You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

கொரோனா வைரஸ்: இந்தியாவில் 200-ஐ தாண்டியது உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி உலகெங்கும் கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்று தாக்கியவர்கள் எண்ணிக்கை 16,00,427 என்று அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 'ஓய்வெடுக்க வேண்டும்' - பிரிட்டன் பிரதமரின் தந்தை

    தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஓய்வெடுக்க வேண்டும் என்று அவரது தந்தை கூறியுள்ளார்.

    இனி நாம் சரியாகக் கையாள வேண்டும் என்று பிபிசியிடம் போரிஸ் ஜான்சனின் தந்தை ஸ்டேன்லி ஜான்சன் தெரிவித்தார்.

  2. மரணப் பிடியிலிருந்து மீளாத அமெரிக்கா

    நியூயார்க்கில் புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தாலும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவின் மரணப் பிடியிலிருந்து மீளாத அமெரிக்கா

  3. இந்தியாவில் இருந்து நாடு திரும்பவுள்ள பிரிட்டன் மக்கள்

    இந்தியாவிலிருக்கும் 3000க்கும் மேற்பட்ட பிரட்டன் குடிமக்கள் நாடுதிரும்ப 12 விமானங்களை அந்நாட்டு வெளியுறவுத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

    இதில் 7 விமானங்கள் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டவை ஆகும்.

    இதனையடுத்து இந்தியாவில் இருந்து நாடு திரும்பும் பிரட்டன் மக்களின் எண்ணிக்கை 5,000ஆக உயரும்.

  4. கொரோனாவால் உலகம் முழுதும் பலியானவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தொடுகிறது

    கோவிட் 19 நோய்த் தொற்றால் உலகளவில் இதுவரை 95,700க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

    தற்போதைய சூழலே நீடித்தால் இந்த வார இறுதியில் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    உலகிலேயே அதிகபட்சமாக இத்தாலியில் 18,279 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் 16,684 பேரும், ஸ்பெயினில் 15,447 பேரும், பிரான்ஸில் 12,228 பேரும், பிரிட்டனில் 7,993 பேரும் உயிரிழந்துள்ளனர்.

  5. கொரோனா பாதிப்பில் இத்தாலி, ஸ்பெயினை விஞ்சிய நியூயார்க்

    கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் மிகவும் தீவிரமாக இருந்த ஐரோப்பிய நாடுகளான இத்தாலி மற்றும் ஸ்பெயினை விட, நியூயார்க்கில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.

    நியூயார்க்கில் மட்டும் சுமார் 1,60,000 பேர் இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

    கொரோனாவால் ஸ்பெயினில் 1,53,000 பேரும், இத்தாலியில் 1,43,000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனினும் நியூயார்க்கில் புதிதாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை இரண்டாவது நாளாக குறைந்துள்ளது சற்று நம்பிக்கை அளிக்கும் விதமாக இருக்கிறது.

    அங்கு புதன்கிழமை மட்டும் 799 பேர் உயிரிழந்தனர். மொத்தம் இறந்தவர்களின் எண்ணிக்கை 7000த்தை கடந்துள்ளது.

  6. 'விவசாயிகளிடம் வாங்குங்கள்'

    "நமது உணவகங்களில் உணவு பரிமாற வாழை இலை பயன்படுத்தப்பட்டால், தங்கள் வேளாண் உற்பத்தியை விற்பனை செய்யவே போராடும் விவசாயிகளுக்கு உதவியாக இருக்கும் என்று ஓய்வுபெற்ற பத்திரிகையாளர் பத்மா ராம்நாத் அரிதாக எனக்கு ஓர் அஞ்சல் அனுப்பியிருந்தார். எங்கள் தொழிற்சாலை குழுவினர் துரிதமாக செயல்பட்டு அதை அமல்படுத்தியுள்ளனர்," என்று தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

  7. பாதுகாப்பான இடத்திற்கு சென்ற விண்வெளி வீரர்கள்

    கொரோனா பரபரப்புக்கு மத்தியில் 3 விண்வெளி வீரர்களை ஏற்றிச்சென்ற ராக்கெட் கஜகஸ்தானில் இருந்து விண்ணுக்கு புறப்பட்டது.

    இதில் பயணித்த 2 ரஷ்யர்கள் மற்றும் ஒரு அமெரிக்கர் ஆகிய மூவரும் இரண்டு வார காலம் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

    விண்ணுக்கு இந்த வைரசை அவர்கள் எடுத்துச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    ராக்கெட் ஏவப்படும் முன்பாக பேசிய விண்வெளி வீரர்கள், "இந்த பூமியின் மிகவும் பாதுகாப்பான இடத்திற்கு" செல்வதாக கூறிச் சென்றனர்.

  8. போர் பாதித்த நாட்டில் முதல் தொற்று

    போரால் பாதிக்கப்பட்ட ஏமனில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது முதல் முறையாக உறுதியாகியுள்ளது.

    அங்கு ஹூத்தி கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கு ஆதரவான சௌதி தலைமையிலான கூட்டணிப் படைகளுக்கும் அங்கு உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.

    ஐந்து ஆண்டுகளில் அங்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.

    உள்கட்டமைப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்த நாட்டில் கொரோனா தொற்று உண்டானால் அது மோசமான விளைவுகளை உண்டாக்கும் என்று சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருந்தன.

  9. மகனுக்காக 1200 கி.மீ பைக் ஓட்டிய தாய்

    நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தெலங்கானாவில் இருந்து 1,200 கிலோ மீட்டர் இரு சக்கர வாகனத்தில் பயணித்து ஆந்திராவில் இருந்த தனது மகனை அழைத்து வந்துள்ளார் ஒரு பெண்மணி.

    தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் என்ற நகரத்தில் இருந்து ஆந்திராவில் உள்ள நெல்லூர் வரை சென்று தன் மகனை வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார் ராசியா பேகம்.

  10. ஜெர்மனியில் ஒரே நாளில் 5000 பேருக்கு கொரோனா

    கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஜெர்மனியில் 5323 பேர் புதிதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் ஜெர்மனியில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,13,525 ஆக உயர்ந்துள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. ஆனால், இன்று நான்காவது நாளாக இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது.

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத் தரவுகள்படி, 2607 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர்.

  11. கொரோனா வைரஸ் - ஆசிய நிலவரம் என்ன?

    சீனாவில் உள்ள பல நகரங்களில் இயல்பு நிலை திரும்பியுள்ள நிலையிலும் ரஷ்ய எல்லையில் இருக்கும் சீன நகரமான ஸ்வேஃபென்கோ நகரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்த செவ்வாய் முதல் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. அங்கு 600 படுக்கை வசதியுடன் ஒரு மருத்துவமனையும் கட்டப்பட்டு வருகிறது.

    தென் கொரியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது. பிப்ரவரி இறுதியில் ஒரே நாளில் 900க்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை அன்று 27 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    ஜப்பானில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட பல நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தோனீசியாவில் ஒரு நாளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. வியாழனன்று மட்டும் 40 பேர் அங்கு இறந்துள்ளனர். இதனால் அங்கு மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 280ஆக உயர்ந்துள்ளது.

    சிங்கப்பூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென அதிகரித்துக் கொண்டு வருகிறது. அங்கு புதிதாக 287 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    தாய்லாந்தில் வெள்ளிக்கிழமை முதல் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

  12. மீண்டும் விமர்சிக்கும் அமெரிக்கா

    கொரோனா வைரஸ் குறித்து உலக நாடுகளை முன்னதாகவே எச்சரிக்கவில்லை என உலக சுகாதார நிறுவனம் மீது அமெரிக்கா புதிதாக குற்றம் சாட்டியுள்ளது.

    சீனாவுக்கு ஒரு சார்பாக நடந்துகொள்வதாகவும், உலக சுகாதார நிறுவனத்துக்கு தாங்கள் வழங்கும் நிதியுதவியை நிறுத்திவிடுவோம் என்றும் அமெரிக்கா ஏற்கனவே கூறியிருந்தது.

    இந்த தொற்று பரவலாம் என்று தைவான் முன்னரே எச்சரித்ததை உலக சுகாதார நிறுவனம் கண்டுகொள்ளவில்லை என அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது.

    தைவான் தங்கள் அமைப்பில் ஓர் உறுப்பினராக இல்லாத காரணத்தால் உலக சுகாதார நிறுவனம் இவ்வாறு செய்ததாக அமெரிக்கா கூறுகிறது.

    தைவானை தங்கள் நாட்டின் ஓர் அங்கமாக சீனா கருதுகிறது. இதனால் சீன நாட்டின் அழுத்தத்தால் தைவான் தனி உறுப்பினராக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  13. எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு

    கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளதால், பெட்ரோலிய எரிபொருள் தேவை குறைந்துள்ளது.

    அதனால், ஐந்தில் ஒருபங்கு எண்ணெய் உற்பத்தியை குறைக்க பெட்ரோலிய ஏற்றமதி நாடுகளின் அமைப்பான ஓபெக் மற்றும் அதன் கூட்டணி நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.

    மே மற்றும் ஜுன் மாதங்களில் 10 மில்லியன் பேரல்கள் அளவிற்கு உற்பத்தியை குறைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 2022 ஏப்ரல் வரை படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கப்படும்.

    ஓபெக் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட கூட்டணி நாடுகள் வியாழக்கிழமை அன்று காணொளி மூலம் பேச்சுவார்த்தை நடத்தின. அதில் ரஷ்யா மற்றும் செளதி அரேபியா இடைேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

    இறுதியாக நாள் ஒன்றுக்கு பத்து மில்லியன் பேரல்கள் எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. உலகளாவிய விநியோகத்தில் இது 10 சதவீதமாகும்

  14. காணொளி வாயிலாக 'புனித வெள்ளி' வழிபாடு

    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 'புனித வெள்ளி' இன்று அனுசரிக்கப்படும் நிலையில் உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான தேவாலயங்கள் வழிபாட்டுக் கூட்டங்கள் எதுவும் இல்லாமல் மூடப்பட்டுள்ளன.

    கொரோனா பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளதால் ஏராளமான தேவாலயங்களில் வழிபாட்டுக் கூட்டங்கள் நடைபெறவில்லை.

    கத்தோலிக்க மதத் தலைமையகமான வாடிக்கனில் நடக்கும் நிகழ்வுகள் நேரலையாக ஒளிபரப்பாகும்.

    உலகெங்கும் உள்ள பல்லாயிரம் தேவாலயங்களிலும் நடத்தப்படும் வழிபாட்டை காணொளி மூலம் வீட்டிலிருந்தே காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

  15. பச்சிளம் குழந்தைகளுக்கு சின்னஞ்சிறு தலைக்கவசம்

    கொரோனா பரவல் அச்சத்தை விதைத்து வரும் சூழலில் தாய்லாந்தில் உள்ள ஒரு மருத்துவமனை புதிதாக பிறக்கும் குழந்தைகளை காக்க ஒரு அழகிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

    பாங்காக்கில் உள்ள ப்ராரம்-9 மருத்துவமனை பச்சிளம் குழந்தைகளுக்கு என்று சின்னஞ்சிறு தலைக்கவசம் செய்துள்ளது.

  16. கொரோனா தொற்று - நம்பிக்கை அளிக்கும் புதிய தகவல்கள்

  17. இந்தியாவில் பாதிப்பு 6000-ஐ கடந்தது

    இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது.

    இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின்படி இதுவரை 6,412 பேர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

    கடைசி 12 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.

    உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து 199 ஆகியுள்ளது. நேற்றைவிட இது 30 அதிகம். இப்போது 5,709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

  18. வேலையிழந்துள்ள 330 கோடி மக்கள்

    கொரோன வைரஸ் தொற்று காரணமாக உலக பொருளாதார வளர்ச்சி இந்தாண்டு எதிர்மறையாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.

    1930களில் ஏற்பட்ட மிக மோசமான பொருளாதார மந்தநிலைக்கு பிறகு, உலக பொருளாதாரம் இப்போதுதான் இவ்வளவு கடுமையான நெருக்கடியை சந்திக்க போகிறது என்று சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிரிஸ்டலினா ஜார்ஜிவா கூறியுள்ளார்.

    2021ஆம் ஆண்டில் கூட, இதிலிருந்து பாதி அளவே மீள முடியும் என்று அவர் கணித்துள்ளார்.

    கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக நிறுவனங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ மூடப்பட்டதால் 330 கோடி மக்கள், வேலையிழந்துள்ளார்கள் என ஐ.நாவின் ஆய்வு தெரிவிக்கிறது.

  19. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துக்கு தட்டுப்பாடா?

    கோவிட்-19 தொற்றுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படலாம் என்று கருதப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்ய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை இந்திய அரசு நீக்கியுள்ள நிலையில், அதற்கான தட்டுப்பாடு உள்நாட்டில் உண்டாகலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள மருந்துக் கடைகளில் இந்த மருந்து கிடைப்பது அரிதாகி வருகிறது.

    தேவையைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு இந்தியாவில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகள் உள்ளன என்று சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் என்கிறது பி.டி.ஐ செய்தி.

  20. போரிஸ் ஜான்சன் உடல்நிலை

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உடல்நிலை மோசமடைந்ததால் லண்டனில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

    ஞாயிறன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் திங்கள் முதல் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தார்.

    உலக நாடு ஒன்றின் அரசுக்கு தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களில் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளான முதல் நபர் போரிஸ் ஆவார்.

    மீண்டு வரும் தொடக்க நிலையில் உள்ள அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போரிஸ் ஜான்சன் மீண்டும் முழு நேரப் பணிக்கு எப்போது திரும்புவார் என்று தெரிவிக்கப்படவில்லை.