கூகுள் மேப் பயணத்தால் ஓடையில் இறங்கிய கார் - மயிரிழையில் தப்பிய குடும்பம்

இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவின் கோட்டயத்தில் கூகுள் மேப் செயலி உதவியுடன் ஒரு மருத்துவரின் குடும்பம் பயணம் செய்த கார், இரவில் ஓடையில் இறங்கியது. நல்வாய்ப்பாக அந்த காருக்குள் இருந்த மருத்துவரும் அவரது குடும்பத்தினரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதிர்ச்சி தரும் இந்த சம்பவம் வியாழக்கிழமை இரவு 10 மணிக்கு மேல் நடந்துள்ளது. சம்பவ நாளில் திருவல்லா கும்பநாடு பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சோனியா, அவரது தாயார் சோஷாம்மா, உறவினர் அனீஷ், மூன்று மாத கைக்குழந்தை எர்ணாகுளத்தில் இருந்து திருவல்லா நோக்கி காரில் பயணம் செய்துள்ளனர்.
கூகுள் வரைபட செயலி உதவியுடன் இவர்கள் திருவாத்துக்கல் பகுதியில் இருந்து எம்பி சாலைக்குச் செல்ல நாட்டக்கோம் பைபாஸ் வழியாக சென்றனர். அந்த பாதை ஏற்கெனவே கன மழை காரணமாக வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அப்போது சாலை முடிந்தபோதும், மழை நீரால் பாதை மூடியிருந்ததால் அந்த கார் நேராக சாலைக்கு அப்பால் இருந்த ஓடைக்குள் இறங்கியது.

இதை அறிந்தவுடன் கார் ஓட்டுநர் சுதாரித்துக் கொண்டு காரை நிறுத்த முயன்றார். ஆனாலும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில், காருக்குள் இருந்தவர்களின் அலறல் கேட்கவே, அருகே இருந்த கடையொன்றில் இருந்தவர் அதை கவனித்துள்ளார்.
உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உதவியுடன் காருக்குள் இருந்தவர்கள் ஓடையில் இருந்து மேலே வருவதற்கு ஊர் மக்கள் முயற்சி செய்தனர்.
கோட்டயம் மேற்கு காவல் நிலையத்தில் இருந்தவர்கள், தீயணைப்புப் படையினரும் மீட்புப் பணியை துரிதமாக மேற்கொள்ள உதவினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், கார் ஓட்டுநர் கூகுள் மேம் உதவியுடன் வாகனத்தை இயக்கியதாகவும் அது காட்டிய வழியில் செல்ல முற்பட்டபோது, கார் ஓடைக்குள் இறங்கியதாகவும் தெரிவித்தனர்.

இதேபோன்றதொரு சம்பவம் கடந்த மே மாதம் காடுதுருத்தி பகுதியில் நடந்தது. அப்போது கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு குடும்பம், மூணாறில் இருந்து ஆலப்புழா செல்வதற்காக கூகுள் மேப் உதவியுடன் காரில் பயணம் செய்தது. அவர்கள் வந்த வாகனம், குருப்பந்தரா பகுதியில் இருந்த ஓடைக்குள் இறங்கியது.
ஆனால், அது பகல் வேளை என்பதால் உள்ளூர் மக்கள் அந்த கார் ஓடைக்குள் முழுமையாக இறங்கும் முன்பே குரல் கொடுத்து காருக்குள் இருந்தவர்களை எச்சரித்தனர்.
நகரங்கள் அல்லாத தொலைதூர பகுதிகள் மற்றும் செல்பேசி சிக்னல் சரிவர கிடைக்காத பகுதிகளில்ல் கூகுள் மேப் உதவியுடன் சாலைகளில் பயணம் செய்யும்போது இத்தகைய சம்பவங்கள் அதிக அளவில் நடப்பதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்
























