காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே சுயமாக முடிவெடுப்பாரா ஆட்டி வைக்கப்படுவாரா?

- எழுதியவர், ஜூபைர் அகமது
- பதவி, பிபிசி செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்வாகியிருக்கிறார். அக்கட்சியின் தலைமை பதவிக்கு நடந்த தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 7,897 வாக்குகள் கிடைத்துள்ளன.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சசி தரூருக்கு 1,000 வாக்குகள் கிடைத்தன.
காங்கிரஸ் கட்சியின் 137 ஆண்டுகால வரலாற்றில் ஆறாவது முறையாக, அக்கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. சுதந்திரம் பெற்றதில் இருந்து கட்சியின் தலைமை பொறுப்பு பெரும்பாலும் காந்தி குடும்பத்தினர் கைகளில்தான் இருந்து வந்துள்ளது அல்லது சில நேரங்களில் தலைவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் பங்கேற்கப் போவதில்லை என காந்தி குடும்பத்தினர் (நேரு வழி குடும்பத்தினர்) முடிவு செய்த நிலையில், இந்த பதவிக்கு மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இரு தலைவர்கள் போட்டியிட்டனர்.
வாக்களிக்க தகுதியான 9,900 கட்சி பிரதிநிதிகளில் 9,500 பேர் வாக்களித்தனர் என்று காங்கிரஸ் மத்திய தேர்தல் கமிட்டி தலைவர் மதுசூதன் மிஸ்திரி அறிவித்தார். இதைத்தொடர்ந்து புதன்கிழமை முடிவுகள் வெளிவந்ததைத் தொடர்ந்து, நீண்ட காலமாக காங்கிரஸ் தலைவராக இருந்து வரும் சோனியா காந்தியின் இடத்தில் இனி மல்லிகார்ஜூன் கார்கே புதிய தலைவராக இருப்பார்.
இதற்கு முன்பாகவே காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக யார் வந்தாலும் அவர் பல சவால்களை சந்திக்க நேரிடும் என அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் ஒருமித்த கருத்து நிலவுகிறது.
புதிய தலைவர் எதிர்கொள்ளும் முக்கிய சவால்
கட்சியின் மீது தனது கட்டுப்பாட்டை நிலைநாட்டுவது, அனைவரும் தன்னை ஏற்றுக்கொள்ளச் செய்வது, தனது கருத்துக்களை ஏற்க வைப்பது போன்றவை புதிய தலைவர் எதிர்கொள்ளவிருக்கும் மிக முக்கியமான சவால்களாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
இதேவேளை தலைவரின் 'ரிமோட் கன்ட்ரோல்' (ஆட்டுவிப்பவராக) சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி இருப்பார்கள் என்பதால் உண்மையான அதிகாரம் காந்தி குடும்பத்தின் கைகளில்தான் இருக்கும் என்று பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
மல்லிகார்ஜுன கார்கே, காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவராகக் கருதப்படுவதாலும், அந்த குடும்பத்தின் வேட்பாளராக அவர் கருதப்படுவதாலும், ரிமோட் கன்ட்ரோல் பற்றிய பேச்சு அடிபடுகிறது.
சில நாட்களுக்கு முன்பு கட்சியின் 'கிளர்ச்சித் தலைவர்' சஞ்சய் ஜா எழுதியிருந்த கட்டுரைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ், "மல்லிகார்ஜுன கார்கேயின் அதிகாரபூர்வ வேட்புமனு - காங்கிரஸ் எப்படி தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறது" என்று தலைப்பிட்டிருந்தது.
தலைவர் பதவிக்கான தேர்தல் ஒரு கேலிக்கூத்து. ஏனென்றால் கார்கே, காந்தி குடும்பத்தின் 'ஒரு காவலாளி' என்று சஞ்சய் ஜா தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.

அப்படியென்றால் கட்சியின் தலைமை உண்மையில் காந்தி குடும்பத்திடம்தான் நீடிக்குமா?
"இல்லை கண்டிப்பாக இல்லை. அவருக்கு அத்தகைய குணம் இல்லை. எல்லோருமே வேண்டும் என்று நினைக்கும் பிரதமர் பதவியை சோனியா காந்தி மன்மோகன் சிங்கிற்கு வழங்கினார். ஒருமுறை அல்ல இரண்டு முறை அளித்தார். தனக்கு பதவி ஆசை இல்லை என்று நிரூபித்தார்," என்று அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், உத்தர பிரதேச காங்கிரஸின் மூத்த தலைவருமான அகிலேஷ் பிரதாப் சிங் பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.


புதிய தலைவர் தெரிவு செய்யப்பட்டிருப்பதன் மூலம் காந்தி குடும்பம் அந்தப்பதவிக்கு ஆசைப்படவில்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது என்றார் அவர்.
"காந்தி குடும்பத்தின் முடிவுகள் கட்சித் தலைவர் மீது திணிக்கப்படாது. நாங்கள் இங்கே கூட்டாக முடிவுகளை எடுக்கிறோம். அவர்கள் தங்கள் முடிவுகளை திணிக்க மாட்டார்கள், ராகுல் மற்றும் சோனியா அவர்களின் குணம் எனக்குத்தெரியும்,"என்று அகிலேஷ் பிரதாப் சிங் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
தலித்துகளை மீண்டும் கட்சிக்குக்கொண்டு வர கார்கேயால் முடியுமா?
80 வயதான கார்கே, காங்கிரஸின் மிக முக்கியமான தலித் முகங்களில் ஒருவர் கட்சிக்கு வலுவான பிடி உள்ள கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். பெரிய தலைவர்களுடன், குறிப்பாக காந்தி குடும்பத்துடன் நல்லுறவு வைத்திருக்கும் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர். ஆனால் சாதாரண கட்சித்தொண்டர்கள் மத்தியில் அவரது பிடி பலவீனமாக இருப்பதாக கூறப்படுகிறது.
திங்களன்று வாக்களித்துவிட்டு திரும்பிய தலித் காங்கிரஸ் தலைவர் ஒருவர்," கார்கே தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால். கட்சியை விட்டு வெளியேறிய தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்புவார்கள்," என்று கூறினார்.
கார்கே, கட்சிக்கும் காந்தி குடும்பத்துக்கும் இடையிலான இணைப்பு போன்றவர் என்று அவர் தெரிவித்தார். காந்தி குடும்பத்தின் கைப்பாவை என்று கார்கேயை சொல்வது சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
"ரிமோட் கன்ட்ரோல் பற்றிய பேச்சு தவறானது" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் திங்களன்று என்டிடிவி சேனலிடம் கூறினார். ஆனால் புதிய தலைவர் காந்தி குடும்பத்துடன் ஆலோசனை கலக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்..
பல தசாப்தங்களாக காங்கிரஸ் கட்சியை கவனித்து வருபவர் மூத்த பத்திரிகையாளர் பங்கஜ் வோஹ்ரா. புதிய தலைவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போவது "அதிகாரத்தை சமன் செய்தல்" என்று அவர் கூறுகிறார். இதன் கீழ் கட்சி மீதான கட்டுப்பாடு காந்தி குடும்பத்திடம் தொடர்ந்து இருப்பதை புதிய தலைவர் உறுதிசெய்ய வேண்டும்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் (யுபிஏ) மாதிரி பின்பற்றப்படுவதாக பங்கஜ் வோஹ்ரா கருதுகிறார். பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோதிலும்கூட உண்மையான அதிகாரம் சோனியா காந்தியின் கையில்தான் இருந்தது என்று கூறப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
நீண்ட காலம் தலைவராக இருந்த சோனியா காந்தி
ஒரு கட்டத்தில் கட்சியின் மீதான காந்தி குடும்பத்தின் பிடி மிகவும் தளர்வாகி சோனியா காந்தி தனிமைப்படுத்தப்பட்டார்.
1992 முதல் 1998 வரை பி.வி.நரசிம்மராவ் மற்றும் சீதாராம் கேசரியின் கைகளில் கட்சியின் அதிகாரம் இருந்தது.
பிறகு சோனியா காந்திக்கு நல்லகாலம் வந்தது. அவர் 1998 முதல் 2017 வரை கட்சியின் தலைவராக இருந்தார். இரண்டு பொதுத் தேர்தல்களில் கட்சியை வெற்றிப்பாதையில் இட்டுச்சென்றார். 2019 இல் ராகுல் காந்தி தலைவர் பதவியை ராஜிநாமா செய்த பின்னர் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா ஆனார்.
காங்கிரஸின் தலைவராக அவர் நீண்ட காலம் பதவி வகித்தார்.
நரசிம்மராவ், சீதாராம் கேசரி காலத்தில் நடந்ததுபோல புதிய தலைவர் கட்சியில் தனது பிடியை வலுப்படுத்திக் கொண்டால், காந்தி குடும்பம் படிப்படியாக பொருத்தமற்றதாகி விடுமா? மேலும் கட்சியில் குடும்பத்தின் முக்கியத்துவம் முடிவுக்கு வருமா?
இந்தக் கேள்விகள் காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பரவலாக காணப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
"குடும்பம் எப்படி பொருத்தமற்றதாக மாறும்? ஒரு தலைவர் எப்போதுமே தலைவர்தான்."என்று அகிலேஷ் பிரதாப் சிங் குறிப்பிட்டார்.
கட்சியின் எல்லா முக்கிய முடிவுகளிலும் மற்ற தலைவர்கள் போலவே காந்தி குடும்பமும் பங்களிப்பை அளிக்கும். காங்கிரஸ் காரியக் கமிட்டி அல்லது கட்சியின் நாடாளுமன்றக் குழு உறுப்பினர் என்ற வகையில் அவர்கள் பங்களிப்பார்கள் என்று அகிலேஷ் பிரதாப் சிங் மேலும் கூறினார்.
காந்தி குடும்பம் பொருத்தமற்றதாக ஆகாது என்று பங்கஜ் வோஹ்ராவும் கருதுகிறார்.
2024ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்துவது புதிய தலைவரின் மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
2024 பொதுத் தேர்தல் மற்றும் அதற்கு முன்பாக பல மாநிலங்களிலும் , கட்சியின் வெற்றிக்கு உதவும் ஒரு தலைவர் காங்கிரஸுக்குத் தேவை என்று சஞ்சய் ஜா தனது கட்டுரையில் கூறுகிறார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
புதிய கட்சித் தலைவரின் முதல் சோதனை இமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல். இதற்காக அவரிடம் மிகக் குறைந்த கால அவகாசமே உள்ளது என்று பங்கஜ் வோஹ்ரா தெரிவித்தார்.
தேர்தலில் கட்சியை வெற்றிபெறச்செய்வதற்கு முன்பாக, ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடோ யாத்திரையில் உருவான 'நல்லெண்ணத்தை' எப்படி வாக்குகளாக மாற்றுவது என்பதுதான் புதிய தலைவரின் பெரிய சவாலாக இருக்கும் என்று அகிலேஷ் பிரதாப் சிங் குறிப்பிடுகிறார்.
"பாரத் ஜோடோ யாத்திரை முடிவடைந்து ஒரு வருடத்திற்குப் பிறகு மக்களவை தேர்தல் உள்ளது. யாத்திரை உருவாக்கிய உத்வேகத்தையும் , இயக்கத்தையும் தக்க வைத்துக் கொள்வது பெரிய சவாலாக இருக்கும்,"என்று அவர் கூறுகிறார்.
பங்கஜ் வோஹ்ராவும் இதை ஏற்றுக்கொள்கிறார். பாரத் ஜோடோ யாத்திரை கேரளாவிலும் கர்நாடகாவிலும் இதுவரை நல்ல பலனைத் தந்துள்ளது. ஆனால் அதை எப்படிப் பலப்படுத்தி பொதுத் தேர்தல் வரை பாதுகாப்பாக வைத்திருப்பது என்பதில் கட்சித் தலைவர் செயல்பட வேண்டும் என்கிறார் அவர்.

பட மூலாதாரம், @INCINDIA
தற்போதைய நெருக்கடியில் இருந்து மீள்வது கட்சிக்கு பெரும் சவாலாக உள்ளது.
கட்சியின் நிலை மிகவும் மோசமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தற்போதைய நெருக்கடியில் இருந்து கட்சியை மீட்டெடுப்பதும், கட்சியில் அடிமட்ட அளவில் ஆற்றலை உருவாக்குவதும் புதிய தலைவருக்கு பெரும் சவாலாக இருக்கும்.
"வட்டார அளவில், மாவட்ட அளவில் கட்சிக்கு புத்துயிர் அளிக்க வேண்டும். கர்நாடகாவிற்கு வெளியே கட்சித் தொண்டர்கள் மத்தியில் கார்கேவுக்கு சிறிதளவு பிடிப்பே உள்ளது," என்று பங்கஜ் வோஹ்ரா கூறுகிறார்,
"பழைய தலைவர்கள் கட்சி தொண்டர்களுடன் தொடர்பு வைத்திருந்தனர். கார்கேவைப் பற்றி நாம் அப்படிச் சொல்ல முடியாது. கட்சிக்கு அடிமட்ட அளவில் புத்துயிர் ஊட்டுவது புதிய தலைவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். தேர்தலில் வெற்றி பெற கடுமையான உழைப்பு தேவை. 80 வயது தலைவரிடமிருந்து இதை நீங்கள் எதிர்பார்க்க முடியுமா?"என்று பங்கஜ் வோஹ்ரா வினவுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்




















