நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
கொரோனா வைரஸ் தொடர்பாக சர்வதேச, இந்திய மற்றும் தமிழக அளவில் நடக்கும் முக்கிய தகவல்களை ஒளி, ஒலி, எழுத்து மற்றும் வரைகலை ஆகியவடிவங்களில் பிபிசி தமிழ் தொகுத்து வழங்குகிறது.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
தனது குடிமக்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனையை இலவசமாக செய்யப் போவதாக அமெரிக்க மாகாணமான லாஸ் ஏஞ்சலஸ் அறிவித்துள்ளது. பரிசோதனை செய்து கொள்ள விரும்புபவர்கள், இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த பரிசோதனைகளில், கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள், கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு வந்தது.

பட மூலாதாரம், Getty Images
தமிழகம், இந்தியா மற்றும் உலக நாடுகளில் கோவிட்-19 தொற்றின் நிலவரம் என்ன என்பதை காணொளி வடிவில் காணலாம்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,000-ஐ கடந்துள்ளது.
அங்கு இதுவரை 10,498 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரு நாள் மட்டும் 583 பேருக்கு தொற்று உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் மும்பையில் மட்டும் 7000க்கும் மேலானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த மாநிலத்தில் இதுவரை கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்ட 400க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
குழந்தைகள் உணவு கேட்கும் போதெல்லாம், சமையல் பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் வெறும் கற்களை போட்டு சமையல் செய்வதைப் போல தன் குழந்தைகளின் முன்னர் அவர் பாவனை செய்து வந்துள்ளார் ஒரு ஏழைத் தாய்.
உள்நாட்டு போரால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள யேமெனில், முதன்முறையாக இருவர் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். ஏற்கனவே மோசமான சுகாதார வசதிகளை கொண்டிருக்கும் அந்த நாட்டில், கொரோனா வைரஸ் ஒரு பேரழிவை ஏற்படுத்தும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.
அரபு நாடுகளிலேயே ஏழை நாடாக அறியப்படும் யேமெனில், கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. மோசமான சுகாதார வசதிகள் காரணமாக காலரா நோயால் அந்த நாடு முன்னர் பெரிதும் பாதிக்கப்பட்டது.
யேமெனில் கொரோனா வைரஸ் பரிசோதனை எண்ணிக்கை மிக குறைவாக இருப்பதால், உண்மையான கொரொனா தொற்று எண்ணிக்கையை உறுதி செய்வது அந்த நாட்டில் கடும் சிக்கலாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் பொது முடக்க நிலையை கடைபிடித்து வருவதால், இந்த ஆண்டு உலகளாவிய கரியமில வாயு உமிழ்வு 8 விழுக்காடு குறையும் என தெரிய வந்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு நிலவிய பொருளாதார மந்த நிலையின் போது குறைந்த கரியமில வாயு உமிழ்வு வெளியேற்றத்தை விட, இது ஆறு மடங்கு அதிகம் என சர்வதேச ஆற்றல் முகமை கணக்கிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவு இந்த ஆண்டுதான் கரியமிய வாயு உமிழ்வில் சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த முகமை தெரிவித்துள்ளது. பயணம் மற்றும் வர்த்தகத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மாசுபாட்டை குறைத்துள்ளன.
ஆனால் இது கொண்டாடப்பட வேண்டிய மாற்றம் அல்ல எனவும் அந்த முகமை கூறியுள்ளது. கரியமில வாயு உமிழ்வின் அளவு குறைவது பொருளாதார நடவடிக்கைகளை தடை செய்வதன் மூலம் நடக்க கூடாது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இலங்கையில் கோவிட் 19 வைரஸ் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649-ஆக அதிகரித்துள்ளது. 7 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதுடன், 139 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அத்துடன், 503 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்குடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்ததால் , அந்த வைரஸ் பரவல் ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. எனினும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதல் வைரஸ் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை மீண்டும் வெகுவாக அதிகரித்துள்ளது.
இலங்கையில் ஒரு மாத காலம் அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு கடந்த 20ஆம் தேதி முதல் தளர்த்தப்பட்டிருந்தது. 20ஆம் தேதி முதல் இன்று வரையிலான 9 நாட்களில் மட்டும் 348 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் அதிகளவிலானோர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது. இலங்கையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட காலம் வரை 271 கொரோனா தொற்றாளர்கள் மாத்திரமே பதிவாகியிருந்த நிலையில், ஊரடங்கு தளர்த்தப்பட்ட காலத்தில் 348 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன் மூலம் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னர்தான் அதிக அளவில் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவின் தரவுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.
கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துவிட்டாலும், இன்னும் சில காலலத்துக்கு மலேசியர்கள் வெளிநாட்டுப் பயணத்தை தவிர்த்தல் நல்லது என அரசு அறிவுறுத்தி உள்ளது.
பொது நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை விலக்கிக் கொள்ளப்படும் பட்சத்தில் பொதுமக்கள் தேவையற்ற உள்நாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பதும் நல்லது என மலேசிய சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் கூறினார்.
இன்று புத்ராஜெயாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டின் எல்லைகளை மூடுவதென்பது வைரஸ் பரவலை தடுப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கை என்றார். "நாம் எப்போது நாட்டின் எல்லைகளை மூடினோம் என்பது கவனிக்கத்தக்க, முக்கியமான விஷயம். எல்லைகளை மூடியதால்தான் நிலைமை கட்டுக்குள் வந்துள்ளது. தற்போது வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்பியவர்களில் 154 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசியர்கள் உடனடியாக வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டால் நாம் இதுவரை மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குரிய பலன் கிடைக்காமல் போய்விடலாம். எனவேதான் நாட்டின் எல்லைகளை மூடுவது மிக முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது," என்றார் நூர் ஹிஷாம்.

பட மூலாதாரம், AFP
தமிழகத்தில் இன்று மட்டும் 161 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
ஒரே நாளில் தமிழகத்தில் அதிகம் பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள எண்ணிக்கை இதுதான்.
புதிதாக தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டவர்களில் சென்னையில் மட்டும் 138 பேர் உள்ளனர்.
விரிவாகப் படிக்க: சென்னையில் 900ஐத் தாண்டிய கோவிட்-19 நோயாளிகள் எண்ணிக்கை
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட நோயாளிகள் யாரும் இல்லாத காரணத்தால், வரும் மே 4ஆம் தேதி முதல் அங்குள்ள அரசு அலுவலகங்கள் செயல்படுமென அம்மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்திருக்கிறார்.
நீலகிரி மாவட்டத்தில் 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் முழுமையாக குணமடைந்துவிட்ட நிலையில், கடந்த சில நாட்களில் அங்கு புதிதாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.
இதையடுத்து, அங்கு அரசு அலுவலகங்களைச் செயல்படச் செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. வரும் மே 3ஆம் தேதியோடு மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு முடிவுக்கு வரும் நிலையில், மே 4ஆம் தேதி முதல் அரசு அலுவலகங்கள் முழு அளவு ஊழியர்களுடன்செயல்படுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இன்றைய நண்பகல் நிலவரப்படி, சிங்கப்பூரில் மேலும் 528 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு, பாதிக்கப்பட்டோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கையானது 16,169 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு எண்ணிக்கை அதிகரித்த போதிலும், புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து ஏழாவது நாளாக ஆயிரத்துக்கும் கீழ் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
தங்கு விடுதிகளில் வசிக்கும் மொத்தமுள்ள சுமார் 3,23,000 வெளிநாட்டு ஊழியர்களில், இதுவரை 13,354 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மொத்த எண்ணிக்கையில் சுமார் 4.1 விழுக்காடாகும்.
ஏப்ரல் 29ஆம் தேதி நிலவரப்படி சிங்கப்பூரில் 1,188 பேர் கோவிட் 19 நோயிலிருந்து முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதுவரை 18 பேர் பலியாகியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இலங்கையிலுள்ள தொல்பொருள் மதிப்பு மிக்க புராதன ஓவியங்கள் அழியும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
கொரோனா அச்சுறுத்தல் நாட்டில் தலைதூக்கியுள்ள பின்னணியில், இந்த தொல்பொருள் பெறுமதிமிக்க ஓவியங்களும் அழிவடையும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன.
விரிவாகப் படிக்க - கொரோனா தொற்று ஊரடங்கு: சேதமாகும் அபாயத்தில் புராதன ஓவியங்கள்

மேலதிக தகவகல்களுக்கு: இந்தியாவில் கொரோனா வைரஸ்: அதிகமாக இறக்கும் ஆண்கள்
வியாழக்கிழமை மாலை நிலவரப்படி இந்தியாவில் இதுவரை மொத்தம் 33,050 பேருக்கு கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் லவ் அகர்வால் இன்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1718 பேருக்கு தொற்று இருப்பது புதிதாக உறுதியாகியுள்ளது.
இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1074ஆக உயர்ந்துள்ளது.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு