You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: அமெரிக்கா முதல் தமிழ்நாடு வரை நடந்தவை என்ன? - அண்மைய தகவல்கள்

கொரோனா வைரஸ் தொற்றால் உலகளவில் இதுவரை 1,02,606 பேர் பலியாகி உள்ளதாக ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் கூறுகின்றன. இத்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,91,719ஆக உயர்ந்திருக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இலங்கை கடற்படை பாதுகாப்பு

    இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில், இந்தியர்கள் எவரும் நாட்டிற்குள் நுழையாத வண்ணம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

  2. உலக சுகாதார நிறுவனத் தலைவர் என்ன பேசினார்?

    உலக நாடுகள் அவசரப்பட்டு ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்தினால், மீண்டும் மிகப்பெரிய பாதிப்புகளை சந்திக்கக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    பொருளாதார தாக்கம் இருக்கும் என்றாலும், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து நிதானமாக செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

    கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின் மற்றும் இத்தாலியில் ஊரடங்கு தொடர்ந்து அமலில் இருக்கும் என்றாலும் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஜெனீவாவில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய டெட்ரோஸ், சில ஐரோப்பிய நாடுகளில் இந்த பெருந்தொற்றின் தாக்கம் குறைந்து வருவது நல்ல அறிகுறியாக இருப்பதாக குறிப்பிட்டார்.

    ஆனால், அவசரப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கினால், பாதிப்பு எண்ணிக்கை மிக மோசமாக அதிகரிக்கும் என்று டெட்ரோஸ் எச்சரித்தார்.

    கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தது எவ்வளவு ஆபத்தானதோ, அதே ஆபத்து இத்தொற்று குறையும்போதும் இருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.

    இந்நிலையில், ஊரடங்கு உத்தரவுகளை தளர்த்துவது குறித்து ஒவ்வொரு அரசாங்கத்துடன் இணைந்து உலக சுகாதார நிறுவனம் தனித்திட்டம் இடும் என்று தெரிகிறது.

  3. இந்தியா - 24 மணிநேரத்தில் 1035 பேருக்கு தொற்று உறுதி

    இந்தியாவில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 7,000-ஐ கடந்துள்ளது.

    தற்போது சிகிச்சை பெற்றுவரும் 6,565 பேர், உயிரிழந்த 239 பேர் உள்பட இதுவரை 7,447 பேர் இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை தெரிவித்துள்ளது.

    குணமடைந்த அல்லது நாட்டை விட்டு வெளியேறிய 643 பேரும் இதில் அடக்கம்.

    கடந்த 24 மணி நேரங்களில் மட்டும் 40 பேர் இறந்துள்ளனர்; 1,035 பேருக்கு புதிதாக தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

  4. அமெரிக்காவில் ஒரே நாளில் 2000 பேர் பலி

    உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு, அமெரிக்காவில் கொரோனா வைரஸால் ஒரே நாளில் 2000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    இத்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியைவிட அமெரிக்காவில் அதிகம் பேர் உயிரிழப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    ஆனால், தற்போது இந்த தொற்று எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் குறைந்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    இது சற்று ஊக்கம் அளிக்கும் வகையில் இருந்தாலும், இன்னும் உயிரிழப்புகளின் உச்சத்தை அமெரிக்கா எட்டவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொட்டு, பின்னர் குறையத் தொடங்கும் என்றும், மே ஒன்றாம் தேதி வாக்கில் ஒரு நாளில் 970 உயிரிழப்புகள் என்ற வண்ணம் எண்ணிக்கை சரியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    அமெரிக்காவில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நகரமான நியூயார்க்கிலும் இந்த வைரஸ் தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருப்பதாக அதன் ஆளுநர் ஆண்ட்ரூ க்யூமோ தெரிவித்துள்ளார்.

  5. இலங்கை - புதிதாக எழுவருக்கு கொரோனா தொற்று

    இலங்கையில் புதிதாக ஏழு கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் .

    இதன்படி இலங்கையில் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 197 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

    கோவிட்-19 தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஏழாகும்.

    54 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 136 பேர் மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  6. உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

    கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க விதிக்கப்பட்டுள்ள ஊரடங்கை உலக நாடுகள் அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

    இது வைரஸ் மீண்டும் பரவ வழிவகுக்கும் என்று அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

  7. உண்மையை மறைக்கிறதா சீனா?

    உலகம் நம்புவதற்காக பொய் தகவலை வெளியிடும் நாடு என்ற கெட்ட பெயரை சீனா சம்பாதித்து வைத்துள்ளது.

    எனவே கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம் என சீனா சொல்வதையும் பலர் நம்புவதாக இல்லை.

    ஏன் சீனா இந்த உண்மைகளை மறைக்க வேண்டும்? அதற்கு என்ன காரணம்? விவரங்கள் காணொளியில்.

  8. மருத்துவப் பணிக்கு திரும்பும் 'மிஸ் இங்கிலாந்து'

    தற்போது மிஸ் இங்கிலாந்தாக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர், பிரிட்டனில் கொரோனா தொற்று தீவிரமாக பரவும் இந்த நேரத்தில், மருத்துவ பணியை தொடர விரும்புவதாக கூறியுள்ளார்.

  9. "தமிழ்நாடு இரண்டாம் கட்டத்திலேயே இருக்கிறது"

    கொரோனா நோய்த் தொற்று பரவுவதில் தமிழ்நாடு இன்னும் இரண்டாம் கட்டத்திலேயே இருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

    வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்கள், தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோருக்கு சோதனைகளை முடித்துவிட்டால் இந்த நோய் கட்டுப்பாட்டிற்கு வருமென்ற நம்பிக்கை இருக்கிறது.

  10. நேற்றைய நிலவரம் - சில முக்கிய செய்தித் துளிகள்

    • உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வெள்ளியன்று 16 லட்சத்தை கடந்தது.
    • போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது முதல் முறையாக உறுதியாகியுள்ளது.
    • கொரோனா வைரஸ் முதன் முதலில் கண்டறியப்பட்ட சீன நகரமான வுஹானில் இயல்பு நிலை திரும்ப ஆரம்பித்துள்ளது.
    • பிரிட்டனின் வொர்செஸ்டர்ஷைர் பகுதியை சேர்ந்த 101 வயதாகும் முதியவர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முற்றிலும் குணமடைந்துள்ளார்.
    • 1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்க போகிறது என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.
    • இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6000-ஐ கடந்தது. பலி எண்ணிக்கையும் 200-ஐ கடந்தது.
    • தமிழ்நாட்டில் வெள்ளியன்று மேலும் 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 911. இதில் இறந்தவர்கள் மற்றும் குணமடைந்தவர்களும் அடக்கம்.
  11. வணக்கம் நேயர்களே!

    பிபிசி தமிழின் உலகளாவிய கொரோனா வைரஸ் நிலவரம் குறித்த நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம்.

    நேற்றுவரை நடந்தவற்றின் செய்திகளைத் தெரிந்துகொள்ள கீழே உள்ள இணைப்பைச் சுட்டவும்.