You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் புதிதாக 54 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,83,120ஆக உள்ளது என ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவிக்கிறது. அமெரிக்காவில் மட்டும் இதுவரை 46 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்திய அரசு தோல்வியடைந்துவிட்டது - சோனியா காந்தி

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தொடங்கிய பின் முதன்முதலாக அது குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

    தங்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைகள் குறித்து இந்திய அரசாங்கம், போதிய நடவடிக்கை எடுக்காமல் , பகுதி அளவே கேட்டு நடந்துகொள்வதாக அவர் விமர்சித்துள்ளார்.

    இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு தான் பலமுறை எழுதிய கடிதங்களை குறிப்பிட்டு சோனியாகாந்தி இவ்வாறு கூறியுள்ளார்.

    கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்திய அரசு அமலாக்கியுள்ள முடக்க நிலையால் உண்டாகும் பாதிப்புகளை குறைப்பதில் கனிவு மற்றும் முன்னெச்சரிக்கை ஆகியவற்றை காட்டுவதில் இந்திய அரசு தோல்வியடைந்து விட்டதாக சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

    தற்போதைய முடக்க நிலை முடிவுக்கு வர உள்ள மே மூன்றாம் தேதிக்கு பிறகு நிலைமையை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து மத்திய அரசுக்கு தெளிவான திட்டம் இருப்பது போல தெரியவில்லை என்றும் மே மூன்றாம் தேதிக்கு பிறகும் தற்போது உள்ளது போலவே முடக்க நிலை நீடித்தால் அதன் விளைவுகள் இன்னும் மோசமாக இருக்கும் என்றும் சோனியா காந்தி எச்சரித்துள்ளார்.

  2. "அலாதி அன்பிருந்தால் அனாதை யாருமில்லை" - கமல்ஹாசனின் கொரோனா விழிப்புணர்வு பாடல்

    கொரோனா தொற்று தொடர்பாக பல்வேறு நடிகர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் பாடல்கள், குறும்படங்கள் மற்றும் வீடியோக்களை பல்வேறு பிரபலங்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் விழிப்புணர்வு பாடல் ஒன்றை எழுதி, இயக்கியிருக்கிறார்.

    திங்க் மியூசிக் சார்பில் உருவாகியுள்ள 'அறிவும், அன்பும்' எனத் தொடங்கும் இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்தப் பாடல் மாஸ்டர் லிடியனுடைய இசையுடன் தொடங்குகிறது.

    பாடகர்கள் பாம்பே ஜெயஶ்ரீ, சித்ஶ்ரீராம், ஷங்கர் மகாதேவன், இசையமைப்பாளர்கள் யுவன் சங்கர் ராஜா, அனிருத், தேவி ஶ்ரீ பிரசாத், திரைப்பட நட்சத்திரங்களான ஆண்ட்ரியா, சித்தார்த், பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவ், ஸ்ருதிஹாசன், உள்ளிட்டோர் இணைந்து இந்தப் பாடலை பாடியிருக்கின்றனர்.

  3. கொரோனா வைரஸ் - சில முக்கிய தகவல்கள்

    • ஜப்பானில் பச்சிளம் குழந்தைகளை பராமரிக்கும் மையம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர் ஒருவருக்கு சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த மையத்தில் பராமரிக்கப்பட்டு வந்த குழந்தைகளுக்கு பரிசோதனை நடத்தியதில், எட்டு குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது உறுது செய்யப்பட்டுள்ளது.
    • கொரோனாவை சிறப்பாக கட்டுப்படுத்திய நாடாக பார்க்கப்படும் நியூசிலாந்தில், நேற்று இருவர் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த இருவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாவர். கொரோனா கட்டுக்குள் வந்ததை தொடர்ந்து, அடுத்த வாரம் முதல் அந்நாட்டில் ஊரடங்கு நிலை தளர்த்தப்பட உள்ளது. தற்போது வரை அந்நாட்டில் கொரோனாவால் 16 பேர் பலியாகியுள்ளனர்.
    • ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவ முக்கிய காரணமாக கூறப்படும் ரூபி பிரின்சஸ் சொகுசுக் கப்பல், சிட்னி நகரிலிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு செல்ல உள்ளது. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றில் 10 சதவிகிதம் இந்த கப்பலோடு தொடர்புடையவர்களாவர். தற்போது வரை இந்த கப்பலில் இருந்தவர்கள் 700 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 25 பேர் மரணமடைந்துள்ளனர்.
    • வியட்நாமில் கொரோனா தொற்றின் தீவிரம் குறைந்துவருவதை தொடர்ந்து அந்நாட்டு தலைநகரான ஹனோய் மற்றும் வர்த்தக தலைநகரான ஹோ ச்சீ மின் ஆகியவற்றில் தனிநபர் இடைவெளி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. ஆனால் இந்த நகரங்களை தவிர்த்து நாட்டின் மற்ற இடங்களில் இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கிறது.
  4. கொரோனா காரணமாக சுத்தமான கங்கை

    இந்தியாவின் புனித நதியாக கருதப்படும் கங்கை, ஊரடங்கு உத்தரவு காரணமாக தற்போது என்ன நிலையில் இருக்கிறது தெரியுமா?

  5. தர்மபுரியில் முதல் கொரோனா தொற்று?

    இதுவரை கொரோனா தொற்று ஏற்படாத தமிழகத்தின் தர்மபுரி மாவட்டத்தில் நேற்று ஒருவருக்கு இத்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், அவருக்கான பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 1,629ஆக உள்ளது.

  6. தென் கொரியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று

    தென்கொரியாவில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து ஒற்றை இலக்கமாக இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அந்நாட்டில் 8 பேருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டது.

    இதில் நால்வர் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். பிப்ரவரி மாத இறுதிகளில் அந்நாட்டின் தினசரி கொரோனா தொற்று 900-க்கும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    தற்போது வரை அந்நாட்டில் 10.702 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் சுமார் எட்டாயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

  7. கொரோனா பாதிப்பால் நிகழும் நன்மைகள் என்ன?

    கொரோனா உலகம் முழுவதும் மக்களை வீட்டிலேயே முடக்கி வருகிறது. போர் நிகழ்கிற பகுதிகளில், பதற்றமான பகுதிகளில் ஊரடங்கு எப்படி இருக்கும் என்பது மக்களுக்கு தெரியும், தற்போது குறைந்தது 100 கோடிக்கும் அதிகமான மக்களும் அதை உணர்ந்திருக்கிறார்கள்.

    சரி, கொரோனாவால் உலகம் அடைந்த நன்மை என்ன?

  8. சீனாவில் ஆறாவது நாளாக கொரோனாவால் யாரும் பலியாகவில்லை

    கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய இடமாக கருதப்படும் சீனாவில் தொடர்ந்து ஆறாவது நாளாக கொரோனாவால் யாரும் பலியாகவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

    மேலும் நேற்று 10 பேருக்கு மட்டுமே புதிதாக கொரோனா உறுதிசெய்யப்பட்டதாகவும் அந்நாடு கூறியுள்ளது. இதில் ஆறு பேர் வெளிநாடுகளிலிருந்து சீனா வந்தவர்களாவர்.

    கடந்த சில நாட்களாக அறிகுறியற்ற கொரோனா தொற்று உடையவர்களின் எண்ணிக்கையை, கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையில் சீனா சேர்ப்பதில்லை.

    இதன்படி அந்நாட்டில் நேற்று அறிகுறியற்ற கொரோனா நோயாளிகள் 27 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.

    இந்த தரவுகளை பார்க்கும் போது சீனாவில் கொரோனா தாக்கம் மிக குறைந்த அளவில் இருப்பது போல தோற்றமளிக்கிறது. ஆனால் சீனாவில் கொரோனா மரணங்கள் குறித்த உண்மைத்தன்மையை உறுதி செய்வது கடினமாக இருப்பதாகவும், கொரோனா வைரஸ் தங்கள் நாட்டில் கட்டுக்குள் இருப்பது போல காட்டுவதற்காக பலி எண்ணிக்கையை அந்த நாடு குறைத்துக் கூற அதிகம் வாய்ப்பிருப்பதாகவும் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

  9. கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக எந்த ராணுவத்தையும் கோரவில்லை - இலங்கை

    இந்தியா மாத்திரமன்றி எந்தவொரு நாட்டிலிருந்தும் ராணுவத்தை தாம் ஒருபோதும் கோரவில்லை என இலங்கை பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

    கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக இந்தியா, இலங்கைக்கு ராணுவத்தை அனுப்பி வைக்கவுள்ளதாக நேற்றைய தினம் இந்திய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.

    இதற்கு பதிலளித்த பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன, தாம் எந்தவொரு நாட்டு ராணுவத்தின் ஒத்துழைப்புக்களையும் நாடவில்லை என கூறியுள்ளார்.

    கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் இலங்கை பாதுகாப்பு பிரிவு ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

  10. அறிகுறிகள் இல்லாத கொரோனா தொற்று பாதிப்பு - என்ன சிக்கல்?

    கொரோனா பிரச்சனை முடிந்து எப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்புவது என மக்கள் கலங்கும் நிலையில் கொரோனா விவகாரத்தில் Asymptomatic எனும் புதிய சிக்கல் குடைச்சலைக் கொடுக்கத் துவங்கியுள்ளது. அது என்ன Asymptomatic? - விரிவான விளக்கம்.

  11. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,000த்தை கடந்தது

    இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 21,393 ஆக அதிகரித்துள்ளது என இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வியாழக்கிழமை காலை தெரிவித்துள்ளது.

    உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 681 ஆக அதிகரித்துள்ளது.

    இதுவரை இந்தியா முழுவதும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட 4,257 பேர் குணமடைந்துள்ளனர். 16,454 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  12. உலக வங்கி அறிக்கை

    கொரோனா வைரஸ் பரவலை தடுக்க இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு, உள்நாட்டிலேயே புலம்பெயர்ந்துள்ள சுமார் 4 கோடி மக்களை பாதித்துள்ளது என்று உலக வங்கி கூறியுள்ளது.

    ஊரடங்கு அமலான ஒருசில நாட்களிலேயே 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் பேர் நகரப்பகுதிகளில் இருந்து தங்கள் சொந்த கிராமப் பகுதிகளுக்கு திரும்பியதாக புதன்கிழமை அன்று வெளியிடப்பட்ட உலக வங்கியின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தெற்காசிய பிராந்தியத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு புலம்பெயர்வை கொரோனா வைரஸ் பரவல் மோசமாக பாதித்துள்ளது என்றும் உலக வங்கி தனது அறிக்கையில் கூறியுள்ளது.

  13. அவசர சட்டத்துக்கு இந்திய குடியரசுத்தலைவர் ஒப்புதல்

    மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக மத்திய அரசு நேற்று பிறப்பித்த அவசர சட்டத்துக்கு இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று ஒப்புதல் அளித்துள்ளார் .

    பெருந்தொற்று நோய்கள் அவசர சட்டம் (திருத்தம்) 2020இன் கீழ் மருத்துவ பணியாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் முதல் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.

    குற்றம் நிரூபிக்கப்பட்ட நபர்களிடமிருந்து 50,000 ரூபாய் முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கவும் இந்த அவசர சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து இந்திய அரசு இந்த அவசர சட்டத்தை இயற்றியுள்ளது

  14. கொரோனாவில் இருந்து மீண்ட ஒரு மாத குழந்தை

    தாய்லாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு மாத குழந்தை தற்போது குணமடைந்துள்ளது

  15. ஐரோப்பிய நாடுகளில் சமீபத்திய நிலவரம் என்ன?

    ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிவதை அனைத்து மாநிலங்களும் கட்டாயம் ஆக்கியுள்ளன.

    இதன்படி பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துதல், கடைவீதிக்கு செல்லுதல் உள்ளிட்ட நேரங்களில் மக்கள் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

    ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்தால், மே மாதத்தின் இரண்டாவது பிற்பாதியிலிருந்து ஊரடங்கு படிப்படியாக குறைக்கப்படும் என்று அந்நாட்டு பிரதமர் பெட்ரோஸ் சன்செஸ் கூறியுள்ளார். இத்தாலிக்கு அடுத்து கொரோனா வைரஸால் அதிக மரணங்களை சந்தித்த ஐரோப்பிய நாடாக ஸ்பெயின் உள்ளது.

    மார்ச் மாதம் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி வரை ஊரடங்கு விதிகளை மீறியதற்காக சுமார் 2 லட்சம் பேருக்கு ஐரோப்பிய நாடான ருமேனியா அபராதம் விதித்துள்ளது.

    அவ்வாறு அபராதமாக விதிக்கப்பட்ட தொகை ருமேனியாவில் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து வரியாக வசூலிக்கப்பட்ட தொகைக்கு நிகரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் இதுவரை 500க்கும் மேலானவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

  16. கொரோனா வைரஸை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறாரா டிரம்ப்?

    அமெரிக்காவில் நிரந்தரமாக குடியேறும் அனுமதிக்கான (கிரீன் கார்டு) ஒப்புதல் வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

    60 நாட்கள் நீடிக்கும் இந்த தடையில் சில விதி விலக்குகளும் உள்ளன.

    எனினும் 60 நாட்களுக்கு மேலும் இந்த தடை நீடிக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

    கொரோனா பரவலால் மோசமாகியுள்ள பொருளாதார சூழலில் அமெரிக்கர்களின் வேலைகளைப் பாதுகாப்பதற்காகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    நீண்டகாலமாகவே அமெரிக்காவில் வெளிநாட்டினர் குடியேறுவதற்கு எதிரான கொள்கையை கொண்டுள்ள டிரம்ப், வரும் நவம்பர் மாதம் அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், வைரஸ் தொற்று பரவலால் உண்டாகியுள்ள சூழலை அவர் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார் என்று அவரின் எதிர்ப்பாளர்கள் விமர்சிக்கின்றனர்.

  17. கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்றால் என்னாகும்?

    கொரோனா வைரஸ் உடலுக்குள் சென்று என்ன செய்கிறது? ஏன் மரணம் கூட ஏற்படுகிறது? இதன் பின் உள்ள அறிவியல் என்ன?

  18. கொரோனா நோய் மறைய நீண்ட காலம் ஆகும் - உலக சுகாதார நிறுவனம்

    கொரோனா வைரஸ் தொற்று உண்டாக்கும் நோய் நம்மிடையே நீண்டகாலம் இருக்கும் என்பதால் அதற்கு எதிரான போர் சலிப்பு மிகுந்ததாக மாறும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ் தெரிவித்துள்ளார்.

    ஆஃப்ரிக்கா, கிழக்கு ஐரோப்பா, மத்திய மற்றும் தென் அமெரிக்கா ஆகிய பகுதிகளில் கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து எச்சரித்த அவர் உலக நாடுகள் ஊரடங்கை தளர்த்தினால் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கும் என்று கூறினார்.

    உலக சுகாதார நிறுவனம் வைரஸ் குறித்து சரியான நேரத்தில், முன்கூட்டியே எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு ஆரம்பத்தில் உள்ளான நாடுகள் தற்போது மீண்டும் பாதிப்புக்குள்ளாவது குறித்து பேசிய டெட்ரோஸ், "எந்தத் தவறும் செய்து விடாதீர்கள். நாம் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருக்கிறது. இந்த வைரஸ் நம்முடன் நீண்டகாலம் இருக்கப்போகிறது," என்று தெரிவித்தார்.

  19. நேற்று நடந்தவை - சில முக்கியத் தகவல்கள்

    • அமெரிக்காவில் கொரோனா வைரஸால் தற்போது ஏற்பட்டிருக்கும் பாதிப்பைவிட இனிவரும் அடுத்தகட்ட வைரஸ் பரவல் இதைவிட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாக அந்நாட்டின் நோய் தடுப்பு மற்றும் கட்டுபாட்டு மையம் தெரிவித்துள்ளது.
    • வேண்டுமென்றே கோவிட்-19 தொற்றை பரப்பி ஏமாற்றியதாக சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சீன அரசு மீது அமெரிக்க நீதிமன்றம் ஒன்றில் வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கு அடிப்படையற்றது என்று கூறியுள்ளது சீனா.
    • கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக இந்த வருடம் ருவாண்டாவில் நடைபெறவிருந்த காமன்வெல்த் மாநாடு தள்ளி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சிங்கப்பூரில் புதிதாக 1,016 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
    • இந்தியாவில் இதுவரை 20,471 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
    • இந்தியாவில் சுகாதார பணியாளர்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் நோக்கில் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டிருப்பதாகவும், அதன்படி யாரேனும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் அவர்களுக்கு 6 மாதங்கள் முதல் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    • தமிழ்நாட்டில் கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடிவரும் மருத்துவர்கள், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், உள்ளாட்சித் துறையினர் ஆகியோர் உயிரிழந்தால் அவர்களுடைய குடும்பத்தினருக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை ஐம்பது லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
    • கொரோனா தொற்று பாதிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக 1.30 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார் நடிகர் விஜய்.
  20. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.

    தமிழகம், இந்தியா, இலங்கை மற்றும் உலக நாடுகளின் இன்றைய நிலவரம் குறித்து அறிய இந்தப் பக்கத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.