ஒரு வாக்கில் வென்ற தவெக எம்எல்ஏ - வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
திருப்பத்தூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்த தவெக எம்எல்ஏ சீனிவாச சேதுபதி சட்டப்பேரவையில் எம்எல்ஏவாக பதவியேற்றுக்கொண்டார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் சீனிவாச சேதுபதி முன்னாள் அமைச்சர் பெரியகருப்பனை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், சீனிவாச சேதுபதி எம்எல்ஏவாக பதவியேற்க தடை விதிக்கக் கோரி திமுக வேட்பாளர் பெரியகருப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, சிவகங்கை மாவட்டத்தின் திருப்பத்தூர் தொகுதிக்கு உரிய வாக்குகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் தொகுதிக்குத் தவறுதலாக அனுப்பப்பட்டிருப்பது ஒரு அசாதாரணமான சூழ்நிலை என்று வாதிட்டதாக ‘லைவ் லா’ செய்தி தெரிவிக்கிறது.
பெரியகருப்பன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் இளங்கோ, மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் திரும்பி வந்துவிட்டதாகவும், ஆனால் தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் சென்று சேர்ந்துவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை உயர் நீதிமன்ற விடுமுறைக்கால அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்ததாக ‘பார் அண்ட் பெஞ்ச்’ செய்தி தெரிவிக்கிறது. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு தங்களின் பங்கு முடிந்துவிட்டதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.