நியூயார்க்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது
உலகை கடுமையாக அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பிரிட்டனில் மேலும் 737 பேர் இறந்துள்ளதையடுத்து, அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
நாளை காலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார் இந்திய பிரதமர்
நாளை (ஏப்ரல் 14) காலை 10 மணிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக இந்தியாவில் அமல்படுத்தப்பட்டிருந்த இரண்டு வாரகால முடக்க நிலை நாளையுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
பட மூலாதாரம், get
படக்குறிப்பு, நரேந்திர மோதி
ஸ்பெயினில் குறிப்பிட்ட சில வர்த்தகங்கள் மீண்டும் இயங்க அனுமதி
ஸ்பெயினில் அத்தியாவசிய தேவைகளுக்காக பணிபுரியும் ஊழியர்கள் தவிர இன்னும் சிலர் தங்கள் பணியிடங்களுக்குச் செல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
திங்கள் கிழமை முதல் அந்நாட்டில் படிப்படியாக முடக்கநிலை குறைக்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உற்பத்தி மற்றும் கட்டுமானத்துறை வர்த்தகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் மீண்டும் தங்கள் பணிகளை துவங்கலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கும் பாதுகாப்பு வழிமுறைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள் நிறைந்த இடங்களுக்கு முடக்க நிலை நீட்டிக்கப்படுகிறது.
மக்கள் பலர் தங்கள் பணியிடங்களுக்கு திரும்பி செல்வதால், பொது போக்குவரத்தில் பயணம் மேற்கொள்பவர்களுக்கு வழங்குவதற்காக 10 மில்லியன் முக கவசங்கள் ஸ்பெயினில் தயார்நிலையில் உள்ளது.
பட மூலாதாரம், Reuters
கொரோனா வைரஸ்: 308 பேர் பலி, 9152 பேர் பாதிப்பு - அண்மைய இந்திய நிலவரம்
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 308 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என அனைத்தையும் சேர்த்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9152 ஆக அதிகரித்துள்ளது.
சரி… இந்திய அளவில் நடந்த சில முக்கிய தகவல்களை பார்ப்போம்.
வனவிலங்கு இறைச்சிக்கு உலகளவில் தடை விதிக்க ஐ.நா வலியுறுத்துமா ?
எதிர்காலத்தில் கொரோனா போன்ற தொற்று பரவும் வைரஸ்களை ஒழிக்க வன விலங்குகளை இறைச்சியாக விற்கும் சந்தைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என ஐ.நா வின் பல்லுயிர் துறை தலைமை அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவின் வூஹானில் வனவிலங்கு இறைச்சி சந்தையில் இருந்து தான் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது என்று கருதப்படுவதால் அந்நாட்டில் வனவிலங்கு இறைச்சி சந்தைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வூஹானின் வனவிலங்கு இறைச்சி சந்தை தான் கொரோனா தொற்றுக்கு காரணம் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் உலகம் முழுவதும் வனவிலங்கு இறைச்சி வியாபாரத்தை நம்பியே பல கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் உள்ளது என்றும் கூறப்படுகிறது.
பட மூலாதாரம், AFP
படக்குறிப்பு, வனவிலங்கு இறைச்சிக்கு உலகளவில் தடை விதிக்க ஐ.நா வலியுறுத்துமா ?
ரமலான் கொண்டாட்டங்கள் - இந்தோனீசியாவில் கட்டுப்பாடுகள் விதிப்பு
கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உலகம் முழுவதிலும் பல நாடுகளில் மத வழிபாட்டு இடங்களில் மக்கள் கூடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ரமலான் மாதம் இந்த மாத இறுதியில் தொடங்குவதையொட்டி இந்தோனீஷியாவில் பொது போக்குவரத்துக்கு அந்நாடு தடை விதித்துள்ளது.
பொதுவாக ரமலான் மாதத்தையொட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்புவது இந்தோனீஷீயாவில் வழக்கம் என்பதால், மக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் வகையில் இந்த உத்தரவை அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் நடப்பது என்ன?
சீனாவிலிருந்து இன்னும் 5 லட்சம் கொரோனா ரேபிட் டெஸ்டிங் கிட் இன்னும் இந்தியாவிற்கு வரவில்லை. பல இந்திய மாநிலங்கள் பரிசோதனைக்காக இந்த ரேபிட் கிட்டையே சார்ந்து உள்ளன.
பல மாநிலங்கள் ஊரடங்கை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ள சூழலில், மத்திய அரசு ஊரடங்கை படிபடியாக தளர்த்துவது குறித்த ஒரு திட்டத்தை தீட்டி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் கொரோனாவால் 918 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 34 பேர் பலியாகி உள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்தியாவில் நடப்பது என்ன?
கொரோனா வைரஸ்: ஊரடங்கு காலத்தில் கர்ப்பிணி பெண்கள் சந்தித்து வரும் சவால்கள் என்ன?
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். தொழில்முனைவோர், வியாபாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால், உடல் மற்றும் மனரீதியாக பல சிக்கல்களை சந்தித்து வருவதாக கர்ப்பிணிகள் தெரிவிக்கின்றனர்.
கொரொனோ நோய்த்தொற்று பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் மருத்துவ சிகிச்சை பெறுவது, ஆரோக்கியமான உணவுகளை வாங்குவது மற்றும் போக்குவரத்து ஆகியவை பெரும் சவாலாக மாறியுள்ளதாக தெரிவிக்கிறார்.
சீனாவில் பாதிப்புகள் திடீர் அதிகரிப்பு - வட கொரியாவில் நடப்பது என்ன?
கடந்த 5 வாரங்களில் இல்லாத அளவுக்கு மீண்டும் சீனாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
சீனாவில் புதிதாக 108 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட கொரியாவில் அந்நாட்டு தலைவர் கிம் ஜோங் உன் தலைமையில் உயர் அளவு கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
தங்கள் நாட்டில்மேற்கொள்ளப்பட்ட கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பெருந்தொற்றே இல்லை என்கிறது அந்நாடு.
பட மூலாதாரம், Getty Images
கொரோனா வைரஸ்: சர்வதேச அளவில் நடப்பது என்ன?
எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் (ஒபெக்) உள்ள நாடுகளும் மற்றும் அதன் நட்பு நாடுகளும் எண்ணெய் உற்பத்தியை பத்து சதவீதம் அளவுக்குக் குறைக்க ஒப்புக் கொண்டுள்ளன.
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச அளவில் நுகர்வு குறைந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வீடியோ கான்ஃபரன்சிங் மூலமாக நடந்த கூட்டத்தில் இந்த முடிவிற்கு வர எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன.
ஒபெக் இப்படியான முடிவிற்கு ஒப்புக் கொள்வது இதுவே முதல்முறை. ரஷ்யாவுடன் கூட்டணியில் இருக்கும் பிற எண்ணெய் உற்பத்தி நாடுகள் (ஒபெக் +) இந்த ஒப்பந்தத்திற்கான திட்டத்தை ஏப்ரல் 9 முன் வைத்தது.
ஆனால், மெக்சிகோ அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. இப்படியான சூழலில் இந்த முடிவு இப்போது எட்டப்பட்டிருக்கிறது.
9.7 மில்லியன் பேரல்கள் அளவுக்கு எண்ணெய் உற்பத்தி இதன் காரணமாக குறையும்.
இன்னும் இது ஒபெக்கால் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ட்ரம்ப் மற்றும் குவைத் அமைச்சர் இது தொடர்பாக ட்வீட் பகிர்ந்துள்ளனர். செளதி மற்றும் ரஷ்யா இதனை உறுதிப்படுத்தி உள்ளது.
இத்தாலி மற்றும் பிரான்சில் என்ன நடக்கிறது?
கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்ட இரு ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் பிரான்சில் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது.
இத்தாலியில் பலி எண்ணிக்கை 431 என்ற அளவில் உள்ளது. இது கடந்த 3 வாரங்களில் இல்லாத அளவுக்கு குறைவு.
பிரான்சில் 315 பேர் ஞாயிற்றுக்கிழமை பலியானதாக பதிவாகி உள்ளது.சனிக்கிழமை அங்கு பலி எண்ணிக்கை 345ஆக இருந்தது.
பட மூலாதாரம், TASS / GETTY IMAGES
கொரோனா வைரஸ்: இனி இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கும்?
கொரோனா வைரஸ் காரணமாக விரைவில் இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலை ஏற்படுமென உலக வங்கி கணித்துள்ளது.
உலக மக்கள் தொகையில் 25 சதவீத மக்கள் எட்டு நாடுகளை உள்ளடக்கிய தெற்காசிய நாடுகளில் வசிக்கின்றனர்.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 6.3 சதவிகிதம் இருக்குமென கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், கொரோனாவுக்கு பிறகு 1.8 - 2.8 % என்ற அளவில்தான் இருக்குமென்கிறது உலக வங்கி.
குறிப்பாக இந்தியாவில் பொருளாதார வளர்ச்சியானது 1.5 - 2.8 % என்ற அளவில்தான் ஏப்ரல் மாதம் தொடங்கும் நிதியாண்டில் இருக்கும் என்கிறது உலக வங்கி.
நேபாளம், வங்கதேசம், பூடான், இலங்கை ஆகிய நாடுகளிலும் பொருளாதார வளர்ச்சியில் தேக்கம் இருக்கும். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் மாலத்தீவுகளில் பொருளாதார மந்தநிலை இருக்கும் என்கிறது உலக வங்கி.
பட மூலாதாரம், AFP
கொரோனா வைரஸ்: “அதீத அதிகாரத்தை கைப்பற்ற கோவிட் 19ஐ அரசுகள் பயன்படுத்தும்” - எச்சரிக்கும் வல்லுநர்கள்
கொரோனா வைரஸ் இப்போது ஏற்படுத்தி இருக்கும் தாக்கத்தைவிட இவை எல்லாம் சரியான பின் அது ஏற்படுத்த போகும் தாக்கம்தான் மிக மோசமாக இருக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.
அமெரிக்க தத்துவயியல் நிபுணரும், மொழியியல் நிபுணருமான நோம் சாம்ஸ்கி, "தொற்றுநோய்க்கு பிந்தைய சாத்தியக்கூறுகள் தீவிர சர்வாதிகாரம் உடைய மிருகத்தனமான அமைப்புகளை நிறுவுவதிலிருந்து … லாபமற்று மனிதாபிமானத்துடன் இயங்கிய அமைப்புகளை முழுவதுமாக சிதைப்பது வரை இருக்கும்," என்று எச்சரிக்கிறார்.
"இந்த அதிக சர்வாதிகாரம் நிறைந்த, மோசமான அமைப்புகள் புதிய தாராளமயத்துடன் மிகவும் ஒத்துப்போகும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்." என்று நோம் சாம்ஸ்கி ஒரு உரையாடலில் தெரிவிக்கிறார்.
கொரோனா வைரஸ்: “அமெரிக்கா இந்த நிலைக்கு வராமல் முன்பே தடுத்திருக்க முடியும்”
அமெரிக்கா இவ்வளவு மோசமான நிலைக்கு வராமல் முன்பே தடுத்திருக்க முடியும் என்று அமெரிக்க சுகாதார துறையை சேர்ந்த முக்கிய அதிகாரி கூறி உள்ளார்.
சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இதனை அவர் தெரிவித்துள்ளார்.
“சரியான பாதையில் நாம் சென்றிருந்தால், சமூக முடக்கத்திற்கு முன்பே நாம் உத்தரவு பிறப்பித்திருந்தால் இவை அனைத்தையும் நாம் முன்பே தவிர்த்திருக்க முடியும்,” என்று மருத்துவர் ஆண்டனி ஃபெஸி கூறி உள்ளார்.
நாம் நிலையை சிக்கல் ஆக்கிவிட்டோம் என்று கூறும் அவர், எனது கருத்தை யாரும் மறுக்க மாட்டார்கள் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவால் 555, 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 22 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் நியூயார்க் மாகாணத்தை சேர்ந்தவர்கள். விரைவில் அதாவது அடுத்த மாதம் நாட்டின் சில பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என அவர் கூறி உள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
வணக்கம் நேயர்களே!
பிபிசி தமிழின் உலகளாவிய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்த நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.
நேற்றுவரை நடந்தவற்றின் செய்திகளைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பைச் சுட்டவும்.