முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசம்: ஓபிஎஸ் - ஈபிஎஸ் இடையே போட்டி - முழு விவரம்

முத்துராமலிங்க தேவர் தங்க கவசம்
    • எழுதியவர், பிரசன்னா
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் தங்க கவசத்தை வங்கியிலிருந்து பெறும் உரிமைக்கு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவுகிறது. அங்குள்ள சமீபத்திய நிலவரம் என்ன?

பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்கத்தேவா் நினைவிடத்தில் உள்ள தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதைத்தொடர்ந்து 2014ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா, அதிமுக சாா்பில் ரூ.4 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கிரீடம் மற்றும் தங்க கவசம் ஒன்றை தேவர் சிலைக்கு அன்பளிப்பாக வழங்கினார்.

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை தேவர் ஜெயந்தி விழா வெகு விமரிசையாக நடைபெறும்.

கடந்த ஆண்டுகளில் தேவர் குரு பூஜையின்போது அதிமுக சார்பில் அதன் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் மதுரை அண்ணா நகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு நேரில் வந்து வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் தங்க கிரீடம் மற்றும் தங்க கவசத்தை பெற்று முத்துராமலிங்கத் தேவா் நினைவிட பொறுப்பாளா்களிடம் ஒப்படைப்பாா். குரு பூஜை முடிந்த பின்னா் அதை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைத்து வந்தாா்.

பன்னீர் செல்வம்

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் கட்சியிலிருந்து ஓபிஎஸ்-ஸை நீக்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்தது ஓபிஎஸ் வகித்து வந்த 'பொருளாளர்' பதவிக்கு முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் மூத்த தலைவருமான திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டார்.

இதன்படி வங்கி பெட்டகத்தில் உள்ள தங்கக் கவசத்துக்கு உரிமை கோருவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் அதிமுக சார்பில் எழுத்துபூா்வ கடிதம், கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி மேலாளரிடம் வழங்கப்பட்டது.

இதேபோல், ஓ.பன்னீா் செல்வம் தான் அதிமுக பொருளாளராக தற்போது வரை நீடித்து வருவதாகவும், அதனால் அவரிடமே தங்க கவசத்தை ஒப்படைக்க வேண்டுமென அவரது சாா்பாக மாநிலங்களவை உறுப்பினர் தா்மா், மக்களவை முன்னாள் உறுப்பினா் கோபாலகிருஷ்ணன் ஆகியோரும் வங்கி மேலாளரிடம் நேரில் வந்து கடிதம் வழங்கி உள்ளனா்.

ஒரே சமயத்தில் இரு தரப்பினரும் உரிமை கோருவதால் வங்கி நிா்வாகம் யாரிடம் தங்க கவசத்தை ஒப்படைக்கும் என்பது கேள்விக்குரியதாக உள்ளது.

யாருக்கு உரிமை?

முத்துராமலிங்க தேவர் தங்க கவசம்

இந்த விஷயத்தில் யார் அதிமுகவின் பொருளாளராக இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் தங்க கவசத்தை வங்கியில் இருந்து எடுக்கும் முழு உரிமை உள்ளது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

"சட்டப்படி வங்கி பெட்டகத்தில் உள்ள தங்க கவசத்தை அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் இணைந்து கையொப்பமிட்டு எடுத்துச் செல்வது தான் வழக்கம். தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அதிமுகவின் பொருளாளர் ஆக இருப்பவர் திண்டுக்கல் சீனிவாசன் தான். அதிமுக நிர்வாகிகளுக்கு அதிமுக வங்கி கணக்கில் இருந்து திண்டுக்கல் சீனிவாசன் தான் சம்பளம் வழங்குகிறார்.

எனவே அதிமுகவின் பொருளாளர் என்கிற முறையில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு தான் வங்கி பெட்டகத்தில் இருந்து கையொப்பமிட்டு தங்க கவசத்தை கொண்டு செல்லும் முழு உரிமை உள்ளது என்பதை குறிப்பிட்டு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகலையும் வங்கியில் கொடுத்துள்ளோம். சட்டப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அதை முறையாக எடுப்பதாக வங்கியில் தெரிவித்து இருக்கிறார்கள்," என்கிறார் உதயகுமார்.

ஆர் பி உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ

சட்டப்படி தான் நடக்கும்

இந்த நிலையில், "உரிமையை யார் வேண்டுமானாலும் கோரலாம் தவறில்லை. ஆனால் சட்டப்படி தான் எல்லாம் நடக்கும்," என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பிபிசி தமிழிடம் கூறினார்.

ஆனால், திண்டுக்கல் சீனிவாசன் தங்க கவசத்துக்கு உரிமை கோருவதை தேவரின் ஆன்மாவே விரும்பாது என ஓபிஎஸ் ஆதரவாளரும் அதிமுக செய்தித் தொடர்பாளருமான மருது அழகுராஜ் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "முத்துராமலிங்க தேவர் அரசியலைக் கடந்த ஒரு ஆன்மிக பெரியவர், சுதந்திர போராட்ட தியாகி. எனவே அவருக்கு உண்டான மரியாதையை வருடம் தவறாமல் சரியாக செய்ய வேண்டும் என்பதற்காகவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கவசத்தை வழங்க ஓபிஎஸ்-ஐ தேர்வு செய்தார். அவரை 'வெறும் பொருளாளர்' என்ற அடிப்படையில் மட்டுமே ஜெயலலிதா தேர்வு செய்யவில்லை. அதைக் கடந்து ஒரு பொருளைக் கொடுத்தால், அந்த பொருளைப் பத்திரமாக கொடுத்த மாதிரி திருப்பிக் கொடுக்கும் பண்பாடு அவரிடத்தில் இருந்தது. எனவே அதன் அடிப்படையில் தான் இந்தப் பணிக்கு ஓ.பன்னீர்செல்வத்தை ஜெயலலிதா தேர்வு செய்ததாக நான் கருதுகிறேன்," என்கிறார் மருது அழகுராஜ்.

"இந்த தங்கக் கவசத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தேவர் சிலைக்கு அன்பளிப்பாக வழங்கும்போது, திண்டுக்கல் சீனிவாசன் கட்சியிலிருந்தே ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார் என்பதை யாரும் மறந்து விடவில்லை," என்று மருது அழகுராஜ் கூறுகிறார்.

"தற்போது திண்டுக்கல் சீனிவாசன் திடீரென 'நான் தான் பொருளாளர். எனவே எனக்கு தான் உரிமை' என கொண்டாடுவதை தேவரின் ஆன்மா கூட விரும்பாது. வழக்கம்போல் ஓ.பி.எஸ் கொண்டு வருவதைத் தான் தேவரின்‌ ஆன்மாவும் விரும்பும். தேவர் சமூகத்தின் பெரியவர்களும், அரசியல் சார்பற்ற பொதுமக்களும் அதைத்தான் விரும்புகின்றனர். இதுபோன்ற விவகாரங்களில் எடப்பாடி பழனிசாமி தலையிடுவது அவருக்கு மிகப் பெரிய எதிர்ப்பை அதிலும் குறிப்பாகத் தென் மாவட்டங்களில் உருவாக்கும்," என்று மருது அழகு ராஜ் தெரிவித்தார்.

தர்மம் நிச்சயம் வெல்லும்

தங்க கவசத்தை வங்கியிலிருந்து பெறும் நடைமுறைக்கான தொடர்புடைய கோப்புகளை வங்கி மேலாளரிடம் ஓ.பன்னீர்செல்வம் வழங்கி உள்ளார். இதேபோல் எதிர்தரப்பில் இருந்தும் தங்க கவசத்தை பெறுவதற்கு கோப்புகள் வழங்கப்பட்டிருப்பதாக வங்கி அதிகாரிகள் கூறினர்.

"இந்த விஷயத்தில், தர்மம் நிச்சயம் வெல்லும் என்பதால் வழக்கம்போல் ஓபிஎஸ் தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவார் என நம்பிக்கை உள்ளது," என்கிறார் மக்களவை முன்னாள் உறுப்பினா் கோபாலகிருஷ்ணன்.

வங்கி முன்பு ஒன்று கூடிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

இந்த நிலையில், தேவர் தங்க கவசத்தை சட்டப்படி யாரிடம் வழங்கலாம் என்பதை வங்கி நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும் என்று பிபிசி தமிழிடம் தேவர் நினைவிடப் பொறுப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது;

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கொடுத்த கடிதத்தின் அடிப்படையில் அதிமுகவின் பொருளாளர் மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர் இருவரும் இணைந்து கையொப்பமிட்டு தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெற வேண்டும். தங்க கவசத்தை பெற்ற பிறகு மீண்டும் அதை வங்கியில் ஒப்படைக்கும் வரை அதன் முழு பொறுப்பு தேவர் நினைவிட பொறுப்பாளரையே சாரும்.

இந்த விவகாரத்தில் ஜெயலலிதா வழங்கிய கடிதத்தில் எவருடைய பெயரும் குறிப்பிடப்படவில்லை. 'அதிமுகவின் பொருளாளர்' என்கிற பதவி மட்டுமே தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

2017ஆம் ஆண்டில் அதிமுக இரண்டாக பிளவுபட்டிருந்த சமயத்தில், ஓ பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் இடையே தங்க கவசத்தை யார் பெறுவது என்ற போட்டி கடுமையாக இருந்தது. அப்போது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு இரண்டு தரப்பினரிடையேயும் தங்க கவசத்தை தேவர் நினைவிட பொறுப்பாளர் இடம் ஒப்படைக்க ஆட்சேபனை எதுவும் இல்லை என்ற கடிதத்தைப் பெற நடவடிக்கை எடுத்தது.

அதைத் தொடர்ந்து அப்போதைய மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் தேவருக்கு தங்க கவசம் சாத்தப்பட்டது. நிகழ்வு முடிந்ததும் மீண்டும் மாவட்ட ஆட்சியர் முன்னிலையிலேயே தங்க கவசம் பாதுகாப்பாக வங்கியில் ஒப்படைக்கப்பட்டது.

அந்த முன்மாதிரியைக் கொண்டு இப்போதும் தங்க கவசத்தை யாரிடம் வங்கி வழங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிமுகவினரிடையே மேலோங்கியிருக்கிறது.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: