You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மூன்று விவசாயிகள் சட்டங்களை திரும்பப் பெற முடியாது - மத்திய அரசு

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு எப்போதும் தயாராக உள்ளது. ஆனால், வரும்போது விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் கைவிட்டு விட்டு வர வேண்டும் என்கிறார் இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது - மத்திய அரசு

    இந்திய அரசு அமல்படுத்தியிருக்கும் மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற முடியாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

    இந்த சட்டங்கள் தங்களுடைய நலன்களுக்கு எதிராக உள்ளதாகக் கூறி டெல்லி எல்லையில் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களின் விவசாயிகள் மாதக்கணக்கில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகளுடன் இந்திய அரசு பல சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தியபோதும் சுமூக தீர்வு எட்டப்படவில்லை.

    இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கொரோனா காலத்திலும் தொடரும் விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துமா என்று கேட்கப்பட்டது.

    அதற்கு பதிலளித்த நரேந்நதிர சிங் தோமர், "விவசாயிகளுடன் பேச்சுவார்த்தைக்கு எப்போதுமே அரசு தயாராக உள்ளது. ஆனால், வரும் முன்பு, விவசாயிகள் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை கைவிட்டு விட்டு அவர்கள் வர வேண்டும் என்று கூறியுள்ளோம்," என்று தெரிவித்தார்.

  2. பிரதமருடன் புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் சந்திப்பு

    புதுச்சேரி பாஜக எம்எல்ஏக்கள் பிரதமர் நரேந்திர மோதியுடன் சந்திப்பு‌ புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோதியை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.

    புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதையடுத்து அண்மையில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்றது.

    இந்த நிலையில், புதுச்சேரி பாஜக தலைவர் சுவாமிநாதன் தலைமையில் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிரதமர் நரேந்திர மோதியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப்பேசினர்.

    புதுச்சேரி பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள், பாஜகவுக்கு ஆதரவளித்த சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மூன்று நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

    இந்த சந்திப்பின் போது பிரதமர் நரேந்திர மோதியிடம் பல்வேறு கோரிக்கைகளை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்ததாக புதுச்சேரி பாஜக சட்டமன்ற கட்சி தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

    அதில், "புதுச்சேரியின் கடன் தொகையைத் தள்ளுபடி செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. புதுச்சேரிக்கு வரவேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை விரைவாக கொடுக்குமாறு வலியுறுத்தப்பட்டது. கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரிக்கு தேவையான உதவிகளை செய்யுமாறு வலியுறுத்தப்பட்டது.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் அதிக எண்ணிக்கையிலான வீடுகளை கட்ட நிதி ஒதுக்குமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது. மேலும் புதுச்சேரியின் வளர்ச்சிக்கான பல திட்டங்கள் குறித்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது," என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதைத்தொடர்ந்து தொடர்ந்து புதுச்சேரி சபாநாயகர் செல்வம் பிரதமரை சந்தித்தார் அப்போது புதுச்சேரியில் தலைமை செயலகத்துடன் கூடிய புதிய சட்டமன்ற கட்டடம் கட்டுவதற்கு உதவிடும்படி பிரதமரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

  3. மதுரையில் போலி ஆவணங்களை காட்டி இறந்ததாக கூறிய குழந்தைகள் மீட்பு

    மதுரை சேக்கிப்பட்டி பகுதியை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மனநலம் குன்றிய இளம்பெண் தனது 3 குழந்தைகளுடன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சமூக ஆர்வலர் அசாருதீன் என்பவர் மூலமாக ரிசர்வ் லைன் பகுதியில் உள்ள தனியார் அறக்கட்டளைக்கு சொந்தமான ஆதரவற்றோர் முதியோர் இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.

    இந்த நிலையில் ஐஸ்வர்யாவின் 3வது குழந்தையான மாணிக்கம் என்ற ஒரு வயது ஆண் குழந்தைக்கு கடந்த 13ஆம் தேதி கொரோனா பாதிப்பு ஏற்பட்டு நரிமேடு நகர்புற சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலருக்கு தொண்டு நிறுவனத்தினர் தகவல் அளித்தனர்.

    மேலும் கொரோனா உறுதியானதால் அரசு கொரோனா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்கு செல்வதற்கான பரிந்துரை கடிதம் தொடர்பான ஆவணம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.

    இதையடுத்து நேற்று காலை கொரோனா பாதிப்பால் குழந்தை மாணிக்கம் உயிரிழந்துள்ளது என்றும் தத்தனேரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டு விட்டதாக கூறி தத்தனேரி மயான ஆவணங்கள் மற்றும் புதைக்கப்பட்ட படத்தையும் சமூக ஆர்வலருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    இதனை பார்த்த அசாருதீன் ஆவணங்களில் சந்தேகம் இருப்பதாகவும், குழந்தை காணாமல் போனதாகவும் கூறி தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனையடுத்து நேற்றிரவு மாவட்ட குழந்தை நல அலுவலர் மற்றும் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் தத்தனேரி மயானத்தில் குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட ரசிது எண் போலியானதாக இருந்துள்ளதும், அதே ரசிது எண்ணில் ஏற்கனவே கடந்த மே மாதம் 75வயது நிரம்பிய முதியவர் எரிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது.

    இதையடுத்து தத்தனேரி மயான ஊழியர்கள் மற்றும் நரிமேடு நகர்புற மருத்துவமனையில் காவல்துறையினர் நடத்தனர்.

    அப்போது தத்தனேரி மற்றும் நகர்புற மருத்துவமனை பெயரில் போலியான ஆவணங்களை உருவாக்கி குழந்தையை புதைத்தது போல ஆவணங்களை ஜோடித்தது தெரியவந்துள்ளது.

    போலியான ஆவணங்களை தயாரித்துள்ளதாக தத்தனேரி மின்மயானம் சுகாதார ஆய்வாளர் மற்றும் நரிமேடு நகர்புற மருத்துவமனை மருத்துவர் ஆகிய இருவர் தரப்பில் தொண்டு நிறுவனத்தின் மீது மேலும் இரு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.

    குழந்தை புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட தத்தனேரி மயானத்தில் மாநகராட்சி நகர்நல அலுவலர் குமரகுருபரன் மற்றும் ஏடிசி கிருஷ்ணகுமார் ஆகியோர் நேரில் விசாரணை மேற்கொண்டனர். அதில் புதைக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்பாக அரசு ராஜாஜி மருத்துவமனையில் உயிரிழந்த பச்சிளங்குழந்தை புதைக்கப்பட்ட இடம் என்பது தெரியவந்தது‌.

    இதனால் மாணிக்கம் என்ற குழந்தை புதைக்கப்படவில்லை எனவும் உறுதியாகியுள்ளது. இதன் பின்னர் காப்பகத்தில் இருந்த அனைவரையும் பத்திரமாக வேறு காப்பகங்களுக்கு மாற்றும் போது, கர்நாடக மாநிலத்தை சேர்த்த பெண்ணின் 2 வயது பெண் குழந்தையும் காணாமல் போனது தெரிய வந்தது.

    காப்பக பணியாளர்களிடம் தல்லாகுளம் போலீசார் நடத்திய விசாரணையின் படி, மதுரை இஸ்மாயில்புரம் 4வது தெருவை சேர்ந்த 47 வயது நகைக்கடை உரிமையாளரிடம் ஜூன் 13 ஆம் தேதி 1 வயது ஆண் குழந்தை விற்கப்பட்டது தெரியவந்தது.

    மேலும், 2 வயது பெண் குழந்தை கடந்த 16 ஆம் தேதி கருப்பாயூரணி அருகேயுள்ள கல்மேடு பகுதியை சேர்ந்த 37 வயது சில்வர் பட்டறை தொழிலாளரிடம் விறக்கப்பட்டதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து இரு குழந்தைகளையும் பத்திரமாக மீட்டு, குழந்தைகளை விலைக்கு வாங்கிய நபர்களையும் கைது செய்துனர்.

    பின்னர், பெற்றோர்கள் முன்னிலையில் மாவட்ட குழந்தைகள் நல அமைப்பினர் குழந்தைகளை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    இது குறித்து பிபிசியிடம் அசாருதீன் கூறுகையில், "ஒரு குழந்தை காணாமல் போனதாக புகார் அளித்த நிலையில் தற்போது இரண்டு குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர். இதே போல வேறு ஏதும் குழந்தைகள் காணாமல் போயுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க வேண்டும்," என்றார் அவர்.

    புகாருக்குள்ளான தனியார் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாகிகள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை போலிசார் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகர், "குழந்தை விற்பனையில் ஈடுபட்ட தனியார் காப்பகம் குறித்து விசாரணை நடைபெறுகிறது," என கூறினார்.

  4. சாத்தான்குளம் மகேந்திரன் மர்ம சாவு: மதுரை சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

    சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்ததாக கூறப்படும் புகார், மதுரை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அதன் காவல் துணை கண்காணிப்பாளர் முரளி இன்று விசாரணையை தொடங்கியுள்ளார்.

    தூத்துக்குடி மாவட்டம் பேய்குளம் பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். கடந்த ஆண்டு சாத்தான்குளம் காவல் நிலைய போலீசாரால், கொலை வழக்கு ஒன்றில் சந்தேக நபராக விசாரிக்கப்பட்டார். அடுத்த சில நாட்களிலேயே அவர் உயிரிழந்தார்.

    இது தொடர்பாக, மகேந்திரனின் தாயார் வடிவம்மாள், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை தூத்துக்குடி, நெல்லை சரக சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் அனில்குமார் தலைமையில் விசாரிக்க உத்தரவிட்டது.

    இந்த நிலையில் நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற குற்ற வழக்குகள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதால் சாத்தான்குளம் மகேந்திரன் வழக்கு விசாரணை தாமதமானதாக தெரிகிறது.

    எனவே வழக்கு விசாரணையை துரிதப்படுத்தி மகேந்திரன் தொடர்பான வழக்கை, மதுரை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதைத்தொடர்ந்து, மகேந்திரன் கொலை வழக்கு தொடர்பான ஆவணங்களை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்திடம் இருந்து மதுரை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் முரளி பெற்றுக்கொண்டு விசாரணையை இன்று தொடங்கினார்.

    முதல் கட்டமாக மகேந்திரனின் சகோதரியான சந்தனமாரி, தாயார் வடிவம்மாள் உள்ளிட்டோருக்கு விசாரணைக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் உறவினர்கள் சிலரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

    இது குறித்து வடிவம்மாள் தரப்பு வழக்கறிஞர் ஜெயச்சந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், மகேந்திரன் இறந்தது தொடர்பான விசாரணையை விரைவாக நடத்த வேண்டும். மகேந்திரனை சாத்தான்குளம் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் அடித்து துன்புறுத்தியிருக்கிறார். அந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள், ஊர்காவல் படையினர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க சிபிசிஐடி போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று கூறினார்.

    சாத்தான்குளத்தில் தந்தை, மகன் வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த ஆண்டு காவல் நிலையத்தில் விசாரிக்கப்பட்டு பின்னர் நீதிமன்ற காவலில் இருந்தபோது இறந்தனர். காவல் நிலையத்தில் கண்மூடித்தனமாக அவர்களை சில காவல்துறையினர் தாக்கியதாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து இந்த வழக்கு முதலில் சிபிசிஐடி விசாரணைக்கும் பிறகு மத்திய புலனாய்வுத்துறை விசாரணைக்கும் மாற்றப்பட்டது.

    ஆனால், அந்த சம்பவத்துக்கு சில வாரங்களுக்கு முன்பு, அதே சாத்தான்குளத்தில் போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டு பின்னர் இறந்தவர்தான் மகேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.

  5. டெல்டா பிளஸ் திரிபு: பாதிப்பை உறுதிப்படுத்த கூடுதல் தரவுகள் தேவை: எய்ம்ஸ் இயக்குநர்

    டெல்டா பிளஸ் கொரோனா திரிபு வேகமாக பரவும் என்பதை உறுதிப்படுத்த மேலும் வலுவான ஆய்வுத்தரவுகள் தேவை என்று டெல்லி எய்ம்ஸ் இயக்குநர் ரந்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்டா பிளஸ் திரிபால் நோய் எதிர்ப்பு சக்தி மோசமாகும் அல்லது உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை மீறி அது பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதற்கான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை," என்று கூறியுள்ளார்.

    கொரோனா தடுப்பூசி டோஸ்களை அதிகரிப்பது குறித்தும் மேலதிக பரிசோதனை தேவை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

  6. ஆட்சி மாற்றும் உரிமை மட்டுமே கொடுங்கோல் ஆட்சியை தடுக்காது: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி

    சில ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் மூலம் ஆட்சியாளர்களை மாற்றும் உரிமை மட்டுமே கொடுங்கோல் ஆட்சி ஏற்படாமல் தடுப்பதற்கான உத்தரவாதமாக இருக்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்று இந்தியத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தெரிவித்துள்ளார்.

    புதன்கிழமை இணைய வழியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பி.டி.தேசாய் நினைவு சொற்பொழிவு ஆற்றிய ரமணா, இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

    இந்த உரையை பட ஊடகங்கள் செய்தியாக்கியுள்ளன. தி ஹிந்து நாளிதழ் வெளியிட்ட செய்தியில், "பெருந்தொற்றுக் காலத்தில் சாமானியர்களின் உயிர்களைக் காப்பாற்ற சட்டத்தின் ஆட்சி எந்த அளவுக்கு உதவியது என்பது குறித்து நின்று நிதானித்து யோசிக்கவேண்டிய நேரம் இது" என்று ரமணா குறிப்பிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  7. ராமேஸ்வரத்தில் மீனவர்கள் பிடித்து வந்த மீன்கள் மீது விஞ்ஞானிகள் பரிசோதனை

    இலங்கையில் சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தின் எதிரொலியாக ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

    இலங்கை தலைநகர் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சிங்கப்பூர் சரக்கு கப்பலில் கடந்த மே மாதம் 20 ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் சரக்கு கப்பலில் இருந்த பெட்டகங்கள் தீயில் எரிந்து நாசமானது.

    தீ விபத்தில் சரக்கு பெட்டகங்களில் இருந்த அழகு சாதனப் பொருட்கள் மற்றும் ரசாயண பொருட்கள் கடலில் கலந்ததால் இலங்கை கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் ஆமைகள், டால்பின் உள்ளிட்டவைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன.

    இலங்கையைச் சேர்ந்த கடல் ஆராய்ச்சி வல்லுனர்கள் இந்த தீ விபத்தால் ஏற்பட்ட கடல் மாசு இந்திய கடற்பரப்பிற்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் மீன் பிடி தடைக்காலம் முடிந்து 75 நாட்களுக்கு பின் ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று மீன் பிடித்து விட்டு கரை திரும்பினர். ராமேஸ்வரம் மீனவர்கள் பிடித்து வந்த கணவாய், இறால், மீன்கள் உள்ளிட்டவைகளை மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி ரம்யா தலைமையிலான விஞ்ஞானிகள் குழு ஆய்வு செய்தனர்.

    அதில் மீனவர்கள் பிடித்து வந்த மீன்களின் செதில்களில் எண்ணெய் மாதிரிகள் ஏதேனும் உள்ளதா அல்லது மீன் வாய்களில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.

    இதே போல் இறால்கள், நண்டுகளின் உருவ அமைப்பு நீளம், அகலம் உள்ளிட்டவை அளவு கோல் மூலம் முழுமையாக அளக்கப்பட்டன.

    மீன் பிடிக்க கடலுக்குள் சென்று கரை திரும்பிய மீனவர்களிடம் நடுக்கடலில் எண்ணெய் கழிவுகள், கடலில் நீரின் வண்ணங்களில் மாற்றம். கடல் மாசு போன்றவை இருந்ததா என்றும் அவர்கள் விசாரித்தனர்.

    தங்களுடைய ஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், இதுவரை நடத்திய ஆய்வில் ரசாயன கழிவுகள் கடல்வாழ் உயிரினங்களில் தென்படவில்லை என்றும் விஞ்ஞானிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  8. அமெரிக்காவுக்கு சீன அதிபர் மறைமுக எச்சரிக்கை

    பிற நாடுகளை சீனா ஒருபோதும் ஒடுக்கவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியின் 100-ஆவது ஆண்டு விழாவில் அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் பேசியுள்ளார்.

    சீனாவை யாராவது ஒடுக்க நினைத்தால் அவர்களது தலைகளை சீனாவின் இரும்புப் பெருஞ்சுவரில் அடித்து நொறுக்குவோம் என்றும் அவர் எச்சரித்தார். அமெரிக்காவை அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டதாகக் கருதப்படுகிறது.

    பெய்ஜிங் நகரின் தியானென்மன் சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் 70 ஆயிரம் பேர் முன்னிலையில் ஷி ஜின்பிங் உரையாற்றினார். கூடியிருந்தவர்களின் பெரும்பாலானோர் முகக் கவசம் அணியவில்லை.

    யாரும் சீனாவை அடக்குவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று ஜின்பிங் தனது உரையின்போது கூறினார்.

    தங்களது வளர்ச்சியை தடுப்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி செய்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

    சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாவது ஆண்டுவிழாவை ஒட்டி பெய்ஜிங்கில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடந்தன.

    1921-ஆம் ஆண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு 72 ஆண்டுகளுக்கு முன் அந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தது.

  9. உலகின் இளம் வயது கிராண்ட் மாஸ்டர்: அபிமன்யு மிஸ்ரா சாதனை

    உலகிலேயே இளம் வயதில் செஸ் கிராண்ட் மாஸ்டரான பெருமையைப் பெற்றார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அபிமன்யு மிஸ்ரா.

    அமெரிக்காவின் நியூஜெர்சி நகரில் வசித்து வரும் அபிமன்யுவின் வயது 12 ஆண்டு 4 மாதம். இளம்வயதில் கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருந்த செர்ஜி கார்ஜாகின் சாதனையை அவர் முறியடித்திருக்கிறார்.1

    2 ஆண்டு 7 மாதம் ஆகியிருந்தபோது கார்ஜாகின் கிராண்ட் மாஸ்டர் தகுதியைப் பெற்றிருந்தார். 19 ஆண்டுகளாக நீடித்திருந்த சாதனை இப்போது அபிமன்யுவால் முறியடிக்கப்பட்டிருக்கிறது.

    புடாபெஸ்ட் நகரில் நடந்த போட்டியில் 15 வயதான கிராண்மாஸ்டர் லியோன் லூய்க் மென்டோன்காவை அபிமன்யு தோற்கடித்தார். ஏஎன்ஐ செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டிருக்கிறது.

  10. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு காலை வணக்கம். இன்றைய முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாகவும் விரைவாகவும் இந்தப் பகுதியில் வழங்குகிறோம். இணைந்திருங்கள்.