கிருஷ்ணகிரி: இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (டிசம்பர் 2) மாலை இரண்டு அரசுப் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் பலர் காயமடைந்தனர்.
திருவண்ணாமலையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், ஓசூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கிச் சென்ற மற்றொரு அரசுப் பேருந்தும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரைக்கு அருகிலுள்ள சாமல்பட்டி ரயில்வே தரைப்பாலம் பகுதியில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இந்த விபத்தில் பேருந்து நடத்துநர் சீனிவாசன் (48) என்பவருக்கு கால் முறிவு ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவரும் படுகாயமடைந்தார்.
மேலும், மூன்று குழந்தைகள் உள்பட 11 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு இருப்பதாகவும் காயமடைந்த அனைவரும் ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்து குறித்து சாமல்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
‘இலங்கைக்கான நிவாரண உதவிகளை இந்தியா தடுத்து வருகிறது’- பாகிஸ்தான் குற்றச்சாட்டு
பட மூலாதாரம், X/@ForeignOfficePk
படக்குறிப்பு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தர்
இலங்கைக்கான தனது நிவாரண உதவியை இந்தியா தடுத்து நிறுத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
"பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் நிவாரண உதவிகளை இந்தியா தடுத்து வருகிறது. பாகிஸ்தானின் நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் சிறப்பு விமானம் 60 மணிநேரத்திற்கும் மேலாகத் தாமதமாகி, தற்போது இந்தியாவின் விமான அனுமதிக்காக காத்திருக்கிறது" என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
“இந்தியாவால் நேற்று இரவு, 48 மணிநேரத்திற்குப் பிறகு வழங்கப்பட்ட பகுதியளவிலான விமான அனுமதி, செயல்பாட்டு ரீதியில் நடைமுறைப்படுத்த முடியாததாக இருந்தது. ஏனெனில், அது சில மணிநேரங்களுக்கான காலக்கெடுவுடன் இருந்தது. திரும்பிச் செல்வதற்கான அனுமதி அதில் இடம்பெறவில்லை. இதனால், இலங்கை நாட்டு மக்களுக்கு அவசர நிவாரணம் வழங்கும் பணிக்கு அது பெரும் தடையாக இருந்தது” என்றும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, “இலங்கைக்கு நிவாரண உதவிகளை அனுப்புவதற்காக பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியா அனுமதிக்கவில்லை” என்று பாகிஸ்தான் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய அதிகாரிகள் திங்களன்று மறுத்துள்ளனர்.
‘அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகளில் நாங்கள் தலையிட முடியாது’- ரஷ்யா கூறியது என்ன?
பட மூலாதாரம், ANI/Sputnik
படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பத்திரிகைச் செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ்.
ரஷ்ய எண்ணெய் கொள்முதல் காரணமாக இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அதிக வரிகள் குறித்த கேள்விக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் பத்திரிகைச் செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பதிலளித்துள்ளார்.
"அமெரிக்கா, இந்தியா இடையிலான உறவுகளில் நாங்கள் தலையிட முடியாது. இந்தியா அழுத்தத்தில் உள்ளது என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். அதனால்தான், எந்தவொரு மூன்றாம் நாட்டின் செல்வாக்கும் இல்லாமல் பரஸ்பர உறவுகளைக் கட்டமைப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்" என்று டிமிட்ரி பெஸ்கோவ் ஓர் இணைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
"இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில், பரஸ்பர உறவுகளையும் வர்த்தகத்தையும் நாம் பாதுகாக்க வேண்டும். தனது தேசிய நலனைத் தீர்மானிக்கும் சுதந்திரம் இந்தியாவுக்கு உண்டு என்பதை நாம் அறிவோம். இந்தியாவின் தனித்துவமான இந்தத் தன்மையை நாங்கள் பாராட்டுகிறோம்" என்றும் அவர் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் டிசம்பர் 4-5 ஆகிய தேதிகளில் இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். இந்தப் பயணத்தின்போது, அவர் பிரதமர் நரேந்திர மோதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மூ அவரை வரவேற்கிறார்.
கோவை பாலியல் வன்கொடுமை வழக்கில் புதிய தகவல் - காவல்துறை கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
கோவையில் கடந்த மாதம் 2ஆம் தேதி கல்லுாரி மாணவி ஒருவர், தனது நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த 3 பேர் கார் கண்ணாடியை உடைத்து, நண்பரை அரிவாளால் வெட்டிவிட்டு, அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவத்தில் மூன்று பேரை சுட்டுப் பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
“இந்த வழக்கில் கருப்பசாமி, காளீஸ்வரன், குணா என்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் காளீஸ்வரன், கருப்பசாமி ஆகிய இருவரும் சகோதரர்கள். மூவர் மீதும் பீளமேடு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்” என காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் கைதான 3 பேரும், செரையாம்பாளையம் பகுதியில் தேவராஜ் என்ற ஆட்டு வியாபாரியைக் கொலை செய்தது விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன் பிறகு அவர்கள் அதே நாளில், கோவை விமான நிலையம் அருகில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள் என்றும் காவல்துறை கூறுகிறது.
காவல்துறையால் சுட்டுப் பிடிக்கப்பட்ட பின் இவர்கள், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் 3 பேரையும் கடந்த நவம்பர் 27ஆம் தேதி ஒருநாள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
"விசாரணையின்போது அன்னூர் அருகே செரையாம்பாளையம் பகுதியில் நவம்பர் 2ஆம் தேதி காலையில் தேவராஜ் என்ற ஆட்டு வியாபாரியை இவர்கள் மூவரும் அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. வழக்கமாக தேவராஜ் ஓய்வ்எக்கும் இடத்தின் அருகில் 3 பேரும் அமர்ந்து மது அருந்திய நிலையில், தேவராஜ் இவர்களைக் கண்டித்ததாகவும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட வாக்குவாதத்தில், தேவராஜை கட்டையால் தாக்கி விட்டு 3 பேரும் கிளம்பிச் சென்றதாகவும் தெரிவித்துள்ளனர்" என்று காவல்துறை கூறியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது, நவம்பர் 5ஆம் தேதி தேவராஜை காணவில்லை என்ற புகார் வந்திருப்பதும், 6ஆம் தேதி கோவில்பாளையம் காவல் எல்லையில் இருந்து தேவராஜின் சடலம் மீட்கபட்டிருப்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து தேவராஜ் கொலை வழக்கில் மூன்று பேரையும் விசாரிக்க கோவில்பாளையம் போலீசார் முடிவு செய்துள்ளனர் என்றும் இதுதொடர்பாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து 3 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க கோவில்பாளையம் போலீசார் திட்டமிட்டு இருப்பதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஐபிஎல் ஏலம்: மேக்ஸ்வெல், மொயின் அலி இல்லை!
பட மூலாதாரம், Getty Images
2026 ஐபிஎல் தொடருக்கான ஏலம் அபு தாபியில் டிசம்பர் 16-ம் தேதி நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கெடுக்க மொத்தம் 1355 வீரர்கள் தங்கள் பெயரை பதிவு செய்திருப்பதாக கிரிக்இன்ஃபோ தளம் சொல்கிறது.
இந்த ஏலத்தில் அதிகபட்சமாக மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்படலாம். அதில் 31 இடங்கள் வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்.
ஏலத்துக்கு பதிவு செய்திருக்கும் வீரர்களில் 45 பேர், தங்கள் அடிப்படை விலையாக 2 கோடி ரூபாயை நிர்ணயித்திருக்கிறார்கள். கேமரூன் கிரீன், லிவிங்ஸ்டன், ரவி பிஷ்னாய் வெங்கடேஷ் ஐயர் போன்றவர்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருக்கிறார்கள்.
முன்னணி வீரர்களான கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மொயின் அலி ஆகியோர் இந்த ஏலத்துக்கு தங்கள் பெயர்களை பதிவு செய்யவில்லை. கடந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடிய போதே மேக்ஸ்வெல் காயமடைந்து பாதியில் வெளியேறியிருந்தார். மொயின் அலி கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.
மற்றொரு முன்னணி ஆல்ரவுண்டரான ஆண்ட்ரே ரஸல் சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றிருந்தார்.
திருவண்ணாமலையில் நாளை மகா தீபம் - ஏற்பாடுகள் தீவிரம்
திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரையை மலை மீது ஏற்றும் பணி இன்று காலை நடைபெற்றது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கடந்த 24-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்ச்சியாக, நாளை (டிச.3)அதிகாலையில் அண்ணாமலையார் கோவிலில் நான்கு மணி அளவில் பரணி தீபம் ஏற்றப்படும். பின்னர் மாலை 6 மணி அளவில் அண்ணாமலையார் கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயர அண்ணாமலையார் மலையின் மீது மகா தீபம் ஏற்றப்படும்.
மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரையை சிறப்பு பூஜைக்குப் பிறகு மலையின் மீது ஏற்றும் பணி துவங்கியது. 5.45 அடி உயரமும், 300 கிலோ எடை கொண்ட பஞ்சலோகத்தாலான கொப்பரையை பக்தர்கள் தோளில் சுமந்து மலை மீது கொண்டு சென்றனர்.
இந்த கொப்பரையில் நாளை மாலை ஆறு மணிக்கு 4500 கிலோ நெய் நிரப்பி 1000 மீட்டர் காடா துணி பயன்படுத்தி மகா தீபம் ஏற்றப்படும்.
போரை முடிவுக்கு கொண்டு வருவது பற்றி யுக்ரேன் அதிபர் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
நாட்டின் இறையாண்மை, வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவதே தங்களது முன்னுரிமையாக இருக்கும் என்று யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.
ரஷ்யாவுடனான போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்துப் பேசிய அவர், "புவியியல் ரீதியான எல்லை குறித்த விஷயங்களில் தீர்வு காண்பது மிகவும் கடினம்" என்றார்.
ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்டதாக அறிவித்த டான்பாஸ் பிராந்தியத்தில் யுக்ரேன் கட்டுப்பாட்டில் இன்னும் எஞ்சியுள்ள பகுதிகளை விட்டுத் தர வேண்டும் எனறு வலியுறுத்துகிறது.
ஆனால், யுக்ரேனோ அந்த பகுதிகளை விட்டுத்தர முடியாது என்று திட்டவட்டமாக மறுக்கிறது.
பாரிஸில் பிரெஞ்சு அதிபர் மக்ரோங்கை சந்தித்த பிறகு ஸெலன்ஸ்கி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். அங்கே பிரிட்டன், ஜெர்மனி, போலந்து, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களையும் அவர் சந்தித்திருந்தார்.
அதேநேரத்தில், அமெரிக்கா மற்றும் யுக்ரேன் பிரதிநிதிகள் ஃபுளோரிடாவில் 2 நாள் பேச்சுவார்த்தை முடித்துள்ளனர். ரஷ்யாவுக்கு சாதகமாக இருக்கும் என்று கருதப்படும் அமைதித் திட்டத்தில் சில திருத்தங்களை செய்வது தொடர்பாக அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.
வணக்கம் நேயர்களே!
இன்று (01.11.2025) நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது பிரதீப் கிருஷ்ணா.
இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 390 ஆக உயர்வு
இலங்கையில் திட்வா புயலினால் எற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 390 ஆக உயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
அனார்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, உயிரிழந்தோர் எண்ணிக்கை 390 ஆகவும் காணாமல் போனோர் எண்ணிக்கை 352 ஆகவும் உள்ளது.
382,651 குடும்பங்களைச் சேர்ந்த 1,373,899 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்டநெரிசல்: சிபிஐ விசாரணையைக் கண்காணிக்கும் அதிகாரிகளுள் ஒருவர் கரூர் வந்தார்
பட மூலாதாரம், Getty Images
கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் கூட்டத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்த சிபிஐ விசாரணையைக் ஓய்வு பெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான சிறப்பு குழு கண்காணிக்கிறது. அந்தக் குழுவில் உள்ள ஐபிஎஸ் அதிகாரியான சுமித்சரண், இன்று (டிசம்பர் 1) கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு வந்துள்ளார். இந்த வழக்கில் சிபிஐ இதுவரை விசாரணை செய்த தரவுகளை அவர் ஆய்வு செய்யவுள்ளார்.
நாகூர் தர்கா கந்தூரி விழாவில் பங்கேற்க, பிரபல திரைப்பட இசையமைப்பளார் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்திறங்கினார்.
நாகூர் தர்காவின் 469-ம் ஆண்டு கந்தூரி விழா நவம்பர் 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகையில் நேற்றிரவு தொடங்கிய சந்தனக்கூடு ஊர்வலம் இன்று (டிசம்பர் 1) அதிகாலை நாகூர் தர்காவை அடைந்தது. அதன்பின் நாகூர் ஆண்டவர் சமாதிக்கு, பாரம்பரிய முறைப்படியிலான 'சந்தனம் பூசும் வைபவம்' நடைபெற்றது.
இந்த சந்தனம் பூசும் வைபவத்தில் தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பிரபல திரைப்பட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆட்டோவில் வந்து கலந்துகொண்டார்.
சந்தனக்கூடு ஊர்வலம் காரணமாக நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், UGC
திருத்துறைப்பூண்டி: மழையால் வீட்டின் சுவர் இடிந்தது
திருத்துறைப்பூண்டி அருகே நள்ளிரவில் ஒரு வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ளது அரியலூர் கிராமம். இங்கு வசிக்கும் ஜீவா- கலையரசி தம்பதியினர், தங்களின் இரு மகன்களோடு நேற்றிரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.
தொடர் மழையால் அவரது வீட்டின் மண் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அந்தச் சுவர் கலையரசி மீது விழுந்ததில் அவர் காயமடைந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர் கலையரசியை மீட்டு ஆம்புலன்சில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். இதில் கலையரசியின் கணவர் மற்றும் இரு மகன்களும் காயமின்றி உயிர் தப்பினர்.
இலங்கை மீண்டும் எழுச்சிபெறவேண்டும் என்று மக்களுக்கு உரையாற்றிய அதிபர் அநுரகுமார திசாநாயக்க
திட்வா புயல் காரணமாக இலங்கை பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்திருக்கும் நிலையில், அதிபர் அநுரகுமார திசாநாயக்க அந்நாட்டு மக்களுக்கு உரையாற்றியிருக்கிறார்.
அந்த உரையின் சாராம்சம்:
"ஒரு நாடென்ற வகையில் நாம் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் சவாலான இயற்கை பேரழிவிற்கு முகங்கொடுத்துள்ளோம். இறந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேபோன்று காணாமல் போனவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
இந்த மீட்புப் பணியில், நமது அயல் நாடுகளும் நட்பு நாடுகளும் எங்களுக்கு பெருமளவு உதவிகளைச் செய்துள்ளன. ஹெலிகாப்டர்கள் மற்றும் நிவாரண மற்றும் மீட்புப் படைகளை வழங்குவதன் மூலம் வெளிநாடுகள் ஏற்கனவே எங்களுக்கு நட்புக் கரம் நீட்டியுள்ளன. நமது நாட்டு மக்கள் சார்பாக நாங்கள் அவர்களுக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
கடந்த வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் 3,000 கோடி ரூபாய் எங்களிடம் உள்ளது.அதை நாங்கள் நாடாளுமன்றத்தின் அனுமதி இல்லாமல் செலவிட முடியும். அதனை இந்த செயற்பாட்டிற்காக ஒதுக்கியுள்ளோம்.
இந்த பேரழிவு நடந்துள்ள தருணத்தில், நாட்டிற்காக அனைத்து அரசியல் வேறுபாடுகளையும் மறப்போம். இனம், மதம், கட்சி அல்லது நிற வேறுபாடுகள் இல்லாமல் ஒன்றுபடுவோம்." என்று அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
சேற்றில் சிக்கிய யானை 6 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்பு
தமிழ்நாடு - ஆந்திர எல்லையோர ஏரியில் சேற்றுக்குள் சிக்கிய யானை சுமார் 6 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கந்தன் சரு என்ற இடத்தில் ஏரி ஒன்று ஆந்திரா மற்றும் தமிழக எல்லையோரம் அமைந்துள்ளது. காட்டில் இருந்து தண்ணீர் குடிப்பதற்காக கந்தன் சரு வழியாக ஏரிக்கு வந்த யானை ஒன்று சேற்றுக்குள் சிக்கி எழ முடியாமல் போராடிக் கொண்டிருந்தது.
இதை பார்த்த
அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் குடியாத்தம் வனத்துறையினர் அங்கே விரைந்தனர். அதேநேரத்தில், ஆந்திர வனத்துறையினரும் வந்து சேர, இரு மாநில வனத்துறையினரும் இணைந்து சேற்றில் சிக்கிய யானையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் உதவியுடன் ஜேசிபி இயந்திரம் மூலம் ஆறு மணி போராட்டத்திற்குப் பின்னர் யானையை அவர்கள் பத்திரமாக மீட்டு, ஏரி கரையோரம் கொண்டு வந்தனர். ஆந்திராவில் இருந்து இரண்டு கும்கி யானைகளை வரவழைத்து, அவற்றின் உதவியுடன் சேற்றில் சிக்கி காயம் அடைந்த யானை சிகிச்சைக்காக ஆந்திர மாநிலம் பலமனேரியில் உள்ள யானைகள் சரணாலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
'யுக்ரேனுடனான பேச்சு பயனுள்ளதாக அமைந்தது' - ரூபியோ
பட மூலாதாரம், Reuters
"ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்து யுக்ரேனுடன் நடத்திய பேச்சுவார்த்தை பயனுள்ளதாக இருந்தது, ஆனால் செய்ய வேண்டிய பணிகள் இன்னும் உள்ளன" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
ஃபுளோரிடாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், யுக்ரேனின் புதிய தலைமை பேச்சுவார்த்தையாளரான தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ருஸ்டெம் உமெரோவ் தலைமையில் அந்நாட்டு தூதுக்குழு கலந்து கொண்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும் இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அடுத்த வாரம் பேச்சுவார்த்தைக்காக விட்காஃப் மாஸ்கோ செல்கிறார்.
யுக்ரேனின் அதிபரின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளரான ஆண்ட்ரி யெர்மக் அவரது வீட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு சோதனை நடந்ததைத் தொடர்ந்து பதவி விலகிய பின்னர், அவரது இடத்தில் உமெரோவ் வந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நடந்தேறிய இந்த சந்திப்பு இரண்டு வாரங்களாக நீடிக்கும் தீவிர இராஜதந்திர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்.
வணக்கம் நேயர்களே!
இன்று (01.11.2025) மதியம் வரையிலும் நேரலை பக்கத்துக்கான செய்திகளை தொகுத்து வழங்குவது பிரதீப் கிருஷ்ணா.