மகாசிவராத்திரி: சிவன் சிலை மனித வடிவில் இருக்கும் இந்த கோயில் பற்றித் தெரியுமா?

மகாசிவராத்திரி

பட மூலாதாரம், RAJESH

பிரசுரிக்கப்பட்டது

இந்து மதம் சிவன் உருவமற்றவர் என்று கூறுகிறது. பக்தர்கள் வழிபடுவதற்காக உருமற்ற அவர் சிவலிங்க வடிவில் கோயில்களில் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், சிவன் சிலைகளை மனித உருவில் பார்ததுண்டா?

கருவறைக்குள் மனித உருவில் சிவன் சிலை வைக்கப்பட்ட இரண்டு கோயில்கள் ஆந்திராவில் உள்ளன. சித்தூர், அனந்தபூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள கோயில்களில் சிவன் சிலை மனித உருவில் வைக்கப்பட்டுள்ளது.

குடிமல்லம் கோவில்

ஆண்களின் பாலுறுப்பைப் போன்ற ஏழு அடி உயரமுள்ள சிற்பத்தில் இந்துக்களின் கடவுளாகக் கருதப்படும் சிவன் சிலை மனித உருவில் செதுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயில் மிகவும் பழைமையானது.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் இருந்து 20 கி.மீ தொலைவில் குடிமல்லம் கிராமம் உள்ளது. இந்த சிவலிங்கம், கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்தது என தொல்லியல் துறை கண்டறிந்துள்ளதாக கோயில் தலைவர் பச்சலா கிரிபாபு நாயுடு பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு வரைக்கும் கோயிலில் பூஜைகள் நடைபெறவில்லை எனக் கூறிய அவர், கிராம மக்களும் திருப்பதியிலுள்ள ராஸ் என்ற தன்னார் நிறுவனமும் இணைந்து நடத்திய போராட்டத்தின் பலனாக அரசாங்கம் பூஜைகள் நடைபெற வழி செய்தது என்றார்.

கோபிநாத் ராவ் என்ற தொல்லியல் வல்லுநரால் 1911ஆம் ஆண்டு இந்தக் கோயில் கண்டுபிடிக்கப்பட்டாலும்கூட, கடந்த பத்து ஆண்டுகளில்தான் மூலவர் வழிபடப்பட்டு வருவதாக கோவிலின் தலைவர் கூறினார்.

மகாசிவராத்திரி

பட மூலாதாரம், RAJESH

1954ஆம் ஆண்டு முதல் இந்தக் கோயில் தொல்லியில் துறையின் கீழ் உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் உதவியோடு இந்தக் கோயில் அறநிலையத்துறையால் புறக்கணிக்கப்பட்டதை வெளிப்படுத்த முடிந்தது எனக் கூறினார்.

கோயில் தொடர்பான இலக்கியங்கள் தொல்லியல் துறையிடம் இல்லை என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வர முடியவில்லை என்று கூறுகிறார் கிரிபாபு நாயுடு.

"சோழர்கள், பல்லவர்கள் ஆட்சியில், இந்தக் கோயில் வழக்கமான வழிபாடுகளோடு செயல்பாட்டில் இருந்தது. எங்கள் குழுவினரால் இதுபோன்ற ஒரு கோயிலின் அவலநிலையை கிராம மக்களுக்கு விளக்க முடிந்தது," என்று அவர் விளக்கினார். மேலும், 2009ஆம் ஆண்டு முதல் இந்த சிவன் கோயிலில் வழக்கமான வழிபாடுகள் நடைபெற்று வருவதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்தார்.

மகாசிவராத்திரி

பட மூலாதாரம், RAJESH

'ஒற்றை சிலையில் செதுக்கப்பட்ட மும்மூர்த்திகள்'

அகழாய்வுகளில் கோயில் தொடர்பான சில கல்வெட்டுகளும் சான்றுகளும் கிடைத்துள்ளதாக கோயில் தலைவர் தெரிவித்தார்.

ஆனால், மூலவர் தொடர்பான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. அதன் அடிப்படையில் மூலவர் சிலை கோயிலைவிட பழைமையானது என்று தொல்லியல் துறை நம்புகிறது. முகப்பு மண்டபத்தைவிட கருவறை ஆழமாக இருப்பது இதை உறுதி செய்கிறது என்று கூறினார்.

கிரிபாபு நாயுடு, "உஜ்ஜைனியில் தொல்லியல் துறையின்கீழ் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், கி.மு.3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நாணயங்கள் கிடைத்துள்ளதாகவும் இந்தச் சிலையை ஒத்த முத்திரை கொண்ட நாணயங்கள் கிடைத்துள்ளதாகவும்" தெரிவித்தார். அதாவது, கோயிலைவிட இரண்டு நூற்றாண்டுகளுக்கு முந்தைய காலத்தைச் சேர்ந்த சிலையாக இது இருக்கக்கூடும்.

மகாசிவராத்திரி

பட மூலாதாரம், RAJESH

"முக்கியமாக மூலவருக்குப் பல சிறப்புகள் உண்டு. ஒரே பாறையில் மும்மூர்த்திகள் இருப்பது அநேகமாக இந்தியாவில் எங்குமே காணப்பட வாய்ப்பில்லை. யக்ஷ வடிவில் பிரம்மா, பரசுராமராக விஷ்ணு, பூரணலிங்க காலரத்தில் பரமேஸ்வரர்," என்று இருப்பதாக விளக்கினார் கோயில் தலைவர்.

இந்த சிவலிங்கத்தின் மீது சிவன் மனித உருவில் வேட்டைக்காரனைப் போல் காட்சியளிப்பதாகவும் சிவலிங்கத்தின் முன்புறத்தில் மனித வடிவில் சிவன் செதுக்கப்பட்டிருப்பதாகவும் கிரிபாபு விளக்கினார்.

மேலும், கோயில் வளாகத்தில் ஆறுமுகங்களைக் கொண்ட சண்முக சுவாமி, சர்வநாராயணன் போன்ற உபகோயில்களும் இருக்கின்றன என்றார்.

கோயில் சுவர்களில் பாண சோழ மன்னர்கள், பல்லவர்கள், அவர்களுடைய ஆட்சியாளர்களான கங்க பல்லவர்கள், யாதவ தேவராயர்கள் காலத்திய கல்வெட்டுகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. யாதவ தேவராயர்கள் காலத்தில் கோயில் வளாகத்தில் அபிஷேக நீருக்காக கிணறு அமைக்கப்பட்டதாக விளக்கப்படுகிறது.

மகாசிவராத்திரி

பட மூலாதாரம், RAJESH

'அமர்ந்த நிலையில் சிவன் சிலை'

அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள அமராபுரம் மண்டலத்தில் ஹேமாவதி கிராமம் உள்ளது. அங்கு மனித வடிவிலான சிவன் சிலை உள்ள கோயில் அமைந்துள்ளது. ஏழாம் நூற்றாண்டில் நொளம்ப வம்சத்தைச் சேர்ந்த மன்னர்களால் இந்தக் கோயில் கட்டப்பட்டது. வேறு எங்கும் காணப்படாத வகையில் சித்தாசனத்தில் சிவன் அமர்ந்திருப்பதாக கோயிலின் தலைமை அர்ச்சகர் சிவக்குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

தற்போது இந்தக் கோயில் மத்திய தொல்லியல் துறையின் வசம் உள்ளது. மாநில அறநிலையத்துறையின்கீழ் இங்கு பூஜைகள் நடைபெற்று வருவதாகக் கோயிலின் செயல் அதிகாரியான ராமாஞ்சநேயுலு பிபிசியிடம் கூறினார்.

மகாசிவராத்திரி

பட மூலாதாரம், RAJESH

சிவன் சிலை, லிங்க வடிவில் இல்லாமல் மனித வடிவில் சித்தாசனத்தில் அமர்ந்திருப்பது இந்தக் கோயிலின் சிறப்பு. இந்தக் கோயிலில் சிவராத்திரியில் இருந்து 8 நாட்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

சிவராத்திரியை முன்னிட்டு கோயில் அதிகாரிகள், அர்ச்சகர்களிடம் இந்தக் கோயில் குறித்து பிபிசி பேசியது.

ஹேமாவதி கோயிலின் சிறப்புகள் குறித்துக் கேட்டபோது, "இந்தக் கோயில் 7ஆம் நூற்றாண்டில் நொளம்ப வம்சத்தைச் சேர்ந்த சித்ரசேகர, சோமசேகர ஆகிய மன்னர்களால் கட்டப்பட்டது. கருவறையில் உள்ள சிவன் சிலை, பீடம் முதல் தலை வரைக்கும் 5.5 அடி உயரம் கொண்டது," என்று கோயில் அர்ச்சகர் சிவக்குமார் தெரிவித்தார்.

மகாசிவராத்திரி

பட மூலாதாரம், RAJESH

"இந்த சிவனை தரிசிக்க கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து பக்தர்கள் அதிகளவில் வருகின்றனர். இந்தக் கோயிலைச் சுற்றி 5-6 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் சிவலிங்கங்கள், நந்தி சிலைகள் கிடைத்துள்ளன," என்று கூறும் ஹேமாவதி கோயிலின் தலைவர் பிரகாஷ் பிபிசியிடம், "ஒரு காலத்தில் இந்தப் பகுதியில் சிற்பக் கலையைக் கற்பிக்கும் கல்லூரி இருந்ததாக வரலாறு கூறுகிறது," என்றார்.

மகாசிவராத்திரி

பட மூலாதாரம், RAJESH

"சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதியில் சிற்பக்கலை கற்பிக்கப்பட்டது. அதனால்தான் கோயிலைச் சுற்றி அகழ்வாராய்ச்சியில் பல சிலைகள் கிடைத்தன. இன்னும் கிடைக்கின்றன. அவற்றைப் பாதுகாக்க இரண்டு அருங்காட்சியகங்கள் கட்டப்பட்டுள்ளன," என்று கூறினார் கோயில் தலைவர் பிரகாஷ்.

"இந்தக் கோயிலில் உள்ள சிற்பம் அற்புதமானது. சமீபத்தில் கோயில் சுவருக்காக 40 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. பிரம்மோற்சவம் முடிந்ததும் அதற்கான பணிகள் தொடங்கும்," என்று ராமாஞ்சநேயுலு தெரிவித்தார்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: