ரோபோக்களை களமிறக்கிய ஸ்டான்லி மருத்துவமனை
சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்க ரோபோக்களை களமிறக்கியுள்ளனர்.
You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உலகிலேயே அதிகம் பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காவாக உள்ளது. அங்கு 2,50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1000பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் உள்ள ஸ்டான்லி மருத்துவமனையில் கோவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவு வழங்க ரோபோக்களை களமிறக்கியுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,169 பேர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து ஒரு நாட்டில் ஒரே நாளில் அதிகம் பேர் உயிரிழந்தது இதுவே முதல்முறை.
இதுவரை அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் 6000 பேர் உயிரிழந்துள்ளனர். 2,44,000 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் நியூயார்க் நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு மட்டும் 1,500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வாசனைகளை முகர முடியாமல் போவதும், உணவுப் பொருட்களின் சுவைகளை அறிய முடியாமல் போவதும்கூட கொரோனா தொற்றின் (கோவிட்-19) அறிகுறிகள் என்பது பிரிட்டன் ஆய்வாளர்களின் கூற்று.
தங்களுக்கு கோவிட் -19இன் அறிகுறிகள் இருக்கலாம் என்று நினைத்து, அறிகுறிகளை ஒரு செயலியில் பதிவிட்ட நான்கு இலட்சம் மக்களின் தகவல்களை லண்டனில் உள்ள கிங்க்ஸ் கல்லூரி குழு ஒன்று ஆய்வு செய்தது.
ஆனால், இவ்வாறு வாசங்களை முகர முடியாமல் போவதும், சுவை உணர்வை இழப்பதும், சாதாரண சளி போன்ற ஏனைய சுவாசப் பிரச்சனைகளின் அறிகுறிகளாக இருப்பவையே.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு இன்னும் நிறைய பேர் முகக்கவசம் அணிய வேண்டுமா?
உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள சிறப்பு குழு ஒன்று இந்த கேள்விக்கான பதிலை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளது.
அமெரிக்காவில் சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு முடிவின்படி, கொரோனா பாதித்த ஒருவர் இருமினால் அது ஆறு மீட்டர் வரையும், தும்மினால் எட்டு மீட்டர் வரையும் இருப்பவர்களை பாதிக்கக் கூடும். இது தற்சமயத்தில் உலக சுகாதார நிறுவனத்தால் நம்பப்பட்டு வரும் தூரத்தை விட அதிகம். எனவே, இந்த சிறப்பு குழுவானது வைரஸின் பரவல் தூரம் குறித்து ஆய்வு நடத்த உள்ளது.
பெரு நாட்டில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஆண்கள் திங்கட்கிழமை, புதன்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க வீட்டைவிட்டு வெளியே வரலாம் என்றும், பெண்கள் செவ்வாய்க்கிழமை, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வீட்டைவிட்டு வெளியே வரலாம் எனவும் அந்நாட்டின் அதிபர் மார்டின் விஸ்காரா தெரிவித்துள்ளார்.
மேலும் ஞாயிறன்று இருபாலரும் வீட்டைவிட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை ஏப்ரல்12 ஆம்தேதி வரை செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் அமெரிக்க நாடுகளில் முதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த ஒரு சில நாடுகளில் பெருவும் ஒன்று.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஆப்பிரிக்க நாடான மலாவியும் இணைந்துள்ளது.
அந்த நாட்டில் முதல் முறையாக மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், கொரோனா வைரஸ் நோய்த்தொற்று ஏற்படாத ஆப்பிரிக்க நாடுகளின் பட்டியலில் லெசோதோ, காமரோஸ், தெற்கு சூடான், சவ் டோமே மற்றும் பிரின்சிபே ஆகிய நாடுகள் நீடிக்கின்றன.
உலக அளவில் பார்க்கும்போது, இன்னும் 18 நாடுகளில் கொரோனா வைரஸால் ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை.
கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தின் "தியாகிகளுக்கு" நாளை (சனிக்கிழமை) சீனா முழுவதும் மூன்று நிமிட மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட உள்ளது.
சீனாவின் உள்ளூர் நேரடிப்படி காலை 10 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்வை தொடர்ந்து விமானங்கள் மற்றும் கார்களில் சைரன்கள் ஒலிக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் அரசு ஊடகமான சின்ஹுவா செய்தி வெளியிட்டுள்ளது.
சீனாவில் உருவானதாக கருதப்படும் கொரோனா வைரஸ், கடந்த டிசம்பர் மாதத்தின் இறுதியில் கண்டறியப்பட்டது முதல் இதுவரை உலகம் முழுவதும் 53,000க்கும் அதிகமானோரின் உயிரை பறித்துள்ளது.
சீனாவில் மட்டும் இதுவரை 3,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எனினும், கடந்த சில வாரங்களாக சீனாவில் கோவிட்-19 நோய்த்தொற்று கட்டுக்குள் வந்துள்ளதை தரவு சுட்டிக்காட்டுகிறது.
ஜப்பானின் விரிவுபடுத்தப்பட்ட பயணத்தடை திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி, பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தென் கொரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களும் இனி ஜப்பானுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இதன் மூலம், 70க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இனி மறு அறிவிப்பு வரும் வரை ஜப்பானிற்குள் நுழைய முடியாது. ஜப்பானின் குடியுரிமை, நிரந்தர வசிப்புரிமை பெற்றவர்கள் தொடர்ந்து வெளிநாடுகளில் இருந்து ஜப்பான் வருவதற்கு தடையேதுமில்லை.
ஆனால், அவர்கள் தங்களைத் தாங்களே 14 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயம். கொரோனா வைரஸால் ஜப்பானில் இதுவரை 2,495 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 62 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, கொரோனா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ள டோக்கியோவில் சமூக விலக்கத்தை கடைபிடிக்காத மக்கள் மீது வழங்குகள் பாயும் என்று அந்த நகர காவல்துறை எச்சரித்துள்ளது.
உலக அளவில் தொடர்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம், கடந்த சில நாட்களாக இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி தனது ட்விட்டரில் நாட்டு மக்களுக்கு காணொளி செய்தியொன்றை பகிர்ந்துள்ளார்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு அவர் பகிர்ந்த அந்த காணொளியில், கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த இந்தியா எடுத்துவரும் நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார்.
''கொரோனா வைரஸுடனான போரில் நாம் 9 நாட்களை நிறைவு செய்துள்ளோம். தற்போது அமலில் உள்ள முடக்கநிலைக்கு நாட்டு மக்கள் நல்ல ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்'' என்று அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக அமெரிக்க பொருளாதாரம் ஆட்டம் கண்டுவருவதால், வேலையின்மை சலுகைகளை எதிர்பார்க்கும் அமெரிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக இரண்டாவது வாரமாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
மார்ச் 28ஆம் தேதியோடு முடிவடைந்த வாரம் வரையில், 66 லட்சம் அமெரிக்கர்கள் வேலையின்மை சலுகை கோரி விண்ணப்பித்துள்ளதாக அந்தநாட்டின் தொழிலாளர்துறை தெரிவித்துள்ளது.
சென்ற வாரத்தோடு ஒப்பிடுகையில் இரட்டிப்பாகியுள்ள வேலையின்மை எண்ணிக்கை இதன்மூலம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,40,000 தாண்டி சென்று கொண்டிருப்பதால்,அந்த நாட்டு தொழில்துறைக்கு பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,600 கடந்து சென்று கொண்டிருப்பதால்,நாட்டில் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தொடர உள்ளதாக வெள்ளை மாளிகை சமீபத்தில்அறிவித்திருந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு, நாட்டு மக்களுக்கு ஒரு சிறிய காணொளிச் செய்தியை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி பகிரவுள்ளார்.
இந்த தகவலை அவர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
எனினும் இது கொரோனா வைரஸ் பரவல் குறித்த ஏதாவது செய்தியா என்று அவர் குறிப்பிடவில்லை.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள இரண்டாவது நாடாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது.
முன்னதாக,இத்தாலி இந்த எண்ணிக்கையை தாண்டியிருந்தது.
ஸ்பெயினில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவிட்-19 நோய்த்தொற்றால் 950 பேர்உயிரிழந்துள்ளனர்.கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து,ஸ்பெயினில் ஒரேநாளில் பதிவாகும் அதிகபட்ச உயிரிழப்பு எண்ணிக்கை இதுதான்.
சமீபத்திய நிலவரப்படி,ஸ்பெயினில் இதுவரை கொரோனா வைரஸால் 1,12,000 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,348 ஆகஉள்ளது.
எனினும்,அடுத்த சில நாட்களில் ஸ்பெயினில் கொரோனா வைரஸின் பாதிப்பு குறையும் என்று அந்த நாட்டு அரசு அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலகளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம். இந்தியா மற்றும் தமிழகத்தின் சமீபத்திய நிலவரங்களும் இங்கே வழங்கப்படும்.