கொரோனாவுக்கு எதிரான போரில் இறந்தவர்களை கௌரவிக்கும் சீனா

கோவிட்-19 தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த மருத்துவ பணியாளர்களை ‘தியாகிகள்’ பட்டியலில் சேர்த்துள்ளது சீனா.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. சீனாவில் கொரோனா சிகிச்சையில் கரடியின் பித்தநீர்

    கொரோனா தொற்றால் உடல்நலம் மோசமாகியுள்ள நோயாளிகளுக்கு மருந்தாக கரடியின் பித்தநீரை பயன்படுத்த சீனா ஒப்புதல் வழங்கியுள்ளது.

    சீனாவின் தேசிய ஆணையம், கரடியின் பித்தநீர், ஆட்டின் கொம்பு மற்றும் மூலிகைகள் அடங்கிய 'டாங்ரேகுவிங்' ஊசியை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியுள்ளது.

    ஆனால் இந்த கலவைக்கு மருத்துவ குணம் உள்ளது என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

    சீனாவின் பாரம்பரிய மருத்துவத்தில் கரடியின் பித்தநீர் பல காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் சட்டவிரோதமாக செயல்படும சர்வதேச சந்தையில் அது அதிகவிலையில் விற்கப்படும்.

    கரடியின் பித்தநீரை பயன்படுத்த ஒப்புதல் வழங்கியிருப்பது விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கோபத்தை எழுப்பியுள்ளது.

    மேலும் இதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான் உணவுக்காக வனவிலங்குகள் விற்கப்படுவது தடை செய்யப்பட்டது.

    பித்தநீர் கல்லீரலில் சுரக்கும். பித்தப்பையில் சேகரிக்கப்படும்.

    China approves bear bile as treatment

    பட மூலாதாரம், Getty Images

  2. இஸ்ரேலின் சுகாதார அமைச்சருக்கு கொரோனா வைரஸ் தொற்று

    இஸ்ரேலின் சுகாதார அமைச்சருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

    அந்நாட்டில் தற்போது வரை ஆறாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 பேர் பலியாகியுள்ளனர்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  3. மும்பை தாராவியில் ஒருவருக்கு கொரோனா தொற்று

    ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியாக அறியப்படும், பத்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழக்கூடிய மும்பை தாராவி பகுதியில், ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால் அந்த நபர் உயிரிழந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் இன்று காலை முதல் செய்தி வெளியிட்டு வருகின்றன. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

    இந்நிலையில் இன்று இவர் உயிரிழந்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நபர் இருக்கும் கட்டிடம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

    மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள தாராவி பகுதியில் சமூக விலகலை கடைபிடிப்பது கடினம் என்பதால், இந்த பகுதி இந்தியாவின் கொரோனா மையமாக உருவாகலாம் என பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  4. ஆஸ்திரேலியாவில் என்ன நிலை?

    ஆஸ்திரேலியாவில் நேற்று மட்டும் 300 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டில் தற்போது வரை ஐந்தாயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23 பேர் பலியாகியுள்ளனர்.

    ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் ஊடரங்கு உத்தரவானது, அடுத்த 90 நாட்களுக்கு தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு கடும் அபராதங்களை அந்நாட்டு அரசு விதித்து வருகிறது.

    இந்நிலையில் மகிழ்ச்சி தரும் செய்தியாக, ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் மற்றும் இனோவியோ மருந்து நிறுவனம் ஆகியவை தனித்தனியே உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பு மருந்தை ஆஸ்திரேலியா சோதிக்க தொடங்கியுள்ளது.

    இதே போல பல நாடுகள் கொரோனா தொடர்பான தடுப்பு மருந்துகளை சோதித்து வந்தாலும், முழுமையான மருந்தை உருவாக்க இன்னும் காலம் ஆகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

    ஆஸ்திரேலியாவில் என்ன நிலை?

    பட மூலாதாரம், Getty Images

  5. கொரோனா சிகிச்சை அளிக்க முன்வந்த ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்

    பிரிட்டனில் இதுவரை இல்லாத அளவு ஒரே நாளில் 563 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனை அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன், மிகவும் சோகமான நாள் என விவரித்துள்ளார்.

    தற்போது வரை பிரிட்டனில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,352ஆக உள்ளது.

    அதில் இந்த தொற்றுக்கு எதிராக உதவி செய்ய வந்த ஓய்வு பெற்ற மருத்துவர் ஒருவரும் அடங்குவார். 68வயதான மருத்துவர் ஆல்ஃபா சாஅடு ஹெட்ஃபோர்ட்ஷைரில் உள்ள மருத்துவமனையில் தாமாக முன்வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தார்.

    ஆயிரக்கணக்கான சுகாதாரப் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசு கூறுகிறது.

    ஆனால், போதுமான ரசாயணங்கள் இல்லாததால் அனைவருக்கு இந்த பரிசோதனையை மேற்கொள்ள முடியவில்லை. எனினும், தங்கள் திறனைஉயர்த்த முயற்சிகள் எடுத்து வருவதாக அந்நாடு கூறுகிறது.

    கொரோனா தொற்று

    பட மூலாதாரம், Getty Images

  6. பெரும் அச்சுறுத்தலில் மியான்மர்

    நம்மில் பெரும்பாலானோரும் அரசாங்க விதிமுறைகளை பின்பற்ற முயற்சி செய்து வருகிறோம். வீட்டிலேயே தங்குவது, சமூக விலகலை கடைபிடிப்பது மற்றும் நல்ல சுகாதார முறையை பின்பற்றுவது. அதாவது அடிக்கடி கைகளை கழுவுவது.

    ஆனால், உலகில் உள்ள அனைவருக்கும் இது சாத்தியமாக இருப்பதில்லை.

    குறிப்பாக மியான்மரில் உள்ள முகாம்களில் வாழும் ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்த மக்களுக்கு, சுத்தமான நீர் மற்றும் பிற அடிப்படை சேவைகள் கிடைப்பதே கடினமாக உள்ளது.

    வகுப்புவாத வன்முறையால் மியான்மரில் ஆயிரக்கணக்கான மக்கள் குடிபெயர்ந்துள்ளனர். அதில் பலரும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் ஆவர்.

    மனித உரிமை கண்காணிப்பகத்தின் அறிக்கைப்படி அந்த முகாமில் ஒரு கழிவறையை 40 பேர் பகிர்ந்து கொள்ளும் சூழல் இருக்கிறது. அப்படி என்றால் அங்கு யாரேனும் ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இது வேகமாக பரவும்.

    அங்கு சுமார் 3,50,000 மக்கள் பொது சுகாதார பேரழிவில் இருப்பதாக கூறப்படுகிறது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  7. உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டுகிறது

    உலகளவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இந்திய நேரம் காலை 10 மணி வரை 9,37,170-ஆக உள்ளது.

    எந்தெந்த நாடுகள் எவ்வளவு மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

    இந்த எண்ணிக்கை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பரிசோதனை நிலைக்கு ஏற்றவாறே இந்த எண்ணிக்கை இருக்கும்.

    உண்மையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் வேறுபாடுகள் இருக்கலாம்

    நாடு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை

    அமெரிக்கா 215,417

    இத்தாலி 110,574

    ஸ்பெயின் 104,118

    சீனா 82,381

    ஜெர்மனி 77,981

    பிரான்ஸ் 57,763

    இரான் 47,593

    பிரிட்டன் 29,865

    சுவிட்ஸர்லாந்து 17,768

    துருக்கி 15,679

    ஆதாரம் - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

  8. அனைவரும் மாஸ்க் அணிய வேண்டுமா?

    உலகில் பல மக்களுக்கும் வல்லுநர்களுக்கும் இருக்கும் கேள்வி முகமூடி அணிய வேண்டுமா கூடாதா என்பதுதான்.

    ஆசியாவில் பலரும் முகமூடி அணியும் நிலையில், மேற்கத்திய நாடுகளில் சுகாதார பணியாளர்கள் மற்றும் உடல்நலம் சரியில்லாதவர்கள் மடடுமே அணிந்திருக்கிறார்கள்.

    தற்போது யாரெல்லாம் முகமூடி அணிவது குறித்து உலக சுகாதார நிறுவனம், மறுமதிப்பீடு செய்துவருகிறது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  9. உலகளவில் சமீபத்திய நிலவரங்கள் என்ன?

    நெதர்லாந்தில் மேலும் புதிதாக 134 பேர் உயிரழந்திருக்க, அங்கு உயிரிழந்த நிலையில், மொத்த எண்ணிக்கை 1,175ஆக உள்ளது. எனினும், மக்கள் மருத்துவமனைகளுக்கு செல்வது குறைந்து காணப்படுகிறது.

    ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் ஹஜ் புனித யாத்திரையாக மெக்கா மற்றும் மதீனா செல்வோர் தங்களது முன்பதிவுகளை தற்போது செய்யாமல், சற்று தாமதமாக்கும்படி முஸ்லிம் மக்களை செளதி அரேபிய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

    சுவிட்ஸர்லாந்தில் தற்போது வரை 488 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

    ரஷ்யாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,777ஆக உள்ளது. இதுவரை அங்கு மொத்தம் 24 பேர் இறந்துள்ளனர்.

    சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பல மருத்துவ உபகரணங்களின் தரம் குறித்து பல ஐரோப்பிய நாடுகள் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதன் தரத்தை உறுதிபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறதாக சீனா தெரிவித்துள்ளது.

    தேசிய நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஐரோப்பிய யூனியனிடம் கடன் நிவாரணத்திற்காக 100 பில்லியன் டாலர்ளை, அவசர நிதியாக ஆப்பிரிக்க நித அமைச்சர்கள் கேட்டுள்ளனர்.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images

  10. உலக அளவில் பாதிப்பு, உயிரிழப்பு என்ன?

    ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள்படி, இந்திய நேரம் காலை 9 வரை உலகளவில் 9,35,800க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.47,208 பேர்உயிரிழந்துள்ளனர்.

    உலக அளவில் பாதிப்பு, உயிரிழப்பு என்ன?

    பட மூலாதாரம், EPA

  11. போராட்டக்காரர்களை சுட்டுவிடுங்கள் - பிலிப்பைன்ஸ் அதிபர்

    நாட்டில் கோவிட் 19 காரணமாக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்கள் கலவரம் செய்தால் அவர்களை சுட்டு விடுங்கள் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே உத்தரவிட்டுள்ளார்.

    மெட்ரோ மணிலாவில் உணவு முறையாக விநியோகிக்கப்படவில்லை என இடதுசாரி குழுக்களின் உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தை தொடங்கியதையடுத்து, அவர் இவ்வாறு உத்தரவிட்டார். "பிரச்சனை ஏற்பட்டு சண்டையிட்டால், உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டால் அவர்களை சுட்டுவிடுங்கள்" என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ரொட்ரிகோ டுடெர்டே தெரிவித்தார்.

    பிலிப்பைன்ஸ் நாட்டின் பல பகுதிகளில் "மேம்படுத்தப்பட்ட சமூக தனிமைப்படுத்துதல்" கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதோடு கொரோனா பரவலை கட்டுப்படுத்த பயண கட்டுப்பாடுகள் மற்றும் ஊரடங்கு உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.ஊரடங்கு உத்தரவை மீறுபவர்கள் நாய் கூண்டுகளில் அடைக்கப்படுவது அல்லது உச்சி வெய்யிலில் அமர நிர்பந்திக்கப்படுவது போன்ற புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவுவது மனித உரிமை அமைப்புகளை கவலையடைய செய்துள்ளது.

  12. அச்சத்தில் சிங்கப்பூர் மக்கள்

    சிங்கப்பூரில் கொரோனா வைரஸ் தொற்றால் வியாழக்கிழமையன்று நான்காவது மரணம் பதிவாகியுள்ளது. அங்கு இத்தொற்றால் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4 மரணங்கள் என்பது மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதே.

    எனினும், அரசாங்க நடவடிக்கைகள் மீது நம்பிக்கை கொண்டிருந்த அந்நாட்டு மக்கள், தற்போது அச்சப்பட தொடங்கியுள்ளனர்

    அங்கு வெளியே செல்வதற்கு பல விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், பலரும் தேவையில்லாமல் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ளிவில்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

    தற்போது வரை, வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மீதே அந்நாட்டு அரசு கவனம் செலுத்திவந்தது. ஆனால், கடந்த சில நாட்களில் இந்த நிலை மாறியுள்ளது.

    தற்போது கொரோனா தொற்று உள்ளூரில் பரவத்தொடங்கியிருப்பது பெரும் பிரச்சனையாக பார்க்கப்படுகிறது.

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

  13. அடுத்தடுத்து மரணங்கள் - கடும் பாதிப்பில் ஸ்பெயின்

    ஸ்பெயினில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 864 பேர் உயிரிழந்துள்ளனர்.

    இதனையடுத்து ஸ்பெயனில் இந்த வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9000த்தை கடந்துவிட்டது.

    இத்தாலியை அடுத்து ஸ்பெயினில்தான் அதிக மரணங்கள் பதிவாகி இருக்கின்றன. மொத்தமாக ஐரோப்பாவை எடுத்துக் கொண்டால், அங்கு கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 30,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    ஸ்பெயினில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. எனினும், தற்போது அங்கு புதிதாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது.

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், g

  14. பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழின் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

    கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக உலகளவில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம். இந்தியா மற்றும் தமிழகத்தின் சமீபத்திய நிலவரங்களும் இங்கே வழங்கப்படும்.

    இதுவரை நடந்தது குறித்து அறிந்து கொள்ள:Link

    கோப்புப்படம்

    பட மூலாதாரம், Getty Images