நன்றி நேயர்களே!
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சனிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்து 90 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்த நேரலை தொகுப்பு இத்துடன் முடிகிறது.
நாளை காலை மீண்டும் வேறொரு நேரலை தொடங்கும்.
மேலதிக செய்திகளை பிபிசி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் உள்ள பிற கட்டுரைகளுக்கான இணைப்புகளில் படிக்கலாம்.
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்கள், இறந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கையை வரைபட வடிவில் பிபிசி வழங்குகிறது.
பிரிட்டனில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000-ஐ கடந்துள்ளது.
அந்நாட்டு அரசு வெளியிட்ட சமீபத்திய எண்ணிக்கையின்படி 20,319 பேர் அங்கு இறந்துள்ளனர்.
வெள்ளியன்று மட்டும் அங்கு 813 பேர் இறந்துள்ளனர். பிரிட்டன் தவிர அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இதுவரை 20,000க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.
சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய ஐந்து நகரங்களில் மட்டும் நாளை முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வருகிறது.
கொரோனா வைரஸ் நிலவரம் குறித்த இன்றைய செய்தியாளர் சந்திப்பின்போது அதற்கான காரணத்தை தமிழக சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
சென்னை, கோவை, மதுரை ஆகிய ஊர்களில் நான்கு நாட்களும், சேலம், திருப்பூர் ஆகிய ஊர்களில் மூன்று நாட்களும் முழு ஊரடங்கு அமலாகும். இதன்போது மருந்து கடைகள் திறக்க மட்டுமே அனுமதியுண்டு.
கொரோனா வைரஸ் தடுப்புக்காக உலகெங்கும் அமலாக்கப்பட்டுள்ள ஊரடங்கை தளர்த்தும் விதத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் நோய் எதிர்ப்பு சக்தி உடையவர்கள் என்றும் கொரோனா வைரஸ் ஆபத்து அதிகம் இல்லாதவர்கள் என்றோ உள்நாட்டு நுழைவு அனுமதி (விசா) கொடுப்பதை உலக நாடுகள் தவிர்க்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒருவேளை அவ்வாறு வெளிநாட்டவர்கள் அனுமதிக்கப்பட்டால், அப்படி அனுமதிக்கும் நாடுகளில் வைரஸ் பரவல் அதிகரிக்கக்கூடும் என்று அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கொரோனாத் தொற்றால் அதிகம் பாதிப்படைந்த நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் சனிக்கிழமை நிலவரப்படி, இதுவரை 22,902 பேர் உயிரிழந்துள்ளனர். சனிக்கிழமை ஒருநாள் மட்டும் 378 பேர் உயிரிழந்துள்ளனர். முந்தைய நாளின் இறந்தவர்களின் எண்ணிக்கையான 367 என்பதைக் காட்டிலும் இது சற்று அதிகம்.
கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,23,759 ஆக தற்போது உயந்துள்ளது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவில் இன்று 66 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை மொத்தம் 681 பேர் மொத்தம் உயிரிழந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 74.588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெர்மனியில் இரண்டாவது நாளாக புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அந்நாட்டில் 5,500 பேர் இறந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,52,438 ஆக உயர்ந்துள்ளது.
இரானில் நேற்று உயிரிழந்த 67 பேரைச் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக 5,650 பேர் உயிரிழந்துள்ளனர். 89,328 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் இன்று புதிதாக 618 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து அங்கு நோயாளிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 12,693ஆக அதிகரித்துள்ளது.
எனினும் நோய்த் தொற்றியதாக இன்று அடையாளம் காணப்பட்டவர்களில் ஏழு பேர் மட்டுமே சிங்கப்பூரர்கள் ஆவர். மற்ற அனைவருமே தங்குவிடுதிகளில் வசிக்கும் அந்நியத் தொழிலாளர்கள் ஆவர்.
கடந்த ஐந்து தினங்களில் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தது இதுவே முதல் முறை என சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்நாட்டில் உள்ள 3 லட்சத்து 23 ஆயிரம் அந்நியத் தொழிலாளர்களில் சுமார் 3 விழுக்காட்டினர், அதாவது 9,929 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
சிங்கப்பூரில் நோய்த் தொற்றியோரில் இதுவரை 952 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை வைரஸ் தொற்று 12 பேரை பலி வாங்கியுள்ளது.
இதற்கிடையே கோவிட்-19 தகவல்களைக் கசியவிட்டதாக சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் கைதாகி உள்ளார். அவரை அந்த அமைச்சு தற்காலிகமாக பணிநீக்கம் செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றியோர் தொடர்பான புள்ளிவிவரங்களை சிங்கப்பூர் சுகாதார அமைச்சு தான் அதிகாரப்பூர்வமாக தினமும் வெளியிட்டு வருகிறது.
இந்நிலையில் அக்குறிப்பிட்ட அதிகாரி அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கும் முன்பே சில தகவல்களை தகவல்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கைதான அந்நபர் 35 வயது பெண்மணி என்று சிங்கப்பூர் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மதுரையில் ஆண்டுதோறும் நடைபெறும் தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா, கொரோனா பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.பொது மக்களின் பங்கேற்பை குறைப்பதற்காக இந்த நிகழ்வு ரத்துசெய்யப்பட்டாலும், கோயிலில் நடக்கும் சிறப்பு பூசைகளை இணையதளத்தில் காணவசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மே 8ம் தேதி நடைபெறும் மண்டூக மகிரிசிக்கு மோட்சம் அளிக்கும் நிகழ்வை தமிழக அரசின் அறநிலையத்துறையின் இணையதளத்தில் பார்க்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா எதிரொலியாக மதுரையில் ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் சித்திரை திருவிழா ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மலேசியாவில்கொரோனாவைரஸ்தொற்று பலி எண்ணிக்கை 100ஐ நெருங்கும் நிலையில் இன்று ஒரே நாளில் புதிதாக 51 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதே வேளையில் 99 கோவிட்-19 நோயாளிகள் சிகிச்சைக்குப் பின் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் இருவர் உயிரிழந்ததை அடுத்து, நோய்த் தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 98ஆக அதிகரித்துள்ளது.
"இதுவரை நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட 5,742பேரில்சிகிச்சைக்குப்பின்3,762 பேர்குணமடைந்துள்ளனர். இது ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 65.5 விழுக்காடாகும். தற்போது மருத்துவமனையில் 1,882 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 36 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்," என்று மனிதவள சுகாதார அமைச்சின் பொது ஆணையர் டாக்டர் நூர் ஹிஷாம் இன்று செய்தியாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
"வைரஸ் தொற்று இல்லாத பகுதிகள் என அறிவிக்கப்பட்ட இடங்களில் பொது மக்கள் இப்போதே இந்த ஆணையை மீறுகின்றனர். கொரோனா வைரஸ் நமக்கு பரஸ்பர எதிரி. மக்களின் அலட்சியம் தான் அதனுடைய கூட்டாளி. எனவே சமூக இடைவெளி உள்ளிட்ட அனைத்தையும் பின்பற்றினால் தான் அந்த கண்ணுக்குத் தெரியாத எதிரியை வெற்றிகொள்ள முடியும்," என்றார் டாக்டர் நூர் ஹிஷாம்.
கொரோனா வைரஸ் குறித்த சர்வதேச செய்திகளை காணொளி வடிவில் இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1821 ஆக அதிகரித்துள்ளது.
இன்று, சனிக்கிழமை, மேலும் 66 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
மாவாட்ட வாரியான விவரங்கள்: தமிழகத்தில் கொரோனா வைரஸ்: மேலும் 66 பேர் பாதிப்பு; எண்ணிக்கை 1821 ஆனது
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 24,942 ஆக உள்ளது என்று சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 779ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 5,120 பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 18,953 ஆக உள்ளது.
ஜப்பானின் நாகசாகி துறைமுகத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ள கோஸ்டா அட்லாண்டிகா எனும் சொகுசுக் கப்பலில் புதிதாக சுமார் 60 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது, சனிக்கிழமை அன்று உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் அந்தக் கப்பலில் இருப்பவர்களில் கொரோனா தொற்று உண்டாகி உள்ளவர்களின் எண்ணிக்கை சுமார் 150 ஆகியுள்ளது.
பயணிகள் யாரும் இல்லாத அந்தக் கப்பலில் 623 பணியாளர்கள் மட்டுமே தற்போது உள்ளனர்.
சீனாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த சொகுசு கப்பல் வைரஸ் தொற்று பரவல் உள்ளது கண்டு பிடிக்கப்பட்ட பின்பு, ஜனவரி மாதம் ஜப்பானுக்கு திருப்பி விடப்பட்டது.
ஜப்பானில் சுமார் 12 ஆயிரத்து 800 பேர் வரை கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 345 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இலங்கை அரசாங்கம் வெளிநாடுகளில் அமலாகியுள்ள ஊரடங்குகளில் சிக்கிக்கொண்டவர்களை கடந்த சில தினங்களாக அழைத்து வருகின்றது.
இந்தியாவின் மும்பை நகரில் இருந்த 163 மாணவர்கள் இன்று பிற்பகல் விசேட விமானத்தின் மூலம் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதற்கு முன்னர் நேபாளத் தலைநகர் காத்மண்டு பகுதியில் இருந்த 76 மாணவர்கள் விசேட விமானத்தின் மூலம் அழைத்து வரப்பட்டிருந்தனர்.
அத்துடன், நேற்று முன்தினம் 101 மாணவர்கள் இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டிருந்தனர்.
தனிமைப்படுத்தலின் பின்னரே வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்படும் மாணவர்கள் தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் சென்னை,கோவை,மதுரை ஆகிய நகரங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு என்பதால் காய்கறி மற்றும் மளிகை கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.
முழு ஊரடங்கை காரணமாக கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
காய்கறி மார்க்கெட் பகுதிகளில் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதால் மக்கள் பலர் நெடுந்தூரம் நடந்து சென்று பொருட்களை வாங்கிச் செல்வதை பல இடங்களில் பார்க்கமுடிகிறது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமலாகியுள்ள ஊரடங்கு ஏற்படுத்தியுள்ள பொருளாதார பிரச்சனைகள் குறித்து இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன் பிபிசிக்கு பேட்டியளித்தார்.
"பெருந்தொற்றுப் பரவலுக்குப் பிறகு மக்கள் எங்கெல்லாம் உயிருடன் இருந்தார்களோ அங்கெல்லாம்தான் வளம் உண்டானது என்பதை ஸ்பேனிஷ் ஃபுளூ பரவல் (இன்ஃபுளுவென்சா தொற்றுப்பரவல்) நமக்கு உணர்த்தியது. எனவே, மே 3ஆம் தேதிக்கு பிறகு நாம் கவனமாகவும், பாதிப்பின் அளவின் அடிப்படையில் இடங்களை வகைப்படுத்தியும் ஊரடங்கை விலக்க வேண்டும்."
"அதிக பாதிப்புள்ள இடங்களைக் கண்காணித்தல், பணியிடங்களில் சமூக விலகளைக் கடைபிடித்தல் மற்றும் பொருளாதாரத்தின் மீது அதிக தாக்கத்தை செலுத்தக்கூடிய துறைகளை மீண்டும் இயக்கத் தொடங்குவது ஆகிய மூன்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும்," என்று அவர் அப்பேட்டியில் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகி மீண்டவர்கள் உடலில் கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பொருட்கள் (antibodies) உண்டாகும் என்பதற்கும் அவர்கள் மீண்டும் வைரஸ் தொற்றுக்குள்ளாக மாட்டார்கள் என்பதற்கும் எந்த விதமான ஆதாரமும் இதுவரை இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகும் ஒருவரின் உடலில் கொரோனா வைரஸை எதிர்ப்பதற்கான நோய் எதிர்ப்பொருட்கள் உண்டாகும் என்றும் அது மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று உண்டாவதை தடுக்கும் என்றும் இதுவரை கூறப்பட்டது.
உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட் 19 தொற்று, சீனாவுடன் நில எல்லையை பகிர்ந்திருக்கும் வியட்நாம் நாட்டில் மட்டும் பெரும் பாதிப்பை இதுவரை ஏற்படுத்தவில்லை.
வியட்நாமின் மக்கள் தொகை சுமார் 9.7 கோடி ஆகும். அங்கு இதுவரை 268 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக அமெரிக்காவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்திருக்கும் நிலையில் மூன்று அமெரிக்க மாகாணங்களில் பகுதி அளவில் ஊரடங்கைத் தளர்த்தி உள்ளன.
ஜார்ஜியா மற்றும் ஒக்லஹாமா ஆகிய மாநிலங்களில் முடித்திருத்து நிலையங்கள் மற்றும் அழகு நிலையங்கள் மீண்டும் திறக்கப்படும்.
உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டை அலாஸ்கா மாகாணம் நீக்கியுள்ளது.
இங்கு செல்பவர்கள் சமூக விலகலைக் கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.