கோவையில் 15 மணி நேரத்தில் இரட்டை கொலைகள் - என்ன நடந்தது?

கோவை மாநகரில் 15 மணி நேர இடைவெளியில் நடந்த இரண்டு கொலை சம்பவங்களால், அங்குள்ள சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து பாரதிய ஜனதா கட்சி கேள்வி எழுப்பியிருக்கிறது.
கோவை மாநகர் பாப்பநாயக்கன்பாளையத்தில் மதுரையைச் சேர்ந்த சத்யபாண்டி வசித்து வந்தார். 2020ஆம் ஆண்டு பிஜு என்கிற இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த சத்யபாண்டி பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு ராமகிருஷ்ணா மருத்துவமனை அருகே உள்ள தனலட்சுமி நகரில் இருந்த சத்யபாண்டியை ஐந்து பேர் கொண்ட கும்பல் இரண்டு மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்றது.
அந்த இடத்தில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதால் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதேவேளை சத்யபாண்டி கருப்பக்கல் தோட்டம் பகுதியில் உள்ள பிச்சமுத்து என்பவரது வீட்டில் நுழைந்துள்ளார்.
அங்கு சத்யபாண்டியை துரத்திய ஐந்து பேரும் அவரை அரிவாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த சத்யபாண்டியின் உறவினர் மற்றும் உடன் இருந்தவர்களை கொலை செய்த கும்பல் மிரட்டி விட்டுச் சென்றுள்ளது.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
கொலைக்கு போலீஸ் சொல்லும் காரணம்
சத்யபாண்டியின் உறவினர் முத்துப்பாண்டி அதே பகுதியில் கடை வைத்திருக்கிறார். அவர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஐந்து சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சத்யபாண்டியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. கொலை தொடர்பாக விசாரிக்க காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு இணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சம்பவ பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
நீதிமன்றத்துக்கு வெளியே இளைஞர் வெட்டிக் கொலை

இதற்கிடையே, சத்யபாண்டி கொலை சம்பவம் நடந்த 15 மணி நேரத்தில் மற்றொரு கொலை சம்பவம் நடந்திருக்கிறது.
கோவை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கோபாலபுரத்தில் அமைந்துள்ளது. அதைச் சுற்றி வழக்கறிஞர் அலுவலகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் உள்ளதால் எப்போதும் அந்த பகுதி பரபரப்புடனே காணப்படும். இன்று திங்கள்கிழமை என்பதால் நீதிமன்றம் எப்போதும் போல் பரபரப்புடன் காணப்பட்டது.
இந்நிலையில் காலை 11 மணி அளவில் நீதிமன்ற வளாகம் வெளியே வந்த இரு இளைஞர்கள் மீது நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் தாக்கி விட்டு தப்பிச் சென்றுள்ளது.
இதில் ரத்த வெள்ளத்தில் ஒரு இளைஞர் கீழே சரிந்தார். மற்றொரு இளைஞருக்கு தலை மற்றும் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன.
உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து, இரண்டு இளைஞர்களும் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதில் படுகாயம் அடைந்து கீழே சரிந்த நபரான கோவை கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் உயிரிழந்தார்.காயம் அடைந்தவரின் பெயர் சரவணம்பட்டியைச் சேர்ந்த மனோஜ் என தெரிய வந்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் நீதிமன்ற விசாரணைக்காக வந்ததாக கூறப்படுகிறது.
மேலும், இறந்த நபரிடம் கத்தி இருந்ததும் தெரியவந்துள்ளது. கொலை செய்த கும்பல் மற்றும் கொலைக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய கோகுல் மற்றும் மனோஜ் நீதிமன்றத்தில் வாய்தா பெறுவதற்காக இன்று வந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
நேற்று நடைபெற்ற கொலை சம்பவத்திற்கும் இதற்கும் தொடர்புள்ளதா என்கிற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டம் ஒழுங்கை விமர்சித்த பாஜக
இந்த நிலையில், கோவையில் அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களை வைத்து அங்கு சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைந்துள்ளதாக பாரதிய ஜனதா கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
கோவை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், நகரில் நடக்கும் கொலை மற்றும் ஆயுத கலாசாரத்தை கடுமையாக கண்டித்ததுடன் மக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் கோவையில் நிலவுவதாகவும் கூறியுள்ளார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவை கொலை சம்பவங்கள் தொடர்பாக ட்வீட் செய்துள்ளார். அதில், " கொலை நகரமாகிக் கொண்டிருக்கும் கோவை! கோவையில் பொதுமக்கள் முன்னிலையிலும், நீதிமன்ற வளாகத்திலும் நேற்று மட்டும் இரண்டு கொலைச் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அது மட்டுமல்லாது, துப்பாக்கி கலாசாரமும் தலையெடுத்துள்ளது," என்று கூறியுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்























