நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
இந்தியாவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37,776ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மார்ச் மாதத்தின் மத்திய பகுதியில் அறிவிக்கப்பட்ட முடக்க நிலையை பகுதியளவு தளர்த்துவதாக போர்ச்சுகல் நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
சுமார் ஒரு கோடி மக்கள் தொகை கொண்ட போர்ச்சுகலில் கடந்த மார்ச் 18ஆம் தேதி முடக்க நிலை அறிவிக்கப்பட்டபோது அந்த நாட்டில் கோவிட்-19 நோய்த்தொற்றால் இரண்டு பேர் மட்டுமே உயிரிழந்திருந்தனர். இப்போது அந்த எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
நாளை (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வரும் முடக்க நிலை தளர்த்த அறிவிப்பின் மூலம், அந்த நாட்டில் உள்ள சிறு கடைகள் இயக்குவதற்கும், மக்களின் அத்தியாவசிய பயணத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் வணிக வளாகங்கள், பொதுப் போக்குவரத்து உள்ளிட்டவை வழக்கம்போல் செயல்பட அனுமதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உலகின் அனைத்து நாடுகளைப் போலவே, இந்தியாவும் பொது முடக்கநிலை முறையை பின்பற்றியுள்ளது.
மார்ச் 25 முதல் நாட்டில் முடக்கநிலை அமலில் உள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் அரசு, தொற்று பரவாமல் தடுப்பதற்காக தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது.
இந்திய அரசு ஏப்ரல் 2ம் தேதி ஆரோக்கிய சேது செயலியை அறிமுகப்படுத்தியது.
இந்த செயலியின் உதவியால், அருகிலுள்ள கோவிட் 19 நோயாளிகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

பட மூலாதாரம், Getty Images
மலேசியாவில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்பான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதே தவிர, முழுமையாக அந்த ஆணை விலக்கிக் கொள்ளப்படவில்லை என சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் சுட்டிக்காட்டி உள்ளார்.
எனவே பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வந்ததாக பொதுமக்கள் கருதி விடக்கூடாது என அவர் அறிவுறுத்தி உள்ளார்.
"தனி நபர்களோ அல்லது நிறுவனங்களோ நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை எனில் மீண்டும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துவதை தவிர வேறு வழியில்லை. கோவிட்-19 நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை நாம் சில கட்டுப்பாடுகளைப் பின்பற்றியே ஆக வேண்டும்.
"நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மற்றும் இதர சில கட்டுப்பாடுகள் காரணமாக நோய்த் தொற்றுப் பரவல் குறையும். எனவே பொது மக்கள் சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும். சுவீடன், தைவான் போன்ற நாடுகளில் இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். காரணம் அங்குள்ள மக்கள் சமூக ஒழுங்குடன் செயல்படுகிறார்கள்," என்று டாக்டர் நூர் ஹிஷாம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கிடையே மலேசியாவில் கடந்த இரு தினங்களாக கொரோனா வைரஸ் தொற்றியோர் எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளது. கடந்த சில தினங்களாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்திலேயே பதிவாகி வந்தது.
இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) புதிதாக 103 பேரும், இன்று 122 பேரும் புது நோயாளிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 6,298ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 4,413 பேர் சிகிச்சைக்குப் பின் கோவிட்-19 நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளனர். இது ஒட்டுமொத்த நோயாளிகளின் எண்ணிக்கையில் 70 விழுக்காடாகும். இதுவரை 105 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 266 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் அதிகபட்சமாக 203 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,023ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட ஒருவரையும் சேர்த்து, மாநிலம் முழுவதும் இதுவரை 30 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40,263ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதிதாக 2,487 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழந்த 83 பேரையும் சேர்த்து, இந்தியாவில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,306ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 10,887 பேர் கோவிட்-19 நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.25 காசும், டீசல் லிட்டருக்கு ரூ.2.50 காசுகளும் உயர்கிறது என்றும் வரி உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது என்றும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை மாநகராட்சியில் நாளை முதல் கட்டுமானப் பணிகள் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம், சமூக விலகலை பின்பற்றி கட்டுமான பணிகளை தொடங்கலாம்.
எனினும், நோய் கட்டுப்பாட்டு பகுதி, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியில்லை என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரிசோதனைகளை அதிகரிக்கும் நோக்கத்தில் புதிதாக 63 லட்சம் ஆர்.டி. - பி.சி.ஆர். பரிசோதனை கருவிகளை வாங்குவதற்கு மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
“வரும் மாதங்களில் இந்தியா முழுவதும் 53 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உள்ளதா என்று பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை தவிர்த்து கூடுதலாக 10 லட்சம் கருவிகள் கையிருப்புக்காக வாங்கப்படவுள்ளன” என்று மத்திய சுகாதாரத்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
தென் கொரியா, ஜெர்மனி, அமெரிக்கா மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிடமிருந்து இவை கொள்முதல் செய்யப்பட உள்ளது. பரிசோதனை கருவிகளின் முதல் தொகுப்பு வரும் மே 10ஆம் தேதி இந்தியா வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்ட நாடுகளில் நோய்த்தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்து வரும் வேளையில் சில நாடுகளில் சூழ்நிலை நேரெதிராக உள்ளது.
ரஷ்யாவில் இன்று மட்டும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து ரஷ்யாவில் ஒரே நாளில் பதிவாகும் அதிகபட்ச பாதிப்பு இதுவே ஆகும்.
குறிப்பாக, ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் அதிவேகமான பரவி வரும் வைரஸ் பரவலை எதிர்கொள்ள அந்த நகரம் முழுவதும் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மாஸ்கோவில் மட்டும் ஒரு நாளைக்கு சுமார் 40,000 பேருக்கு நோய்த்தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது
ரஷ்யாவின் பிரதமருக்கும், அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவின்படி, ரஷ்யாவில் 1,34,687 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது; 1,280 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் கடந்த மார்ச் 18ஆம் தேதியிலிருந்து இதுவரையிலான காலகட்டத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மிக குறைந்த தினசரி உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
அதாவது, கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக ஸ்பெயினில் கடந்த 24 மணிநேரத்தில் 164 பேர் உயிரிழந்துள்ளனர். தினசரி அடிப்படையில் பார்க்கும்போது கடந்த ஆறு வாரங்களில் இது மிகவும் குறைந்த எண்ணிக்கையாகும்.
கொரோனா வைரஸ் பரவல் தொடங்கியதிலிருந்து ஸ்பெயினில் இதுவரை 25,264 பேர் அந்த நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், நோய்த்தொற்று பரவல் குறைந்து வருவதை அடுத்து, நாடு முழுவதும் அமலிலுள்ள முடக்க நிலையில் சில தளர்வுகளை ஸ்பெயின் அரசு அறிவித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மத்திய ஆயுத காவல் படையின் (சி.ஆர்.பி.எப்) மூத்த அதிகாரியின் பணியாளர் ஒருவருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து டெல்லியிலுள்ள அதன் தலைமை அலுவலகம் வரும் செவ்வாய்க்கிழமை காலை வரை மூடப்படும் என்று சி.ஆர்.பி.எஃப்பின் தலைமை இயக்குநர் அறிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தாய்லாந்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு அமலில் உள்ள முடக்க நிலையை தளர்த்தும் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள சந்தைகள், முடித்திருந்தகங்கள், சில விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்டவை திறக்கப்பட்டுள்ளன.
மேலும், கடுமையான கூட்ட விலக்க விதிமுறைகள், பிளாஸ்டிக் திரை மறைப்புகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகளுடன் உணவகங்கள் செயல்படவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்கு இந்த தளர்வுகள் அமலில் இருக்கும் எனவும், இடைப்பட்ட காலத்தில் நோய்த்தொற்று பரவலின் தீவிரத்தை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.
தாய்லாந்தை பொறுத்தவரை, கொரோனா வைரஸால் இதுவரை 2,969 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; 54 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், AFP
சிங்கப்பூரில் புதிதாக 657 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, மொத்த எண்ணிக்கை 18,205ஆக அதிகரித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள விடுதிகளில் தங்கி பணியாற்றும் வெளிநாட்டு தொழிலாளர்கள் இடையே நோய்த்தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் தெரிவித்துள்ளது.
இன்று புதிதாக உயிரிழப்பு எதுவும் அறிவிக்கப்படவில்லை. எனவே, இதுவரை சிங்கப்பூரில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக தொடர்கிறது.
சிங்கப்பூரில் கட்டுமானம் உள்ளிட்ட துறைகளில் குறைந்த ஊதியத்தில் சுமார் மூன்று லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். பெரும்பாலும் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளை சேர்ந்த அவர்கள் தங்கி வரும் விடுதிகளில் கடந்த மாதத்தின் மத்திய பகுதியில் இருந்து கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவல் தீவிரமடைந்துள்ளது.

பட மூலாதாரம், EPA
இரானில் கோவிட்-19 நோய்த்தொற்றின் காரணமாக மார்ச் மாதத்தின் மத்திய பகுதியிலிருந்து மூடப்பட்டுள்ள சில மசூதிகள் நாளை திறக்கப்பட உள்ளன.
புனித ரமலான் மாதத்தை ஒட்டி, இரானில் மசூதிகளுக்கு சென்று தொழுகையில் ஈடுபட முடியாத மக்கள் பொது வெளியில் தத்தமது கார்களில் இருந்தவாறு தொழுகையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நோய்த்தொற்று கட்டுப்பாட்டில் உள்ள நாட்டின் 132 பகுதிகளில் உள்ள மசூதிகள் வரும் திங்கட்கிழமை முதல் திறக்கப்பட உள்ளதாக இரான் அரசு தெரிவித்துள்ளது.
வரும் 16ஆம் தேதி முதல் இரானில் பள்ளிகளை திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டு அரசு மேலும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளிலேயே கொரோனா வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்ட இரானில் இதுவரை 96,448 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், 6,156 பேர் உயிரிழந்துள்ளனர்.

பட மூலாதாரம், Reuters

பட மூலாதாரம், EPA
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல பகுதிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால், விலங்குகளுக்கு மனிதர்கள் நடமாட்டம் இல்லாத நகரில் வலம் வர ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
நகர் பகுதிகளில் உள்ள விலங்குகள் தெருக்களை உல்லாசமாக சுற்றி திரிவதைப்பார்த்து மனிதர்களும் மகிழ்கின்றனர். இது தவிர பூங்காக்கள் மற்றும் தேசிய விலங்குகள் சரணாலயத்தில் உள்ள விலங்குகளும், சுற்றுலா பயணிகள் வருகை இல்லாததால் மகிழ்ச்சியாக இருப்பதாக பூங்கா கண்காணிப்பாளர்கள் சிலர் கூறுகின்றனர்.
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிமாநிலங்களில் அல்லது வெளி நாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள், தங்களது சொந்த ஊர் திரும்ப விரும்பினால்,http://nonresidenttamil.orgஎன்ற இணைய படிவம் வாயிலாக பதிவு செய்யலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீங்கள் வெளிமாநிலங்களில் சிக்கி இருக்கிறீர்கள் என்றால் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்தியாவில் இன்று மட்டும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான கொரோனா நோயாளிகள், குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்புவதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பலரும் தொடர்ந்து குணமடையும் நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
கொரோனா தொற்று பாதிப்பு இரட்டிப்பாகும் விகிதம் குறைந்து வருவதாகவும் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார். கடந்த இரு வாரங்களில் இரட்டிப்பாகும் விகிதம் 10.5 நாட்கள் என்று இருந்தால், இன்றைய நிலவரப்படி அது சுமார் 12 நாட்களாகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதோடு உலகிலேயே இந்தியாவில்தான் 3.2 சதவீதம் என்ற குறைந்த இறப்பு விகிதம் இருப்பதாகவும் அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்தார்
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு