நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கையை மண்டலவாரியாகப் பார்க்கும்போது, ராயபுரம் மண்டலம் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. இந்த மண்டலத்தில் தற்போது 971 பேர் உள்ளனர்.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும். மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
பொது முடக்க நிலை காரணமாக திரைத்துறையில் பணியாற்றும் அனைவரும் வேலைவாய்ப்பில்லாமல் தவித்து வருகின்றனர். சமீபத்தில் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், தினசரி ஊதியம் வாங்கி வந்த சினிமா ஊழியர்கள் அன்றாட செலவுகளுக்கே பணம் இன்றி தவித்து வருகின்றனர்.
' என் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை. எனக்கு இரண்டு பொண்ணுங்க இருக்காங்க. அவங்களும் வீட்டு பக்கத்துலேயே 4000,5000 சம்பளத்துக்கு வேலைக்கு போய்ட்டு இருந்தாங்க. எங்க மூணு பேருடைய வருமானத்தை வைச்சு தான் வாடகை, மளிகை சாமான், மருந்துக்குன்னு செலவு பண்ணிட்டு இருந்தோம். இப்போ மூணு மாசமா எங்க மூணு பேருக்குமே வேலை இல்லை.
மூணு மாசமா நாங்க வாய்க்கு ருசியாலாம் சாப்பிடவில்லை. கிடைக்கிறதை சாப்பிடுறோம். யூனியன்ல ஒரு மூட்டை அரிசி கொடுத்தாங்க. அரசாங்கம் கொடுத்த அரிசி, பருப்பை வைச்சு சமாளிச்சிட்டு இருக்கோம். மாச சம்பளம் வந்துச்சுன்னா துணிந்து கடன் கேட்கலாம். மூணு மாசம் சம்பளம் இல்லாம இருக்கும்போது யார்கிட்ட போய் கடன் கேட்க முடியும்? ’’ என தனது வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறார் சினிமாத்துறையில் லைட் மேனாக பணியாற்றும் முருகேசன்.
’’ சினிமாவுல ஹேர்ஸ்டைலிஸ்ட் என்பதைத் தாண்டி வீட்டுப் பக்கத்தில் பியூட்டி பார்லரும் வைச்சிருக்கேன். என்னுடைய கடை வாடகை, வீட்டுச் செலவுன்னு எல்லா தேவைகளையும் என்னுடைய நகையை அடகு வைத்து தான் சமாளிச்சிட்டு வர்றேன். நகையும் காலியானதற்கு பிறகு என்ன பண்ணப் போறேன்னு தெரியலை. 2004ல் என்னுடைய கணவர் இறந்துட்டார். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். சிங்கிள் மதரா இருந்து தான் என் பசங்களை வளர்க்கிறேன். பார்லர்களை திறக்கலாம்னு சொன்னாங்கன்னா எப்படியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு செயல்பட வேண்டும் என AIHBA ( All India Hair and Beauty Association) மூலமா நடக்குற மீட்டிங்கில் நானும் கலந்துக்கிறேன் ’’ என்கிறார் நிரஞ்சனா.
கோவிட்-19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்களை அங்கீகரிக்கப்பட்ட இடத்தில் தகனம் செய்ய வேண்டும் என இலங்கை சுகாதார அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட அறிவிப்பை திரும்ப பெறக் கோரி அந்நாட்டு உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைமுறையில் இருந்துவரும் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு சட்டத்தின்படி, தொற்று நோயினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் இருக்கின்ற நிலையில், கொரோனா வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்ய வேன்டுமென அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வர்த்தமானி அறிவித்தல் மூலம் தனிமைப்படுத்தல் மற்றும் தொற்று நோய் தடுப்பு கட்டளைச்சட்டம் திருத்தி அமைக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்து, கோவிட்-19 வைரஸினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்யவோ அல்லது புதைக்கவோ முடியும் என்ற வகையில் திருத்தி அமைக்குமாறு மனுதாரர்கள் கோரியுள்ளனர்.
கோவிட்-19 வைரஸ் தாக்கம் காரணமாக உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதை விட எரித்தலானது அந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் என்ற விஞ்ஞான சான்றுகள் எதுவும் இதுவரை கிடையாது என மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட அந்த கட்சியின் உறுப்பினர்களினால், சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி தவராசா ஊடாக இந்த மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
''நாங்கள் எப்போது ஊருக்கு சென்று சேர்வோம் என தெரியாது. உயிருடன் ஊர் திரும்புவோமா என தெரியாது. நம்பிக்கை மட்டுமே மிச்சம் இருக்கிறது. நடக்கிறோம்,'' என்கிறார் வட மாநில தொழிலாளியான திரௌபதி. தொடர்ந்து படிக்க...

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் தங்களுடனான ஒத்துழைப்பை அமெரிக்கா வலுப்படுத்த வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது. ஆனால் அதற்கு முதலில் அமெரிக்கா எங்களுடன் இணைந்து பணியாற்ற விரும்ப வேண்டும் எனவும் சீனா கூறியுள்ளது.
கொரோனா வைரஸை தடுக்க சீனா தகுந்த நடவடிக்கைகளை எடுக்கவில்லை என தொடர்ந்து விமர்சித்து வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த வியாழக்கிழமை, சீனாவுடனான ஒட்டுமொத்த உறவையும் துண்டிக்கப் போவதாக எச்சரித்தார். இதனைத் தொடர்ந்தே இவ்வாறான கருத்தை சீனா வெளியிட்டுள்ளது.
முன்னதாக சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் வீகர் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு அந்நாடு தண்டிக்கப்பட வேண்டும் எனக்கோரி அமெரிக்க செனட் சபை தீர்மானம் நிறைவேற்றியிருப்பதை தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமடையலாம் என கூறப்படுகிறது.

சேமித்த 25,000 ரூபாய் பணத்தில் நிவாரண பொருட்களை வழங்கிய 9 வயது சிறுமி புதுச்சேரியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருபவர் வெள்ளையன் .இவருடைய மனைவி வித்யா. வீட்டிலேயே தையல் வேலை செய்து வருகின்றார். இவர்களுக்கு தியா என்று 9 வயதில் மகள் இருக்கிறார். புதுச்சேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 3ஆம் வகுப்பு படித்து வருகிறார். தனது படிப்பிற்காக மடிக்கணினி வாங்க வேண்டும் என்று நோக்கத்தில் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுக்கும் சிறு, சிறு தொகையை தியா கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சேமித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பல்வேறு தொழிலாளர்களின் குடும்பத்தினர் சிரமத்திற்கு ஆளாகியிருப்பதைச் செய்திகள் மற்றும் உறவினர்கள் மூலம் தியா தெரிந்துகொண்டார். இதனையடுத்து அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற தனது எண்ணத்தை தந்தையிடம் தியா தெரிவித்தார். இதனால் தனது மகளின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக தியா உண்டியலில் சேமித்து வைத்த ரூ.24,347 பணத்தை பயன்படுத்த வெள்ளையன் முடிவெடுத்துள்ளார்.
இதனையடுத்து, வேலையின்றி தவித்த கைத்தறி நெசவாளர்கள், நாதஸ்வர கலைஞர்கள், பிறமாநில தொழிலாளர்கள், ஓட்டுநர்கள், திருமண மண்டபங்களில் துப்புரவு பணி செய்துவரும் பணியாளர்கள் உள்ளிட்ட நலிவுற்ற குடும்பத்தினர் 57 பேரைத் தேர்வு செய்து அவர்களது குடும்பத்திற்குத் தேவையான உணவு பொருட்களான அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி கொடுத்துள்ளார்.
இது பற்றி தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர் அருண் சிறுமி தியா மற்றும் அவரது பெற்றோரை அழைத்துப் பாராட்டினார். சிறுமி தியாவின் உதவும் மனபான்பையை மேலும் பாராட்டும் விதமாக மாவட்ட ஆட்சியர் தியாவை அவரது இருக்கையில் அமர வைத்தார்.

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 வைரஸால் 384 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் அந்நாட்டில் கோவிட்-19 வைரஸால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33,998-ஆக அதிகரித்துள்ளது.
இதுதவிர நேற்று மட்டும் 1,33,784 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் நான்காவது முறையாக ஒரே நாளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கொரொனா பரிசோதனைகளை பிரிட்டன் செய்து முடித்துள்ளது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நியூயார்க் நகரில், பொது முடக்க நிலை வரும் மே 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதே நேரம் நியூயார்க் மாகாணத்தில் உள்ள 5 பிராந்தியங்களில் மட்டும் முடக்க நிலை சற்று தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே அந்த மாகாணத்தில் உள்ள திரையரங்குகள் வரும் செப்டம்பர் மாதம் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியவில்லை
தமிழ்நாட்டில் இன்று மேலும் 434 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஆகவே இதுவரை தமிழ்நாட்டில் இந்நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,108ஆக உயர்ந்துள்ளது.
இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 385 பேர். மாலத்தீவிலிருந்து வந்த 6 பேருக்கும் மகாராஷ்டிராவில் இருந்து வந்த 40 பேருக்கும் குஜராத்தில் இருந்து வந்த 2 பேருக்கும் கர்நாடகத்தில் இருந்து வந்த ஒருவருக்கும் இந்நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்ட 385 பேரில் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டும் 309 பேர். இதன் மூலம், சென்னையில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,946ஆக உயர்ந்துள்ளது..
மேலும், செங்கல்பட்டில் 20 பேரும், காஞ்சிபுரத்தில் 11 பேரும் மதுரையில் 6 பேரும் திருவள்ளூரில் 21 பேரும் இன்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 71ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 359 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 2,599ஆக உள்ளது.
தற்போது கோயம்புத்தூர், ஈரோடு, நாமக்கல், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா நோயாளிகள் யாரும் இல்லை.
தற்போது தமிழ்நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளின் எண்ணிக்கை 7,435ஆக உள்ளது. இன்று 11,672 பேருக்கு சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 3,03,104 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் மதுக் கடைகளைத் திறக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், மாநிலத்தில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என மதுக்கடைகளை நடத்திவரும் அரசு நிறுவனமான தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளை விதித்தது. அந்த நிபந்தனைகள் மீறப்பட்டதாகக் கூறி, மதுக்கடைகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், இதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை நீக்கியது.
இதனால் மே 16ஆம் தேதி முதல் மதுக்கடைகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னைப் பெருநகரக் காவல்துறை பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மதுக்கடைகள் இயங்காது. மால்கள், வணிக வளாகங்கள், நோய்க் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் உள்ள மதுக் கடைகள் இயங்காது.
மதுக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். ஒரு நாளைக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும். கடைக்கு வருபவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்துவர வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 793 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரம், அங்கு ஒரே நாளில் 1,164 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
அண்மைய சில தினங்களாக சிங்கப்பூரில் அன்றாடம் புதிதாக வைரஸ் தொற்றியோரின் எண்ணிக்கையைவிட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இன்று பதிவான நோய்த்தொற்று சம்பவங்களை அடுத்து அங்கு வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,891ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 23 விழுக்காடு நோயாளிகள் குணமடைந்துள்ளனர்.
இதற்கிடையே சிங்கப்பூரில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ளதாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பான சில புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி அங்கு நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் அமல்படுத்தியது முதல் இத்தகைய வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் தாங்களாகவே முன்வந்து குடும்ப வன்முறைக்கு அதிகம் ஆளாகக்கூடிய அபாயத்தில் இருப்பவர்களுக்கு உதவி வருவதாக சிங்கப்பூர் உள்ளூர் ஊடகம் ஒன்று தெரிவிக்கிறது.
மே மாதம் 6ம் தேதியுடன் முடிவடைந்த ஒருமாத காலத்தில் குடும்ப வன்முறைகள் தொடர்பாக 476 புகார்களைப் பெற்றதாகவும், இது வழக்கத்தைவிட ஒப்பீட்டளவில் 22 விழுக்காடு அதிகம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. "காயம் விளைவிப்பது, வன்முறையில் ஈடுபடுவது, தாக்குதல் நடத்துவது, தாக்குதல் மேற்கொள்ளப்போவதாக மிரட்டுவது ஆகியவற்றுடன் தவறாக ஒருவரை அடைத்து வைப்பது போன்றவை தொடர்பாக புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை அறிக்கை தெரிவிக்கிறது," என அந்த ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Qadir Lashar
பாகிஸ்தானின் கராச்சி நகரில் கோவிட்-19 வைரஸால் உயிரிழந்தவரின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க மறுத்த மருத்துவமனையை ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்தவரின் உறவினர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் நடத்தப்பட்ட அந்த மருத்துவமனை வார்டில், ஏற்கனவே 37 கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.
‘’இறந்தவரின் உடலை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என மருத்துவனைக்கு அருகிலேயே இறந்தவரின் உறவினர்கள் கூடி இருந்தனர். கொரோனா வைரஸால் இறந்தவரின் உடலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்காமல் ஒப்படைக்க முடியாது என்பதால், அதற்கு நாங்கள் மறுப்பு தெரிவித்தோம்.’’ என அந்த மருத்துவமனை ஊழியர்கள் கூறியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த, அரசு அளிக்க வேண்டிய அனுமதிகள் எளிதில் வழங்கப்படுமென தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையைச் சேர்ந்தவர்கள், இந்திய தொழில் கூட்டமைப்பை சேர்ந்த தொழிலதிபர்கள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், தொழில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு ஏதுவாக நான்கு திட்டங்களை முன்வைத்தார். அதன்படி, 1. தொழில் நிறுவனங்களுக்கு தேவையான உதவிகளை செய்து தற்போதைய பாதிப்பிலிருந்து மீட்டெடுத்தல்; 2. புதிய முதலீடுகளை ஈர்த்தல்; 3. அரசு ஒப்புதல் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்குதல்; 4. கடன் வழங்கும் நடைமுறைகளை எளிதாக்கி மக்களுக்கு தேவையான பணப்புழக்கத்தை அதிகரித்தல் ஆகியவற்றை முதல்வர் முன்வைத்து பேசினார்.
மேலும், தொழில்துறையினர் முதலமைச்சரை சந்தித்துப் பேச விரும்பினால் 24 மணி நேரத்திற்குள் அதற்கு நேரம் ஒதுக்கித் தரப்படும் என்றும் அதே நாளில் தலைமைச் செயலர் போன்ற மூத்த அதிகாரிகள் தொழில்துறையினரை சந்தித்துப் பேசுவார்கள் என்றும் முதல்வர் தெரிவித்தார்.
மலேசியாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 36 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,855 ஆக அதிகரித்துள்ளது.
பலி எண்ணிக்கை 112ஆக நீடிக்கும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 88 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒட்டுமொத்த நோயாளிகளில் இதுவரை 79.3 விழுக்காட்டினர் குணமடைந்துள்ளதாக மலேசிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
'கோவிட் 19' நோய்த்தொற்றிய பலருக்கு அதற்கான அறிகுறிகள் வெளிப்படையாக தென்படாமல் இருப்பது கவலை தருவதாக மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். இதனால் சமூகத்தொற்றுப் பரவலுக்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
"வைரஸ் தொற்றிய பலரிடம் அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும், அறிகுறிகள் தென்படுவோரின் உடலில் எந்தளவுக்கு வைரஸ் தாக்கம் உள்ளதோ அதே அளவுக்கு இவர்களது உடலிலும் வைரஸ் பரவியிருக்கும். மேலும் அறிகுறிகள் தென்படாதோர் மூலமாகவும் வைரஸ் மற்றவர்களுக்குப் பரவும்.
ஐஸ்லாந்து நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினருக்குப் பரிசோதனை நடத்தப்பட்டதில் வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டவர்களில் 50 % விழுக்காட்டினருக்கு எந்தவித அறிகுறியும் தெரியவில்லை என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் சுகாதாரப் பாதுகாப்பு மையத்தின் நோய் எதிர்ப்பு நிபுணரான கிகி கிரோன்வல் தெரிவித்துள்ளார்." என்று குறிப்பிட்டுள்ள நூர் ஹிஷாம்,சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றிலும் இதேபோன்ற தகவல்கள் தெரியவந்ததாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிகுறிகள் தென்படாத 'கோவிட் 19' நோயாளிகள் மூலம் வைரஸ் பரவல் வெகுவாக அதிகரிக்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர், தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் வரை புதிய மாற்றப்பட்ட வாழ்க்கை முறையைக் கடைபிடித்தாக வேண்டியது அவசியம் எனக் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
உலகிலேயே விஸ்கி வகை மதுபானம் அதிகம் விற்பனையாகும் நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவின் விஸ்கி விற்பனை அளவானது, அமெரிக்காவின் விற்பனை அளவை விட மூன்று மடங்கு அதிகம். உலகில் விற்கப்படும் விஸ்கியில் இரண்டில் ஒரு பாட்டில் இந்தியாவில்தான் விற்பனையாகிறது.தொடர்ந்து படிக்க....
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையுடன் இணைந்த கொரோனா மருத்துவமனைக்கு சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் 3 ரோபோ இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கோவிட்-19 வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் வடகொரியா தவித்து வருவதாக கூறப்படுவதற்கு பதிலடி அளிக்கும் வகையில் , தலைநகர் பியாங்யாங்கில் மக்கள் வெளியிடங்களில் நடமாடுவது போன்ற காட்சிகளை அந்நாட்டின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.
கடந்த மே 13-ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நிமிடம் நீளமுள்ள இரண்டு காணொளிகள், வடகொரிய அரசு ஊடகமான DPRK -வின் இணையதளத்தில் பகிரப்பட்டிருந்தன.
இந்த காணொளிகளில் மக்கள் பலசரக்கு கடைகள், பூங்காக்கள் ஆகியவற்றுக்கு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் மக்கள் அனைவரும் முகமூடிகள் அணிந்திருந்ததை பார்க்க முடிந்தது.
ஆனால் கோவிட்-19 தொற்றை பற்றி நேரடியாக குறிப்பிடாமல், கடைகளில் போதுமான உணவுப் பொருட்கள் கையிருப்பு இருப்பதாக கடை ஊழியர் ஒருவர் கூறுவது போலவும், வாரத்திற்கு மூன்று முறை பொருட்கள் வாங்க கடைக்கு வருவதாக வாடிக்கையாளர் ஒருவர் கூறுவது போலவும் அந்த காணொளிகளில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தற்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை என வடகொரியா கூறி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த சில செய்திகளில், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் வடகொரியா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 35 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். நேற்றுவரை 33 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி இருந்தனர். இந்த நிலையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவர் இன்று குணமடைந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இதனால் சேலம் மாவட்டம் நோய் தோற்று இல்லாத மாவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
"சேலம் மாவட்டம் நோய்த்தொற்று இல்லாத மாவட்டமாக மாறியுள்ளபோதும், வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து சேலத்திற்கு வருபவர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறும். குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், டெல்லி, மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, நோய் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் தான் வீடுகளுக்கு அனுப்பப்படுவர்" என சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.