கொரோனா வைரஸ்: மலேசியாவுக்கு மருத்துவக் குழுவை அனுப்பி உதவும் சீனா
உலகளவில் இதுவரை கொரோனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,242,868 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து முழுமையாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,557,493 ஆக அதிகரித்துள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
வாழ்கைப் போக்கில் மாற்றத்தை விரும்பும் மக்கள்
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு பிறகு பிரிட்டனை சேர்ந்த பெரும்பாலான மக்கள் தங்களது வாழ்க்கைப்போக்கில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புவதாக கருத்துக்கணிப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது
இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்ற சுமார் 4,000 மக்களில் வெறும் ஒன்பது சதவீதம் பேர்தான் கொரோனா வைரஸ் பரவலுக்கு முந்தைய வாழ்க்கை முறைக்கு திரும்ப விரும்புவதாக தெரிவித்துள்ளனர். அதே வேளையில், கோவிட்-19 நோய்த்தொற்று கற்றுத் தந்துள்ள பாடத்தை முதலாக கொண்டு தங்களது வாழ்க்கை முறையில் மாற்றத்தை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக 54 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், கொரோனா வைரஸால் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையின் காரணமாக சுத்தமான காற்றையும், சமூக ஒற்றுமையின் அவசியத்தையும் உணர்ந்துள்ளதாக கருத்துத் தெரிவித்துள்ளனர்.
பட மூலாதாரம், AFP
படக்குறிப்பு, இந்த காலகட்டத்தில், உணவின் மதிப்பை உணர்ந்துள்ளதாக கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 40% மக்கள் தெறிவித்துள்ளனர்.
மருத்துவ பொருட்களின் தட்டுப்பாட்டை தடுக்க உத்தரவு
இந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு தேவையான மருத்துவப் பொருட்களை பதுக்குவது, கள்ள சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்டவற்றை தடுப்பது மட்டுமின்றி பற்றாற்குறை ஏற்படாதவாறு தேவையான அளவு உற்பத்தியை உறுதிசெய்யுமாறு மருந்து கட்டுப்பாட்டு அமைப்புக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
சூரிய ஒளி இல்லாமல் 100 நாள் இருப்பது எப்படி?
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக உலகம் முழுவதும் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
உடல் சார்ந்த பிரச்சனைகள் உள்ளவர்கள் 12 வாரங்களுக்கு வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது என அறிவுரை கூறப்பட்டுள்ளது. அவர்களில் பலருக்கு மூன்று மாதங்களுக்குச் சூரிய ஒளியே பாராமல் இருப்பது மிகக் கடினமானது.
இந்நிலையில், சமீபத்தில் வட துருவத்தின் கடும் குளிர்காலத்தில், பல மாதம் தொடர்ந்து நீடிக்கும் துருவ இரவுக் காலத்தில் வாழ்ந்து திரும்பிய கேரள விஞ்ஞானி ஒருவர் அங்கு எப்படி வாழப் பழகினார் என்ற அனுபவத்தை பிபிசியுடன் பகிர்ந்துகொண்டார்.
இணையம் வாயிலாக மோசடி செய்யும் நபர்கள் ஒவ்வொரு நாளும் கொரோனா வைரஸ் குறித்த 1.8 கோடி போலி மின்னஞ்சல்களை அனுப்புவதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்று நோயால் மக்களிடையே ஏற்பட்டுள்ள அச்ச உணர்வை பயன்படுத்தி அவர்களிடமிருந்து தனிப்பட்ட தகவல்களை பறிக்கும் வேலையில் இணைய திருடர்கள் பெருமளவில் ஈடுபட்டு வருவதாக கூகுள் தெரிவித்துள்ளது.
இணைய பயன்பாட்டாளர்களை ஏமாற்றி தகவல்களை திருடும் நோக்கத்தோடு அனுப்பப்படும் 10 கோடிக்கும் அதிகமான மின்னஞ்சல்களை இதுவரை தடை செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போது, உலகளவில் அனுப்பப்படும் ஐந்தில் ஒரு மின்னஞ்சல் கொரோனா வைரஸ் தொடர்பானதாக உள்ளது.
கூகுளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலை உலகம் முழுவதும் 150 கோடி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்தை தவிர்க்க புதிய திட்டம்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள ஐரோப்பிய நாடுகளின் நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் கைப்பற்றுவதை தவிர்க்கும் நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த நிறுவனங்களை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டுமென்றால், உள்ளூர் அரசுகள் தங்களது பிராந்தியத்தில் உள்ள கடும் இழப்பை சந்தித்துள்ள நிறுவனங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் விரும்புகிறது. இதன் மூலம், அந்த நிறுவனங்களில் பகுதியளவு அதிகாரத்தையும் பெற்றுக்கொள்ளலாம் என்று அது கருதுகிறது.
இதுதொடர்பாக உறுப்பு நாடுகளின் அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்திய கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு
மும்பையிலுள்ள இந்திய கடற்படைக்கு சொந்தமான தளத்தில் பணிபுரியும் வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
மும்பையிலுள்ள ஐ.என்.எஸ். ஆங்ரே கடற்படை தளத்தை சேர்ந்த 21 வீரர்களுக்கு கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் மேற்குப்பகுதியில் மிக முக்கிய கடற்படை தளமாக இது விளங்கி வருவதாக கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், கடற்படைக்கு சொந்தமான எந்த கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பல்களிலும் நோய்த்தொற்று பாதிப்பு இல்லை என்று இந்திய கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
தற்போது நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள வீரர்களில் பலர், இந்த மாதத்தின் தொடக்கத்தில் கோவிட்-19 உறுதியான மற்றொரு வீரருடன் தொடர்பில் இருந்ததாக கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழா ரத்து
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் மிகப் பெரிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆண்டுதோறும் மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை மாதத்தில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் சித்திரைத் திருவிழாவுக்கான கொடியேற்றம் இந்த ஆண்டு ஏப்ரல் 25ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்க வேண்டும். இதன் உச்சகட்ட நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் மே 4ஆம் தேதியும் தேரோட்டம் மே ஐந்தாம் தேதியும் நடக்க வேண்டும்.
ஆனால், கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இந்த ஆண்டு சித்திரைத் திருவிழா ரத்துசெய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திருவீதி உலாக்கள், பட்டாபிஷேகம், திக் விஜயம், திருக்கல்யாணம், திருத்தேரோட்டம் ஆகிய எந்த நிகழ்வும் நடக்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருக்கல்யாண நிகழ்வு மட்டும் மே நான்காம் தேதியன்று காலை 9 மணியிலிருந்து 9.29க்குள் சுவாமி சன்னிதியில் உள்ள சேத்தி மண்டபத்தில் நான்கு சிவாச்சாரியார்கள் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடக்குமெனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிகழ்வு கோவிலின் இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்புச்செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி திருக்கல்யாண தருணத்தில் பெண்கள் தங்கள் மாங்கல்யத்தை மாற்றும் மரபு உள்ளது. அப்படிச் செய்ய விரும்பும் பெண்கள் மேலே குறிப்பிட்ட நேரத்தில் வீட்டிலேயே அதைச் செய்யும்படி கூறப்பட்டுள்ளது.
சித்திரைத் திருவிழாவின் மற்றொரு பகுதியான ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் சுந்தரராஜப் பெருமாள் கோவிலின் மூலம் நடத்தப்படும். அது தொடர்பான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இந்த இரு திருவிழாக்களும் சித்திரை மற்றும் மாசி மாதங்களில் நடந்துவந்தன. மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலத்தில் இந்த இரு திருவிழாக்களும் சித்திரை மாதத்தில் நடக்கும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்டன.
சடலங்களை அடக்கம் செய்ய முடியாமல் திணறும் ஈக்வேடார்
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஈக்வேடார் முழுவதும் இதுவரை 403 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு அரசின் அதிகாரபூர்வ தரவு தெரிவிக்கும் நிலையில், இந்த நோய்த்தொற்றால் அங்குள்ள ஒரேயொரு மாகாணத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈக்வேடாரின் குயாஸ் மாகாணத்தில் மட்டும் ஏப்ரல் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் 6,700 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அரசாங்கம் கூறுகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் கோவிட்-19 நோய்த்தொற்றால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடாக விளங்கும் ஈக்வேடாரிலேயே மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணமாக இது உள்ளது.
சமாளிக்க முடியாத அளவுக்கு நோய்த்தொற்று பாதிப்பும், உயிரிழப்பும் நிலவுவதால் நோய் தாக்கத்தால் உயிரிழந்தவர்களை உடனடியாக அடக்கம் செய்ய முடியாமல் குடும்பத்தினரின் வீடுகளிலோ அல்லது தெருக்களிலோ சடலங்கள் பைகளில் சுற்றப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, உயிரிழந்தவர்களை அடக்கம் செய்ய விநியோகிக்கப்படும் அட்டைப் பெட்டிகள்
கொரோனா வைரஸ்: ‘பாதிப்பின் அடுத்த மையமாக ஆப்பிரிக்கா இருக்கக் கூடும்’
உலக அளவில் கொரோனா வைரஸ் பரவலின் அடுத்த மையாக ஆப்பிரிக்கா இருக்கக் கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒருவேளை இது உண்மையானால், கோவிட்-19 பெருந்தொற்றல் ஆப்பிரிக்கா முழுவதும் குறைந்தது மூன்று லட்சம் பேர் உயிரிழப்பதுடன், கிட்டத்தட்ட மூன்று கோடி மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதிலிருந்து, சென்ற வாரம்தான் ஆப்பிரிக்காவில் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிவேகமாக உயர்ந்தது.
தற்போதைய நிலையை பொறுத்தவரை, ஆப்பிரிக்கா முழுவதும் இந்த நோய்த்தொற்றின் காரணமாக கிட்டத்தட்ட ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,000 ஒட்டி உள்ளது. எனினும், இது பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவை காட்டிலும் மிகவும் குறைவே.
தற்போது வரை பெரும்பாலும் ஆப்பிரிக்காவின் தலைநகர பகுதிகளை பாதித்துள்ள கோவிட்-19 நோய்த்தொற்று, மெதுவாக மற்ற பகுதிகளுக்கும் பரவ தொடங்கியுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.
இந்த பெருந்தொற்றை சமாளிக்க தேவையான வென்டிலேட்டர்களின் பற்றாற்குறை ஆப்பிரிக்க பிராந்தியத்தில் அச்சுறுத்தலை அதிகரிப்பதாக அது மேலும் கூறுகிறது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் 14 ஆயிரத்தை தாண்டிய நோய்த்தொற்று
இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,378ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் இதுவரை மொத்தம் 480 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 991 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டதாகவும், 43 உயிரிழந்ததாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1992ஆக அதிகரித்துள்ளது.
சீனா குறித்து அதிருப்தியை வெளிப்படுத்திய டிரம்ப்
செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சீனா குறித்துப் பேசுகையில்,சீனா கொரோனா வைரஸ் குறித்த தகவல்களை ஆரம்பக்கட்டத்திலேயே வெளிப்படையாக அளிக்கவில்லை. அங்கு என்ன நடந்தது என்பது குறித்து சீனா முழுமையாக விளக்கம் அளிக்கவில்லை என்று கூறினார்.
மேலும் அவர், “வூஹானில் கொரோனா வைரஸ் தொற்று உருவான பின்னணி குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். சீனாவால் நான் அதிருப்தி அடைந்துள்ளேன்,” எனவும் அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
கொரோனா வைரஸுக்கும் சுய இன்ப பழக்கத்திற்கும் என்ன தொடர்பு?
வரலாறு தெரிந்த காலம் தொட்டு ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோய்களிலேயே மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது 1918ல் ஏற்பட்ட ஸ்பேனிஷ் இன்ஃபுளூயன்சா தொற்றுதான். உலக மக்கள் தொகையே 200 கோடியாக இருந்த அந்த காலகட்டத்தில் 50 கோடி பேருக்கு இந்த தொற்று ஏற்பட்டது. பலகோடி பேர் உயிரிழந்தனர்.
அந்த காலத்தில் வெளியான விக்ஸ் வேபோரப் விளம்பரம் ஒன்றில் அமைதியாக இருக்கும்படியும், மலமிளக்கி சாப்பிடும்படியும், விக்ஸ் தடவும்படியும் ‘அறிவுரைகள்’ செய்யப்பட்டிருந்தது.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்
YouTube பதிவின் முடிவு
கொரோனா - இந்திய நிலவரம்
பட மூலாதாரம், GOI
காலை எட்டு மணி நிலவரப்படி இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 11906, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1991,பலியானவர்களின்எண்ணிக்கை 480.
பட மூலாதாரம், GOI
‘ஜெர்மனியில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்துவிட்டது’
ஒரு மாதம் முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த முடக்க நிலையின் காரணமாக ஜெர்மனியில் கொரோனா வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 12ஆம் தேதி முதல் ஜெர்மனியில் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஜென்ஸ் ஸ்பாஹ்ன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, ஜெர்மனியில் கொரோனா வைரஸின் பரவல் 0.7ஆக உள்ளது. அதாவது, நோய்த்தொற்று பாதித்த ஒருவரிடமிருந்து ஒருவருக்கும் குறைவாகவே அதன் பரவல் உள்ளது.
கொரோனா வைரஸால் பேரழிவை சந்தித்த இத்தாலி, ஸ்பெயின் அல்லது பிரான்ஸை விட ஜெர்மனியில் மிகவும் குறைவானவர்களே (3,868 பேர்) உயிரிழந்துள்ளனர். மேலும், 1,41,397 பேருக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
உலக அளவில் தற்போதைய நிலவரம் என்ன?
அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய தரவின்படி, உலகம் முழுவதும் 185 நாடுகளில் கொரோனா வைரஸ் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,43,512ஆக உள்ளது. இதுவரை உலகம் முழுவதும் 1,54,215 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
நோய்த்தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய இரண்டிலுமே அமெரிக்கா தொடர்ந்து மிகவும் பாதிக்கப்பட்டதாக நாடாக விளங்குகிறது. கோவிட்-19 நோய்த்தொற்றால் இதுவரை அமெரிக்காவில் 7,01,610 பேரும், அதற்கடுத்து ஸ்பெயினில் 1,90,839 பேரும், இத்தாலியில் 1,72,434 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பை பொறுத்தவரை அதிகபட்சமாக அமெரிக்காவில் 32,230 பேரும், ஸ்பெயினில் 20,002 பேரும், பிரான்சில் 18,681 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
போராட்டம் நடத்தும் மாகாணங்களில் ஊரடங்கை தளர்த்துங்கள்
பட மூலாதாரம், Getty Images
நாட்டை முடக்கியதற்கு எதிராக அமெரிக்காவின் சில பகுதிகளில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களுக்கு அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மிச்சிகன், வெர்ஜினியா மற்றும் மின்னெசோடா போன்ற அமெரிக்கா நாடுகளில் முடக்க நிலையைத் தளர்த்துங்கள் என டொனால்டு டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடுமையான பொருளாதார கட்டுப்பாடுகள் குடிமக்களை பாதிக்கின்றன என்று போராட்டக்காரர்கள் கூறுகின்றனர், ஆனால் அவற்றை தளர்த்துவது தொற்றுநோயைப் பரப்பக்கூடும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,591 ஆக அதிகரித்ததுள்ளது. எனவே இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33,000 கடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 672,200 என ஜான் ஹோப்கின்ஸ் பலக்லைக்கழக தரவுகள் கூறுகின்றன.
வட கலிஃபோர்னியா, மிச்சிகன், ஓஹியோ, உட்டா, வெர்ஜினியா உள்ளிட்ட நாடுகளில் தொடக்கநிலையைத் திரும்பிப் பெற வேண்டும் என்பதற்க்காக போராட்டங்கள் நடந்தது.
போராட்டம் நடைபெறும் அமெரிக்காவின் அந்த மாகாணங்களை ஆள்வது ஜனநாயக கட்சியினர் என தனது ட்விட்டில் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பொருளாதார தாக்கம்: கோவிட் 19 தொற்றுக்கு பின் தற்போது சீனாவின் பொருளாதார நிலை என்ன?
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு காரணமாக தொழிற்சாலைகள் மூடப்பட்டதால், பல தசாப்சதங்களில் இல்லாத அளவிற்கு முதல் காலாண்டில் சீனாவின் பொருளாதாரம் சரிந்துள்ளது.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட நாடு சீனா.
சீனாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிவிகிதம் 2020-ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 6.8 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளதாக அந்நாட்டின் அதிகாரப்பூர்வ தரவு தெரிவிக்கிறது.
ஊரடங்கால் சிக்கி தவித்த மகனை அழைத்து வர 1400 கி.மீ. பயணித்த தாய், கொரோனா வைரஸ்: ஊரடங்கால் சிக்கி தவித்த மகனை அழைத்து வர 1400 கி.மீ. பயணித்த தாய்
தாயின் அன்புக்கு நிகர் ஏது? ஆந்திராவில் சிக்கிக்கொண்ட மகனை தெலங்கானவிலிருந்து டூவீலரை எடுத்துகொண்டு புறப்பட்டு மகனை பத்திரமாக மீட்ட ஒரு தாயின் உருக்கமான கதை இது.
காணொளிக் குறிப்பு, கொரோனா வைரஸ்: ஊரடங்கால் சிக்கி தவித்த மகனை அழைத்து வர 1400 கி.மீ. பயணித்த தாய்
வணக்கம் பிபிசி தமிழ் நேயர்களே, அமெரிக்கா முதல் தமிழகம் வரை கொரோனா தொடர்பான அனைத்து செய்திகளும்
பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழ் இந்த நேரலை பக்கத்தில் உலகெங்கும் கொரோனா தொடர்பாக நடக்கும் அனைத்து செய்திகளையும் எழுத்து, ஒலி, ஒளி வடிவத்தில் தொகுத்து வழங்குகிறது.
ஏப்ரல் 17 நடந்தவை
ஈக்வேடார்: ஈக்வேடாரில், அதிகாரப்பூர்வ தகவல்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 403ஆக உள்ளது. ஆனால் தற்போதைய தகவல்படி அங்கு ஒரு மாகாணத்தில் மட்டும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது.
உலக சுகாதார நிறுவனம்: கொரோனா பெருந்தொற்று பரவல் முடிந்ததும் உலக சுகாதார நிறுவனத்தில் உள்ள பிரச்சனைகள் மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே கூறியுள்ளார்.
மலேசியா: மலேசியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று ஒரே நாளில் அங்கு 69 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. அதேவேளையில் 221 பேர் சிகிச்சைக்குப்பின் குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளனர்.
ஜெர்மனி: ஜெர்மனியில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.
சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தைக் கடந்துள்ளது. அங்குள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியானதை அடுத்து அவர்களில் ஏராளமானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு: தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 17) புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1323ஆக உள்ளது.