்ளனர்.தேனாம் பேட்டை, திரு.வி.க. நகர் ஆகிய இரு இடங்களிலுமே 600க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருக்கின்றனர்.
    • தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இன்று (மே 15) உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
  6. 2020 ஒலிம்பிக் ரத்து: 800 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கிய ஒலிம்பிக் குழு

    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்க இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இதனால் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார விளைவுகளைச் சமாளிக்க 800 மில்லியன் டாலர் நிதியுதவியைச் சர்வதேச ஒலிம்பிக் குழு ஒதுக்கியுள்ளது.

    இதில் 650 மில்லியன் டாலர்கள் ஏற்பாட்டாளர்களுக்கும், மீதமுள்ள 150 மில்லியன் டாலர்கள் சர்வதேச விளையாட்டு கூட்டமைப்புகள் மற்றும் தேசிய ஒலிம்பிக் குழுக்களுக்குக் கடன் வழங்க ஒதுக்கப்பட்டுள்ளது

  7. வுஹான் நகர மக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

    கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் முதன் முதலில் பரவத்தொடங்கிய சீனாவின் வுஹான் நகரத்தில் உள்ள 1.10 கோடி மக்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.

    ஊரடங்கு காரணமாக இங்கு வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்த நிலையில், சமீபத்தில் இங்கு மீண்டும் வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. இதனால் இங்கு அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

  8. கொரோனாவால் களையிழந்த ‘மலைகளின் ராணி’

    தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான மலைகளின் ராணி என்றழைக்கப்படும் நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, ஊரடங்கு உத்தரவால் தற்போது களையிழந்து காணப்படுகிறது

  9. சனிக்கிழமையன்று தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

    தி.மு.கவின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மே 16ஆம் தேதி சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் நடக்குமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்தக் கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குவார்.

    இந்த கொரோனா காலகட்டத்தில் தி.மு.கவின் செயல்பாடுகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படுமென்றும் இந்தக் கூட்டம் காணொளிக் காட்சி மூலமாக நடக்குமென்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

  10. டாஸ்மாக் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

    தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை ஊரடங்கு முடியும் வரை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுக்கு இன்று (மே 15) உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

  11. ஊழியர்கள் பணிநீக்கம் கிடையாது- மாஸ்டர் கார்டு

    அமெரிக்காவில் கடந்த இரண்டு மாதங்களில் கொரோனா காரணமாக கால்வாசி அமெரிக்கர்கள் வேலையிழந்த நிலையில், அந்நாட்டின் மிகப்பெரிய கடன் அட்டை நிறுவனமான மாஸ்டர் கார்டு, இந்த ஆண்டு தங்களது ஊழியர்கள் யாரும் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என உறுதியளித்துள்ளது.

    உலகம் முழுக்க இருபதாயிரம் பேர் மாஸ்டர் கார்டு நிறுவனத்தில் பணியாற்றும் நிலையில்,’’லாக் டவுன் ஆரம்பித்த போது முதல் வேலையாக, இந்த ஆண்டு கொரோனா தொடர்பான பணி நீக்கம் இருக்காது என ஊழியர்களிடம் தெரிவித்தேன்’’ என்கிறார் அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அஜய் பங்கா.

    எங்களது ஊழியர்கள் வேலை குறித்துக் கவலைப்படாமல், தங்களது குடும்பத்தையும், சக ஊழியர்களையும், அவர்களது வாடிக்கையாளர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என அஜய் கூறியுள்ளார்.

  12. கோவையிலிருந்தும் சென்னையிலிருந்தும் ரயில்கள் புறப்பாடு

    கோயம்புத்தூரிலிருந்து ஒரிசாவில் உள்ள பாலாசூருக்கு ஷ்ரமிக் சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமையன்று காலை 9.45 மணி அளவில் புறப்பட்டது.

    இந்த ரயிலில் தமிழக அரசிடம் பதிவுசெய்துகொண்ட 1464 பயணிகள் இருந்தனர். ரயிலில் ஏறுவதற்கு முன்பாக இவர்களுக்கு காய்ச்சல் இருக்கிறதா எனச் சோதனை செய்யப்பட்டது.

    அதேபோல, சென்னை மத்திய ரயில் நிலையத்தில் இருந்து புதுதில்லி செல்லும் ராஜதானி சிறப்பு ரயில் 950 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை காலை 6.35 மணிக்கு புறப்பட்டது.

    இந்தப் பயணிகளுக்கும் கொரோனா தொற்று அறிகுறி இருக்கிறதா என்ற சோதனை நடத்தப்பட்டது.

  13. ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கொரோனாவிலிருந்து மீண்ட புற்றுநோயாளிகள்

    சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் தீவிரமான பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், கொரோனாவாலும் பாதிக்கப்பட்டு குணப்படுத்தப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற வேறு கடுமையான நோய்கள் இல்லாதபட்சத்தில் எளிதில் குணமடைகின்றனர்.ஆனால், வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படும்போது, அவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகின்றன. சில சமயங்களில் உயிரிழப்பும் ஏற்படுகிறது.

    இந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் இதுவரை 22 புற்று நோயாளிகள், சிறுநீரங்கள் பாதிக்கப்பட்டவர்கள் 15 பேர், எச்ஐவி நோயாளிகள் இரண்டு பேர், கல்லீரல் செயல் இழந்தவர்கள் இரண்டு பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைபெற்றுள்ளனர்.

    இவர்களில் புற்றுநோய் ஏற்பட்டவர்களில் 2 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள அனைவரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவு என்பதால், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு அதிகம் எனத் தெரிவித்துள்ள மருத்துவர்கள், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் பெரும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்கிறார்கள்.

    இந்த மருத்துவமனையில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகளில் 60 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் 40 சதவீதம்பேர் உயர் ரத்த அழுத்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்றும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. திருநங்கைகள் மூவரும் கொரோனா தொற்றுக்காக இங்கே சிகிச்சைபெற்றுள்ளனர்.

  14. ஊரடங்கை மீறிய குற்றச்சாட்டில் 4,73,606 பேர் கைது

    தமிழ்நாட்டில் ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 4,73,606 பேர் கைது செய்யப்பட்டு சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் மீது 4,46,633 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அபராதமாக மட்டும் 5.59 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக தமிழகக் காவல்துறை தெரிவித்துள்ளது.

    சென்னையில் நேற்று ஒரு நாளில் மட்டும் 134 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

    இது தொடர்பாக 5 இரு சக்கர வாகனங்கள், 10 ஆட்டோக்கள், 2 இலகு ரக வாகனங்கள் என மொத்தம் 17 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

    போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட சோதனைகளில் 16 இரு சக்கர வாகனங்கள், 691 ஆட்டோக்கள் 707 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

  15. இந்தியாவிற்கு 1 பில்லியன் டாலர் நிதி தொகுப்பு- உலக வங்கி

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக இந்தியாவிற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சமுக பாதுகாப்பு நிதி தொகுப்பை உலக வங்கி அறிவித்துள்ளது.

    இந்திய அரசின் கொரோனா தடுப்பு திட்டங்களை செயல்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும்

  16. கொரோனா தொற்று: ராயபுரம் தொடர்ந்து முதலிடத்தில்

    சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலவாரியாகப் பார்க்கும்போது, ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது.

    இந்த மண்டலத்தில் தற்போது 971 பேர் உள்ளனர். இதற்கு அடுத்த இடத்தில் 895 பேருடன் கோடம்பாக்கம் மண்டலம் இருந்துவருகிறது.

    தேனாம் பேட்டை, திரு.வி.க. நகர் ஆகிய இரு இடங்களிலுமே 600க்கும் மேற்பட்ட நோயாளிகள் இருக்கின்றனர்.

    சோழிங்கநல்லூர் மண்டலத்தில்தான் இருப்பதிலேயே குறைந்த அளவாக 65 பேர் உள்ளனர்.

  17. 31 நாடுகளில் சிக்கியுள்ள 30,000 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்

    கொரோனா காரணமாக 31 நாடுகளில் சிக்கியுள்ள முப்பதாயிரம் இந்தியர்களை மீட்க, 140க்கும் மேற்பட்ட விமானங்களை இந்திய விமானப்போக்குவரத்துதுறை அனுப்பி உள்ளது.

    அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா மற்றும் பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இந்தியர்கள் தாயகம் திரும்ப உள்ளனர்.

    ஏற்கனவே 12 நாடுகளிலிருந்து எட்டாயிரம் இந்தியர்களை மீட்டுள்ளதாக இந்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  18. வந்துகொண்டிருக்கும் செய்தி, இன்று மாலை முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ள நிர்மலா சீதாராமன்

    இந்தியப்பிரதமர் நரேந்திர மோதி அறிவித்த பொருளாதார உதவி தொகுப்பு குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த இரண்டு நாட்களாக வெளியிட்டு வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக இன்றும் மாலை 4 மணிக்கு அவர்செய்தியாளர்களைச்சந்திக்க உள்ளார். அப்போது பல அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  19. இந்தியாவில் அண்மைய தகவல் என்ன?

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 78,003லிருந்து 81,970-ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 3967 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அதேவேளையில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 27,920-ஆக அதிகரித்துள்ளது.

    மேலும் இதுவரை இந்தியாவில் கோவிட-19 நோய்த்தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2649-ஆக உயர்ந்துள்ளது.

  20. ஊரடங்கிற்குப் பிறகு டெல்லியிலிருந்து முதல் பயணிகள் ரயில் சென்னை வந்தது

    ஊரடங்கிற்குப் பிறகு டெல்லியிலிருந்து முதல் முறையாக பயணிகள் ரயில் வியாழக்கிழமை இரவில் சென்னை மத்திய ரயில் நிலையத்தை வந்தடைந்தது. இதில் வந்த பயணிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    கொரோனாவிற்காக விதிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு, தில்லியிலிருந்து 15 சிறப்பு ரயில்கள் நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு அறிவிக்கப்பட்டன. அதன்படி டெல்லியிலிருந்து சென்னைக்கு அறிவிக்கப்பட்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் சென்னை மத்திய ரயில் நிலையத்தை 8 மணி அளவில் வந்தடைந்தது.