கோயம்புத்தூர் கார் வெடிப்பு: என்ஐஏ விசாரணையும் அரசியலும் - இதுவரை நடந்தவை

பிரசுரிக்கப்பட்டது

கோயம்புத்தூர் உக்கடம் பகுதியில் காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் அந்தப் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியதுடன், தமிழக அரசியலிலும் சலசலப்பை உருவாக்கி உள்ளது. இந்த சம்பவத்தில் இதுவரை என்னென்ன நடந்திருக்கிறது, அவற்றின் பின்னணி என்ன ஆகிய தகவல்கள் இந்தக் கட்டுரையில் தரப்பட்டுள்ளன.

கோயம்புத்தூரில் கார் வெடிப்பு சம்பவம் எப்படி நடந்தது?

கடந்த 23ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கோயம்புத்தூர் உக்கடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே ஒரு மாருதி 800 வாகனம் 2 எல்பிஜி சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்களோடு வெடித்தது. அதில் வாகனத்தை ஒட்டி வந்த உக்கடம் பகுதியைச் சேர்ந்த ஜமேஷா முபின் என்பவர் தீக்காயங்களோடு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

கார் வெடிப்பு விபத்தா? பயங்கரவாத தாக்குதலா?

இது விபத்தா அல்லது சதிச் செயலா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. ஆனால் சதிச்செயல் இருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையும், தற்போது தேசிய புலனாய்வு முகமையும் விசாரணை நடத்தி வருகின்றன.

யாரெல்லாம் கைது செய்யப்பட்டுள்ளனர்?

உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது தல்கா மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் மற்றும் முகமது ரியாஸ் ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் கோவை மாநகர காவல்துறையினர் முதலில் கைது செய்தனர்.

ஐவர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 25-ஆம் தேதியன்று கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

இவர்கள் தவிர 27-ஆம் தேதியன்று ஜமேஷா முபினின் உறவினர் அப்சர்கான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவருடைய இல்லத்தில் இருந்து லேப்டாப் ஒன்றை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

விசாரணையில் இதுவரை தெரியவந்தது என்ன?

முபின் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியபோது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் போன்ற பொருள்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு தெரிவித்தார்.

"காரில் ஆணி இருந்துள்ளது. அவர் பயணம் செய்து வந்த கார் 9 பேர் கைமாறி உள்ளது. காவல்துறை துரிதமாகச் செயல்பட்டு அனைவரையும் கண்டறிந்துள்ளது. இவர் மீது முன்பு வழக்குகள் எதுவும் இல்லை. முபினிடம் கடந்த 2019 ஆம் ஆண்டு என்.ஐ.ஏ சோதனை நடத்தியிருந்த போதும் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே காவல்துறை சோதனை சாவடி இருந்ததால் அங்கே அவர் ஒதுங்கி உள்ளார். அப்போது தான் சிலிண்டர் வெடித்து விபத்து நடந்துள்ளது" என்றார் சைலேந்திர பாபு.

முபின் வீடு அருகே உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அனைத்தும் பெறப்பட்டுள்ளன. முபின் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து வீட்டிலிருந்து மூட்டை எடுத்துச் செல்லும் காட்சி சிசிடிவியில் உள்ளது. மேலும், இரண்டு சிலிண்டர்கள் மூன்று சிறிய ட்ரம் கேன்களை அவர்கள் எடுத்துச் செல்வதும் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தல்கா, அல்உம்மா அமைப்பைச் சேர்ந்த பாஷா என்பவரது உறவினர் என தெரியவந்துள்ளது.

என்.ஐ.ஏ. விசாரணைக்கு ஏன் பரிந்துரைக்கப்பட்டது?

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை முதலில் தமிழக காவல்துறையின் தனிப்படை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த சம்பவத்தின் தீவிரத்தை ஆராய்வதற்காக அக்டோபர் 26-ஆம் தேதி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கோவையில் முகாமிட்டனர்.

என்ஐஏ அமைப்பு ஒரு வழக்கை விசாரிக்க மாநில அரசின் பரிந்துரை தேவையில்லை. அந்த அடிப்படையில் மாநில அரசின் பரிந்துரைக்கு முன்னரே என்.ஐ.ஏ. அதிகாரிகள் கோயம்புத்தூர் வந்து தொடர்புடையோரிடம் விசாரணையைத் தொடங்கிவிட்டனர்.

அதே நாளில் கார் வெடிப்பு சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற மத்திய அரசுக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.

இது தொடர்பான தமிழக அரசின் செய்திக் குறிப்பில், "கோவை மாநகரின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்திட கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் புதிய காவல் நிலையங்களை அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டிருந்தது.

அரசு தரப்பு என்ன கூறுகிறது?

கோவை கார் வெடிப்பு தொடர்பாக மாவட்ட நிர்வாகம், காவல்துறை உயரதிகாரிகளுடன் தமிழக மின்துறை அமைச்சரும் மாவட்ட பொறுப்பு அமைச்சருமான செந்தில் பாலாஜி அக்டோபர் 27-ஆம் தேதியன்று ஆலோசனை நடத்தினார்.

"காவல்துறையினர் விரைவாக செயல்பட்டு தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர். உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்துள்ளனர். முதலமைச்சர் உயர் அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அனுப்பி மாலைக்குள்ளாகவே இயல்பு நிலை திரும்பியுள்ளது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு சிலர் கோவையில் நடந்த சம்பவத்தை வைத்து தமிழ்நாடு முழுவதும் பதற்றத்தை உருவாக்கும் நோக்கில் குறுகிய மனநிலையோடு செயல்பட்டு வருகின்றனர்," என்று அவர் கூறினார்.

"கோவை அமைதியாக உள்ள நிலையில் இங்கே பதற்றம் இருப்பதாக தவறாக சித்தரிக்க வேண்டாம். காவல்துறை வெளிப்படையாக செயல்படுகிறது. முறையான விசாரணை அடிப்படையில் தான் வழக்கை என்.ஐ.ஏக்கு மாற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசியல் உள்நோக்கத்தோடு சிலர் சொல்லும் செய்திகளை பெரிதாக்கி மக்களிடம் கொண்டு சொல்ல வேண்டாம். பாஜகவினர் மதுரையில் ராணுவ வீரர் உயிரிழந்ததை எவ்வாறு அரசியல் ஆக்க முயன்றார்கள் என்பதை நாம் பார்த்தோம். காவல்துறை விசாரணைக்கு முன்பே தனக்கு எல்லாம் தெரியும் என்பதை போல அண்ணாமலை கருத்து தெரிவித்து வருகிறார். உண்மையில் என்ஐஏ அண்ணாமலையை தான் முதலில் விசாரிக்க வேண்டும். ஒரு அரசியல் கட்சி தலைவர் எப்படி விசாரணை தகவல்களை வெளியிட முடியும்?" என்றார் செந்தில் பாலாஜி.

"நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து சட்டம் ஒழுங்கு சிக்கலை உருவாக்க சிலர் முயல்கிறார்கள். சமூக ஊடகங்களில் 1998இல் நடந்த சம்பவத்தையும் தற்போதைய சம்பவத்தையும் ஒப்பிட்டு பதற்றத்தை உருவாக்குகிறார்கள். அப்படி யாராவது செய்தி பதிவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும். பாரதிய ஜனதா கட்சியை தவிர வேறு எந்த அரசியல் கட்சியோ, இயக்கமோ இதில் அரசியல் செய்யவில்லை" என்கிறார் செந்தில் பாலாஜி.

பாரதிய ஜனதா கட்சியின் நிலைப்பாடு என்ன?

கோயம்புத்தூர் கார் வெடிப்பு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் அரசு ஆகியவற்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக எம்எல்ஏ ஆகியோர் குற்றம்சாட்டி வருகிறார்கள்.

இது தொடர்பாக அக்டோபர் 28-ஆம் தேதி வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் "கோவையில் எந்தப் பதற்றமும் இல்லை. இயல்பு நிலை தான் நீடிக்கிறது என்றால் 3,000 போலீசார் ஏன் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்? 40 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து ஏன் கண்காணிக்க வேண்டும்? மாநிலம் கடந்தும் ஏன் விசாரணை நடத்த வேண்டும்? கோவை கார் வெடிப்பு சம்பவத்தை வைத்து அரசியல் நடத்த வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு இல்லை. பயங்கரவாதத்தால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட கட்சி பா.ஜ.க.தான். இதுவரை 200 நிர்வாகிகளை பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளும் இழந்திருக்கின்றன." என்று குறிப்பிட்டுள்ளார்.

இஸ்லாமிய அமைப்புகள் என்ன கூறுகின்றன?

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் கட்சிகளின் கூட்டமைப்பு அக்டோபர் 28-ஆம் தேதி கோவை மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் அமீர் "நாங்கள் உண்மை கண்டறியும் குழு அமைத்து ஆராய்ந்ததில் அப்பாவிகள் சிலரும் காவல்துறையால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லா மதத்தை சேர்ந்தவர்களும் மத நம்பிக்கை இல்லாதவர்களும் கூட தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் இஸ்லாமியர் ஒருவர் இத்தகைய செயலில் ஈடுபட்டால் அந்த மதமே குறி வைக்கப்படுகிறது. இத்தகைய செயல்கள் தவிர்க்கப்பட வேண்டும்" என்று கூறினார்.

எதிர்க்கட்சியான அதிமுக என்ன கூறுகிறது?

கோவையில் 1998இல் நடந்த சம்பவம் போல மீண்டும் ஒரு அசம்பாவிதம் நடந்து விடக்கூடாது என்று அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கூறினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "கோயம்புத்தூரில் தற்போது மோசமான சூழ்நிலை நிலவுகிறது. மக்கள் அனைவரும் அச்சத்துடன் உள்ளனர். 1998இல் நடந்த குண்டுவெடிப்பால் வளர்ச்சியில் நாம் இருபது ஆண்டுகள் பின்தங்கி விட்டோம். தற்போதைய அரசில் உளவுத்துறை வேலை செய்வதே இல்லை," என்று கூறினார்.

"தமிழ்நாடு உளவுத்துறை கூடுதல் டிஜிபி டேவிட்சன் முதலமைச்சருக்கு பிஏவாக தான் வேலை செய்கிறார். உளவுத்துறை சரியாக வேலை செய்யாமல் தோல்வியுற்றதன் விளைவு தான் இது. காவல்துறையினர் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மீது பொய் வழக்கு போட்டு பழி வாங்குவதில் மட்டுமே குறியாக உள்ளனர். கோவையில் மத பிரச்னை என ஏதுமில்லை. நாங்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்கிறோம். குற்றம் செய்தவர்களை மதம் பார்க்காமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1998இல் நடந்தது போன்ற ஒரு சம்பவம் மீண்டும் நடந்து விடக்கூடாது," என்று வேலுமணி கூறினார்.

திமுகவின் கூட்டணி கட்சிகள் கருத்து என்ன?

தமிழக உளவுத்துறையின் செயல்பாடு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.

"தமிழக அரசு உளவுத்துறையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்ய வேண்டும். உளவுத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டும். என்.ஐ.ஏ புலனாய்வு செய்ததிலும் குறைபாடு உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். என்.ஐ.ஏ கூட கைது செய்யப்பட்டவர்களை முன் கூட்டியே கண்காணிக்காதது கேள்விக்குரியதாக உள்ளது. மாவட்ட நிர்வாகம் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தி அமைதியை நிலை நாட்ட வேண்டும். யாரோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களையும் குற்றம் சுமத்த முடியாது" என்றார் பாலகிருஷ்ணன்.

என்.ஐ.ஏ தமிழகத்தில் வேறு என்ன வழக்குகளை விசாரித்து வருகிறது?

திருப்புவனம் ராமலிங்கம் கொலை வழக்கு, தமிழ்நாடு 'அன்சருல்லா' அமைப்பு தொடர்பான வழக்கு, மாவோயிஸ்ட் இயக்கத்துடன் தொடர்புடையதாக மதுரையில் ஒருவர் கைது செய்யப்பட்ட வழக்கு, பேஸ்புக்கில் மதவெறுப்பைத் தூண்டியதாக வழக்கு, விடுதலைப் புலிகள் போன்ற இயக்கத்தை உருவாக்கத் திட்டமிட்டதாக கூறப்படும் வழக்கு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகளை என்.ஐ.ஏ. விசாரித்து வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: