You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: அமெரிக்காவில் உயிரிழப்புகள் 50 ஆயிரத்தை கடந்தது

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி உலகளவில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை கடந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மதுரையில் மீறப்படும் சமூக விலகல் கட்டுப்பாடுகள்

    நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பயண அனுமதி சீட்டு (vehicle e-passes) வாங்க மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூடியுள்ள மக்கள் கூட்டம் இது.

    இந்நிலையில், அங்கு சமூக விலகல் கட்டுப்பாடுகள் மீறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அதிக கூட்டம் கூடியதால், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நுழைவாயில் மூடப்பட்டது.

  2. 'ஏழைகளுக்கு போதுமான உதவியை இந்திய அரசு செய்யவில்லை'

    இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் மத்திய அரசு இன்னும் அதிகம் செய்லபட வேண்டும் என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் அபிஜித் பேனர்ஜி பிபிசியிடம் தெரிவித்தார்.

    "நாம் போதுமான அளவிற்குகூட இன்னும் எதையும் செய்யவில்லை" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, 1.7 லட்சம் கோடி ரூபாய் நிவாரணத் தொகையை இந்திய அரசு அறிவித்தது.

    ஏழைகளுக்கு வங்கிக்கணக்கில் பணம் செலுத்தவும் அவர்களின் உணவு பாதுகாப்புக்கும் இதில் பெரு்மபாலான தொகை ஒதுக்கப்பட்டது.

    கோவிட் 19 நோய் பரவலை கட்டுப்படுத்த சரியான நேரத்தில் இந்தியா ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தாலும், அது முடிவில்லை என்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் வரை இந்த நோய் நம்மிடையே நீண்ட காலம் இருக்கும் என்று தெரிவித்த அபிஜித் பேனர்ஜி, தடுப்பூசி இப்போதைக்கு தயாராகும் நிலையில் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

    இந்திய - அமெரிக்க பொருளாதார நிபுணரான அபிஜித் பேனர்ஜி, 2019ஆம் ஆண்டு தனது மனைவியும் சக ஆய்வாளருமான எஸ்தர் டஃபலோ உடன் நோபல் பரிசு பெற்றார்.

  3. ரமலான் தொழுகைக்கு இஸ்லாமிய நாடுகளில் கட்டுப்பாடு

    நாளை, சனிக்கிழமை முதல் பாகிஸ்தானில் ரமலான் மாதம் தொடங்கவுள்ளதையொட்டி, ஒரு மாதமாக மூடப்பட்டிருந்த மசூதிகளை தொழுகைக்காகத் திறக்க அந்நாட்டு அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளாக கிருமிநாசினியைப் பயன்படுத்துவது, ஒருவருக்கொருவர் ஒரு மீட்டர் இடைவெளிவிட்டுத் தொழுவது உள்ளிட்டவற்றுக்கு இஸ்லாமிய மதகுருக்கள் ஒப்புக்கொண்டுள்ளனர் என்று பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது.

    இஸ்லாம் மதம் தோன்றிய, இன்றைய சௌதி அரேபியா உள்ளிட்ட பெரும்பாலான முஸ்லிம் நாடுகள் பொது தொழுகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளன.

    இஸ்லாமியர்களின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதினாவில் பொதுமக்கள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று சௌதி அரசு கூறியுள்ளது.

    அவர்கள் வீட்டிலேயே தொழுகை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    மசூதிகளை மூடுவது மற்றும் இரவு நேர ஊரடங்கு ஆகியன மக்கள் பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என் எகிப்து அதிபர் ஃபடா அல்-சிசி கூறியுள்ளார்.

    ஊரடங்கை மீறுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

    காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஐக்கிய அரபு அமீரகம் ஊரடங்கைத் தளர்த்துகிறது.

  4. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அர்ச்சகர் நிலவரம்

    மதுரை மேலமாசி வீதியில் வசித்துவந்த பெண்மணி ஒருவருக்கு நேற்று கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது. 72 வயதான அவருடைய இரண்டு மகன்களும் மீனாட்சி அம்மன் கோயிலில் பணியாற்றுபவர்கள் என்பதால், கோவில் அர்ச்சகர்களுக்கு கொரோனா என செய்தி பரவியது.

  5. 'கிருமிநாசினி ஊசி' - கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும் டிரம்ப் யோசனை

    சூரிய வெளிச்சமும், கிருமிநாசினியும், வைரஸ் தொற்றை கொல்லும் என்று அதிகாரி ஒருவர் கூறியதையடுத்து, கோவிட்-19 சிகிச்சைக்காக கிருமிநாசினியை ஊசி மூலம் உடலுக்குள் செலுத்தும் வாய்ப்பை பரிந்துரைத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.

    கிருமிநாசினியை உடலுக்குள் செலுத்திவிட்டு, பின்னர் நோயாளிகளின் உடல் மீது புறஊதா கதிர்களை பாய்ச்சலாம் என்றும் டிரம்ப் குறிப்பிட்டதை தொடர்ந்து, அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.

    ஆனால் அதிபரின் இந்த யோசனை உயிரிழப்பில்தான் முடியும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இது பொறுப்பற்ற பேச்சு என்பதோடு, மிகவும் அபாயகரமானது என்று ஒரு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

  6. இந்தியர்களுக்கு BCG தடுப்பூசி போட்டதால் கொரோனா வராதா?

    சிஜி தடுப்பூசி போடப்பட்டிருந்தால் கொரோனா வைரஸ் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை என இதற்கு ஆதாரமாக அமெரிக்க கல்லூரி ஒன்றில் வெளியான ஆய்வையும் சுட்டிக்காட்டி சிரியா, இந்தியா என பல நாடுகளில் இப்போதும் ஒரு தகவல் உலவுகிறது. ஆனால் அந்த ஆய்வு சொல்வதென்ன? இந்த தகவல்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது?

  7. வெறிச்சோடி காணப்படும் முஸ்லிம்களின் புனிதத்தளம்

    இஸ்லாமியர்கள் நோண்பு அனுசரிக்கும் ரமலான் மாதம் தொடங்கவுள்ள நிலையில், இஸ்லாமியர்களின் புனிதத்தளங்களில் ஒன்றான ஜெருசலேம் வெறிச்சோடி காணப்படுகிறது.

    பொதுவாக ரமலான் அன்று மட்டுமில்லாமல் இஸ்லியாமர்கள் நோன்பு இருக்கும் மாதம் முழுவதுமே இந்த புனிதத்தளங்கள் மக்கள் கூட்டத்தில் மூழ்கியிருக்கும்.

    தற்போது கொரோனா தொற்று காரணமாக இவை வெறிச்சோடியுள்ளன.

    "இஸ்லாத்தின் வரலாற்றில் இது மிகவும் சோகமான தருணம்" என்று ஜெருசலேத்தின் அல்-அக்சா மசூதியின் இயக்குநர் மற்றும் தலைவர் ஷேக் அல் -கிஸ்வானி தெரிவித்தார்

  8. "இந்தியத் தொழிலாளர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" - சிங்கப்பூர் பிரதமர்

    சிங்கப்பூரர்களை எப்படி பார்த்துக் கொள்வோமா அதே போல இந்தியாவில் இருந்து வந்து பணிபுரியும் தொழிலாளர்களை பார்த்துக் கொள்வோம் என சிங்கப்பூர் பிரதமர் லீ சென், இந்தியப் பிரதமர் மோதிக்கு உத்தரவாதம் அளித்துள்ளார்.

    கோவிட் 19 சூழல் குறித்து இருநாட்டுத் தலைவர்களும் தொலைபேசி உரையாடலில் கலந்தாலோசித்தனர்.

    அப்போது இந்தியாவில் சிக்கியிருந்த சிங்கப்பூரர்களை மீட்க உதவியதற்கு அந்நாட்டு பிரதமர் லீ, இந்தியப் பிரதமர் மோதிக்கு நன்றி தெரிவித்தார்.

    மேலும், இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை செய்யும் பணியாளர்கள் தனிப்பட்ட வகையில் பல தியாகங்களை செய்திருப்பதாகவும், நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவி உள்ளதாகவும் பிரதமர் லீ குறிப்பிட்டார். அப்படிப்பட்ட பணியாளர்களை எங்கள் சொந்த மக்கள் போல பார்த்துக் கொள்வோம் என்றார் அவர்.

  9. 'சீனா வெளியிட்ட தரவுகளை உலக சுகாதார நிறுவனம் நம்பிவிட்டது'

    சீனா வெளியிட்ட அதிகாரப்பூர்வ தரவுகளை அதிகம் சார்ந்தே உலக சுகாதார நிறுவனம் இயங்கியதாகவும், அதனால் உலகளவில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், கனடா நாட்டின் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஒரு முக்கிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

    சரியான தரவுகளை கொடுக்காத வரலாறு சீனாவுக்கு உண்டு. ஏற்கனவே அந்த அனுபவம் இருக்கையில், அதனை உலக சுகாதார நிறுவனம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று சிபிசி தொலைக்காட்சியிடம் பேசிய மருத்துவர் டேவிட் நேய்லர் தெரிவித்தார்.

    "இதனால் நமக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் தாமதாமாகின. அதற்காக நாம் நிச்சயம் வருந்துவோம். மறுசீறாய்வு செய்யும்போது இது தெரிய வரும்" என்று அவர் தெரிவித்தார்.

    ஆனாலும், ஆரம்பகட்ட நடவடிக்கைகளால், எந்த அளவிற்கு தற்போதைய சூழலை மாற்றி இருக்க முடியும் என தெரியவில்லை என்று குறிப்பிட்ட அவர், உலக சுகாதார நிறுவத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

  10. கபசுர குடிநீர் - தமிழக அரசு விளக்கம்

    தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்புக் குடிநீரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு முடிவுசெய்துள்ளது.

  11. அரபு நாடுகளின் நிலை என்ன?

    கத்தார், சௌதி அரேபியா,ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளில் என்ன நிலவரம் என்பதை விளக்கும் பிபிசி தமிழின் சிறப்புக் காணொளி.

  12. இந்தியாவில் 23,000-ஐ கடந்த கோவிட்-19 எண்ணிக்கை

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23,077 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெள்ளிக்கிழமை காலை தெரிவித்துள்ளது.

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 718 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 4,748 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது 17,610 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடந்த 24 மணிநேரத்தில் 37 பேர் இறந்துள்ளனர் என்றும், 1,684 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது என்றும் இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  13. பிபிசி தமிழின் சிறப்புப் பக்கம்

    நேற்று, ஏப்ரல் 23 வரை, உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதை வரைபடத் தரவுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

    இந்தப் பக்கம் தினசரி அடிப்படையில் புதுப்பிக்கப்படும்.

  14. இந்திய மாநிலங்கள் - சில முக்கிய தகவல்கள்

    • இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. அவர்களில் 4,000-க்கும் அதிகமானவர்கள் தலைநகரான மும்பையில் உள்ளனர்.
    • கோவிட்-19 தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கையில் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் குஜராத் மற்றும் டெல்லி உள்ளன.
    • முதல் மூன்று இடங்களில் உள்ள மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் மட்டும் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 50% பேர் இருக்கின்றனர்.
    • கொரோனா வைரஸ் பரவல் மூன்றாம் கட்டத்தை (சமூகப் பரவல் நிலை) அடைந்துள்ளதா என அறிய, அதிக எண்ணிக்கையிலான மக்களுடன் தொடர்புள்ள தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களைப் பரிசோதனைக்கு உட்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளது.
    • உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் கொரோனா தொற்று இருந்த நபர் ஒருவரை தனிமைப்படுத்த முயன்ற சுகாதார ஊழியர்கள் ஏப்ரல் 15 அன்று கும்பல் ஒன்றால் தாக்கப்பட்டனர். அந்த கும்பலில் ஐவருக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது தெரியவந்துள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்த 73 காவல் துறையினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
    • பெங்களூருவில் ஹொங்கசந்த்ரா குடிசைப் பகுதியில் 10 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதால், அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாகக் கருதப்படும் தாராவியில் சுமார் 200 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.
  15. அமெரிக்கா - பெருந்தொற்றும் பெருந்தொகையும்

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் உண்டாகியுள்ள பொருளாதார இழப்புகளை சரிசெய்ய 484 பில்லியன் (48,400 கோடி) அமெரிக்க டாலர் மதிப்புள்ள நிவாரணத் தொகுப்புக்கு அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரஸ், வியாழன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இது அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ள, கோவிட்-19 உண்டாக்கிய பொருளாதார பாதிப்புகளுக்கு உதவிகள் வழங்கும் நான்காவது மசோதாவாகும்.

  16. சீனாவிடம் கேள்வி எழுப்பத் தயங்கும் மேற்குலக நாடுகள், கார்டன் கொரேரா, பாதுகாப்புப் பிரிவு செய்தியாளர்

    கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை சீனா தொடர்ந்து குறைத்துக் காட்டிவருவதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகிறார்கள்.

    எனினும், இது குறித்து சீனாவிடம் நேரடியாகக் கேள்வி கேட்க ஐரோப்பிய நாடுகள் தயங்குவதாக பிபிசிக்கு தகவல் கிடைத்துள்ளது.

    தாங்கள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் எதையும் மூடி மறைக்கவில்லை என்று சீனா தொடர்ந்து கூறி வருகிறது.

    ஏப்ரல் 17 அன்று, வைரஸ் பரவல் தொடங்கிய வுஹான் நகரில் நடந்த உயிரிழப்புகளின் எண்ணிக்கையை, முதலில் தெரிவித்த அளவைவிட சுமார் 50% அளவுக்கு உயர்த்திக்காட்டியது சீன அரசு.

    முக்கியமான மருத்துவக் கருவிகளுக்காக பல நாடுகள் சீனாவையே சார்ந்துள்ளதாலும், தற்போதைய பரவலின்போது என்ன நடக்கிறது என்பதையும், வரும் காலங்களில் இதைப் போன்ற பெருந்தொற்று பரவினால் எவ்வாறு கையாள்வது என்பதையும் அறிய சீனா கொடுக்கும் தகவல்கள் மிகவும் முக்கியம் என்பதால் பிற நாடுகள் சீனாவிடம் கேள்வி எழுப்பத் தயங்குகின்றன.

    கொரோனா வைரஸ் பரவலின் தொடக்கம் மற்றும் ஆரம்பகட்ட பாதிப்புகளை வெளிப்படையாகக் கூறுவதைவிடவும், தாங்கள் வெற்றிகரமாக கோவிட்-19 பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தியது குறித்து வெளிப்படுத்தவே சீன அதிகாரிகள் விரும்புவதாக மேற்கத்திய நாடுகள் நினைக்கின்றன.

  17. நேற்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள்

    • கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய இடமாக கருதப்படும் சீனாவில் தொடர்ந்து ஆறாவது நாளாக கொரோனாவால் யாரும் பலியாகவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்தது.
    • அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறும் அனுமதிக்கான (கிரீன் கார்டு) ஒப்புதல் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார்.
    • தாய்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு மாத குழந்தை குணமடைந்தது.
    • இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை வியாழன்று 21,000-ஐ கடந்தது.
    • தமிழகத்தில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும், சில தொழிற்சாலைகளை படிப்படியாக அனுமதிப்பது குறித்தும் தொழிலதிபர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
    • கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா, இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி வைக்கவுள்ளதாக இந்திய ஊடகங்களில் வெளியான செய்திகளை இலங்கை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.
    • மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மத்திய அரசு நேற்று பிறப்பித்த அவசர சட்டத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார்.
  18. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

    தமிழகம், இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் இன்றைய நிலவரம் குறித்து அறிய இந்தப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.