“கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது” : ரஷ்ய அதிபர் புதின் - அண்மைய தகவல்கள்
உலகளவில் இதுவரை கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,317,759ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 592,319 ஆக அதிகரித்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
இந்தியாவில் 15 ஆயிரத்தை கடந்த நோய்த்தொற்று பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,712ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் இதுவரை மொத்தம் 507 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1068 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும், 27 உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2,203ஆக அதிகரித்துள்ளது.
கனடா - அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடல்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக கனடா - அமெரிக்கா எல்லை மேலும் 30 நாட்களுக்கு மூடப்படும் என்று கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே, அமலில் உள்ள இருநாடுகளுக்கு இடையிலான எல்லைப்பகுதி மூடல் நடவடிக்கை வரும் செவ்வாய்க்கிழமை முடிவுக்கு வரும் நிலையில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இருநாடுகளுக்கு இடையிலான அத்தியாவசிய பொருட்களுக்கான போக்குவரத்து வழக்கம்போல தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"இரு நாடுகளின் மக்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க உதவும் இந்த முடிவு மிகவும் முக்கியமானது" என்று ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு: குடும்ப வன்முறைக்கு ஆளாகும் இந்தியப் பெண்கள்
காணொளிக் குறிப்பு, கொரோனா ஊரடங்கு: குடும்ப வன்முறைக்கு ஆளாகும் இந்தியப் பெண்கள்
கொரோனா வைரஸ்: காதல் உம்மதத்தை கடப்பது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிரான நடவடிக்கைகளால் ஏராளமான மக்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை சந்திக்க முடியாமல் தொலைத் தொடர்பு முறைகளில் உறவுகளைப் பேணி வருகின்றனர்.
இந்நிலையில், நாம் தொலைபேசி அல்லது வீடியோ செயலிகள் மூலம் எந்த அளவுக்கு தொடர்புகளை அர்த்தம் உள்ளதாக ஆக்கிக் கொள்ள முடியும்?
எளிதான வழிகளை நிபுணர்கள் சொல்லித் தருகிறார்கள்.
விரிவாகப் படிக்க: இங்கே க்ளிக் செய்யவும்
"அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறைய பேர் இறந்துள்ளனர்" - டொனால்டு டிரம்ப்
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா மீது மீண்டுமொருமுறை மிகப் பெரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்.
அதாவது, இந்திய நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டிரம்ப், கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவை விட சீனாவில்தான் நிறையப் பேர் இறந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது தெரியுமா? உலகின் பல்வேறு நகரங்களில் ஆள் நடமாட்டமே இல்லை.
இதில் பெரிய பெரிய சுற்றுலா தலங்களும் அடங்கும். பல நாடுகளில் மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளதால் தேவையான பொருட்களை மக்கள் விரைவாக வாங்குகின்றனர்.
காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ் இந்த உலகை எப்படி மாற்றியுள்ளது?
கொரோனா சிகிச்சை: 'மருத்துவர்களைவிட செவிலியர்களுக்கு அதிக ஆபத்து'
கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு உள்ள கட்டுப்பாடுகள், மருத்துவர்களைவிட மோசமான சவால்களை எதிர்கொண்டுள்ள செவிலியர்கள் போன்றவற்றை விளக்குகிறார் லண்டனில் உள்ள தமிழ் மருத்துவர்.
"பணி நேரம் முழுவதும் சிகிச்சை பெறுபவர்களுடன்தான் கழிக்கிறார்கள் செவிலியர்கள். வயதான நோயாளிகளுக்கு உணவு வழங்குவது, உடை மாற்றுவது, மலம் கழிப்பது என அனைத்துக்கும் உதவுவது செவிலியர்கள்தான் என்பதால் அவர்களுக்கு தொற்று உண்டாகும் ஆபத்து அதிகம்," என்கிறார் மருத்துவர் ரிஸ்வியா மன்சூர்.
காணொளிக் குறிப்பு, கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு என்ன கட்டுப்பாடு - பிரிட்டன் தமிழ் மருத்துவர்
வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே, ஏப்ரல் 18 பிபிசி தமிழில் வெளியான செய்திகள்
பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒலி, ஒளி, வரைகலை வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.
ஏப்ரல் 18 பிபிசி தமிழில் வெளியான செய்திகள்
மலேசியா: மலேசியாவில் இன்று புதிதாக 54 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இதையடுத்து கிருமி தொற்றியோர் எண்ணிக்கை 5,305ஆக அதிகரித்துள்ளது.
இலங்கை: இலங்கையில் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 20 முதல் சில விதிமுறைகளின் கீழ் தளர்த்தப்படவுள்ளது. ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் அனைத்து பகுதிகளிலும் மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
பிரிட்டன்: வரும் ஏப்ரல் 21ஆம் தேதி பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்தின் 94வது பிறந்த நாளுக்காக வழக்கமான துப்பாக்கி குண்டு முழக்கங்கள் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருக்கும் சூழலில் இவ்வாறு செய்வது முறையாக இருக்காது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீனா: கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் மலேசியாவுக்கு உதவ சீனாவிலிருந்து சிறப்பு மருத்துவக்குழு ஒன்று மலேசியாவுக்கு இன்று வருகை தந்துள்ளது. சீன அரசாங்கம் அனுப்பியுள்ள இந்தக் குழுவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்த எட்டு மருத்துவர்கள் இடம்பெற்றுள்ளனர்.