
இந்தியாவில் பாதுகாக்கப்படவேண்டிய விலங்காக சிறுத்தை அறிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் தேசிய விலங்கான புலியைப் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் நிலையில், அங்கு சிறுத்தைப் புலிகளின் நிலை கவலையளிப்பதாக உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வாரத்திற்கு நான்கு சிறுத்தைப் புலிகள் வேட்டையாடப்படுவதாக வன விலங்குகள் தொடர்புடைய வர்த்தகத்தை கண்காணிக்கும் டிராபிக் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் பாதுகாக்கப்பட்ட விலங்காக சிறுத்தைப் புலி அறிவிக்கப்பட்டுள்ளது. அதை வேட்டையாடுவதோ அதன் உடல் உறுப்புகளை வாங்கி விற்பதோ தண்டனைக்குரியய குற்றம்.
ஆனால் 2001 முதல் 2010 ஆம் ஆண்டுக்கு இடையே 420 சம்பவங்களில் சிறுத்தையின் உடல் பாகங்கள், தோல், எலும்புகள் முதலியவை பிடிபட்டுள்ளன என்று ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது.
வட-இந்தியாவின் உத்திராகண்ட் மாநிலத்தில் சிறுத்தைகள் அதிகளவு வேட்டையாடப்படுவதாகவும் சிறுத்தை தோல், எலும்புகள் உள்ளிட்ட பாகங்கள் கைமாறும் மையமாக டில்லி இருப்பதாகவும் இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
நாட்டில் எத்தனை சிறுத்தைப் புலிகள் இருக்கின்றன என்பது குறித்த கண்கெடுப்பு ஏதும் இதுவரை நடத்தப்படவில்லை.
காடுகளின் எல்லைப் புறங்களில் வாழும் இயல்புடைய சிறுத்தைகளின் எண்ணிக்கை பத்தாயிரம் வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நூற்றாண்டில் முதல் 10 ஆண்டுகளில் 2,294 சிறுத்தைப் புலிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

இந்தியாவில் ஆட்களுக்கும் சிறுத்தைகளுக்கும் இடையில் ஏற்படுகின்ற மோதல்களில் பல சிறுத்தைகள் கொல்லப்படுகின்றன
இந்தியாவில் இருந்து கடத்தப்படும் சிறுத்தை புலியின் உடல் பாகங்கள் முதலில் தரை வழியாக நேபாளத்துக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் அங்கிருந்து அவை சீனா, பர்மா, லாவோஸ் போன்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவதாகவும் இந்த சட்டவிரோத வியாபாரம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் கோரியுள்ளனர்.
சிறுத்தைப் புலிகளின் உடல் பாகத்துக்கு வெளிநாட்டுச் சந்தையில் அதிகரிக்கும் கிராக்கி நாட்டில் உள்ள சிறுத்தைகளின் எண்ணிக்கையை வெகுவாக குறைத்துவிடும் என்று இந்த ஆய்வில் பங்கெடுத்துள்ள உலக வன உயிர் நிதியத்தைச் சேர்ந்த ரவி சிங் எச்சரித்துள்ளார்.
இந்தியாவில் சிறுத்தைப் புலிகளுக்கு ஏற்பட்டுள்ள அபாயம் முழுமையாக உணரப்படவில்லை என்றும் சிறுத்தைகளின் பாதுகாப்பு புறக்கணிக்கப்பட்ட நிலையில் உள்ளதாகவும் இந்த ஆய்வுக்குத் தலைமை ஏற்ற டாக்டர் ரஷீத் ரசா கூறியுள்ளார்.
காடுகள் அழிக்கப்படுவது, சிறுத்தைகளின் உணவான சிறு விலங்குகள் வேட்டையாடப்படுவது போன்ற காரணங்களால் சிறுத்தைகளின் எண்ணிக்கை பல இடங்களில் சரிந்து வருவதாகவும் மனிதனுக்கும் சிறுத்தைகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் காரணமாகவும் அவை கொல்லப்படுவதாகவும் ரஷீத் ராசா கூறியுள்ளார்.
புலிகள், யானைகள் போன்ற விலங்குகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது போல சிறுத்தைகள் வேட்டையாடப்படுவதை தடுக்கவும் அவற்றின் உடல் பாகங்கள் வியாபாரம் செய்யப்படுவதை முறியடிக்கவும் தனிப்படை அமைக்கவேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
இப்பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகளோடு இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறுத்தையின் தோல் விலைஉயர்ந்த ஆடைகள் தயாரிக்க பயன்படுத்தப்படுகின்றன.
அதன் எலும்புகள் சில ஆசிய நாடுகளில் மருந்துக்காகவும் வாங்கப்படுகின்றன. சிலர் பஞ்சடைத்த சிறுத்தைகளை வீடுகளில் அழகுப் பொருட்களாக வாங்கி வைக்க ஆர்வம் காட்டுகின்றனர்.







