குடும்பப் பிரச்னை: தீக்குளித்த கணவர், தீயில் சிக்கிய குழந்தைகள் பலி - என்ன நடந்தது?

கடலூரில் குடும்பப் பிரச்னையில் கணவன் தீக்குளித்த போது வீட்டிலிருந்த இரண்டு பச்சிளம் குழந்தைகள் உள்பட 4 பேர் தீயில் சிக்கினர். இதில் 2 குழந்தைகள் உட்பட ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் தீக்குளித்தவரின் மனைவி தனலட்சுமி மருத்துவமனையில் 95 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவ இடத்தில் இருந்த மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். அவர்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மதியழகன் - செல்வி தம்பதிக்குத் தமிழரசி (30), தனலட்சுமி (27) ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
இதில் தனலட்சுமி கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு சற்குரு (32) என்பவரை பெற்றோர் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 8 மாத குழந்தை உள்ளது. ஆனால், பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கணவன் - மனைவி பிரிந்தனர்.
இதனால் கடலூர் செல்லங்குப்பம் பகுதியில் தனது தாயார் செல்வி மற்றும் அக்கா தமிழரசி தங்கியிருந்த வீட்டில் தனலட்சுமி தனது குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இதற்கிடையே, இன்று காலை சற்குரு தமது மனைவி தனலட்சுமியைச் சந்திக்க அங்கு வந்துள்ளார்.
அங்கு சற்குரு தீக்குளித்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் சற்குரு, தனலட்சுமி, அவரது எட்டு மாத கை குழந்தை, தனலட்சுமியின் அக்கா தமிழ்செல்வி மற்றும் அவரது 4 மாத கைக் குழந்தை, தாயார் செல்வி உட்பட 5 பேரும் தீயில் சிக்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தமிழ்செல்வி, இரண்டு கைக்குழந்தைகள் சம்பவ இடத்தில் இறந்துள்ளனர்.
பலத்த தீ காயங்களுடன் மீட்கப்பட்ட தனலட்சுமி, சற்குரு, தனலட்சுமியின் தாயார் செல்வி ஆகிய 3 பேரும் கடலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாகக் கடலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர், மேலும் சம்பவ இடத்தில் கடலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கர் விசாரணை நடத்தினார்.
இதேவேளை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனலட்சுமி, அவரது தாயார் செல்வியிடம் காவல்துறையினர் வாக்குமூலம் பெற்றனர்,
காவல் துறையிடம் தனலட்சுமி கூறியது என்ன?
காவல் துணை கண்காணிப்பாளர் கரிகால் பாரிசங்கரை பிபிசி தொடர்பு கொண்டு பேசியபோது, கணவன் சற்குரு மற்றும் மனைவி தனலட்சுமி இடையே கருத்து வேறுபாடு நீடித்து வந்துள்ளதாகவும் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது என்றார்.
"தாயார் வீட்டில் வசித்து வந்த மனைவி தனலட்சுமியை சந்திக்க சற்குரு வந்தபோது பெட்ரோலை ஊற்றிக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. அந்த சமயத்தில் வீட்டில் விறகு அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் நின்று கொண்டிருந்த பகுதி மிகக் குறுகிய அளவிலானது. சற்குரு மனைவியை மிரட்ட அப்படிச் செய்தாரா? அல்லது தற்கொலை செய்து கொள்ளும் நோக்கில் அவ்வாறு செய்தாரா என்று தெரியவில்லை. தற்போது தடயவியல் நிபுணர்கள் மூலம் ஆய்வு செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார்.
தனலட்சுமிக்கும் சற்குருவுக்கும் 95 சதவீதம் தீக்காயங்கள் உள்ளன. தாயார் செல்விக்கு 85 சதவீத தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:















