மாற்றுத்திறனாளியை நடுவழியில் இறக்கி விட்ட பேருந்து ஓட்டுநர், நடத்துநர் இடைநீக்கம் - என்ன நடந்தது?

சிறுவன் மாற்றுத்திறனாளி
பிரசுரிக்கப்பட்டது

தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த மாற்றுத்திறனாளியை பேருந்து நடத்துநரும் ஓட்டுநரும் நடுவழியில் இறக்கிவிட்டு சென்ற விவகாரத்தில் அந்த இரு பேருந்து ஊழியர்களும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த பேகட்பள்ளியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் ,வாணி ஸ்ரீ தம்பதி. ஆட்டோ ஓட்டுநரான கோபாலகிருஷ்ணனுக்கு மூளை வளர்ச்சி குறைபாடுடைய ஹரி பிரசாத் என்ற மகன் நடக்க முடியாத நிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் மூவரும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுப்பதற்காக அரசு பேருந்தில் வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் பேருந்து நடத்துநர் "இந்த பேருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக செல்லாது. கீழே இறங்குங்கள்," என்று கூறி பாதி வழியிலேயே இறக்கி விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தனது 16 வயது மாற்றுத்திறனாளி மகனை தூக்க முடியாமல் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் கோபாலகிருஷ்ணன் தூக்கி வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். இந்த நிலையில், பாதி வழியிலேயே இந்த குடும்பத்தினர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரால் இறக்கி விடப்பட்ட சம்பவம் சமுக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆதரவாக அவர்கள் குரல் கொடுத்தனர்.

இதையடுத்து என்ன நடந்தது என்று சிறுவனின் தந்தை கோபாலகிருஷ்ணனிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.

"எனது மகனுக்கு பிறப்பிலிருந்து மன வளர்ச்சி குறைபாடு உள்ளது. அவனால் நடக்க முடியாது. அடிக்கடி வலிப்பு வரும். அதனால் என் மகனுக்கு மாற்றுத் திறனாளி நிதி உதவி வழங்கவும் பட்டா ஒதுக்குமாறும் கோரும் மனுவோடு கிருஷ்ணகிரி கலெக்டர் ஆபீஸுக்கு மனு கொடுக்க ஒசூரில் இருந்து தருமபுரி செல்லும் அரசு பேருந்தில் ஏறினோம்," என்றார்.

மாற்றுத்திறனாளி மகன்

பேருந்தில் ஏறும்போதே கலெக்டர் அலுவலகத்தில் நிறுத்துமாறு கேட்டுக்கொண்டுதான் ஏறினோம் ஆனால் கிருஷ்ணகிரி நெருங்கியவுடன் இந்த பேருந்து கலெக்டர் அலுவலகம் வழியாக அல்லாது மேம்பாலத்தில் ஏறி செல்லும். எனவே இங்கேயே இறங்கிக் கொள்ளுங்கள் என்று நடத்துநர் கூறினார். உடனே நான் மாற்றுத்திறனாளியான மகனை வயதான என்னால் எப்படி தூக்கிச் செல்ல முடியும் என எனது கஷ்டத்தை சொன்னேன். ஆனால், அதர்கு காது கொடுக்காத நடத்துநர் நடு வழிலே இறக்கி விட்டு, விட்டுச் சென்று விட்டார் என்றார் கோபாலகிருஷ்ணன்.

பிறகு ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு நடந்தே வந்து ஆட்சியருக்கு மனு கொடுத்தோம் என்று அவர் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தருமபுரியில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல பொது மேலாளர் ஜீவரத்தினத்திடம் பேசினோம்.

"சம்பவம் நடந்தது உண்மை தான். நடத்துநரும் ஓட்டுநரும் அதை ஒப்புக் கொண்டுள்ளனர். அதனால் பேருந்து ஓட்டுநரையும் நடத்துநரையும் பணி இடைநீக்கம் செய்துள்ளோம்," என்று ஜீவரத்தினம் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, ஜூடோவில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி சௌந்தர்யா - தடைகளைத் தகர்த்து சாதித்தது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: