கொரோனா நோய்த்தொற்று பரவும் சூழலில், குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளைப் புதுச்சேரி மத்தியச் சிறையில் அடைப்பதற்கு முன்பு, கைதிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து, 15 நாட்கள் தனிமைப்படுத்தப் புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரி தற்காலிக சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் காலாப்பட்டு பகுதியில் மத்திய சிறைச்சாலை இயங்கி வருகிறது. இங்கே தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் உட்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தியா முழுவதும் சிறு குற்ற வழக்குகளில் சிறையில் உள்ள கைதிகளை பிணையில் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில், புதுச்சேரி காலாப்பட்டு மத்தியச் சிறையிலிருந்த 80க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் பிணையில் விடுதலை செய்தனர். மேலும், சிறையிலுள்ள கைதிகளுக்கு மருத்துவக்குழு பரிந்துரையின் அடிப்படையில் கொரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் புதிய குற்றவாளிகளுக்கு நோய்த் தொற்று இருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, அவர்கள் மூலமாக நோய்த் தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது. இதையொட்டி, மாநில அரசின் ஒப்புதலுடன் புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தற்காலிக சிறைச்சாலையாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.
எனவே குற்ற வழக்கில் கைது செய்யப்படுபவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள இந்த சிறையில் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு பிறகே புதுச்சேரி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்படுவார்கள். இதற்காகப் பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்து குறிப்பிட்ட அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், பள்ளி மற்றும் கல்லூரி வளாகம் முழுவதும் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்காக வருகிறது.
"புதிதாகக் கைது செய்யப்படும் விசாரணை கைதிகளை கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்காக 15 நாட்கள் தனிமைப்படுத்தி வைப்பதற்காக மட்டுமே இந்த பள்ளி மற்றும் கல்லூரியில் தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளனர்.