கடலோரம் சிந்திய எண்ணெய்; கண்ணீர் சிந்தும் வடசென்னை காசிமேடு மீனவர்கள்

வடசென்னை காசிமேடு
    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்
  • பிரசுரிக்கப்பட்டது

வடசென்னையில் சமீபத்தில் நிகழ்ந்த எண்ணெய் கசிவு அங்குள்ள மீனவர்களின் பொருளாதார இன்னல்களைத் தீவிரமாக்கியுள்ளது.

வடசென்னையில் உள்ள காசிமேடு பகுதியை சேர்ந்தவர் கேசவராமன் (56). மீனவராக தனது தொழிலில் பல இடர்களை சந்திப்பது வாடிக்கை. ஆனால் இந்த வாரம், காசிமேட்டில் படகு இயந்திரங்கள் வைத்திருக்கும் ஷெட்(shed ) பகுதியில், தனியார் நிறுவனத்தின் எண்ணெய் கொண்டு செல்லும் குழாய் உடைந்த சம்பவத்தால், இயந்திரங்கள் இல்லாமல் கேசவராமன் மூன்று வேலை நாட்கள் வீணாய் கழிந்தன.

ஏற்கனவே தனக்குள்ள ரூ.2.5 லட்சம் கடன் சுமையைத் தாங்க முடியாத கேசவராமன், மூன்று நாட்கள் படகை இயக்கவில்லை என்பதால் மேலும் கடனில் சுழலும் நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறுகிறார். கேசவராமனைப் போல ஆயிரக் கணக்கான மீனவர்கள் அன்றாடம் தங்களது மீன்பிடி இயந்திரங்கள், வலைகள் என பலவற்றை வைத்திருக்கும் இடத்தில்தான் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. அதனால், இயந்திரங்கள் இல்லாமல் வேலைக்குப் பலரும் செல்லவில்லை.

படகு கட்டும் தளம் மற்றும் படகுகளை பழுது நீக்கும் இடம் அமைந்துள்ள காசிமேட்டில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு சரியான நேரத்தில் கவனத்திற்கு வந்ததால் தீ பிடிக்கும் அபாயம் தவிர்க்கப்பட்டது என்கிறார் கேசவராமன்.

இந்த எண்ணெய் கசிவால் ஆயிரக்கணக்கான மீனவர்கள் படும் துயரத்தின் ஒரு துளியாக, தனது துன்பத்தை பிபிசி தமிழிடம் பேசுகிறார் கேசவராமன்.

''காசிமேட்டில் படகு பழுது பார்க்கும் ஷெட்டில் , திங்களன்று தனியார் நிறுவனத்தின் எண்ணெய் கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சுமார் 3,000 லிட்டர் பாமாயில் வெளியேறி குளம் போல தேங்கிவிட்டது. சுமார் 100 மீட்டர் வரை எண்ணெய் தேங்கிவிட்டதால், நாங்கள் வைத்திருந்த என்ஜின், வலை என பலவும் செட்டில் சிக்கிவிட்டது. மூன்று நாட்கள் கடலுக்கும் போகவில்லை என்பதால், வருமானம் இல்லை,'' என்கிறார் கேசவராமன்.

தமது மனைவியுடன் மீனவர் கேசவராமன்
படக்குறிப்பு, தமது மனைவியுடன் மீனவர் கேசவராமன்

மகன் ராகுல் ராமன் மற்றும் மகள் தாமரைச்செல்வி இருவரும் பட்டதாரிகளாக இருந்தாலும், சரியான வேலை கிடைக்கவில்லை என்பதால், மகனை தனது சொந்த தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் கேசவராமன்.

''நானும் மகனும் கொண்டுவரும் வருமானத்தில்தான் எங்கள் குடும்பம் பிழைக்கிறது. ஒவ்வொரு நாள் வருமானமும் எங்களுக்கு முக்கியம். வங்கியில் கடன் எடுத்து வலை வாங்கினேன். தற்போது, வலை பாதி சிதிலமடைந்துவிட்டது. நான் பாதி வட்டிதான் செலுத்தியுள்ளேன். இந்த எண்ணெய் குழாய் உடைப்பால் மூன்று நாட்கள் வருமானம் நின்றுவிட்டது. இதை ஈடுகட்ட மீண்டும் கடன்தான் வாங்கவேண்டும்,'' என்கிறார் கேசவராமன்.

திங்களன்று ரூ.1,500 கடன் எடுத்துதான் வேலைக்கு செல்ல தயாராக இருந்ததாகவும், தற்போது அந்த பணத்தை திருப்பி தரமுடியாமல், மேலும் அதன் வட்டி அதிகரித்துள்ளதாகவும் கூறுகிறார்.

''எங்கள் வருமானம் ஒரே சீராக இருக்காது. சில சமயம் ரூ.10,000 ஒரே நாளில் கிடைக்கலாம். ஒரு சமயம் ரூ.1,000 கிடைக்க கூட போராட்டமாக இருக்கும். இந்த மாதம் புரட்டாசி என்பதால், மீன் வரத்து இருந்தாலும், மீன் விற்பனை விலை மிகவும் குறைவாக இருக்கிறது. அதிலும், இந்த எண்ணெய் குழாய் உடைப்பால் மூன்று நாட்கள் செல்லவில்லை என்பதால், இந்த ஒரு வாரம் செலவுக்கு பிரச்னை ஆகிவிட்டது. என்னை போல பல மீனவர்கள் வேலைக்கு போகவில்லை என்பதால், கடன் வாங்கிதான் ஆகவேண்டும் என்ற நிலை நீடிக்கிறது,'' என மன உளைச்சலுடன் பேசினார் அவர்.

செலுத்த வேண்டிய கடனுக்கான நோட்டீஸ் வருவதும், அடுத்த நாள் மீன்பிடிக்கக் கடன் பெறுவதும் வருத்தத்தை அவருக்கு தந்துள்ளது.

காசிமேடு மீனவர்கள்

''எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து கடலும், மீனும்தான் என் வாழக்கை. பேரிடர் சீற்றங்களை கூட சமாளித்திருக்கிறோம். சுனாமி, பல முறை புயல் சீற்றங்கள் என எல்லாவற்றையும் பார்த்துவிட்டோம். ஆனால் சமீப காலங்களில் எங்களிடம் பணப் புழக்கம் என்பது குறைந்துவிட்டது. வருமானம் இல்லை. இந்தவாரம் செட்டில் எண்ணெய் கசிவு வேலைக்கு போகவில்லை, இதற்கு முன் மீன்பிடி தடைக் காலம், அதற்கு முன் கொரோனா, புயல் என பல சிக்கல்கள். இதை மீறி நாங்கள் சம்பாதிக்கும் பணம், வேலை செய்யாத நாளுக்கு செலவிடும் பணத்திற்காக வாங்கும் கடனை கட்டுவதற்கு போதவில்லை. இந்த பொருளாதார சுமை நாங்கள் தொடர்ந்து தொழில் செய்வதில் இருந்து எங்களை துரத்துகிறது,'' என்கிறார் கேசவராமன்.

காசிமேடு பகுதியில், கடன் இல்லாத மீனவனைப் பார்ப்பது அரிது என்றும் தன்னைப் போல மீனவர்கள் பலரும் கேள்விக்குறியுடன்தான் கடலுக்கு செல்வதாக கூறுகிறார்.

''எண்ணெய் கசிவால் என்னை போன்ற பல மீனவர்கள் தங்களுடைய வருமானத்தை இழந்துள்ளார்கள் என்பதால், தனியார் நிறுவனம் எங்களுக்கு இழப்பீடு தரவேண்டும். இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். இந்த பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதால், அந்த நிறுவனத்தில் குழாய் செல்லும் முழு பகுதியையும் பரிசோதிக்கவேண்டும் என கோரிக்கை வைத்திருக்கிறோம். போராட்டம் நடத்தவும் முடிவு செய்திருக்கிறோம். நாங்கள் எங்கள் தொழிலை செய்து பிழைப்பதற்கு கூட போராட்டம் நடத்தவேண்டியிருக்கிறது,'' என்கிறார் அவர்.

பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி, தனியார் நிறுவனத்திற்கு நோட்டீஸ் வழங்கவுள்ளதாகவும், கழிவுகளை வெளியேற்றும் பணி நாளை முழுமையாக முடிவுக்கு வரும் என்றும் தெரிவித்தார்.

Banner

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: