You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பரந்தூர் விமான நிலையம்: "சொந்த நிலத்தில் அகதிகள் ஆவோம்" - தொடரும் எதிர்ப்பு
- எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
- பதவி, பிபிசி தமிழ்
- பிரசுரிக்கப்பட்டது
பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் மக்கள்போராட்டம் நடத்திவரும் நிலையில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பை விட 3.4 மடங்கு இழப்பீடு, அரசு வேலை, மாற்று இடம், வீடு உள்ளிட்ட இழப்பீடுகளை அமைச்சர் அறிவித்திருந்தாலும், தங்களின் கோரிக்கை பரந்தூரில் விமான நிலையம் கூடாது என்பதே என உறுதியாக இருக்கின்றனர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (அக். 19) சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் போராட்டம் நடந்து வருவது குறித்தும், கிராம மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் திட்டத்தை மாற்று இடத்தில் செயல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், பாமக சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் செல்வபெருந்தகை மற்றும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தனர்.
அமைச்சர் பேசியது என்ன?
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, விமான நிலையம் அமைக்கப்படும் போது பாதிப்புகள் இல்லாத வகையில் அமைப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்துள்ளார்.
பயணிகளை கையாளும் திறனை மேம்படுத்த இத்தகைய பசுமை வளாக விமான நிலையம் தேவை என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், "சரக்குகளை கையாளும் திறனில் நாம் 4 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளோம். ஆனால், ஐதராபாத் மற்றும் பெங்களூரு இரண்டு மடங்கு கூடுதல் வளர்ச்சியை பெற்றுள்ளனர்" என அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு காரணமாக அந்த இரு நகரங்களிலும் அமைந்துள்ள புதிய இரண்டு விமான நிலையங்களை சுட்டிக் காட்டுகிறார் அமைச்சர் தங்கம் தென்னரசு. சரக்குகளை கையாள்வதில் உள்ள தேக்கநிலையை சரிசெய்ய, புதிய விமான நிலையம் அமைவது காலத்தின் சூழல் என்றும் அவர் கூறினார்.
ஏற்கெனவே உள்ள விமான நிலையத்தை விரிவுபடுத்துவதில் சில சிக்கல்கள் இருப்பதாக கூறிய அமைச்சர் தங்கம் தென்னரசு, இரண்டாவது விமான நிலையத்தால் புதிய விமான வழித்தடங்கள் வருவதற்கான வாய்ப்பு, ஆசியாவின் பல பகுதிகளை சென்னை மாநகருடன் இணைப்பதற்கான வாய்ப்பு, தொழில் முதலீடுகள் உள்ளிட்ட நன்மைகள் இருப்பதாக அமைச்சர் தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
டெல்லி, நவி மும்பை போன்ற நகரங்களில் வரவிருக்கும் புதிய விமான நிலையங்கள், மாநகருக்கு சுமார் 60 கி.மீ. தள்ளியே அமையவிருப்பதாக கூறினார்.
மேலும், புவியியல் அமைப்பு, நீரியல் சூழ்நிலைகள், தொழில்நுட்ப காரணங்களால் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, எந்த விவசாயிக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இத்திட்டத்தை செயல்படுத்துமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாகத் தெரிவித்தார்.
கையகப்படுத்தும் நிலத்திற்கு சந்தை மதிப்பைவிட 3.4 மடங்கு இழப்பீடு, அரசு வேலை, மாற்று இடம், வீடு உள்ளிட்டவை குறித்து முதலமைச்சர் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மொத்தமுள்ள 13 கிராமங்களில் விளைநிலங்கள் அல்லது குடியிருப்பு பகுதிகள் பகுதி அளவு மட்டுமே விமான நிலையத்துக்கு போகும் நிலையில், சுமார் 2400 பேர் வசிக்கக் கூடிய ஏகனாபுரம் என்ற கிராமம் முற்றிலும் நில எடுப்பின் கீழ் வருகிறது.
இந்த கிராமம் உள்ள இடம், விமான நிலையத்தின் இரு ஓடுதளங்களுக்கும் இடையே வருகிறது என்று குறிப்பிட்ட அமைச்சர், திட்ட மேலாண்மை ஆலோசகர்களுடன் ஆலோசித்து, கிராமங்களை மாற்றும் வழிகள் குறித்த தொழில்நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
"திட்டம் வேண்டாம் என்பதே எங்கள் கோரிக்கை"
அமைச்சரின் பேச்சு குறித்து ஏகனாபுரம் கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோரில் ஒருவரான இளங்கோ பிபிசி தமிழிடம் பேசுகையில், "இத்திட்டம் பாதிப்பு இல்லாமல் செயல்படுத்தப்படும் என அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், இது குறித்து மீண்டும் அமைச்சரிடம் பேசுவோம். ஏற்கெனவே இம்மாதிரியான திட்டங்களில் அரசு அளித்த வாக்குறுதிகள் முழுமையாகச் சென்று சேர்ந்ததில்லை. எனவே எங்களுக்கு அது குறித்த அச்சம் உள்ளது. எங்களின் கிராமம், விவசாய நிலம் எதனையும் இத்திட்டத்திற்காக கையகப்படுத்தக் கூடாது என்பதுதான் எங்களின் உறுதியான கோரிக்கையாக உள்ளது," எனத் தெரிவித்தார்.
மேலும், "இத்திட்டம் வந்தால் 2,750 ஏக்கர் நன்செய் நிலங்கள் அழியும், 13 ஏரிகள் அழியும். நீர்நிலைகளும் விவசாய நிலங்களும் பாதிக்கப்படாமல் இத்திட்டத்தை செயல்படுத்துவது எப்படி சாத்தியம்? அரசு புறம்போக்கு நிலம் 350 ஏக்கர்தான். அதை வைத்து எப்படி விமான நிலையம் அமைப்பார்கள்? ஆனால், 4,700 ஏக்கர் நிலப்பரப்பில் இத்திட்டம் வருகிறது. அரசிடம் மீண்டும் பேசிவிட்டு அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவெடுக்கப்படும்," எனத் தெரிவித்தார்.
"சட்டப் போராட்டம் மூலம் வெல்வோம்"
அதே கிராமத்தைச் சேர்ந்தவரும் ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நல கூட்டமைப்பின் செயலாளருமான சுப்பிரமணியன், "ஏகனாபுரம் கிராம மக்களின் கோரிக்கைகளை அரசு புரிந்துகொண்டுள்ளதாகக் கருதுகிறேன், அரசு யோசிக்க ஆரம்பித்துள்ளது. எங்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை இன்று அமைச்சர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. தொழில்நுட்ப ரீதியிலான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருப்பது இதனை உணர்த்துகிறது. எங்கள் போராட்டத்தில் 25 சதவீதம் வெற்றி பெற்றிருப்பதாக நினைக்கிறோம்" என்றார்.
ஆனால், "இந்த விமான நிலைய திட்டம் எங்கள் கிராமத்தில் வேண்டாம் என்பதே எங்களின் கோரிக்கை, அதில் மாற்றமில்லை. எங்கள் கிராமத்தில் உள்ளிருப்பு போராட்டம் (அக்டோபர் 19 அன்று) 85வது நாளை எட்டியுள்ளது. தொடர்ந்து போராடுவோம்" என தெரிவித்தார்.
இந்த திட்டத்தில் பல சவால்கள் இருப்பதாக தெரிவித்த அவர், "புவியியல் அமைப்பை விமான நிலையத்திற்கு ஏற்ப மாற்றுவது நிச்சயம் அரசுக்கு சவாலானதாகவே இருக்கும். இத்திட்டத்தில் வரும் 1,000 ஏக்கர் நிலம் ஏரி, குட்டைகள்தான். நீர்நிலை ஆக்கிரமிப்புக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன. நீர்நிலைகளில் அமைக்கப்பட்டுள்ள கட்டுமானங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் பல உத்தரவுகள் உள்ளன. தேவை கருதி நாங்கள் நீதிமன்றம் சென்றால் எங்கள் சார்பாகவே தீர்ப்பு வரும் என்று நம்புகிறோம். இதனை சட்டப் போராட்டம் மூலமாக வெல்வோம்" என சுட்டிக்காட்டினார்.
மேலும், இத்திட்டம் வந்தால், "ஏகனாபுரத்தின் வரலாறே அழிக்கப்படும். எங்களுக்கென முகவரியே இல்லாமல் போய்விடும். சொந்த நிலத்திலேயே மக்கள் அகதிகளாகிவிடுவர். விவசாய நிலங்கள் பறிபோனால் அவர்கள் விவசாய கூலிகளாவர். ஆட்சி மாறும், கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதில் சந்தேகம் உள்ளது.
மற்றொரு பகுதிக்கு நாங்கள் சென்றால் அங்கு கூலிகளாகத்தான் இருக்க முடியும். சுதந்திர உணர்வுடன் நிலம், வீடுடன் வாழ்ந்தது எப்படி? வேறு கிராமத்தில் கூலிகளாக வாழ முடியுமா? எங்கள் கிராமத்திற்கு மாற்று வாழ்விடமாக மதுரமங்கலத்தில் 100 ஏக்கர் நிலத்தை அரசு பரிசீலித்திருக்கிறது. ஆனால், ஏகனாபுரத்திற்காக இங்கு நிலம் ஒதுக்காதீர்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் அக்கிராமத்தினர் மனு அளித்துள்ளனர். அவர்கள் எப்படி எங்களை ஏற்றுக்கொள்வார்கள்?" என்கிறார் சுப்பிரமணி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்