ஆவின் பால் ரூ.10 விலையேற்றம்; பால் கொள்முதல் விலை அதிகரிப்பு

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 1 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் அரசாங்க கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கத்தால் உற்பத்தி செய்யப்படும் ஆவின் பாலின் விலையை லிட்டருக்கு ரூ.10 உயர்த்துவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆவின் சின்னம்
படக்குறிப்பு, ஆவின் சின்னம்

நவம்பர் 1ஆம் தேதி முதல் இந்த விலை அதிகரிப்பு அமலுக்கு வரும்.

தற்போது லிட்டர் ரூ.24 என்ற விலைக்கு விற்கப்படுகின்ற ஆவின் பால் நவம்பர் ஒன்றாம் தேதி முதல் ரூ.34 என்ற விலைக்கு விற்கப்படும்.

பொதுமக்கள் வாங்கும் விலை மட்டுமல்லாது, பால் பண்ணை வைத்திருப்பவர்களிடம் இருந்து ஆவின் நிறுவனம் பாலை கொள்முதல் செய்யும் விலையும் அதிகரிக்கப்படுவதாக முதல்வர் பன்னீர்செல்வத்தின் அறிக்கை கூறுகிறது.

பசும் பாலின் கொள்முதல் விலை ரூ.5 அதிகரிக்கப்படுமென்றும், எருமைப் பாலின் விலை ரூ.4 அதிகரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது நவம்பர் 1ஆம் தேதி முதல்ஆவின் நிறுவனம் பால் பண்ணையாளர்களிடம் இருந்து பசும்பாலை ரூ.28க்கும் எருமைப்பாலை ரூ.35க்கும் வாங்கும்.

மாடுகளின் பராமரிப்பு செலவினங்கள் அதிகரித்துள்ளதால், பாலின் கொள்முதல் விலையை அதிகரிக்கச்சொன்ன பால் பண்ணையாளர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாலும், அதேநேரம் பொதுமக்களுக்கு தரமான நல்ல பாலை வழங்க வேண்டும் என்ற காரணத்தினாலும் இந்த விலை அதிகரிப்பு அவசியமாகியுள்ளது என முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தற்போது விலையேற்ப்பட்டிருந்தாலும்கூட, தனியார் நிறுவன பால் அல்லது பிற மாநில கூட்டுறவு பாலின் விலையோடு ஒப்பிடுகையில், ஆவின் பாலின் விலை குறைவுதான் என்றும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.