அபூர்வ வழக்கு: ரயில்வேயுடன் 20 ரூபாய்க்காக 22 ஆண்டு சட்டப் போராட்டம் நடத்தியவருக்கு கிடைத்தது என்ன தெரியுமா?

துங்கநாத் சதுர்வேதி
படக்குறிப்பு, சதுர்வேதி, இந்த வழக்கு தொடர்பான 120 நீதிமன்ற விசாரணைகளில் பங்கெடுத்துள்ளார்
    • எழுதியவர், செரிலன் மொல்லன்
    • பதவி, பிபிசி நியூஸ், மும்பை
  • பிரசுரிக்கப்பட்டது

ரயில் டிக்கெட்டுக்கு 20 ரூபாய் அதிகமாக வசூலித்ததற்காக 22 ஆண்டுகள் சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவருக்கு என்ன கிடைத்தது தெரியுமா?

1999ஆம் ஆண்டில், துங்கநாத் சதுர்வேதி என்ற வழக்கறிஞர் வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளுக்கு 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

உத்தர பிரதேசத்தில் உள்ள மதுரா கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.

கடந்த வாரம் ஒரு நுகர்வோர் நீதிமன்றம் சதுர்வேதிக்கு ஆதரவாக அளித்துள்ள தீர்ப்பில் வட்டியுடன் தொகையைத் திருப்பித் தருமாறு ரயில்வே துறையிடம் கூறியது.

பிபிசியிடம் பேசிய 66 வயதான சதுர்வேதி, "இந்த வழக்கு தொடர்பாக 100-க்கும் மேற்பட்ட வழக்கு விசாரணைகளில் நான் பங்கெடுத்தேன். ஆனால், இந்த வழக்கினால் நான் இழந்த ஆற்றல் மற்றும் நேரத்திற்கு விலை வைக்க முடியாது," என்றார்.

இந்தியாவிலுள்ள நுகர்வோர் நீதிமன்றங்கள், குறிப்பாக சேவைகள் தொடர்பான குறைகளைக் கையாளுகின்றன. ஆனால், அவை அதீத வழக்குகளின் சுமையோடு இருப்பதாக அறியப்படுகிறது. சில நேரங்களில் எளிமையான வழக்குகள் கூட தீர்க்கப்படுவதற்குப் பல ஆண்டுகள் ஆகலாம்.

உத்தர பிரதேசத்தில் வசிக்கும் சதுர்வேதி, மதுராவிலிருந்து மொராதாபாத்துக்கு பயணித்துக் கொண்டிருந்தபோது, டிக்கெட் முன்பதிவு செய்யும் கிளெர்க் ஒருவர், அவர் வாங்கிய இரண்டு டிக்கெட்டுகளுக்கு அதிகக் கட்டணம் வசூலித்தார்.

டிக்கெட்டுகள் ஒவ்வொன்றும் 35 ரூபாய். ஆனால், சதுர்வேதி 100 ரூபாய் கொடுத்தபோது, 70 ரூபாய்க்குப் பதிலாக அவரிடம் 90 ரூபாய் கட்டணம் வசூலித்துக்கொண்டு, 10 ரூபாயை மட்டும் கிளெர்க் திருப்பிக் கொடுத்துள்ளார்.

1px transparent line
1px transparent line

அவர் தன்னிடம் அதிக கட்டணம் வசூலித்ததாக கிளெர்க்கிடம் கூறினார். ஆனால், சதுர்வேதி அந்த நேரத்தில் பணம் திரும்பக் கிடைக்கவில்லை.

எனவே, அவர் வடகிழக்கில் உள்ள கோரக்பூர் ரயில்வே மீதும் முன்பதிவு செய்துகொடுத்த கிளெர்க் மீதும் மதுராவிலுள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடிவு செய்தார்.

இந்தியாவில் நீதித்துறையின் மெதுவான செயல்பாடு காரணமாக இந்த வழக்கில் தனக்குப் பல ஆண்டுகள் பிடித்ததாக அவர் கூறுகிறார்.

"ரயில்வேக்கு எதிரான புகார்கள் ரயில்வே தீர்ப்பாயத்தில் தெரிவிக்கப்பட வேண்டும். நுகர்வோர் நீதிமன்றத்தில் இல்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்ய ரயில்வே முயன்றது," என்று சதுர்வேதி கூறினார். ரயில்வே உரிமை கோரல் தீர்ப்பாயம் என்பது இந்தியாவில் ரயில் பயணம் தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்ய அமைக்கப்பட்ட நீதித்துறை சார்ந்த ஓர் அமைப்பு.

"ஆனால், இந்த விஷயத்தை நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் என்பதை நிரூபிக்க 2021ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்தினோம்," என்று சதுர்வேதி கூறினார். சில நேரங்களில், நீதிபதிகள் விடுமுறை அல்லது விடுப்பில் இருப்பதால் தாமதாகும், என்றும் அவர் கூறினார்.

நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ரயில்வே துறை அவருக்கு 15,000 ரூபாய் அபராதத் தொகையாக வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 1999 முதல் 2022 வரை அவருக்கு ஆண்டுக்கு 12% வட்டியில் 20 ரூபாயைத் திருப்பித் தருமாறு ரயில்வேக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறிப்பிட்ட 30 நாட்களுக்குள் தொகையைச் செலுத்தாவிட்டால், வட்டி விகிதம் 15% ஆகத் திருத்தப்படும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

சதுர்வேதி தனக்குக் கிடைத்த இழப்பீடு அற்பமானது என்றும் இந்த வழக்கு தனக்கு ஏற்பட்ட மன வேதனையை அது ஈடு செய்யாது என்றும் கூறினார். அவருடைய குடும்பத்தினர், இது நேரத்தை வீணடிப்பதாகக் கூறி, அவரை வழக்கைத் தொடரவிடாமல் பலமுறை தடுக்க முயன்றனர்.

"பணம் முக்கியமல்ல. இது எப்போதும் நீதிக்கான ஊழலுக்கு எதிரான போராட்டமாக மட்டுமே இருந்தது. ஆகவே, எனக்கு அது மதிப்புக்குரியது," என்று அவர் கூறினார். "மேலும், நான் ஒரு வழக்கறிஞராக இருப்பதால், ஒரு வழக்கறிஞரிடம் பணம் செலுத்தவோ அல்லது நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான செலவை நான் ஏற்கவோ வேண்டியதில்லை. அது மிகவும் விலை உயர்ந்ததாக இருக்கும்."

ஒரு நபரின் உத்தியோகபூர்வ பதவி எதுவாக இருந்தாலும், "அதுகுறித்து மக்கள் அவர்களிடம் கேள்வி கேட்கத் தயாராக இருந்தால், அவர்களால் தவறுகளில் இருந்து தப்பிக்க முடியாது," என்று அவர் நம்புகிறார்.

"சண்டை கடினமாகத் தோன்றினாலும், விட்டுக் கொடுக்கத் தேவையில்லை," என்று மற்றவர்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்க அவருடைய வழக்கு உதவுமென்று தான் நம்புவதாகக் கூறுகிறார்.

1px transparent line
காணொளிக் குறிப்பு, மருமகளுக்கு மறுமணம் செய்து அழகு பார்த்த மாமியார்
1px transparent line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: